2022-23 பிரீமியர் லீக் சீசனை மிகவும் மோசமாகத் தொடங்கியது மான்செஸ்டர் யுனைடட் அணி, இப்போது தொடர்ச்சியாக நான்காவது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. ஆர்செனல் அணிக்கு எதிரான போட்டியை 3-1 என வென்று அந்த அணியின் வெற்றிப் பயணத்தையும் முடிவுக்குக் கொண்டு வந்தது மான்செஸ்டர் யுனைடட். மான்செஸ்டர் சிட்டி, லிவர்பூல் அணிகள் இந்த வாரம் டிரா மட்டுமே செய்ததால் தலா 2 புள்ளிகளை இழந்தன.
புதிய பயிற்சியாளர் எரிக் டென் ஹாக் வந்ததும் பெரிய மாற்றம் வரும் என்று மான்செஸ்டர் யுனைடட் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் முதல் இரண்டு போட்டிகள் எதிர்பார்த்தது போல் நடக்கவில்லை. பிரைட்டன் அண்ட் ஹோவ் ஆல்பியான், பிரென்ட்ஃபோர்ட் என சிறு அணிகளோடும் படுதோல்வி அடைந்தது. அதனால் அணியில் பல மாற்றங்கள் செய்தார் டென் ஹாக். கேப்டன் ஹேரி மகுயரை வெளியே அமர்த்திவிட்டு, ரஃபேல் வரேன் - லிசாண்ட்ரோ மார்டினஸ் இணையை டிஃபன்ஸில் பயன்படுத்தினார் அவர். டிஃபன்ஸின் இடது பக்கம், அனுபவ வீரர் லூக் ஷாவுக்குப் பதிலாக இளம் வீரர் டைரெல் மலாசியாவைக் களமிறக்கினார். சுமார் 100 மில்லியன் டாலர்கள் கொட்டி அயாக்ஸ் அணியில் இருந்து ஆன்டனியை வாங்கியது அந்த அணி. அதற்கு முன்பாக 5 சாம்பியன்ஸ் லீக் கோப்பைகள் வென்றவரான கஸமிரோவையும் ரியல் மாட்ரிட்டிடம் இருந்து வாங்கியது. இந்த மாற்றங்கள் அந்த அணிக்கு மிகப்பெரிய மாற்றத்தைக் கொடுத்தன. தோல்விகளில் இருந்து மீண்டு வெற்றி பெறத் தொடங்கியது யுனைடட்.

பிரென்ட்ஃபோர்டுக்கு எதிராக 0-4 எனத் தோற்றிருந்த நிலையில், லிவர்பூல் அணிக்கு எதிரான அடுத்த போட்டியில் பெரிய சரிவை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2-1 என வெற்றி பெற்று வெற்றிப் பயணத்தைத் தொடங்கியது ரெட் டெவில்ஸ். சௌதாம்ப்டன், லெஸ்டர் சிட்டி அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்து 1-0 என வெற்றி பெற்றது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஆர்செனல் அணியை ஓல்டு டிராஃபோர்ட் மைதானத்தில் சந்தித்தது யுனைடட். ஆர்செனல் அணியோ இந்த சீசனில் விளையாடிய முதல் 5 போட்டிகளையும் வென்று அசத்தலான ஃபார்மில் இருந்தது. அதனால் இந்தப் போட்டியின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. போட்டியின் 12வது நிமிடத்திலேயே ஆர்செனல் அணி முன்னிலை பெற்றது. புகாயா சகோ ஏற்படுத்திக்கொடுத்த வாய்ப்பைப் பயன்படுத்தி கோலடித்தார் கேப்ரியல் மார்டினெல்லி. ஆனால் அந்த கோலின் போது கிறிஸ்டியன் எரிக்சனை ஆர்செனல் கேப்டன் மார்டின் ஓடகார்ட் ஃபவுல் செய்ததால் கோலை ரத்து செய்தது VAR. அதன் பிறகும் நம்பிக்கையாக சில முயற்சிகள் செய்தது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் முதல் கோலை மான்செஸ்டர் யுனைடட் அணி அடித்தது. 35வது நிமிடத்தில், மார்கஸ் ராஷ்ஃபோர்ட் கொடுத்த அற்புதமான பாஸை கோலடித்து தன் மான்செஸ்டர் யுனைடட் பயணத்தைத் தொடங்கினார் ஆன்டனி. தன் அறிமுக போட்டியில், 35 நிமிடங்களிலேயே அவர் கோலடித்ததால் ஓல்டு டிராஃபோர்ட் மைதானம் பெரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது.
முதல் பாதியில் மான்செஸ்டர் யுனைடட் அணி முன்னிலை பெற்றிருக்க, தொடர்ந்து முயற்சிகள் செய்துகொண்டே இருந்தது ஆர்செனல். அதன் விளைவாக 60வது நிமிடத்தில் கோலும் கிடைத்தது. ஆட்டத்தைச் சமனாக்கிய அந்த கோலை அடித்தது புகாயோ சகா. இந்த சீசனில் இதுவரை கோலடிக்காமல் இருந்தவருக்கு இது முதல் கோலாகவும் அமைந்தது. ஆனால் நான்கே நிமிடங்களில் மீண்டும் முன்னிலை பெற்றது யுனைடட். புரூனோ ஃபெர்னாண்டஸ் கொடுத்த அற்புதமான பாஸை கோலாக்கினார் ராஷ்ஃபோர்ட். இரண்டாவது கோலுக்காக ஆர்செனல் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டிருக்க, ஒரு கவுன்ட்டர் அட்டாக் மூலம் மூன்றாவது கோலை அடித்தது யுனைடட். இம்முறை எரிக்சன் கொடுத்த பாஸை ஃபினிஷ் செய்து கோலாக்கினார் ராஷ்ஃபோர்ட். இறுதியில் 3-1 என அபார வெற்றி பெற்றது அந்த அணி. இதன் மூலம் தொடர்ந்து 5 போட்டிகளாக வெற்றி பெற்றுக் கொண்டிருந்த ஆர்செனலின் பயணம் முடிவுக்கு வந்தது. இருந்தாலும் 15 புள்ளிகளோடு புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது ஆர்செனல். 12 புள்ளிகள் பெற்றிருக்கும் மான்செஸ்டர் யுனைடட் ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியது.

சனிக்கிழமை நடந்த போட்டியில் எவர்டன் அணி லிவர்பூலைச் சந்தித்தது. சமீபமாக நடக்கும் மெர்சி சைட் டார்பி போட்டிகளில் லிவர்பூல் பெரும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அது இம்முறையும் தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் லிவர்பூல் அணியை எவர்டன் கோலடிக்கவே விடவில்லை. வடிவத்தில் சிறு மாற்றம் கண்ட அவர்கள் டிஃபன்ஸ் சிறப்பாகச் செயல்பட்டது. கோல்கீப்பர் ஜோர்டன் பிக்ஃபோர்டும் 8 சேவ்கள் செய்து தங்கள் அணி 1 புள்ளி பெறுவதற்குக் காரணமாக அமைந்தார். தடுமாறிக்கொண்டிருந்த மற்றொரு அணியான ஆஸ்டன் விலாவும் மான்செஸ்டர் சிட்டியின் வெற்றியைத் தடுத்திருக்கிறது. விலா பார்க்கில் நடந்த போட்டி 1-1 என முடிவுக்கு வந்தது. இந்தப் போட்டியில் கோலடித்து இந்த சீசனின் பத்தாவது கோலை பதிவு செய்தார் எர்லிங் ஹாலண்ட். கடைசி கட்டத்தில் விலாவுக்கு இரண்டாவது கோலடி அடித்தார் ஃபிளிப் கொடினியோ. ஆனால் ஆஃப்சைடு என்று நடுவர்கள் அதை நிராகித்தனர். கடைசியில் அது ஆஃப்சைடு இல்லை என்று தெரியவந்ததால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. 14 புள்ளிகள் பெற்றிருக்கும் மான்செஸ்டர் சிட்டி இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது.
பிரீமியர் லீக் முடிவுகள்: மேட்ச் டே 6
எவர்டன் 0 - 0 லிவர்பூல்
பிரென்ட்ஃபோர்ட் 5 - 2 லீட்ஸ் யுனைடட்
செல்சீ 2 - 1 வெஸ்ட் ஹாம் யுனைடட்
நியூகாசில் யுனைடட் 0 - 0 கிறிஸ்டல் பேலஸ்
நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட் 2 - 3 போர்ன்மௌத்
டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் 2 - 1 ஃபுல்ஹாம்
வோல்வர்ஹாம்ப்டன் வாண்டரர்ஸ் 1 - 0 சௌதாம்ப்டன்
ஆஸ்டன் விலா 1 - 1 மான்செஸ்டர் சிட்டி
பிரைட்டன் அண்ட் ஹோவ் ஆல்பியான் 5 - 2 லெஸ்டர் சிட்டி
மான்செஸ்டர் யுனைடட் 3 - 1 ஆர்செனல்
ஐரோப்பாவின் மற்ற முக்கிய முடிவுகள்
ரியல் மாட்ரிட் 2 - 1 ரியல் பெடிஸ்
ரியல் சோசிடாட் 1 - 1 அத்லெடிகோ மாட்ரிட்
ஃபியோரென்டினா 1 - 1 யுவென்டஸ்
யுனியோன் பெர்லின் 1 - 1 பேயர்ன் மூனிச்
செவியா 0 - 3 பார்சிலோனா
நான்டஸ் 0 - 3 பாரிஸ் செயின்ட் ஜெர்மைன்
ஏசி மிலன் 3 - 2 இன்டர் மிலன்
லாசியோ 1 - 2 நெபோலி