Published:Updated:

மீண்டும் சிவப்பு சாத்தானாய் கிறிஸ்டியானோ ரொனால்டோ... மான்செஸ்டர் யுனைடெட் கோப்பை வெல்லுமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கிறிஸ்டியானோ ரொனால்டோ
கிறிஸ்டியானோ ரொனால்டோ ( Rui Vieira )

சரி… பரபரப்பான சினிமா காட்சிகள் போல இந்த சம்பவங்கள் நடந்து முடிந்துவிட்டன. ரொனால்டோவும் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு ஆரவாரமாக வந்துவிட்டார். அடுத்து என்ன?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இந்தாண்டு எதிர்பாராததை எல்லாம் எதிர்கொண்டது கால்பந்து உலகம். தன் வாழ்நாளில் பார்சிலோனா அணியைத் தவிர வேறு எந்த அணிக்கும் விளையாடமாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்ட லயோனல் மெஸ்ஸி கண்ணீரும் கம்பலையுமாக 21 ஆண்டுகால ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டு வெளியே வந்தார். பாரிஸ் செயின்ட் ஜெர்மன் அணி மெஸ்ஸியை ஒப்பந்தம் செய்தது. இதுதான் இந்த சீசனின் மிகப்பெரிய ஆச்சரியமாக இருக்கும் என்று எல்லோரும் நினைத்திருக்க, எதிர்முனையில் இருந்து ரெட் ராக்கெட்டை வீசினார் கிறிஸ்டியானோ ரொனால்டோ. மெஸ்ஸி பார்சிலோனாவில் இருந்து விலகப்போகிறார் என்கிற செய்தி கடந்த சில ஆண்டுகளாகவே கிசுகிசுக்கப்பட்ட ஒன்றுதான். ஆனால், சத்தமே இல்லாமல் சம்பவம் செய்தார் ரொனால்டோ.

2003 முதல் 2009 வரை மொத்தம் 7 ஆண்டுகள் மான்செஸ்டர் அணிக்காக விளையாடி மூன்று பிரிமியர் லீக், ஒரு சாம்பியன்ஸ் லீக், ஒரு Ballon D'or விருதுகளை வென்று உலகின் சிறந்த கால்பந்து வீரராக உருவெடுத்தவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. அதன்பிறகு ரியல் மாட்ரிட், யுவென்ட்டஸ் அணிகளுக்கு மாறியரொனால்டோ மீண்டும் மான்செஸ்டர் யுனைடெட்டுக்குத் திரும்புவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

ரொனால்டோ
ரொனால்டோ
Rui Vieira

"நான் இத்தாலியின் யுவென்டஸ் அணியில் நன்றாகவே இருக்கிறேன். வேறு எங்கும் செல்வதற்கு வாய்ப்பில்லை" என்று ட்வீட் போட்ட ரொனால்டோ அடுத்த மூன்றே நாட்களில் தன்னுடைய முடிவை மாற்றிவிட்டார். ரொனால்டோவின் ஏஜென்ட் ஜார்ஜ் மெண்டஸ், மான்செஸ்டர் யுனைடெட் அணியின் உள்ளூர் எதிரி அணியான மான்செஸ்டர் சிட்டிக்கு ரொனால்டோவை ஒப்பந்தம் செய்ய முயற்சிப்பதாக வெளியான செய்திகள் யுனைடெட் ரசிகர்களிடையே கலக்கத்தை உண்டாக்கியது.

மான்செஸ்டர் சிட்டி அணிக்கும், ரொனால்டோவுக்கும் இடையே ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்தபோதே, ஒரு சினிமா சண்டைக்காட்சியைப்போல அதிரடியாக உள்ளே புகுந்து தன்னுடைய முன்னாள் சிறந்த வீரரை மீண்டும் தங்கள் முகாமுக்குள் கொண்டுவந்துவிட்டது மான்செஸ்டர் யுனைடெட். "he belongs here", " The Prodigal son returns to Old Trafford" என ஆர்ப்பரித்தது யுனைடெட் ரசிகர் கூட்டம். நடப்பது கனவா, நிஜமா என குழம்பிப்போனது கால்பந்து உலகம். இந்த யுனைடெட் டீலுக்கு பின்னால் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் கால்பந்து தந்தை என புகழப்படும் சர் அலெக்ஸ் ஃபெர்குசனின் தலையீடு இருந்ததாக சொல்லப்பட்டது.

நம்பர் 7 ஜெர்ஸி!

மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு ரொனால்டோவை ஒப்பந்தம் செய்துவிட்டார்கள். ஆனால் நம்பர் 7 ஜெர்ஸி கிடைக்குமா என அடுத்த பரபரப்பு பற்ற ஆரம்பித்தது. ரொனால்டோவின் மிகப்பெரிய அடையாளம் 7-ம் எண் ஜெர்ஸி என்பதால் அது எப்படியும் கிடைத்துவிட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிற ஆரம்பித்தது. ஆனால், அது அவ்வளவு சுலபமானதாக இல்லை. ஏனென்றால் யுனைடெட் - ரொனால்டோ ஒப்பந்தம் நடக்கும் முன்பே இங்கிலீஷ் பிரிமீயர் லீக் தொடங்கிவிட்டது. லீக் தொடங்கும் முன் அணியின் வீரர்களையும் ஜெர்சி எண்ணையும் அறிவித்துவிட்டால், மீண்டும் மாற்றுவது கஷ்டம். காரணம் யுனைடெட் அணியில் 7-ம் எண் ஜெர்ஸி உருகுவே நட்சத்திர கால்பந்து வீரர் எடின்சன் கவானிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.

அத்தோடு யுனைடெட் அணியில் ரொனால்டோவின் காலத்துக்குப் பிறகு 7-ம் எண் ஜெர்ஸி அணிந்த எந்த வீரரும் சரியாக விளையாடவில்லை. ‘7 Curse’ என்று சாபமாக கருதப்பட்டதை, எடின்சன் கவானி கடந்த தொடரில்தான் சிறப்பாக விளையாடி சரி செய்தார். அப்படி இருக்கும்போது 7-ம் எண்ணை கவானி விட்டுக்கொடுப்பாரா என்கிற சந்தேகம் எழுந்தபோது யுனைடெட் அணி நிர்வாகம் சிக்கல்களை சரி செய்தது.

ரொனால்டோ ரசிகர்கள்
ரொனால்டோ ரசிகர்கள்
Jon Super

யுனைடெட் அணியின் முன்கள வீரரான டேனியல் ஜேம்ஸை லீட்ஸ் அணிக்கு ஒப்பந்தம் செய்து, அவருடைய 21-ம் எண் ஜெர்ஸியை எடிசன் கவானிக்கு கொடுத்தது. பிறகென்ன ரொனால்டோ ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே CR7 என்ற அடையாள குறியீடு ரொனால்டோவிடம் வந்தது. ரொனால்டோவின் மான்செஸ்டர் யுனைடெட் ஜெர்ஸி விற்பனையும் டாப் கியரில் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ரொனால்டோ ரசிகர்கள்
ரொனால்டோ ரசிகர்கள்
Jon Super
சரி… பரபரப்பான சினிமா காட்சிகள் போல இந்த சம்பவங்கள் நடந்து முடிந்துவிட்டன. ரொனால்டோவும் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு ஆரவாரமாக வந்துவிட்டார். அடுத்து என்ன?

கிறிஸ்டியானோ ரொனால்டோ 2009-ல் மான்செஸ்டர் அணியை விட்டு விலகும் போது இருந்த கோப்பை வெல்லும் சூழல் தற்போது அந்த அணிக்கு இருக்கிறதா என்றால் ‘நிலைமை சற்றுக் கவலைக்கிடம்’ என்பதே பதில். 2013-ல் பிரிமீயர் லீகை வென்றது தான் மான்செஸ்டர் அணியின் மிகப்பெரிய சாதனை. அதன் பிறகு நடந்த எந்த லீகையும் அவர்கள் வெற்றி கொள்ளவில்லை. அதேபோல் FA Cup, League Cup, Community Shield போன்ற சிறிய கோப்பைகளை மட்டும் தலா ஒரு முறை வென்றிருந்தார்கள். ஐரோப்பிய கால்பந்து அளவில் 2016-ம் ஆண்டு ஐரோப்பா கோப்பையை வென்றார்கள். அவ்வளவுதான். அதாவது மான்செஸ்டர் யுனைடெட் அணியின் சரிவான காலகட்டத்தில் இப்போது கிறிஸ்டியானோ ரொனால்டோ வந்து சேர்ந்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த செப்டம்பர் 11 அன்று நியூகேஸில் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில், மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை ரொனால்டோ தொடங்கினார். "Viva Ronaldo, Viva Ronaldo" என்று ஓல்டு டிராஃபர்ட் விளையாட்டு அரங்கம் முழுவதும் நிரம்பியிருந்த யுனைடெட் ரசிகர்கள் ஆரவாரம் செய்ய, இந்தப் போட்டியில் இரண்டு கோல்களை அடித்தார் ரொனால்டோ. 4-1 என்ற கோல் கணக்கில் யுனைடெட் அணி வெற்றி பெற்றது. அடுத்து நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் போட்டியிலும் Young Boys அணிக்கு எதிராக முதல் கோல் அடித்து ‘மிஸ்டர் சாம்பியன்ஸ் லீக்’ எனும் தன்னுடைய அடையாள பெயரை நிலை நிறுத்திக் கொண்டார் ரொனால்டோ. சாம்பியன்ஸ் லீக் தொடரில் 135 கோல்கள் அடித்து அதிக கோல்கள் அடித்தவர் வரிசையில் ரொனால்டோ முன்னிலையில் இருப்பது தான் இந்தப் பெயருக்கான காரணம். ஆனாலும், இந்த போட்டியில் ரொனால்டோவுக்கு மாற்று வீரராக களமிறக்கப்பட்ட ஜெஸி லிங்கார்டு போட்டியின் கூடுதல் நிமிடத்தில் எதிரணி வீரருக்கு தவறாகப் பாஸ் செய்ய, அதை Young Boys அணி வீரர் கோலாக மாற்ற, மான்செஸ்டர் யுனைடெட் அணி இப்போட்டியில் தோல்வியடைந்தது.

ரொனால்டோ
ரொனால்டோ
Rui Vieira

ரொனால்டோவின் ரிட்டன் வெற்றி/தோல்வியோடு தொடங்கியிருந்தாலும் மான்செஸ்டர் யுனைடெட் அணி பெரும்பலம் பெற்றிருக்கிறது என்றே சொல்லலாம். ரியல் மாட்ரிட் அணி நான்கு முறை சாம்பியன்ஸ் லீக் தொடரை வெல்லும் போதும் அந்த அணியில் இருந்த ரபேல் வரனே (raphael varane) யுனைடெட் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சிறந்த இளம் கால்பந்து வீரர் ஜேடன் சாஞ்சோவும் அணிக்கு புதிதாக வந்து சேர்ந்துள்ளார். இவர்களுடன் பால் போக்பா, புருனோ பெர்னாண்டஸ், கிரீன்வுட், ஹாரி மகுரே, லூக் ஷா எனப் பல திறமையான வீரர்கள் யுனைடெட் அணியில் இருக்கிறார்கள்.

உலகின் சிறந்த கோல் கீப்பராக கொண்டாடப்படும் ஸ்பெயின் அணியின் டேவிட் டி கியா (David de Gea) யுனைடெட் அணியில் இருக்கிறார். நிச்சயமாக தற்போது உள்ள மான்செஸ்டர் அணி இங்கிலீஷ் பிரிமீயர் லீகை வெல்லும் அணிகளில் ஒன்றாகத்தான் பார்க்கப்படுகிறது. ஆனால், அணியின் பயிற்சியாளர் ஓலே குன்னர் சோல்க்ஜார் (Ole Gunnar Solskjær) சரியான உத்திகள் இல்லாமல் சில நேரங்களில் அணியின் தோல்விக்கு காரணமாக இருக்கிறார். அவர் இன்னும் கொஞ்சம் விளையாட்டு நுணுக்கங்களை சரியான நேரத்தில் பயன்படுத்தினால் யுனைடெட் அணிக்கு இந்த முறை வெற்றி நிச்சயம்தான்.

ரொனால்டோவின் குட்டி க்யூட் ரசிகை
ரொனால்டோவின் குட்டி க்யூட் ரசிகை
Jon Super

37 வயதில் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்குத் திரும்பியிருக்கும் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் இறுதி கால்பந்து பயணம் இதுவாகவே இருக்கலாம். கால்பந்து உலகின் தலைசிறந்த வீரர் என உலகம் முழுக்க கொண்டாடப்படும் ரொனால்டோ தன்னுடைய கடைசிப் பயணத்தில் கோப்பைகளை வெல்ல வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு கால்பந்து ரசிகனின் எதிர்பார்ப்பும். சிறந்த கால்பந்து அணியான மான்செஸ்டர் யுனைடெட் அணியும் நீண்ட காலம் கோப்பைகள் இல்லாமல் தோல்விகளால் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. ரொனால்டோவின் வருகை எல்லாவற்றையும் மாற்றிவிடும் என்கிற நம்பிக்கையில் இருக்கும் ரசிகர்களுக்கு ரொனால்டோ என்ன செய்யப்போகிறார்? காத்திருப்போம்!

One Last Dance of CR7

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு