Published:Updated:

தடுமாறும் மெஸ்ஸி, பி.எஸ்.ஜி; அசிஸ்ட்கள் கோலாக மாறுமா! சாம்பியன்ஸ் லீக் வசப்படுமா?

Messi ( AP )

இந்த சீசனில் இதுவரை 18 லீக் 1 போட்டிகளில் பங்கேற்று 2 கோல்கள் மட்டுமே அடித்துள்ளார் மெஸ்ஸி!

Published:Updated:

தடுமாறும் மெஸ்ஸி, பி.எஸ்.ஜி; அசிஸ்ட்கள் கோலாக மாறுமா! சாம்பியன்ஸ் லீக் வசப்படுமா?

இந்த சீசனில் இதுவரை 18 லீக் 1 போட்டிகளில் பங்கேற்று 2 கோல்கள் மட்டுமே அடித்துள்ளார் மெஸ்ஸி!

Messi ( AP )

கடந்த ஆண்டு பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்கு மெஸ்ஸி செல்லும்போது, அவர், நெய்மர், எம்பாப்பே என மூவரும் இணைந்து அசாத்தியமான தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என கால்பந்து உலகம் யூகித்தது. ஆனால் அதுபோல எதுவும் நடக்கவில்லை. மெஸ்ஸி கோல் அடிக்க தினறுகிறார். நெய்மரோ வழக்கம்போல் காயத்தால் அவதிப்பட, எம்பாப்பே மட்டும் சிறப்பாக விளையாடி பி.எஸ்.ஜி முன்களத்தை வழிநடத்திக் கொண்டிருக்கிறார்.

சாம்பியன்ஸ் லீக் தொடரின் ஆரம்ப சுற்றில் 6 போட்டிகளில் பங்கேற்று 5 கோல்கள் அடித்த மெஸ்ஸி, ரவுண்ட் ஆப் 16 முதல் லீக் போட்டியில் ரியல் மாட்ரிட் அணிக்கு எதிராக பெனால்டியைத் தவறவிட்டார். போட்டியின் 94-வது நிமிடத்தில் எம்பாப்பே கோல் அடித்ததால், பாரிஸ் 1-0 என வெற்றி பெற்றது. அதேபோல் கடந்த இரண்டு வாரங்களுக்குள் நடைபெற்ற லீக் 1 போட்டிகளில் நன்டேஸ் மற்றும் நீஸ் அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்தது பி.எஸ்.ஜி.

இந்த சீசனில் இதுவரை 18 லீக் 1 போட்டிகளில் பங்கேற்று 2 கோல்கள் மட்டுமே அடித்துள்ளார் மெஸ்ஸி. அதிகம் போட்டி இல்லாத லீக் என்று கூறப்படும் பிரெஞ்சு லீகில் மெஸ்ஸி 2 கோல்கள் மட்டுமே அடித்து இருப்பது கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. தன் மேஜிக்கல் பாஸ்கள் மூலம் 10 கோல் உதவிகள் செய்து இருந்தாலும்,மெஸ்ஸி தன் முழுமையான ஆட்டத்தை இன்னும் வெளிப்படுத்தவில்லை என பி.எஸ்.ஜி ரசிகர்கள் மட்டுமில்லாது, மெஸ்ஸி ரசிகர்களும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கோல் கம்பத்தை நோக்கி அவர் அடிக்கும் பல ஷாட்டுகள், விலகியே செல்கின்றன.எதிரணியின் தடுப்பரணையை உடைத்து,மிக கூர்மையாக கோல் அடிக்கும் மெஸ்ஸியின் ஆற்றல் என்னவாயிற்று என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது. புது அணியில் இணைந்து சரியாக விளையாட நேரம் எடுக்கும் என பல்வேறு காரணங்களை கூறினாலும், மெஸ்ஸியின் ஆட்டம் இதுவரை இல்லாததுபோல் மந்தமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

மெஸ்ஸி, நெய்மர், எம்பாப்பே என மூவரும் இணைந்து பார்சிலோனாவின் மெஸ்ஸி, சுவாரஸ், நெய்மர் கூட்டணியைப் போல் கோல் வேட்டையை நடத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், இதுவரை அதற்கான எந்த முகாந்திரமும் தெரியவில்லை. எம்பாப்பே மட்டுமே 14 கோல்கள், 10 அசிஸ்ட்கள் என நன்றாக விளையாடி வருகிறார். 18 போட்டிகளில் 4 கோல்கள் மட்டுமே அடித்திருக்கும் நெய்மரும் தடுமாறிக்கொண்டே இருக்கிறார்.

இவர்கள் அட்டாக்கில் சொதப்புவது ஒருபக்கம் இருந்தாலும், ஒருவகையில் அது டிஃபன்ஸிலும் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. மூவருமே அட்டாகிங் தேர்டில் அதிக நேரம் செலவழிப்பதால், டிஃபன்ஸில் அதிகம் பங்களிப்பதில்லை. அதனால், எதிரணி அட்டாக் செய்யும்போது, தடுப்பாட்டத்தில் போதுமான வீரர்கள் இருப்பதில்லை. இதை சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் கேப்டன் மார்கினோஸ் கூட குறிப்பிட்டிருந்தார். இருந்தாலும், அவர்கள் மூவரும் ஏற்படுத்தும் வாய்ப்புகளும், அடிக்கும் கோல்களும் வெற்றியை பெற்றுக்கொடுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

Messi
Messi
AP

பாரிஸ் செயின்ட் ஜெர்மன் அணி இதுவரை 27 லீக் 1 போட்டிகளில் 62 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் உள்ள நீஸ் அணி 49 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. இன்னும் 11 போட்டிகள் மட்டுமே எஞ்சி இருக்கும் நிலையில் கிட்டத்தட்ட லீக் வெல்வது உறுதி. ஆனால் பி.எஸ்.ஜி நிர்வாகமும் ரசிகர்களும் தங்கள் அணியிடமிருந்து இன்னும் சிறப்பான ஆட்டத்தை எதிர்பார்க்கின்றனர். எம்பாப்பே, வெராட்டி, ஹகிமி, மெண்டஸ், மார்கினோஸ் போல மற்ற வீரர்களும் விளையாட வேண்டும் என்று விரும்புகின்றனர்.

மெஸ்ஸியை பி.எஸ்.ஜி ஒப்பந்தம் செய்ததன் முக்கிய நோக்கம், அந்த முதல் சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதுதான். வரும் ஆண்டில் எம்பாப்பே ரியல் மாட்ரிட் அணிக்கு செல்லும் வாய்ப்பு அதிகம் என்பதால், பாரிஸ் அணி சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வெல்ல தகுந்த தருணம் இதுவே. அதனால்தான் அணி நிர்வாகமும் ரசிகர்களும் அவர்களுக்கு அதிகமான அழுத்தம் கொடுக்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் 8வது முறையாக லீக் வெல்லும் நிலையில் உள்ள பாரீஸ் அணிக்கு சாம்பியன்ஸ் லீக் தொடரே அவர்களின் வெற்றியை அளவிடும் அளவுகோலாக இருக்கிறது.

Messi & Neymar
Messi & Neymar
AP

2020 சீசன் தொடக்கத்தில் பார்சிலோனா அணியில் கோல் அடிக்க தடுமாறிய மெஸ்ஸி, அதன்பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 2021 பாலன் டி ஓர் விருதை வென்றதை அனைவரும் அறிவோம். அதேபோல் மெஸ்ஸி பாரீஸ் அணியிலும்,வரும் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என நம்பப்படுகிறது. சாம்பியன்ஸ் லீக் தொடரின் ரவுண்ட் ஆப் 16 இரண்டாவது லெக் போட்டியில் பாரீஸ் அணி ரியல் மாட்ரிட் அணியை 1-0 கோல் முன்னிலையில் எதிர்கொள்கிறது. மெஸ்ஸி பார்சிலோனா அணியை விட்டு வெளியேறிய பின்பு, மீண்டும் ஸ்பெயின் நாட்டில் விளையாடும் முதல் போட்டி இதுவே. இதுவரை சாண்டியாகோ பெர்னபூ மைதானத்தில் 15 கோல்கள் அடித்துள்ள மெஸ்ஸி, மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பாரீஸ் அணியை காலியிறுதிக்கு அழைத்துச் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.