2022 பிரீமியர் லீக் சீசனுக்கான டைட்டில் ரேஸ் சூடுபிடித்திருக்கிறது. மான்செஸ்டர் சிட்டி, லிவர்பூல் இரண்டு அணிகளும் முதலிடத்துக்கு முட்டி மோதிக்கொண்டு இருக்கின்றன. இன்னும் 4 போட்டிகளே மீதமிருக்கும் நிலையில், இந்த இரு அணிகளுக்கும் வெறும் 1 புள்ளி வித்தியாசம்தான் இருக்கிறது. 2011-12 சீசனைப் போல், இந்த முறையும் கடைசி நாள் வரை இந்த யுத்தம் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சீசன் தொடக்கத்தில் மான்செஸ்டர் சிட்டி, லிவர்பூல், செல்சீ மூன்று அணிகளும் சரிக்கு சமமாகப் போட்டியிட்டன. அடுத்த சில வாரங்களில் லிவர்பூல், செல்சீ அணிகளின் செயல்பாடுகள் சற்று மங்க, அந்த இரண்டு அணிகளும் புள்ளிப் பட்டியலில் பின்வாங்கின. 10-வது வாரம் வரை இரண்டாவது இடத்தில் இருந்த லிவர்பூல், பிரைட்டன் அண்ட் ஹோவ் ஆல்பியான் அணியோடு டிரா, வெஸ்ட் ஹாம் யுனைடெட் அணிக்கெதிராக தோல்வி என அடுத்தடுத்த போட்டிகளில் புள்ளிகளை இழந்து மூன்றாவது இடத்துக்கு இறங்கியது. 14-வது சுற்றின்போது முதலிடத்தில் இருந்த செல்சீ, அடுத்த சுற்றிலேயே மூன்றாவது இடத்துக்குப் பின்தங்கியது. 15-வது சுற்றில் வாட்ஃபோர்டை வீழ்த்தி இந்த சீசனில் முதல் முறையாக முதலிடத்துக்கு முன்னேறியது மான்செஸ்டர் சிட்டி.
அன்று புள்ளிப் பட்டியலில் மேலே ஏறிய அணி, இன்று வரை அந்த இடத்திலேயேதான் இருக்கிறது. ஒருகட்டத்தில் தொடர்ந்து 15 போட்டிகளில் தோல்வியே சந்திக்காமல் இருந்தது மான்செஸ்டர் சிட்டி. 12 போட்டிகளில் தொடர்ந்து வெற்றியும் பெற்று அசத்தியது. ஆனால், அந்த அணிக்கும் இரண்டாம் இடத்திலிருக்கும் லிவர்பூலுக்குமான வித்தியாசம் பெரிய அளவில் மாறியிருக்கிறது. 22-வது சுற்றின் முடிவில் மான்செஸ்டர் சிட்டி 56 புள்ளிகள் பெற்றிருந்தது. லிவர்பூல் 48 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தது. 8 புள்ளிகள் வித்தியாசம் இருந்ததால், கார்டியோலாவின் அணி எந்தப் பிரச்னையும் இல்லாமல் எளிதாக சாம்பியன் பட்டம் வென்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
23-வது சுற்றில் எதிர்பாராத விதமாக சௌதாம்ப்டன் அணியுடனான போட்டியை டிரா செய்தது மான்செஸ்டர் சிட்டி. 26-வது சுற்றில் டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிக்கெதிராக சொந்த மைதானத்திலேயே 2-3 என தோல்வியடைந்தது. வழக்கமாக மான்செஸ்டர் சிட்டியை படுத்தி எடுக்கும் கிறிஸ்டல் பேலஸ், 29-வது சுற்றில் டிரா செய்து மான்செஸ்டர் சிட்டியின் 2 புள்ளிகளை அபகரித்தது. அந்த சுற்றின் முடிவில் மான்செஸ்டர் சிட்டி 70 புள்ளிகள் பெற்றிருக்க, தொடர்ந்து 8 போட்டிகளை வென்ற லிவர்பூல் 69 புள்ளிகளில் வந்து நின்றது.

31-வது சுற்றில், இந்த சீசனின் மிக முக்கிய போட்டி நடைபெற்றது. எடிஹாட் மைதானத்தில் மான்செஸ்டர் சிட்டி vs லிவர்பூல் ஆட்டம் நடந்தது. வெற்றி பெறும் அணி எப்படியும் கோப்பையை வென்றுவிடும் என்று கணிக்கப்பட, அந்த ஆட்டம் 2-2 என டிரா ஆனது. அதற்குப் பிறகு நடந்த போட்டிகளெல்லாம் இரண்டு அணிகளும் வெற்றி பெற்றுக்கொண்டே இருக்க, அந்த 1 புள்ளி வித்தியாசம் மாறாமல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
இரண்டு அணிகளும் அட்டாக், டிஃபன்ஸ் என எல்லா ஏரியாவிலும் பட்டையைக் கிளப்புகின்றன. லிவர்பூலை பொறுத்தவரை முகமது சலா, டியாகோ ஜோடா, சாடியோ மனே அடங்கிய மூவர் கூட்டணி கோல் மழையாகப் பொழிந்துகொண்டிருக்கிறது. 22 கோல்கள் அடித்து இந்த சீசனின் டாப் ஸ்கோரராகத் திகழ்கிறார் சலா. ஜோடா 15 கோல்களும், மனே 14 கோல்களும் அடித்து நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில் இருக்கின்றனர். அந்த அணி அடித்த 86 கோல்களில், இவர்கள் மட்டுமே 51 கோல்கள் அடித்துள்ளனர். அசிஸ்ட்கள் பட்டியலில் முதல் 3 இடங்களிலுமே லிவர்பூல் வீரர்கள்தான். சலா (13), டிரென்ட் அலெக்சாண்டர் ஆர்னால்ட் (12), ஆண்ட்ரூ ராபர்ட்சன் (10) அசிஸ்ட்களாக செய்து அசத்திக்கொண்டிருக்கின்றனர்.
மான்செஸ்டர் சிட்டிக்கு ஒருவர், இருவர் என்றில்லாமல் பல வீரர்கள் கோலடித்துக்கொண்டே இருக்கின்றனர். கெவின் டி புருய்னா, ரியாட் மாரஸ் ஆகியோர் 11 கோல்கள் அடித்து அந்த அணியின் டாப் ஸ்கோரர்களாகத் திகழ்கின்றனர். ரஹீம் ஸ்டெர்லிங் (10 கோல்கள்), பெர்னார்டோ சில்வா, ஃபில் ஃபோடன், கேப்ரியல் ஜீசுஸ் (தலா 8 கோல்கள்), இல்கே குண்டோகன் (6 கோல்கள்) என பல வீரர்கள் ஸ்கோர் ஷீட்டில் அடிக்கடி தங்கள் பெயரைப் பதியவைக்கின்றனர். அசிஸ்ட்களில் அதிகபட்சமாக ஜீசுஸ் 8 அசிஸ்ட்கள் செய்திருக்கிறார். லிவர்பூல் போல் நிரந்தரமான ஃபார்வேர்ட் லைனை களமிறக்காமல், கார்டியோலா தொடர்ந்து ரொடேட் செய்வதால், பல வீரர்கள் கோலடித்திருக்கிறார்கள்.

பிரீமியர் லீகில் மட்டுமல்லாது இந்த இரு அணிகளும் சாம்பியன்ஸ் லீகிலும் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கின்றன. இரண்டு அணிகளுமே இறுதிப் போட்டிக்கு முன்னேறும் நிலையில் தான் இருக்கின்றன. லிவர்பூல் அணி இரண்டு தொடர்கள் என்றில்லாமல், இம்முறை Quadraple வெல்லும் முனைப்போடு இருக்கிறது. ஏற்கெனவே லீக் கோப்பை வென்றிருக்கும் அந்த அணி, FA கோப்பை இறுதிப் போட்டிக்கும் முன்னேறியிருக்கிறது.
மீதமிருக்கும் நான்கு போட்டிகளில் நியூகாசில் யுனைடெட், வோல்வர்ஹாம்ப்டன் வாண்டரர்ஸ், வெஸ்ட் ஹாம் யுனைடெட், ஆஸ்டன் விலா ஆகிய அணிகளோடு மான்செஸ்டர் சிட்டி மோதவிருக்கிறது. அதில் இரண்டு போட்டிகளில் அவே மைதானத்தில் விளையாடவேண்டியது. லிவர்பூல் அணியோ டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர், ஆஸ்டன் விலா, சௌதாம்ப்டன், வோல்வர்ஹாம்ப்டன் வாண்டரர்ஸ் அணிகளோடு மோதவேண்டியிருக்கிறது. இந்த அணிக்கும் 2 அவே ஆட்டங்கள் இருக்கின்றன. சிட்டிக்கு வெஸ்ட் ஹாம் போட்டியும், லிவர்பூலுக்கு ஸ்பர்ஸ் அணியுடனான போட்டியும் கடினமாக இருக்கலாம்.
இந்தப் போட்டிகள் இந்த சீசனின் பட்டத்தை முடிவு செய்யலாம்.