Published:Updated:

லிவர்பூலின் அதிரடி ஆரம்பம்; செல்சீயின் மிரட்டல் கம்பேக்... வெற்றி என்னவோ கார்டியோலாவுக்கு!

Chelsea vs Liverpool ( AP )

ஏதாவது ஒரு அணி வெற்றி பெற்றிருந்தால், மான்செஸ்டர் சிட்டியுடனான வித்தியாசம் ஓரளவு குறைந்திருக்கும். ஆனால், இரண்டு அணிகளும் இந்தப் போட்டியிலிருந்து 1 புள்ளியை மட்டுமே எடுக்க, சிட்டிக்கும் இந்த அணிகளுக்குமான இடைவெளி அதிகரித்துவிட்டது.

லிவர்பூலின் அதிரடி ஆரம்பம்; செல்சீயின் மிரட்டல் கம்பேக்... வெற்றி என்னவோ கார்டியோலாவுக்கு!

ஏதாவது ஒரு அணி வெற்றி பெற்றிருந்தால், மான்செஸ்டர் சிட்டியுடனான வித்தியாசம் ஓரளவு குறைந்திருக்கும். ஆனால், இரண்டு அணிகளும் இந்தப் போட்டியிலிருந்து 1 புள்ளியை மட்டுமே எடுக்க, சிட்டிக்கும் இந்த அணிகளுக்குமான இடைவெளி அதிகரித்துவிட்டது.

Published:Updated:
Chelsea vs Liverpool ( AP )
பிரீமியர் லீக் டைட்டில் ரேஸில் மான்செஸ்டர் சிட்டிக்கு மிகப்பெரிய அட்வான்டேஜைக் கொடுத்திருக்கின்றன லிவர்பூல் மற்றும் செல்சீ அணிகள். அந்த இரண்டு அணிகளும் மோதிய போட்டி 2-2 என டிராவில் முடிய, புள்ளிப் பட்டியலில் 10 புள்ளிகள் முன்னிலை பெற்றிருக்கிறது மான்செஸ்டர் சிட்டி!

இந்த ஆண்டை ஆர்செனல் அணிக்கெதிராக வெற்றி பெற்று சிறப்பாகத் தொடங்கியது கார்டியோலாவின் அணி. கடந்த சில வாரங்களாக மிகச் சிறப்பாக விளையாடிவரும் ஆர்செனல், இந்தப் போட்டியை சிறப்பாகத் தொடங்கியது. 31-வது நிமிடத்தில் புகாயோ சகா கோலடித்து முன்னிலை ஏற்படுத்திக்கொடுத்தார். அந்த கோலினால், முதல் பாதியை 1-0 என முன்னிலையோடு முடித்தது அந்த அணி. ஆனால், இரண்டாவது பாதியில் கம்பேக் கொடுத்தது சிட்டி. மோசமான 4 நிமிடங்கள் ஆர்செனலுக்கு பாதகமாக அமைந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

55-வது நிமிடத்தில், பாக்சுக்குள் பெர்னார்டோ சில்வாவின் டீ ஷர்டைப் பிடித்து இழுத்துத் தள்ளினார் கிரானித் ஜகா. அதனால், சிட்டிக்கு பெனால்டி கிடைத்தது. அதை மாரஸ் கோலாக மாற்றினார். அவர் பெனால்டி எடுப்பதற்கு முன் அந்த இடத்தை சேதப்படுத்தியதற்காக யெல்லோ கார்ட் வாங்கினார் ஆர்செனல் டிஃபண்டர் கேப்ரியல். அடுத்த இரண்டாவது நிமிடத்தில், கேப்ரியல் ஜீசுஸை ஃபவுல் செய்து இரண்டாவது யெல்லோ வாங்கினார். அதனால், ஆர்செனல் 10 வீரர்களுடன் விளையாடவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டது. இருந்தாலும் சிட்டியால் வெற்றிக்கான கோலை அடிக்க முடியவில்லை. இருந்தாலும், ஸ்டாப்பேஜ் டைமின் மூன்றாவது நிமிடம், அந்த வெற்றிக்கான கோலை அடித்தார் ராட்ரி. 21 போட்டிகளில் விளையாடியிருக்கும் சிட்டிக்கு, இது 17-வது வெற்றி.

Riyad Mahrez
Riyad Mahrez
AP

அந்த அணி 3 புள்ளிகளையும் எடுத்திருந்த நிலையில், டைட்டில் ரேஸில் அவர்களைப் பின்தொடர்ந்த லிவர்பூல், செல்சீ அணிகள் இந்த வாரம் புள்ளிகளை இழந்துள்ளன. இந்த இரண்டு அணிகளும் ஸ்டாம்ஃபோர்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நேற்றிரவு மோதின. ஆட்டத்தின் ஏழாவது நிமிடத்திலேயே புலிசிக் கோலடிக்க நல்ல வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அதை தவறவிட்டார். அடுத்த இரண்டு நிமிடங்களில் எதிர்முனையில் கோலடித்து முன்னிலை பெற்றது லிவர்பூல்.

இளம் வீரர் நதானியல் சலாபா பந்தை சரியாக கிளியர் செய்யாமல் போக, அதைப் பயன்படுத்தி கோலடித்தார் சாடியோ மனே. அந்த முன்னிலையை இரட்டிப்பாக்கினார் அணியின் நட்சத்திர வீரர் முகமது சலா. 26-வது நிமிடத்தில் அலெக்சாண்டர் அர்னால்ட் ஒரு அற்புதமான த்ரூ பால் ஒன்றை செல்சீ டிஃபன்ஸுக்கு மேலே அனுப்பினார். அதை சிறப்பாக கன்ட்ரோல் செய்து, அலோன்சோ, மெண்டி இருவரையும் ஏமாற்றி கோலாக்கினார் சலா. இந்த பிரீமியர் லீக் சீசனில் அவர் அடிக்கும் 16-வது கோல் இது.

போட்டியே அவ்வளவுதானோ என்று நினைத்த நிலையில், மிகச் சிறந்த முறையில் கம்பேக் கொடுத்தது செல்சீ. 41-வது நிமிடத்தில் செல்சீ அணிக்கு ஒரு ஃப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. இடது புறமிருந்து அலோன்சோ அடித்த ஷாட்டை, கோல்கீப்பர் கெல்லஹர் தடுத்தார். பாக்சுக்கு கொஞ்சம் வெளியே சென்ற அந்த பந்தை, பாக்ஸின் ஓரத்தில் நின்றிருந்த கோவசிச், அப்படியே பின்னால் நகர்ந்து 'வாலி'யாக கோல் நோக்கி அடித்தார். கோல் கம்பத்தில் பட்டு உள்ளே சென்று கோலானது அந்த பந்து.

Kovacic
Kovacic
AP

அதே உத்வேகத்தோடு விளையாடிய செல்சீ, அடுத்த 4 நிமிடங்களில் இன்னொரு கோலையும் அடித்தது. தொடர்ந்து அவர்கள் பிரெஸ் செய்ய, லிவர்பூல் வீரர்களால் பந்தை அவர்கள் வசம் வைத்திருக்க முடியவில்லை. ஒரு நிமிட இடைவெளியில் தொடர்ந்து 5 முறை பந்தை செல்சீ வீரர்களிடம் இழந்தனர். அப்படியொரு பந்து கான்டே வசம் சிக்க, அற்புதமாக புலிசிக்கின் பாதைக்கு அதை அனுப்பினார் கான்டே. அதை அட்டகாசமாக கோல் நோக்கி செலுத்தி ஆட்டத்தை சமனாக்கினார் புலிசிக். 2-2.

இரண்டாவது பாதியில் இரண்டு அணிகளும் சிலபல முயற்சிகளை மேற்கொண்டன. ஆனால், எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. செல்சீ கோல்கீப்பர் மெண்டி, லிவர்பூல் கோல்கீப்பர் கெல்லஹர் இருவரும் மிகச் சிறப்பாக செயல்பட்டு எதிரணியின் முயற்சிகளைத் தடுத்தனர். அதனால், இந்தப் போட்டி 2-2 என டிராவில் முடிந்தது.

ஏதாவது ஒரு அணி வெற்றி பெற்றிருந்தால், மான்செஸ்டர் சிட்டியுடனான வித்யாசம் ஓரளவு குறைந்திருக்கும். ஆனால், இரண்டு அணிகளும் இந்தப் போட்டியிலிருந்து 1 புள்ளியை மட்டுமே எடுக்க, சிட்டிக்கும் இந்த அணிகளுக்குமான இடைவெளி அதிகரித்துவிட்டது. 21 போட்டிகளில் ஆடியிருக்கும் மான்செஸ்டர் சிட்டி, செல்சீ அணிகள் முறையே 53 மற்றும் 43 புள்ளிகள் பெற்றிருக்கின்றன. ஒரு ஆட்டம் குறைவாக ஆடியிருக்கும் லிவர்பூல் 42 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறது.