Published:Updated:

இன்னைக்கு அய்யனார் ஆட்டம் வெறியா இருக்கும், வெற்றியா இருக்குமா? #ISLFinal

சென்னையின் எஃப்சி
சென்னையின் எஃப்சி

அந்த இரு கோல்கள்தான் சென்னையின் எஃப்சி அடித்த உருமி மேளம். உறங்கிக்கொண்டிருந்த அய்யனார், உருமியின் சத்தம் கேட்டு உக்கிரமாய் எழுந்து நின்றார். அவர் தீட்டிய அரிவாளில் கிளம்பிய தீப்பொறி, உற்சாக தீ முட்டியது.

ஐ.எஸ்.எல் போட்டிகளின் அசகாய சூரர்கள் சென்னையின் எஃப்சி அணி. ஐ.எஸ்.எல்லின் ஐந்து சீசன்களில், இரண்டு சீசன்கள் கோப்பையை வென்றெடுத்த தந்தம் கொண்ட வேழம்கள். இருந்தாலும் என்னவோ, இந்த சீசனின் ஆரம்பம் அவ்வளவு சிறப்பானதாய் அமையவில்லை. யானைக்கும் அடி சறுக்கும்தானே! இம்முறை கோப்பை வெல்வது சாத்தியமில்லை என நினைத்தபோதுதான், அணிக்குள் அவர் வந்தார். அவன் காயல், சென்னை அணியின் புது கோச்!

சென்னையின் எஃப்சி
சென்னையின் எஃப்சி

முதல் நான்கு போட்டிகளில் கோல் எதுவும் அடிக்காமல் திணறி வந்த சென்னையின் எஃப்சி, பயிற்சியாளராக அவன் காயல் பொறுப்பேற்ற பின், தன் முதல் வெற்றியை ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ருசித்தது. அந்தப் போட்டியில் ஆட்டத்தின் கடைசி நிமிடங்களில் அடிக்கப்பட்ட அந்த இரு கோல்கள்தான் சென்னையின் எஃப்சி அடித்த உருமி மேளம். உறங்கிக்கொண்டிருந்த அய்யனார், உருமியின் சத்தம் கேட்டு உக்கிரமாய் எழுந்து நின்றார். அவர் தீட்டிய அரிவாளில் கிளம்பிய தீப்பொறி, உற்சாக தீ முட்டியது.

விதையாக வீழ்ந்து விருட்சமாக எழுந்துவந்த சென்னையின் எஃப்சி, தொடரின் இரண்டாம் பாதியில் எதிரணிகளை துவைத்து எடுத்தது. இதற்குப்பின் நடைபெற்ற 8 போட்டிகளில் 6 போட்டிகளில் வென்று அரையிறுதிக்குள் வீரநடை போட்டுச் சென்றது. அதுவரை தரவரிசையில் கடைசி நான்கு இடங்களில் இருந்த அணி நான்காவது இடத்தைப் பிடித்தது. அதை எதிர்பாராத எதிரணிகள், வியப்பில் வாயடைத்துப் போனதுதான் நிஜம். இவை அனைத்துக்கும் காரணம், பயிற்சியாளரின் சாமர்த்தியமான யுக்தியும் சமயோசிதமான புத்தியும்தான்.

அவன் காயல்
அவன் காயல்

முந்தைய பயிற்சியாளர் ஜான் கிரிகரியின் கீழ் விளையாடிய சென்னை அணி, களத்தில் தடுப்பு ஆட்டத்தையே பெரும்பாலும் விளையாடியது. ஆனால், அவன் காயல் வந்தவுடன் சென்னை அணி களத்தில் இறங்கி அடிக்க ஆரம்பித்தது. பயிற்சியாளராக வந்தவுடன் ஆக்ரோஷமான யுக்திகளை வகுத்துத் தந்தார் அவர். இதனால், கோல்கள் அடிப்பதற்கான வாய்ப்புகள் பெருகின. கிரிகரி இருந்தபோது விளையாடிய 6 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வென்றிருந்த சென்னை அணி, காயல் வந்த பின் 8 வெற்றிகளைப் பெற்றது. பொதுவாக எந்த பயிற்சியாளருக்கும் அணியுடன் புரிதல் ஏற்படுவதற்குப் பயிற்சி முகாம் அவசியமாக இருக்கும். ஆனால், காயல் இறுதியாக வந்தாலும் தனக்கு ஏற்றவாறு சென்னை அணியைத் திறம்பட வழிநடத்தினார்.

அதுவரை துவண்டு காணப்பட்ட சென்னை அணி வீரர்கள் அவரின் பயிற்சிக்கு கீழ் புத்துணர்ச்சி பெற்றனர். இவர் வால்ஸ்கிஸ், ரஃபெல் போன்ற வீரர்களை சரியாகப் பயன்படுத்தினார். மாற்று வீரர்களை கையாள்வதிலும் கைதேர்ந்தவராக இருந்தார். சென்னை அணி ஆட்டத்தில் போதுமான கோல்கள் அடித்தபிறகு ஆக்ரோஷமான ஆட்டத்தைத் தணித்து, தற்காப்பு ஆட்டத்தையும் கலந்து விளையாடச் செய்தார். இதுவே பல போட்டிகளில் வெற்றி வாகை சூட வழிவகுத்தது. `ஒழுங்காக மட்டுமே விளையாட வேண்டும்' எனும் கிரிகரியின் ஆட்ட யுக்திக்கு நேரெதிராக அமைந்தது காயலின் ஆட்ட யுக்தி.

சென்னையின் எஃப்சி
சென்னையின் எஃப்சி

எதற்கும் துணிந்து ரிஸ்க் எடுக்கும் மனநிலையிலேயே காயலின் திட்டம் இருந்தது. இவரின் பயிற்சிக்கு கீழ் வீரர்களிடையே ஒற்றுமை இன்னும் அதிகமாகத் தென்பட்டது. இதனால், களத்தில் பந்தை பாஸ் செய்வதில் தொடங்கி கோல் அடிக்கும் வரை வீரர்களிடையே நல்ல புரிதல் இருந்தது. மொத்த அணியும், ஒற்றை மனநிலையில் விளையாடியது. இனி மீண்டு வரவே முடியாது என நினைத்துபோது, சென்னை அணியை மீண்டெழச் செய்தார் காயல். அரையிறுதிப் போட்டி வந்தது. சென்னை அணி ஜெயிக்க வாய்ப்பில்லை என்றார்கள். `அப்படியா' என மெல்லிதாக சிரித்துக்கொண்டார்.

அரையிறுதிப் போட்டி வந்தது. இரண்டு சுற்றுகள் கொண்ட அரையிறுதியில் 6-5 என கோவாவை வீழ்த்திய சென்னை அணி, காலரைத் தூக்கிவிட்டு இறுதிப்போட்டிக்குள் அடி எடுத்துவைத்தது. இதுவரையிலான சென்னையின் பயணமே, அசாத்தியமானதுதான். ஆனாலும் இதே வேகத்தோடு கோப்பையை மீட்டெடுத்து வாருங்கள் என்பதுதானே எல்லா ரசிகனின் எண்ணமாக இருக்கும். கோவாவில் நடக்கவுள்ள இறுதிப் போட்டியில், சமபலம் பொருந்திய கொல்கத்தாவுடன் பலப்பரீட்சையில் ஈடுபடவுள்ளது சென்னை. இரு அணிகளுமே ஹாட்ரிக் கோப்பையை வெல்லும் முனைப்பில் இருக்கின்றன. மால்தீஸ் ராஜாவான ஆண்ட்ரே செகம்பரிக்கு இதுவே கடைசி ஆட்டமாக இருக்கும் என்பதால் வெற்றிக் களிப்புடன் அவரை வழியனுப்ப வேண்டும் என்கிற முனைப்பில் சென்னை அணி நினைக்கும். இன்றைய ஆட்டத்தில், நம் அய்யனாரின் ஆட்டம் நிச்சயம் வெறித்தனமாய் இருக்கும்.

சென்னையின் எஃப்சி
சென்னையின் எஃப்சி
கப்பு முக்கியம் காயலேய்..!
அடுத்த கட்டுரைக்கு