Published:Updated:

`21 ஆண்டுகளில் 250 கோல்கள்...!' - உருகுவே சூப்பர் ஸ்டார் ஃபோர்லான் ஓய்வு!

எம்.குமரேசன்

`நல்ல நினைவுகளுடன் அழகான இந்த வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. அடுத்த சவால்கள் தொடங்குகின்றன'

ஃபோர்லான்
ஃபோர்லான் ( ஃபோர்லான் )

உருகுவே கால்பந்து வீரர் டீகோ ஃபோர்லான் அனைத்து விதமான கால்பந்துப் போட்டிகளில் இருந்தும் விடைபெற்றுள்ளார். 21 ஆண்டு கால்பந்து வாழ்க்கையில், அவர் 250 கோல்களை அடித்துள்ளார். 2010-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தொடரில் உருகுவே அணி அரையிறுதிவரை முன்னேற முக்கிய காரணமாக இருந்தவர் டீகோ ஃபோர்லான். இந்தத் தொடரில் 5 கோல்களை அடித்து தங்கப் பந்து விருதையும் தட்டிச் சென்றார்.

ஃபோர்லான்
ஃபோர்லான்

அர்ஜென்டினா கிளப் இன்டிபென்டன்ட் அணியுடன் கால்பந்து வாழ்க்கையைத் தொடங்கிய ஃபோர்லான், மான்செஸ்டர் யுனைடெட், வியேரல், அத்லெடிகோ மாட்ரிட், இன்டர் மிலன் கிளப்களுக்காகவும் விளையாடியுள்ளார். 2016-ம் ஆண்டு ஐ.எஸ்.எல் தொடரில் மும்பை அணிக்காகவும் விளையாடினார். கடைசியாக, ஹாங்காங் பிரீமியர் லீக் தொடரில், விளையாடி வந்த ஃபோர்லான், அனைத்துவிதமான கால்பந்துப் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக நேற்று அறிவித்துள்ளார்.

ஃபோர்லான் வெளியிட்டுள்ள அறிக்கையில், `நல்ல நினைவுகளுடன் அழகான இந்த வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. அடுத்த சவால்கள் தொடங்குகின்றன' எனக் குறிப்பிட்டுள்ளார்.

Vikatan

தற்போது, ஃபோர்லானுக்கு 40 வயதாகிறது. 21 வருடங்கள் கால்பந்து விளையாடியுள்ளார். மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடியபோது, பிரீமியர் லீக் மற்றும் எப்.ஏ கோப்பைகளை அந்த அணி வென்றுள்ளது. 2010-ம் ஆண்டு அத்லெடிகோ மாட்ரிட் அணி யூரோபா கோப்பையை வெல்ல உதவினார். ஃபுல்ஹாம் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஃபோர்லான் 2 கோல்களை அடித்தது குறிப்பிடத்தக்கது.

ஃபோர்லான்
ஃபோர்லான்

2011-ம் ஆண்டு கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் உருகுவே கோப்பையை வென்றது. பெரு அணிக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் உருகுவே 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதில், இரண்டு கோல்கள் அடித்தது ஃபோர்லான்!