Published:Updated:

லயோனல் மெஸ்ஸி ஏன் தேம்பித் தேம்பி அழுதார்… உலகமே கொண்டாடும் மாவீரனை ஏன் வெளியேற்றியது பார்சிலோனா?

இளம் வயதில் மெஸ்ஸிக்கு இருந்த ஹார்மோன் குறைபாட்டை தீர்ப்பதற்கான சிகிச்சையின் மொத்த செலவையும் பார்சிலோனா அணியே ஏற்றுக்கொண்டது. இந்த ஒரு காரணத்திற்காகவே காலம் முழுவதும் பார்சிலோனா அணிக்காக மட்டுமே மெஸ்ஸி விளையாடுவார் என்று கூறப்பட்டது... ஆனால்?!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நேற்று நடைபெற்ற பார்சிலோனா கிளப் ஃபேர்வெல் நிகழ்ச்சியில் கால்பந்து சூப்பர் ஸ்டார் மெஸ்ஸி தேம்பித் தேம்பி அழுதது அவரது ரசிகர்களையும் அழவைத்திருக்கிறது. சிறு வயதிலேயே மெஸ்ஸியின் திறமைகளைக் கண்டறிந்து அவரை கால்பந்து உலகின் ஜாம்பவனாக மாற்றிய பார்சிலோ கிளப் ஏன் அவரைக் கைவிட்டது?

இப்போதல்ல கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பார்சிலோனாவில் இருந்து மெஸ்ஸி வெளியேறப்போகிறார் என்கிற தகவல்கள் வந்துகொண்டேதான் இருந்தன. ஆனால், எப்படியும் இருதரப்பும் சமாதானம் ஆகிவிடும், மெஸ்ஸி தொடர்ந்து பார்சிலோனாவுக்கு விளையாடுவார் என்றே ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், 21 ஆண்டுகால மெஸ்ஸி - பார்சிலோனா உறவு 2021-ல் இறுதியாக முடிவுக்கு வந்துவிட்டது.

மெஸ்ஸிக்கு 13 வயதாக இருக்கும்போது, நேப்கின் தாளில் எழுதப்பட்ட ஒப்பந்தம்தான் 778 போட்டிகள், 672 கோல்கள், 10 லா லிகா கோப்பை, ஏழு கோப்பா டெல் ரே கோப்பை, நான்கு சாம்பியன்ஸ் லீக் கோப்பை, மூன்று ஃபிஃபா கிளப் உலக கோப்பைக்கு காரணமாக இருந்தது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
லயோனல் மெஸ்ஸி
லயோனல் மெஸ்ஸி
Joan Monfort

“நான் உண்மையில் சோகமாக இருக்கிறேன். ஏனென்றால் இங்கிருந்து வெளியேற நான் விரும்பவில்லை. அந்தளவுக்கு இந்த கிளப்பை நான் நேசிக்கிறேன். கடந்த வருடம் நான் வெளியேற விரும்பியது உண்மைதான். ஆனால் இந்த முறை எனக்கு வெளியே செல்ல விருப்பமில்லை” எனக் கண்ணீர் மல்க மெஸ்ஸி கூறியபோது எந்தளவுக்கு அவர் பார்சிலோனா அணியின் மீது பற்றுகொண்டிருந்தார் என்பதை உணர முடிந்தது.

இளம் வயதில் மெஸ்ஸிக்கு இருந்த ஹார்மோன் குறைபாட்டை தீர்ப்பதற்கான சிகிச்சையின் மொத்த செலவையும் பார்சிலோனா அணியே ஏற்றுக்கொண்டது. இந்த ஒரு காரணத்திற்காகவே காலம் முழுவதும் பார்சிலோனா அணிக்காக மட்டுமே மெஸ்ஸி விளையாடுவார் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் இந்த வருடம் ஜூன் 30-ம் தேதியோடு பார்சிலோனா அணியுடனான ஒப்பந்தம் காலாவதியாகிவிட்ட நிலையில், நிதிச்சுமை காரணமாக தங்களால் மெஸ்ஸியின் ஒப்பந்தத்தை நீட்டிக்க முடியாது என பார்சிலோனா தெரிவித்தது.

‘’என்னுடைய சம்பளத்தை வேண்டுமானால் 50 சதவிகிதம் குறைத்துக் கொள்கிறேன்’’ என மெஸ்ஸி சொல்லியும் அசைந்து கொடுக்கவில்லை பார்சிலோனா அணி நிர்வாகம். “எல்லாரையும் விட கிளப்பே பெரியது” என ஒரே வரியில் 21 வருட பந்தத்தை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டார் பார்சிலோனா கால்பந்து கிளப் அணியின் தலைவர் ஜோன் லாபோர்டா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வெற்றிக்கு மேல் வெற்றியை குவித்த அணி; உலகின் பிரபலமான கால்பந்து கிளப்; ஆண்டுக்கு ஒரு பில்லியன் யூரோ வருமானத்தை எட்டிய முதல் அணி என்ற பெருமையெல்லாம் எங்கே போனது? இத்தனை ஆண்டு காலம் பார்சிலோனா என்றால் மெஸ்ஸி, மெஸ்ஸி என்றால் பார்சிலோனா என்று கூறுமளவுக்கு அணியின் முகமாக இருந்த வீரரை நீக்குவதற்கு நிதிச்சுமைதான் காரணமா?
மெஸ்ஸி வென்று தந்த கோப்பைகள்
மெஸ்ஸி வென்று தந்த கோப்பைகள்

2015-ம் ஆண்டு பெர்லினில் வைத்து நான்காவது முறையாக சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றபிறகில் இருந்தே பார்சிலோனா அணியின் இறங்குமுகம் தொடங்கிவிட்டது. இந்தக் காலகட்டத்தில்தான் யாரை வேண்டுமானாலும் ஒப்பந்தம் செய்துகொள்ளும் வல்லமையை எட்டியது பார்சிலோனா. இதற்கு முன்பு வரை தங்களுக்கு சொந்தமான யூத் அகாடமி மூலம் சிறந்த வீரர்களை உருவாக்கி போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. எந்தவொரு தொழிலிலும் முக்கியமான விஷயம், திறமையான ஆட்களைத் தேர்ந்தெடுப்பது. அதில் கோட்டை விட்டது பார்சிலோனா. இது முதல் சறுக்கல்!

2014 முதல் 2020 வரை பார்சிலோனா கிளப்பின் தலைவராக இருந்தவர் ஜோசப் மரியா பர்த்லமேயு. மிகப்பெரிய தொழிலதிபர். மெஸ்ஸி வெளியேறுவதற்கும், இந்தளவுக்கு பார்சிலோனா அணி நிதிச்சுமையில் தள்ளாடி வருவதற்கும் முக்கிய காரணம் இவர்தான். கால்பந்து விளையாட்டு பற்றியோ அல்லது கால்பந்து தொழில் பற்றியோ இவருக்கு தெரிந்திருக்கவில்லை என்பதோடு, பதவிக்கு வந்ததில் இருந்தே இவருக்கும் மெஸ்ஸிக்கும் ஒத்துவரவில்லை.

மெஸ்ஸி  பார்சிலோனா டி-ஷர்ட்
மெஸ்ஸி பார்சிலோனா டி-ஷர்ட்
Andrea Comas

இவரின் கீழ் ஸ்போர்டிங் டைரக்டராக இருந்த புகழ்பெற்ற ஸ்பெயின் கோல்கீப்பர் அண்டோனி ஜூபிதான் நெய்மர் மற்றும் சாரெஸ் போன்ற வீரர்களை ஒப்பந்தம் செய்தார். இவர்கள் இருவரும் மெஸ்ஸியோடு இணைந்து MSN அட்டாக் என எதிரணிக்கு கிலியை ஏற்படுத்தினார்கள். சிறிது காலத்திலேயே ஜூபியை பதவியிலிருந்து தூக்கினார் பர்த்லமேயு.

2017-ல் நெய்மரும் அணியிலிருந்து விலக, அடுத்த இறங்கு முகத்தை சந்தித்தது பார்சிலோனா. இந்த சமயத்தில்தான் இரண்டு மிகப்பெரும் தவறுகளைச் செய்தார் பர்த்லமேயு. ப்ரெஞ்ச் வீரர் கைலியன் எம்பப்பே மற்றும் நார்வே வீரர் எர்லிங் ஹாலண்ட் இருவரையும், “பார்சிலோனா மாடலுக்கு ஒத்து வர மாட்டார்கள்” என ஒப்பந்தம் செய்யாமல் நிராகரித்தார். இன்று இந்த இரு வீரர்களும் கால்பந்து உலகில் மிகப்பெரிய வீரர்களாக ஜொலித்து வருகிறார்கள்.

இன்னொரு பக்கம் தேவையே இல்லாமல் இளம் வீரர்களை அதிக விலை கொடுத்து ஒப்பந்தம் செய்தார். இவர்களும் பார்சிலோனாவில் கையாளப்படும் அழுத்தத்தை தாங்க முடியாமல் தோல்வியுற்ற வீரர்களாக வெளியேற ஆரம்பித்தார்கள். இதனால் இவர்களுக்கு செலவழித்த தொகையும் வீணானது.

மெஸ்ஸி கோல் அடித்தால், அர்ஜென்டினா வென்றால் ஏன் உலகமே கொண்டாடுகிறது... யார் இந்த மெ(ஸ்)ஸியா?

அடுத்து மெஸ்ஸியின் சம்பளம். 2017 முதல் 2021 வரையிலான இடைப்பட்ட காலத்தில் 555 மில்லியன் யூரோவை வருமானமாக ஈட்டியுள்ளார் மெஸ்ஸி. இந்த காலகட்டத்தில்தான் அவரது சம்பளம் மும்மடங்கு அதிகரித்தது.

மெஸ்ஸி
மெஸ்ஸி

பல கோப்பைகளை அணிக்கு பெற்றுக் கொடுத்துள்ளார், கால்பந்து உலகின் ஜாம்பவான், ஒற்றை ஆளாக அணிக்கு வெற்றி தேடி தருபவர் போன்றவற்றால் மெஸ்ஸிக்கு அதிக சம்பளம் கொடுக்கலாம். ஆனால் மெஸ்ஸிக்கு அதிக சம்பளம் கொடுக்கும்போது மற்ற வீரர்களும் தங்களுக்கான சம்பளத்தை உயர்த்த போர்க்கொடி தூக்க ஆரம்பித்தார்கள்.

அணியின் வருமானத்தில் 75 சதவிகிதத்துக்கு மேல் வீரர்களின் சம்பளத்துக்காக செலவழிக்ககூடாது என லா லீகா அமைப்பு தடை விதித்துள்ளதால், மேலும் சிக்கலை சந்திக்க ஆரம்பித்தது பார்சிலோனா.

வீரர்களை ஒப்பந்தம் செய்வதற்கு மட்டுமே 2014 முதல் 2019 வரை ஒரு பில்லியன் யூரோவை செலவழித்துள்ளது பார்சிலோனா அணி. எந்தவொரு அணியும் நினைத்துப் பார்க்க முடியாத தொகை இது. இப்படி தொடர்ந்து எடுத்த தவறான முடிவுகள் காரணமாகவே இன்று நிதிச்சுமையில் தள்ளாடி வருகிறது பார்சிலோனா கிளப்.

பார்சிலோனா கிளப்
பார்சிலோனா கிளப்

அடுத்து என்ன?

பார்சிலோனா அணியில் மெஸ்ஸியின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்பதே நிதர்சனம். அந்த பத்தாம் எண் ஜெர்சியை இனி யார் அணியப் போகிறார்கள், மெஸ்ஸி இல்லாத பார்சிலோனா அணியால் முன்பு போல் கோப்பைகளை வெல்ல முடியுமா, மெஸ்ஸி இல்லாத லா லீகா தொடர் ரசிகர்களை ஈர்க்குமா… இப்படி நிறைய கேள்விகளுக்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

இதற்கிடையில், மெஸ்ஸியை இரண்டு வருடத்துக்கு ஒப்பந்தம் செய்ய பி.எஸ்.ஜி அணி தயாராக இருப்பதாக செய்திகள் வருகின்றன. ஆனால் மெஸ்ஸி இதுபற்றி எதுவும் உறுதியாக சொல்லவில்லை; அதே சமயத்தில் இந்த செய்தியை அவர் மறுக்கவும் இல்லை. சில நாள்களுக்கு முன், பி.எஸ்.ஜி அணி வீரர்களோடு (நெய்மர் மற்றும் டி மரியா) மெஸ்ஸி இருப்பது போன்ற புகைப்படம் வெளியான போதே இதுபற்றி கிசுகிசுக்கப்பட்டது. பி.எஸ்.ஜி அணியின் முதலீட்டாளர்கள் கத்தார் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதாலும், 2022 கால்பந்து உலக கோப்பை கத்தார் நாட்டில் நடைபெறுவதாலும் மெஸ்ஸியை ஒப்பந்தம் செய்வதன் மூலம் வர்த்தக நோக்கில் ஆதாயம் அடையலாம் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.

ஆனால், மெஸ்ஸி எந்த அணிக்குப்போனாலும் பார்சிலோனா போல வருமா என கலங்குகிறார்கள் மெஸ்ஸி ரசிகர்கள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு