சிறப்பாக நடந்துகொண்டிருக்கும் போர்க்களம் கால்பந்துத் தொடரில் இதுவரை 6 சுற்றுகள் நடந்து முடிந்திருக்கின்றன. நேரு மைதானத்தில் ஒவ்வொரு வாரமும் கோல் மழை பொழிந்துகொண்டிருக்கும் இத்தொடரில், இதுவரை 6 சுற்றுகள் நடந்து முடிந்திருக்கின்றன. 24 போட்டிகளில் மொத்தம் 102 கோல்கள் அடிக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில், ஒவ்வொரு அணியின் செயல்பாடும் எப்படியிருக்கிறது, எந்த அணி முன்னிலையில் இருக்கிறது என்பது பற்றிய ஒரு அலசல்.
நோபல் கால்பந்து அகாடெமி
வெற்றி: 5
டிரா: 1
தோல்வி: 0
கோல் வித்தியாசம்: +20
புள்ளிகள்: 16
இந்திய கால்பந்து ஜாம்பவான் ராமன் விஜயனின் நோபல் அகாடெமி போர்க்களம் தொடரின் அசைக்கமுடியாத அணியாக விளங்கி வருகிறது. இத்தொடரில் இதுவரை தோற்காத அணி நோபல் மட்டும்தான். ஃப்யூச்சர் இந்தியா அணியுடன் மட்டும் போராடி கடைசி நிமிடத்தில் டிரா செய்யவேண்டியிருந்தது. மற்ற ஒவ்வொரு போட்டியிலும் குறைந்தது 4 கோல்களாவது அடித்துக்கொண்டிருக்கிறது இந்த அணி. அதிக கோல்கள் அடித்தது, குறைவான கோல்கள் விட்டது எல்லாமே இந்த அணி தான். 10 கோல்கள் அடித்து இத்தொடரின் டாப் ஸ்கோரராக விளங்குகிறார் நோபல் அகாடெமி வீரர் அருன். விளையாடிய 6 போட்டிகளிலுமே கோலடித்து அசத்தியிருக்கிறார்.

தடம் சாக்கர் அகாடெமி
வெற்றி: 4
டிரா: 0
தோல்வி: 2
கோல் வித்தியாசம்: +7
புள்ளிகள்: 12
நோபல் அணியுடனான முதல் போட்டியில் தோல்வியுடன் ஆரம்பத்திருந்தாலும், அடுத்த 5 போட்டிகளில் 4 வெற்றிகளைப் பதிவு செய்து புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் அமர்ந்திருக்கிறது தடம். இதுவரை 14 கோல்கள் அடித்திருக்கும் தடம், 7 கோல்கள் விட்டிருக்கிறது. வி.விஜேஷ் 3 கோல்கள் அடித்து அசத்த, டி.விஜேஷ், கலாநிதி, நரேஷ் ஆகியோர் தலா 2 கோல்கள் அடித்து அணியின் சிறப்பான செயல்பாட்டுக்குக் காரணமாக விளங்குகின்றனர். யாவே அணிக்கெதிரான ஒரே போட்டியில் 7 கோல்கள் அடித்து அசத்தியது தடம்.
YMSC
வெற்றி: 3
டிரா:1
தோல்வி:2
கோல் வித்தியாசம்: +9
புள்ளிகள்: 10
ஒரு போட்டியில் தோற்றால் அடுத்த போட்டியில் கோல் மழை பொழிவதை வாடிக்கையாக வைத்திருக்கிறது YMSC. இரண்டாவது சுற்றில் தடம் சாக்கர் அகாடெமியிடம் 2 கோல் வித்தியாசத்தில் தோற்ற அந்த அணி, அடுத்த சுற்றில் யாவே எஃப்.சி-யை பந்தாடி 6 கொல்கள் அடித்தது. ஐந்தாவது சுற்றில் ஃப்யூச்சர் இந்தியாவிடம் தோற்றுவிட்டு (1-3) ஆறாவது சுற்றில் எஃப்.சி.ரெவலேஷனை சூறையாடியிருக்கிறது. அந்தப் போட்டியில் 6 கோல்கள்! அதிக கோல்கள் அடித்த அணிகளின் வரிசையில் இரண்டாவது இடத்திலிருக்கும் YMSC (17 கோல்கள்), 8 கோல்கள் விட்டிருக்கிறது. அந்த அணியின் கீர்த்தி மோஹன், மனோஜ் இருவரும் தலா 2 கோல்கள் அடித்திருக்கின்றனர்.

ஃப்யூச்சர் இந்தியா ஃபுட்பால் அகாடெமி
வெற்றி: 3
டிரா:1
தோல்வி:2
கோல் வித்தியாசம்: +4
புள்ளிகள்: 10
தோல்வியோடு சீசனைத் தொடங்கினாலும், நந்த குமாரின் ஹாட்ரிக் மூலம் அடுத்த சுற்றிலேயே புள்ளிக் கணக்கைத் தொடங்கியது ஃப்யூச்சர் இந்தியா ஃபுட்பால் அகாடெமி (FIFA). யாராலும் அசைக்க முடியாத நோபல் கால்பந்து அகாடெமியை ஆட்டிப் பார்த்தது FIFA. ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் நோபல் வீரர் விஜய் கோலடிக்காமல் இருந்திருந்தால், அந்த அணியை வீழ்த்திய ஒரே அணியாக FIFA அமைந்திருக்கும். YMSC அணியை விட குறைவான (7) கோல்களே விட்டிருந்தாலும், 11 கோல்களே அடித்திருப்பதால், கோல் வித்தியாசத்திலும், புள்ளிப் பட்டியலில் பின்தங்குகிறது FIFA. அந்த அணிக்காக நந்த குமார் 5 கோல்கள் அடித்திருக்கிறார்.
வோல்ஃப்பேக் எஃப்.சி
வெற்றி: 2
டிரா: 2
தோல்வி: 2
கோல் வித்தியாசம்: +2
புள்ளிகள்: 8
வெற்றி, டிரா, தோல்வி, கோல் வித்தியாசம் என அனைத்தையும் இரண்டாக வைத்திருக்கிறது வோல்ஃப்பேக் எஃப்.சி. எஃப்.சி.ரெவலேஷனை 5 கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அமர்க்களமாக சீசனைத் தொடங்கிய அந்த அணிக்கு, மற்ற போட்டிகள் எதிர்பார்த்த அளவு அமையவில்லை. கடைசி 4 போட்டிகளிலுமே வெற்றி பெறத் தவறியிருக்கிறது அந்த அணி. MAFFC அணிக்கெதிராக 2 கோல்கள் முன்னிலை பெற்றிருந்த அந்த அணி, கூடுதல் நேரத்தில் 2 கோல்கள் வாங்கி வெற்றியைத் தாரை வார்த்தது. ஆதில், லோகேஷ் இருவரும் அதிகபட்சமாக தலா 4 கோல்கள் அடித்திருக்கின்றனர். கடைசி 3 போட்டிகளில் இவர்கள் இருவருமே கோலடிக்கத் தவறியிருப்பது அந்த அணிக்கு சற்றி பின்னடைவு.

யாவே எஃப்.சி
வெற்றி: 2
டிரா: 0
தோல்வி: 4
கோல் வித்தியாசம்: -17
புள்ளிகள்: 6
போர்க்களம் வரலாற்றில் முதல் கோல், முதல் வெற்றி எல்லாம் யாவே அணியின் பெயரில் தான் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால், அடுத்த 5 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது அந்த அணி. 7 கோல்களே அடித்திருக்கும் யாவே, 24 கோல்கள் வாங்கியிருக்கிறது. YMSC அணிக்கெதிரான போட்டியில் 6 கோல்கள் விட்ட அந்த அணி, தடம் அணிக்கெதிராக 7, நோபலுக்கு எதிராக 6 கோல்கள் விட்டிருக்கிறது. முதல் போட்டிக்குப் பிறகு அவர்களால் கிளீன் ஷீட் வைக்கவே முடியவில்லை. அவர்கள் அடித்த 7 கோல்களில் நான்கு விஜய் துங்கா அடித்தது. அந்த அணி கோலடித்த 4 போட்டிகளிலுமே அவர் கோலடித்திருக்கிறார்.
MAFFC
வெற்றி: 1
டிரா: 1
தோல்வி: 4
கோல் வித்தியாசம்: -8
புள்ளிகள்: 4
எஃப்.சி.ரெவலேஷன் அணிக்கெதிரான போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கும் MAFFC, இரண்டு போட்டிகளை 1 கோல் வித்தியாசத்தில் தோற்றிருக்கிறது. தொடர்ந்து 4 போட்டிகளில் தோற்றிருந்தாலும், வோல்ஃப்பேக் அணிக்கெதிரான போட்டியில் அசத்தலாக கம்பேக் கொடுத்து டிரா செய்திருக்கிறது. 87 நிமிடங்கள் வரை 1-4 என பின்தங்கியிருந்த அந்த அணி, அடுத்த 7 நிமிடங்களில் 3 கோல்கள் அடித்து 1 புள்ளியை வசப்படுத்தியது. ஸ்டாப்பேஜ் டைமில் 2 கோல்கள் அடித்து பட்டையைக் கிளப்பினார் அந்த அணியின் பகுத்தறிவாளன். 3 கோல்கள் அடித்து அந்த அணியின் டாப் ஸ்கோரராக இருக்கிறார் அஜித் குமார். அதில் 2 பெனால்டி கோல்கள்.

எஃப்.சி.ரெவலேஷன்
வெற்றி: 1
டிரா: 0
தோல்வி: 5
கோல் வித்தியாசம்: -17
புள்ளிகள்: 3
ஒரேயொரு வெற்றியுடன் புள்ளிப் பட்டியலில் கடைசி இடம் பிடித்திருக்கிறது எஃப்.சி.ரெவலேஷன். கோல் அடிக்கத் தடுமாறும் அந்த அணி, இதுவரை 3 போட்டிகளில் மட்டும் தலா ஒரு கோல்கள் அடித்திருக்கிறது. அதில், ஃப்யூச்சர் இந்தியா ஃபுட்பால் அகாடெமிக்கு எதிராக தியானேஷ் அடித்த கோல், அந்த அணியின் ஒரே வெற்றிக்குக் காரணமாக அமைந்தது. யாவே அணிக்கெதிராக முதல் பாதியில் முன்னிலை பெற்றிருந்தாலும், இரண்டாவது பாதியில் சொதப்பியதால் தோல்வியடைந்தது. ஜனா கார்த்திகேயன், சாய்நாத் அர்ஜுன் ஆகியோரும் அந்த அணிக்காக கோலடித்திருக்கிறார்கள்.