Published:Updated:

மெஸ்ஸி கோல் அடித்தால், அர்ஜென்டினா வென்றால் ஏன் உலகமே கொண்டாடுகிறது... யார் இந்த மெ(ஸ்)ஸியா?

லயோனல் மெஸ்ஸி - அர்ஜென்டினா கால்பந்து அணி

10 வயது மெஸ்ஸியின் உயரம் வெறும் 127 செ.மீ. ‘வயதுக்கு ஏற்ற உயரம் இல்லையே. ஏதேனும் மரபுரீதியான பிரச்னையாக இருக்குமோ... குடும்பத்தில் மற்ற குழந்தைகளின் வளர்ச்சியில் குறை ஏதும் இல்லையே’ போன்ற கவலைகள் பெற்றோரைச் சூழ்ந்தன!

மெஸ்ஸி கோல் அடித்தால், அர்ஜென்டினா வென்றால் ஏன் உலகமே கொண்டாடுகிறது... யார் இந்த மெ(ஸ்)ஸியா?

10 வயது மெஸ்ஸியின் உயரம் வெறும் 127 செ.மீ. ‘வயதுக்கு ஏற்ற உயரம் இல்லையே. ஏதேனும் மரபுரீதியான பிரச்னையாக இருக்குமோ... குடும்பத்தில் மற்ற குழந்தைகளின் வளர்ச்சியில் குறை ஏதும் இல்லையே’ போன்ற கவலைகள் பெற்றோரைச் சூழ்ந்தன!

Published:Updated:
லயோனல் மெஸ்ஸி - அர்ஜென்டினா கால்பந்து அணி
நிச்சயம் ஒரு நாள் இது நடக்கும் என்று எனக்குத் தெரியும். இந்த தருணத்தை எனக்கு வழங்கிய கடவுளுக்கு நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன். பிரேசிலில் பிரேசிலுக்கு எதிராக இப்படி ஒரு வரலாற்று வெற்றியை இவ்வளவுநாள் கடவுள் எனக்காக காப்பாற்றி வைத்திருந்திருக்கிறார் என்றுதான் நினைக்கிறேன். நான் எவ்வளவு மகிழ்ச்சியாக உணர்கிறேன் என்பதை என்னால் வெளிப்படுத்தமுடியவில்லை. இதைவிட என் வாழ்வில் சிறந்த தருணம் எதுவுமில்லை.
லயோனல் மெஸ்ஸி

இந்தியர்களுக்கு கிரிக்கெட் எப்படியோ, அப்படித்தான் அர்ஜென்டினியர்களுக்கு கால்பந்து. கருவிழி முதல் சுற்றும் பூமி வரை உருண்டையாக எதைப் பார்த்தாலும் அர்ஜென்டினியர்களுக்கு அது கால்பந்தாகத்தான் தெரியும். அப்படிப்பட்ட அர்ஜென்டினாவின் ரோஸரியாவில் (சேகுவேரா பிறந்த ஊர்) 1987-ம் ஆண்டு பிறந்தவர்தான் லயோனல் மெஸ்ஸி.

குடும்பத்தின் மூன்றாவது ஆண் குழந்தை. தந்தை ஜோர்கே, ஒரு தொழிற்சாலைப் பணியாளர்; தாய் செலியா, பகுதிநேர தூய்மைப் பணியாளர். குடும்பத்தில் பலரும் ஃபுட்பால் வீரர்கள்/வெறியர்கள். உணவு, உடை, உறைவிடம், உதைப்பதற்கு பந்து... இவையே இவர்களது அடிப்படைத் தேவை.

நடக்கப் பழகாத குழந்தை முதல் நடக்க இயலாத தாத்தா வரை ஆளுக்கு ஒரு ஃபுட்பால் கிளப் டி-ஷர்ட்டோடு புழங்குவது அர்ஜென்டினாவின் கலாசாரம். மெஸ்ஸியின் முதலாவது பிறந்த நாளிலேயே உறவினர் ஒருவர், Newell's Old Boys என்ற உள்ளூர் ஃபுட்பால் கிளப்பின் டி-ஷர்ட்டைப் பரிசாக அளித்தார். நான்காவது பிறந்த நாளில், ஒரு கால்பந்தை வாங்கிக்கொடுத்தார் தந்தை ஜோர்கே. அப்போது முதலே மெஸ்ஸிக்கும் கால்பந்துக்கும் இடையே 'செம கெமிஸ்ட்ரி’!

உள்ளூர் கிளப் ஒன்றில் கால்பந்து கோச்சாக இருந்த ஜோர்கே, தன் மூன்று மகன்களுக்கும் தீவிரமாகப் பயிற்சி அளித்தார். ஐந்தாவது வயதில் கிராண்டோலி என்ற கிளப்பில் இணைந்து விளையாட ஆரம்பித்த மெஸ்ஸிக்கு, படிப்பில் ஆர்வம் இல்லை. ஆனால், தூங்கும்போதுகூட தலைக்குக் கால்பந்தை வைத்துக்கொள்ளும் அளவுக்கு, அதன் மீது அபரிமிதமான காதல்.

மெஸ்ஸி
மெஸ்ஸி
Bruna Prado

அபாரிசியோ, Newell's Old Boys அணியின் கோச். மெஸ்ஸியின் குடும்பத்துக்குத் தெரிந்தவர். அவனது தாயும் பாட்டியும் அபாரிசியோவிடம் தங்கள் வீட்டுப் பிள்ளையின் கால்பந்து ஆர்வம், திறமை பற்றி அடிக்கடி செய்தி வாசித்தார்கள். ஒருநாள் மெஸ்ஸியையும் அழைத்துச் சென்று அவர் முன் நிறுத்தினார்கள். 'இந்தப் பொடியனா?’ என புருவங்களைச் சுருக்கினார். ஆனால், களத்தில் கால்பந்துடன் மெஸ்ஸி காட்டிய வேகம், அவரது புருவங்களை உயர்த்தின. 1986-ம் ஆண்டு பிறந்தவர்களைக் கொண்டு ஓர் அணி ('86 Team) உருவாக்கிய அவர், அதில் 87-ம் ஆண்டு பிறந்த மெஸ்ஸியையும் யோசிக்காமல் சேர்த்துக்கொண்டார்.

சிறுவர்களுக்கான கிளப் போட்டிகளில், சில ஆட்டங்களில் மெஸ்ஸி மட்டுமே ஐந்து கோல்கள் வரை அடித்து, அனைவரையும் திகைக்கச்செய்தான். அவனைவிட உயரமான அண்ணன்களுக்குக்கூட அவனது கால்களில் இருந்து பந்தைப் பிரிப்பது எப்படி எனப் புரியவில்லை. மெஸ்ஸியின் நியுவெல் அணி, 1995-ம் ஆண்டு தொடங்கி நான்கு வருடங்களில் ஒரு தோல்வியைக்கூடச் சந்திக்கவில்லை. 'The machine of '87’ என மெஸ்ஸியைக் கொண்டாடினார்கள். பள்ளியில் கால்பந்து விளையாட அணி பிரித்தால், 'என் மெஸ்ஸிதான் எனக்கு மட்டும்தான்...’ என மாணவர்கள் தங்களுக்குள் அடிதடியில் இறங்குவது சகஜமானது.

மெஸ்ஸிக்கு, கூச்ச சுபாவம் அதிகம். யாரிடமும் அதிகம் பேச மாட்டான். அணியினர் அரட்டையடித்துக்கொண்டிருக்கும்போதுகூட ஒதுங்கியே உட்கார்ந்திருப்பான். ஆனால் களத்தில் இறங்கிவிட்டால் அனல் பறக்கும். முழு வேகத்தில் அணியினரோடு சேர்ந்து வெற்றிக்காக வெறியுடன் விளையாடுவான்; யாரையும் எதற்காகவும் குறை சொல்ல மாட்டான்; அடுத்தவர்கள் கோபப்பட்டாலும் பதில் பேச மாட்டான். விளையாட்டில் காயங்கள் சகஜம். பல சமயங்களில் வலியால் கண்ணீர் வழிந்துகொண்டு இருந்தாலும், மெஸ்ஸி தன் வேகத்தைக் குறைக்காமல் கால்பந்துடன் ஓடிக்கொண்டிருப்பான்.

1996-ம் ஆண்டு பெரு நாட்டில் பெரிய லீக் தொடர் ஒன்று நடைபெற்றது. நியுவெல் ஆடிய ஒவ்வொரு போட்டியின் ஆரம்பத்திலும் இடைவேளை நேரத்திலும் மெஸ்ஸியின் பெயர் அறிவிக்கப்பட்டது. 9 வயதுடைய மெஸ்ஸி, மைதானத்தில் பந்தை வைத்து கால்களால் கவிதை எழுத ஆரம்பித்தான். அவன் கால்பந்தின் மூலம் ஏதேதோ வித்தைகள் செய்ய, கூட்டம் ஆர்ப்பரித்தது. சில ஆட்டங்களில், தன் அணியின் கோல் கீப்பரிடம் இருந்து பந்தைப் பெற்று, எதிர் அணியினர் ஒவ்வொருவரையும் ஏமாற்றி, பந்தைக் கடத்திக்கொண்டு சென்று கோல் அடிக்கும் திறமையும் மெஸ்ஸிக்கு அப்போதே வாய்த்திருந்தது.

மெஸ்ஸி
மெஸ்ஸி
Andre Penner

அர்ஜென்டினியர்கள் மெஸ்ஸியை, 'கால்பந்தின் புதிய மெஸியா’வாகக் கருத ஆரம்பித்தனர். 10 வயது மெஸ்ஸியின் உயரம் வெறும் 127 செ.மீ. ‘வயதுக்கு ஏற்ற உயரம் இல்லையே. ஏதேனும் மரபுரீதியான பிரச்னையாக இருக்குமோ? குடும்பத்தில் மற்ற குழந்தைகளின் வளர்ச்சியில் குறை ஏதும் இல்லையே’ போன்ற கவலைகள் பெற்றோரைச் சூழ்ந்தன. என்னவாக இருந்தாலும், மெஸ்ஸி கால்பந்தில் உயரத்துக்குச் செல்லவேண்டும் என்றால், அவன் உயரமாக வேண்டும்.

பல மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றார்கள். பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு 'ஹார்மோன் பிரச்னை’ என்பது உறுதியானது. தொடர்ந்து ஊசி போட்டுக்கொள்ள வேண்டும். ஆனால், சிகிச்சைக்கு மாதம் 900 டாலர் செலவாகும். அவ்வளவு பணமா? அர்ஜென்டினாவின் வருங்காலக் கால்பந்துக் கடவுளுக்குச் செலவழிக்க, அப்போது எந்த உள்ளூர் கிளப்பும் முன்வரவில்லை. 'மெஸ்ஸியின் கால்பந்துக் கனவுகள் அவ்வளவுதானா?’ - பெற்றோர் உடைந்துபோயினர். எதிர்பாராத வேளையில் பார்சிலோனாவில் இருந்து ஆதரவுக் கரம் நீண்டது.

மெஸ்ஸியின் திறமைகள் குறித்து அவனது உறவினர் மூலம் தெரிந்துகொண்ட பார்சிலோனாவின் விளையாட்டுத் துறை இயக்குநர் கார்லெஸ், '’ஸ்பெயினில் தங்கி, இங்குள்ள கிளப் அணிகளில் மெஸ்ஸி இணைந்து விளையாடச் சம்மதித்தால், நாங்கள் அவனது மருத்துவச் செலவுகளை ஏற்றுக்கொள்கிறோம்’’ என்கிறார். குடும்பத்தைப் பிரிய வேண்டும். கால்பந்தை நிரந்தரமாகப் பிரிவதைவிட, இது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல.

மெஸ்ஸி, தன் தந்தையுடன் ஸ்பெயினுக்குக் கிளம்பினான். அங்கே கார்லெஸ் முன்பு கால்பந்து விளையாடிக் காட்டினான். ஆடிப்போனார் அவர். இவன் வருங்கால நட்சத்திரம். இவனை விட்டுவிடவே கூடாது. கார்லெஸ், கையில் அப்போது எந்தக் காகிதமும் இல்லை. ஒரு நாப்கின் பேப்பரில், 'அனைத்துக்கும் நான் உதவுகிறேன்’ என்பதாக உறுதிமொழி எழுதிக் கொடுத்துவிட்டார்.

கேரளாவில் கொண்டாட்டம்
கேரளாவில் கொண்டாட்டம்
R S Iyer

மெஸ்ஸியிடம், ஸ்பெயின் குடியுரிமை கிடையாது. ஆகவே, தேசிய அளவில் போட்டிகளில் விளையாட முடியாது. பார்சிலோனா கிளப்களில் உள்ளூர் போட்டிகளில் மட்டுமே விளையாட முடியும். இடையில் காயங்கள் உண்டாக்கிய ஓய்வை, ஹார்மோன் குறைபாடு சிகிச்சைக்காகப் பயன்படுத்திக்கொண்டான் சிறுவன் மெஸ்ஸி. ஓர் ஆட்டத்தில் எதிரி வீரர் எக்குத்தப்பாக மோதியதில் மெஸ்ஸி நிலைகுலைந்து விழுந்து மயங்கினார். மருத்துவமனையில், தாடை எலும்பு உடைந்ததாக டாக்டர்கள் சொன்னார்கள். இரண்டு வார காலம் விளையாட முடியாத நிலை. ஆனால், ஃபைனலில் மெஸ்ஸி விளையாடாவிட்டால், அணிக்குப் பேரிழப்பு. அணியினர், மருத்துவர்களிடம் பேசி, மெஸ்ஸி முகத்தில் கவசத்துடன் விளையாட அனுமதி வாங்கினர். மெஸ்ஸியும் ஃபைனலில் உத்வேகத்துடன் களம் இறங்கினார். ஆனால், முகக்கவசத்தை அணியவில்லை. ஐந்தே நிமிடங்கள். மெஸ்ஸியிடம் பந்து இரண்டு முறை சிக்கியது. அதை அவரது கால்கள் சாதுர்யமாக வலைக்குள் அனுப்பின. வெற்றி... மெஸ்ஸி, அந்த ஆண்டுகளில் நுணுக்கங்களையும் நுட்பங்களையும் கற்றுக்கொண்டு அனுபவத்துடன் (162 செ.மீ உயரத்துடன்) அடுத்த பாய்ச்சலுக்குத் தயாரானார்.

அதுவரை பார்சிலோனா பி, சி அணிகளுக்காகக் களம் இறங்கிய மெஸ்ஸிக்கு, 2004-ம் ஆண்டு அக்டோபரில் பார்சிலோனா அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. மெஸ்ஸி தன் முதல் கோலை அடித்தபோது, 'பார்சிலோனாவுக்காக கோல் அடித்த இளம் வயது வீரர்’ என்ற சாதனை படைத்தார். 2007-ம் ஆண்டு இந்தச் சாதனை போஜன் என்கிற இளம் வயது வீரரால் முறியடிக்கப்பட்டது. அப்போது போஜன் கோல் அடிக்க உதவியதும் (Assist) மெஸ்ஸியே.

மெஸ்ஸிக்கு, ஸ்பெயினின் குடியுரிமையும் கிடைத்தது. அதிக கோல்கள், மேட்ச் வின்னர், ஹாட்ரிக் கோல்கள், சிறந்த வீரர் பட்டங்கள்... எனப் பல்வேறு சாதனைகளால் பார்சிலோனாவின் நட்சத்திர வீரராக மிளிர்ந்த மெஸ்ஸியை, அர்ஜென்டினா மற்றும் தென் அமெரிக்க ரசிகர்கள் ஏக்கத்துடனும் கேள்விக்குறியுடனும் பார்த்துக்கொண்டிருந்தனர். வருங்காலத்தில் மெஸ்ஸி தேசிய அணிக்குச் செல்லும்போது, அவர் தேர்ந்தெடுக்கப்போவது ஸ்பெயின் அணியையா அல்லது அர்ஜென்டினாவையா என்கிற கேள்வி ஒவ்வொருக்குள்ளும் எழுந்தது.

மெஸ்ஸி
மெஸ்ஸி
Bruna Prado

‘'நான் அர்ஜென்டினாவின் மகன்!’’ என அழுத்தமாகத் சொன்னார் மெஸ்ஸி. ஸ்பெயினின் பார்சிலோனாவுக்காக விளையாடுவதை நிறுத்திக்கொள்ள மாட்டேன் என்றும் விளக்கம் கொடுத்தார். 2005-ம் FIFA நடத்திய 20 வயதுக்கு உட்பட்டோருக்கான அர்ஜென்டினா அணியில், 17 வயது மெஸ்ஸியும் இணைந்து விளையாடினார். அர்ஜென்டினா சாம்பியன். மெஸ்ஸிக்கு, சிறந்த வீரர் மற்றும் அதிக கோல்கள் அடித்த வீரர் பட்டங்கள். ஐரோப்பியக் கண்டத்திலும் சரி, தென் அமெரிக்கக் கண்டத்திலும் சரி, 'மெஸ்ஸிமேனியா’ பரபரவெனப் பரவியது. மெஸ்ஸியின் மேனியில் தங்கள் 'லோகோ’வைப் படரவிட, சர்வதேச நிறுவனங்கள் போட்டிபோட்டன.

2006-ம் ஆண்டு உலகக் கோப்பை அர்ஜென்டினா அணியில் மெஸ்ஸியும் இடம்பெற்றார். மரடோனாவே மீண்டும் மெஸ்ஸி வடிவில் அணிக்கு வந்துவிட்டதாக அர்ஜென்டினியர்கள் கொண்டாடினார்கள். ஆனால், களத்தில் இறங்கி விளையாட மெஸ்ஸிக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. கால் இறுதியில் ஜெர்மனியுடனான போட்டியில் மெஸ்ஸி முழு நேரமும் பென்ச்சில் உட்காரவைக்கப்பட்டார். அர்ஜென்டினா தோற்று வெளியேறியது. சர்ச்சைகள் சுழன்றடித்தன. '’நேற்று முளைத்த மெஸ்ஸியின் புகழ் சீனியர்களுக்குப் பிடிக்கவில்லை. ஆகவே, அவரைக் கட்டம்கட்டிப் புறக்கணிக்கிறார்கள்’’ என அரசியல் பேசினார்கள். சோகம் மனதை அழுத்தினாலும் மெஸ்ஸி எதுவும் பேசவில்லை. அர்ஜென்டினாவின் தவிர்க்க முடியாத வீரர் எனத் தன்னை நிரூபிக்கும் அடுத்த வாய்ப்புக்காகக் காத்திருந்தார்.

Copa del Rey - இது ஸ்பெயினின் உள்ளூர் அணிகளுக்கான சாம்பியன்ஸ் லீக். 2007-ம் ஆண்டு செமி-ஃபைனலில் மெஸ்ஸி, 203 அடிகள் ஓடி எதிர் அணியின் கோல் கீப்பர் உள்பட 6 வீரர்களைக் கடந்து, அபாரமாக ஒரு கோல் அடித்தார். Goooooooooooal என மைதானமே சிலிர்த்தது. '1986-ம் ஆண்டு உலகக் கோப்பை கால் இறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக மரடோனா அடித்த கோலுக்கு நிகரானது’ என வர்ணனையாளர்கள் கொண்டாடினார்கள்.

மெஸ்ஸியின் வருகையால் அர்ஜென்டினா புத்துயிர் பெற்றது. 'மெஸ்ஸி கால்களில் பந்து சிக்கினால், எதிர் அணி கோல் கீப்பருக்கு வேலை இல்லை. அவர் வீட்டுக்குக் கிளம்பிவிடலாம்’ என கமென்ட்ரி கொடுக்கும் அளவுக்கு அட்டகாச கோல்கள். வேகமாக, விவேகமாக, சாதுர்யமாக, தந்திரமாக, அழகாக, நளினமாக, அழுத்தமாக, ஆக்ரோஷமாகப் பந்தைச் செலுத்தும் மெஸ்ஸியின் வித்தையில் எதிர் அணியினர் திணறினர். இடது கால் வீரனான மெஸ்ஸி உதைக்கும் பந்து மேலெழுந்து சுழன்றபடியே அரை வட்ட வடிவில் காற்றில் மிதந்து வலைக்குள் தஞ்சமாகும் அதிசயங்களும் நிகழ்ந்தன. 'கோல் ஆனாலும் மெஸ்ஸி காலால் கோல் ஆனேன்’ எனக் கால்பந்துகள் பேறுபெற்றன.

மெஸ்ஸி
மெஸ்ஸி
Bruna Prado

2014-ம் ஆண்டு உலகக் கோப்பை. மெஸ்ஸியின் தலைமையில் அர்ஜென்டினா களம் இறங்கியது. 1986-ம் ஆண்டு மரடோனா பெற்றுத் தந்ததை மீட்டுவருவார் மெஸ்ஸி என உலகமே எதிர்பார்த்தது. அதேபோல 1990-ம் ஆண்டுக்குப் பிறகு ஃபைனலுக்கு முன்னேறியது அர்ஜென்டினா. உலகின் மிகச் சிறந்த வீரரான மெஸ்ஸிக்கும், உலகின் மிகச் சிறந்த அணியான ஜெர்மனிக்கும் மோதல் என உலகம் சூடானது. அர்ஜென்டினாவுக்கு, கோப்பை கிட்டவில்லை. சிறந்த வீரருக்கான 'கோல்டன் பால்’ கிட்டியது மெஸ்ஸிக்கு. மெஸ்ஸி கண்ணீரைக் கட்டுப்படுத்த இயலாமல் சொன்ன வார்த்தைகள்... ‘'கோல்டன் பால் பற்றியெல்லாம் நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. நல்ல வாய்ப்புகள் இருந்தும் நாங்கள் அதைச் சரியாகப் பயன்படுத்தவில்லை. என் வலியை எப்படி உணர்த்துவது எனத் தெரியவில்லை. அர்ஜென்டினாவுக்கு உலகக் கோப்பையைப் பெற்றுத் தரும் வரை அந்த வலி தீராது’’ என்றார்.

மெஸ்ஸி, நிச்சயம் தனித்துவமிக்க... தன்னிகரற்ற கால்பந்து வீரர். களத்தில், சாதனைகளில் அவர் அடைந்திருக்கும் உச்சம் அசாத்தியமானது. ஐரோப்பா, தென் அமெரிக்கா என இரண்டு கண்டங்களுக்காக விளையாடி, கோடிக்கணக்கான ரசிகர்களை தன் கால் அசைவுகளால் கட்டிப்போட்டிருக்கிறார். இந்த மெஸ்மரிச மெஸ்ஸி மீது தொடர்ந்து சொல்லப்படும் அழுத்தமான குற்றச்சாட்டு... 'மெஸ்ஸி, பார்சிலோனாவுக்கு விளையாடுவது போல, அர்ஜென்டினாவுக்காக விளையாடுவது இல்லை. பார்சிலோனாவுக்குப் பெற்றுத் தந்திருக்கும் வெற்றிகள்போல, அர்ஜென்டினாவுக்குப் பெற்றுத் தந்தது இல்லை’’ என்பது.

அந்த விமர்சனத்துக்கும் இப்போது முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் லயோனல் மெஸ்ஸி. 28 ஆண்டுகளுக்குப் பிறகு கோபா அமெரிக்கா கோப்பையை மெஸ்ஸி தலைமையில் கையில் ஏந்தியிருக்கிறது அர்ஜென்டினா. இந்த கோபா அமெரிக்கா தொடரில் 6 போட்டிகளில் விளையாடி 4 கோல்கள் அடித்து, 5 கோல் அசிஸ்ட்டுகள் செய்திருக்கிறார் மெஸ்ஸி. தொடரின் சிறந்த வீரராகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

ஆனால், மெஸ்ஸியின் கனவு அர்ஜென்டினாவுக்கு உலகக்கோப்பையை பெற்றுத்தர வேண்டும் என்பதுதான். 34 வயதாகும் மெஸ்ஸி தனது கரியரின் கடைசி கட்டத்தில் இருக்கிறார். அடுத்த ஆண்டு கத்தாரில் நடைபெற இருக்கும் கால்பந்து உலகக்கோப்பைதான் மெஸ்ஸியின் கடைசி உலகக்கோப்பையாகவும் இருக்கலாம். நிச்சயம் அர்ஜென்டினாவுக்கு கோப்பையைப் பெற்றுத்தந்துவிட்டே ஓய்வெடுப்பார் இந்த கால்பந்து கடவுள்!