Published:Updated:

இது தமிழக கால்பந்தின் வாசம்! நேரு ஸ்டேடியத்துக்கு உயிர் கொடுத்திருக்கும் தமிழ்நாடு வுமன்ஸ் லீக்!

Tamil Nadu Women's League ( Football Makka )

வானுக்கு முழுமையாக சிவப்பு சாயம் அடித்திடாத சூரியனின் வெளிச்சம்;பனித்துளிகளை தாங்கி நிற்கும் பச்சை புற்கள்;அவற்றை மிதித்து செல்லும் பூட்கள்;புற்கள் மீது தவழ்ந்து செல்லும் கால்பந்து;இந்த காட்சிக்கு பின்னணி இசையாய் நம் வீராங்கனைகளின் தமிழ்...தமிழ்நாடு கால்பந்து உயிர் பெற்றுவிட்டது!

இது தமிழக கால்பந்தின் வாசம்! நேரு ஸ்டேடியத்துக்கு உயிர் கொடுத்திருக்கும் தமிழ்நாடு வுமன்ஸ் லீக்!

வானுக்கு முழுமையாக சிவப்பு சாயம் அடித்திடாத சூரியனின் வெளிச்சம்;பனித்துளிகளை தாங்கி நிற்கும் பச்சை புற்கள்;அவற்றை மிதித்து செல்லும் பூட்கள்;புற்கள் மீது தவழ்ந்து செல்லும் கால்பந்து;இந்த காட்சிக்கு பின்னணி இசையாய் நம் வீராங்கனைகளின் தமிழ்...தமிழ்நாடு கால்பந்து உயிர் பெற்றுவிட்டது!

Published:Updated:
Tamil Nadu Women's League ( Football Makka )

நேரு ஸ்டேடியம் புற்களுக்கு ஒரு வாசம் உண்டு. வெட்டப்படும் புற்கள் வெளியிடும் GLV ரசாயனத்தால் ஏற்படுத்தும் வழக்கமான வாசத்தைச் சொல்லவில்லை. இந்தப் புற்களிலிருந்து கால்பந்தின் வாசம் கசியும். சென்பக பாண்டியனைப் போல் அதை மறுத்தீர்களெனில், தமிழக கால்பந்து ரசிகர்களின் நெற்றிக்கண் உங்களைச் சுட்டெரிக்கும். மெரீனாவில் அடிக்கும் காற்று, மெரீனா அரீனாவைத் தீண்டித் தாண்டினால், அதில் நிச்சயம் கால்பந்தின் வாசம் கலந்திருக்கும்.

இலக்கணம் சரியோ..! இல்லை. இவையெல்லாம் கடந்த காலத்தில் நடந்தவையல்லவா. கலந்திருந்தது என்றுதானே எழுதியிருக்கவேண்டும்.

ஆம், அப்புற்கள் தங்கள் நறுமனத்தை இழந்து சில மாதங்கள் ஆகிவிட்டது! சென்னை கால்பந்தை இழந்து சில வருடங்களே ஆகிவிட்டது!

சென்னை லீக், ஐ.எஸ்.எல், சி.எம்.டிராபி, ஐ-லீக் என எத்தனையோ தொடர்கள் இங்கு நடந்துகொண்டிருந்தன. கால்பந்து வாசம் அரங்கம் முழுக்க வீசிக்கொண்டே இருந்தது. ஆனால், காலப்போக்கில் எல்லாம் மாறத் தொடங்கியது. வெவ்வேறு காரணங்களால் சில தொடர்கள் தடைபட்டன, சில தொடர்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டன.

ஒருகட்டத்தில் ஐ.எஸ்.எல் மட்டும்தான் அங்கு நடந்தது. ஸ்டீவன் மெண்டோசா, எலானோ புளூமர் போன்ற உலகத்தர வீரர்கள், இந்தப் புற்தரையில் மாயம் நிகழ்த்தினார்கள். அட்டகாசமான கோல்கள் அடித்தார்கள். சாகசகங்கள் செய்தார்கள். சரித்திரம் படைத்தார்கள். இதையெல்லாம் நினைத்து அந்தப் புற்கள் பெருமை கொண்டிருந்தாலும், தனபால் கனேஷ், எட்வின் சிட்னி போன்ற தமிழக வீரர்கள் அவர்களின் பூட்களால் தங்களை மிதித்து, அந்த வெள்ளைக் கோட்டைத் தாண்டிச் செல்லும் தருணங்களில்தான் அவை கர்வம் கொண்டிருந்தன. ஓடிப் பழகிய வயதிலிருந்து தங்களை மிதித்து, தங்கள்மீது உருண்டு பிரண்டு, தங்களோடு சேர்ந்தே வளர்ந்த வீரர்கள், தங்களோடு விளையாடுவதில்தான் அந்தப் புற்கள் பேரானந்தம் கொண்டிருந்தன. அதில்தான் உவகை கண்டிருந்தன. ஆனால், அதுவும் இப்போது இல்லாமல் போனது.

Nehru Stadium
Nehru Stadium
Football Makka

கொரோனாவின் தாக்கத்தால், ஒட்டுமொத்த ஐ.எஸ்.எல் தொடரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவாவில்தான் நடந்துகொண்டிருக்கிறது. சென்னையின் எஃப்.சி அவ்வப்போது ஆடவைத்துக்கொண்டிருந்த அந்த ஒற்றை தமிழக வீரனையும் அந்த புற்களால் காண முடியவில்லை. சொல்லப்போனால் கால்பந்தையே காண முடியவில்லை. லெதர், பாலியூரித்தேன் போன்றவற்றின் வாசத்தை மறந்திருந்தன. எல்லைக் கோடுகள் வரையப் பயன்படுத்தும் பெயின்ட்டின் வாசத்தை மறந்திருந்தன. அந்த விளையாட்டி வாசத்தையே மறந்திருந்தன!

காலம் போகப் போக, கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் வாசத்தையே இழந்தன அந்தப் புற்கள். ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் வீரர்களின் வியர்வைத் துளி அந்த சிந்தடிக் டிராக்கில் விழும்போது; நீளம் தாண்டும் வீரர் தரை தொடும்போது தெறிக்கும் மணல், தங்கள் அருகே வந்து விழும்போது; போல் வால்ட் குச்சியோடு ஓடிவரும் வீரர் கிராஸ் பாரைத் தாண்டி விழும்போது எழுப்பும் அந்த ஓசையைக் கேட்கும்போது... இந்தப் புற்கள் பொறாமையால் வெதும்பியிருக்கின்றன. தெளிக்கப்படும் தண்ணீரும், படிந்து நிற்கும் பனித்துளிகளும் இல்லாவிட்டால், அவை வெந்தே போயிருக்கும். ஒருவழியாக அவற்றைக் காப்பாற்ற ஒரு தொடர் ஆரம்பமாகியிருகிறது!

Tamil Nadu Women's League
Tamil Nadu Women's League
Football Makka

இத்தனை மாதங்கள் ரணத்தை அனுபவதித்துவந்த அந்தப் புற்களுக்கு புத்துயிர் கொடுக்க வந்திருக்கிறது தமிழ்நாடு வுமன்ஸ் லீக். ஆண்கள் கால்பந்தில் என்ன அரசியல் நடந்தால் என்ன, எத்தனை குழப்பங்கள் நிகழ்ந்தால் என்ன, தமிழக கால்பந்து களத்தை மீண்டும் உயிரூட்டத் தொடங்கியிருக்கிறார்கள் நம் வீராங்கனைகள். தமிழ்நாடு பெண்கள் கால்பந்து கமிட்டி முயற்சியில் முதல் முறையாக நேரு ஸ்டேடியத்தில் நடத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது இந்தத் தொடர்.

தமிழகத்தைச் சேர்ந்த 6 கிளப்கள் இந்தத் தொடரில் மோதிக்கொண்டிருக்கின்றன. டிசம்பர் 1 ஆரம்பித்த இந்தத் தொடர், ஜனவரி 31-ம் தேதி வரை நடக்கிறது. ரவுண்ட் ராபின் முறையில், ஒவ்வொரு அணியும் மற்றொரு அணியை இரண்டு முறை எதிர்கொள்ளும். ஒரு அணிக்கு மொத்தம் 10 லீக் போட்டிகள். லீக் முறை என்பதால், நாக் அவுட் போட்டிகளெல்லாம் கிடையாது. மொத்தமுள்ள 30 போட்டிகளின் முடிவில் அதிக புள்ளிகள் பெற்றிருக்கும் அணி சாம்பியன் பட்டம் வெல்லும். அதே போல், இந்திய வுமன்ஸ் லீக் தொடருக்கும் தகுதி பெறும்.

பங்கேற்றிருக்கும் கிளப்கள்

சேது FC
மினெர்வா FC
தமிழச்சி FC
தமிழ்நாடு போலிஸ்
SDAT - தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்
வாவ் FC
Tamil Nadu Women's League
Tamil Nadu Women's League
Football Makka

தமிழக கால்பந்தின் சூழல் அறிந்தவர்களுக்கு, இந்த தொடரின் முக்கியத்துவம் புரியும். நாளுக்கு நாள் ஆண்கள் கால்பந்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகிக்கொண்டிருக்கையில், பெண்கள் கால்பந்து தான் இங்கே நம்பிக்கையளித்துக்கொண்டிருக்கிறது. சீனியர் நேஷனலஸ், ஜூனியர் நேஷனல்ஸ் என ஒவ்வொரு தேசிய தொடரிலும் நம் மகளிர் அணி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறது. நம் வீராங்கனைகள் அனைத்து வயதுப் பிரிவிலும் இந்திய அணிக்காக விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். தரமான வீராங்கனைகள் இருக்கும்போது ஒரு லீக் நடப்பது மிகவும் முக்கியம். அதை நல்ல முறையில் நடத்திக்கொண்டிருக்கிறது தமிழ்நாடு பெண்கள் கால்பந்து கமிட்டி.

வர்ணனையுடன் யூ டியூபில் நம் பெண்கள் கால்பந்து ஆடுவதைப் பார்த்தால் எப்படி இருக்கும்! ஆம், இந்தத் தொடர் யூ டியூபில் நேரலையில் ஒளிபரப்பப்படுகிறது. தொழில்முறை லீக் போல், சமூக வலைதளங்களில் உடனடியான அப்டேட்கள், போட்டிக்கு முன்பு லைன் அப், தரமான புகைப்படங்கள் என சிறப்பாக நடந்துகொண்டிருக்கிறது.

Football Makka - The Broadcasting Team
Football Makka - The Broadcasting Team
Football Makka

அதிகாலையில் நடக்கும் இந்தப் போட்டிகளை பார்க்கும்போது அவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது. வானத்துக்கு முழுமையாகச் சிவப்புச் சாயம் அடித்திடாத அந்தச் சூரியனின் அளவான வெளிச்சம், பனித்துளிகளைத் தாங்கி நிற்கும் அந்தப் பச்சைப் புற்கள், அப்புற்களை மிதித்துச் செல்லும் நம் வீராங்கனைகளின் பூட்கள், அந்த பூட்களின் உந்துவீசையால் புற்கள் மீது தவழ்ந்து செல்லும் காஸ்கோ கால்பந்து, இந்தக் காட்சிக்குப் பின்னணி இசையாய் ஒலிக்கும் வீராங்கனைகளின் தமிழ்... தமிழ்நாடு கால்பந்து உயிர் பெற்றுவிட்டது! மழைத்துளியைச் சுவாசித்து தன் வாசத்தை வெளிவிடும் மண்ணைப் போல், வீராங்கனைகளின் வியர்வைத் துளியை சுவாசித்து, கால்பந்தின் வாசத்தைக் கட்டவிழ்த்திருக்கிறது நேரு ஸ்டேடியம். இது தமிழக கால்பந்தின் வாசம்!