Published:Updated:

மெஸ்ஸி, ரொனால்டோ இல்லை... UEFA-ன் சிறந்த வீரர் - விர்ஜைல் வேன் டைக்! யார் இவர்? #UCL #UEFAawards

கடந்த சில ஆண்டுகளாகப் பாலன் டி ஓர், ஃபிஃபா விருதுகள், UEFA விருதுகள் என எதிலுமே டிஃபண்டருக்கோ, கோல் கீப்பருக்கோ அங்கீகாரம் கிடைக்கவில்லை. வேன் டைக்கின் இந்த வெற்றி, அதை மாற்றியமைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Virjil Van Djik
Virjil Van Djik ( AP )

2018-19 சீஸனின் UEFA பிளேயர் ஆஃப் தி இயர் விருதை லிவர்பூல் அணியின் டிஃபண்டர் விர்ஜைல் வேன் டைக் வென்றுள்ளார். நேற்றிரவு மொனாகோவில் நடந்த விருது விழாவில், மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ இருவரையும் பின்னுக்குத்தள்ளி இந்த விருதை வென்றுள்ளார் இந்த நெதர்லாந்து வீரர். பெண்கள் பிரிவில், ஆண்டின் சிறந்த வீரர் விருதை, இங்கிலாந்தின் லூசி பிரான்ஸ் வென்றார்.

Vikatan

வேன் டைக் - லிவர்பூல் அணியில் இவர் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது. முன்களத்தில் கில்லியாக இருந்தாலும், தடுப்பாட்டத்தில் தடுமாறிய அணிக்குப் புத்துயிர் கொடுத்தது இவர்தான்! கடந்த 10 ஆண்டுகளில் ஒரேயொரு கோப்பை மட்டுமே வென்றிருந்த அந்த அணி, இவர் வருகைக்குப் பிறகு, தொடர்ந்து இரண்டு முறை சாம்பியன்ஸ் லீக் ஃபைனலுக்கு முன்னேறியுள்ளது. கடந்த பிரீமியர் லீக் சீஸனில் அதிக கிளீன் ஷீட்கள் வைத்தது. மொத்த சீஸனிலும் குறைந்த கோல்கள் (22 கோல்கள்) விட்ட அணி லிவர்பூல்தான்! இந்த நம்பர்கள் மட்டும் இவரது தாக்கத்தைச் சொல்லிவிடாது. முக்கியமான போட்டிகளில் சொதப்பிக்கொண்டிருந்த அணிக்கு, நம்பிக்கையை விதைத்ததும் இவர் வருகைதான்!

Virjil Van Djik
Virjil Van Djik
AP

ரொனால்டோ (74 புள்ளிகள்), மெஸ்ஸி (207 புள்ளிகள்) என இரு பெரும் வீரர்களையும் பின்னுக்குத்தள்ளி 305 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து இந்த விருதை வென்றார் வேன் டைக். 2011-ம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டுவரும் இந்த விருதை முதல் 7 ஆண்டுகள் ஃபார்வேர்டுகள் மட்டுமே வென்றுவந்தனர். கடந்த ஆண்டுதான் மிட்ஃபீல்டர் லூகா மோட்ரிச் முன்கள வீரர்களின் ஆதிக்கத்துக்கு முட்டுக்கட்டை போட்டார். இப்போது முதல் முறையாக டிஃபண்டர் ஒருவர் வென்றிருக்கிறார்.

கடந்த சில ஆண்டுகளாகப் பாலன் டி ஓர், ஃபிஃபா விருதுகள், UEFA விருதுகள் என எதிலுமே டிஃபண்டருக்கோ, கோல் கீப்பருக்கோ அங்கீகாரம் கிடைக்கவில்லை. வேன் டைக்கின் இந்த வெற்றி, அதை மாற்றியமைக்கும் என்று எதிர்பார்க்கலாம்! 2018-19 UEFA சாம்பியன்ஸ் லீக் தொடரின் சிறந்த டிஃபண்டருக்கான விருதையும் வேன் டைக்தான் வென்றார். சிறந்த கோல்கீப்பர் விருதை சக லிவர்பூல் வீரர் ஆலிசன் பெக்கர் வென்றார். கடந்த சாம்பியன்ஸ் லீக் சீஸனில் யுவன்டஸ், ரியல் மாட்ரிட் அணிகளை வெளியேற்றிய அயாக்ஸ் அணியின் நம்பிக்கையாகத் திகழ்ந்த ஃப்ராங்கி டி யாங் சிறந்த நடுகள வீரருக்கான விருதை வென்றார். பார்சிலோனா ஜாம்பவான் லயோனல் மெஸ்ஸி, ஃபார்வேர்ட் ஆஃப் தி இயர் விருதை வென்றார்.

Lucy Bronze
Lucy Bronze

மகளிர் கால்பந்தின் ஆதிக்க சக்தியாய் விளங்கும் லயான் அணியின் ரைட்பேக் லூசி பிரான்ஸ், பெண்களுக்கான ஆண்டின் சிறந்த வீரர் விருதை வென்றார். கடந்த பாலன் டி ஓர் விருதை வென்ற ஆடா ஹெகன்பெர்க், அமாண்டின் ஹென்றி ஆகிய இருவரையும் பின்னுக்குத்தள்ளி அவர் இந்த விருதை வென்றுள்ளார். இந்த ஆண்டுக்கான UEFA பிரெசிடன்ட் விருது முன்னாள் மான்செஸ்டர் யுனைடட் வீரர் எரிக் கான்டோனாவுக்கு வழங்கப்பட்டது.

இந்த விருது விழாவில்தான் அடுத்த சாம்பியன்ஸ் லீக் சீஸனுக்கான 'draw' நடைபெற்றது. இந்தத் தொடருக்குத் தகுதிபெற்ற 32 அணிகளும் 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. நடப்பு சாம்பியன் லிவர்பூல், மீண்டும் நெபோலி அணியுடனேயே குரூப் பிரிவில் இடம்பெற்றுள்ளது. கடந்த சீஸனின் நாக் அவுட் சுற்றில் மிகவும் பரபரப்பான ஆட்டத்தை ஆடிய யுவன்டஸ், அத்லெடிகோ மாட்ரிட் அணிகள் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளன. A பிரிவில் பாரீஸ் செயின்ட் ஜெர்மைன், ரியல் மாட்ரிட் அணிகள் இடம்பெற்றுள்ளன. கடந்த ஆண்டின் ரன்னர் அப் டாட்டன்ஹாம், பேயர் மூனிச் அணியுடன் மல்லுக்கட்டப்போகிறது.

இந்தப் பிரிவுகளில் இரண்டு பெரிய அணிகள் இருந்தாலும், மற்ற அணிகள் பெரிய தாக்கம் ஏற்படுத்தாது என்பதால், இந்தப் பிரிவுகளில் பெரிய போட்டி இருக்காது. பார்சிலோனா, பொருஷியா டார்ட்மண்ட், இன்டர் மிலன் அணிகள் இடம்பெற்றுள்ள F பிரிவு ஏதாவது அதிர்ச்சிகரமான முடிவுகளை அளிக்கலாம். இளமையும் துடிப்பும் நிறைந்த டார்ட்மண்ட், ஆன்டோனியா கான்டேவின் இன்டர் இரண்டு அணிகளுமே எப்போது வேண்டுமானாலும் ஆச்சர்யங்களைப் பரிசளிக்கலாம்.

இந்த சீஸனின் மிகவும் போட்டி நிறைந்த பிரிவுகளாக இருக்கப்போவது G & H இரண்டும்தான். ஜெனித், பென்ஃபிகா, லயான், லீப்சிக் அணிகளுக்குள் நிச்சயம் பெரும் போட்டி இருக்கும். 4 சுமாரான அணிகளுள், அடுத்த சுற்றுக்கு முன்னேறும் 2 அணிகள் எது என்பதுதான் பெரிய சவால். அதேபோல், H பிரிவில் செல்சீ, அயாக்ஸ், லீல், வெலன்சியா அணிகள் இடம்பெற்றுள்ளன. முன்னணி வீரர்கள் வெளியேறியது செல்சீ, அயாக்ஸ் இரண்டு அணிகளையுமே கடந்த சீஸனைவிட கொஞ்சம் பலம் குறைந்த அணிகளாகவே காணப்படுவதால், மற்ற இரண்டு அணிகளும் கடும் போட்டி தரும்.

UEFA Champions League
UEFA Champions League
AP

இந்த விருது விழாவுக்கு வந்திருந்த மெஸ்ஸி, ரொனால்டோ இருவரும் தங்களின் உறவு குறித்து உற்சாகமாகப் பேசினர். "நாங்கள் 15 வருடம் கால்பந்தின் மிகப்பெரிய மேடையை அலங்கரித்துள்ளோம். எங்களுக்குள் நல்ல உறவு இருக்கிறது. இத்தனை காலத்தில் ஒருமுறைகூட நாங்கள் டின்னருக்குப் போனதில்லை. இனி எப்போதாவது போவோம் என்று நினைக்கிறேன்" என்று சொல்லிச் சிரித்த ரொனால்டோ, "என்னுடைய வயதுக்கு நான் மிகவும் சிறப்பாகவே விளையாடிக்கொண்டிருக்கிறேன். இதுபோன்ற விருது போட்டியில் அடுத்த வருடமும் இருப்பேன். அதற்கடுத்த வருடமும் இருப்பேன். என்னை வெறுப்பவர்கள் என்னை இங்கு தொடர்ந்து பார்த்துக்கொண்டேதான் இருக்கப்போகிறார்கள்" என்றும் கூறினார்.

கால்பந்து வீராங்கனையும் குட்டி ரசிகரும்! - ரசிகர்களின் மனதை வென்ற புகைப்படம்

இந்த சீஸனின் சாம்பியன்ஸ் லீக் தொடர் செப்டம்பர் 17-ம் தேதி தொடங்குகிறது. முதல் நாள் நடக்கும் போட்டியில் இன்டர் மிலன் அணி ஸ்லாவியா பிராஹா அணியுடன் மோதுகிறது. இன்னொரு போட்டியில் லயான், ஜெனித் அணிகள் மோதுகின்றன. கடந்த சீஸன் சாம்பியன்ஸ் லீக், கடந்த ஆண்டைப் போல் சில கிளாசிக் போட்டிகளைக் கொடுக்கும் என்று எதிர்பாக்கலாம்!