சென்னையில் ஓரளவு ஓய்ந்திருக்கும் மழையின் தாக்கம் கேரளாவில் குறையவில்லை. அதுவும் கோழிக்கோட்டில், கால்பந்துக் களங்கள் கோல் மழையால் நனைந்துகொண்டிருக்கின்றன. கடலூரில் உருவெடுத்த சந்தியா எனும் புயலின் தாக்கம் தெற்கு (தெலங்கானா), கிழக்கு (மேற்கு வங்கம்), வடக்கு (பஞ்சாப்) என ஒவ்வொரு திசையையும் சூறையாடியிருக்கிறது. சுமித்ரா, மாளவிகா, துர்கா, சரிதா, பிரியதர்ஷினி, கௌசல்யா, பாண்டிச்செல்வி, சுமித்ரா போன்றவர்கள் அசிஸ்ட்களை அடுக்க, டிஃபன்ஸ் அரணாய் நிற்க, பயிற்சியாளர் கோகிலாவின் அணி 'குரூப் ஆஃப் டெத்' வின்னராகி காலிறுதிக்குள் முன்னேறியிருக்கிறது.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSமகளிர் சீனியர் நேஷனல்ஸ் கால்பந்து தொடர் கோழிகோட்டில் நடந்துகொண்டிருக்கிறது. பங்கேற்றிருக்கும் 32 அணிகளும் 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. தங்கள் குரூப்பில் முதலிடம் பிடிக்கும் அணி காலிறுதிக்கு முன்னேறும். தமிழ்நாடு இடம்பெற்றிருந்த H பிரிவில் பஞ்சாப், மேற்கு வங்கம், தெலங்கானா ஆகிய அணிகளும் இடம்பெற்றிருந்தன.
தமிழ்நாடு, மேற்கு வங்கம், பஞ்சாப் என மூன்று பெரும் அணிகள் ஒரே பிரிவில் இருந்ததால், H பிரிவு குரூப் ஆப் டெத் எனவே கருதப்பட்டது. இந்த பிரிவிலிருந்து காலிறுதிக்கு முன்னேறுவது எளிதான விஷயமில்லை. ஆனால், அந்த அசாத்தியத்தை சாத்தியப்படுத்திருக்கின்றனர் தமிழக வீராங்கனைகள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தெலங்கானாவுக்கு எதிரான முதல் போட்டியில் 20 கோல்கள் அடித்து அசத்தியது தமிழ்நாடு. மேற்கு வங்கத்துக்கு எதிரான போட்டி 1-1 என டிராவானது. இரண்டு போட்டிகளில் 4 புள்ளிகள். பஞ்சாப் அணியும் முதலிரண்டு போட்டிகளில் 1 வெற்றி, 1 டிரா என 4 புள்ளிகள் பெற்றிருந்தது. ஆனால், தெலங்கானாவுக்கு எதிராக 21 கோல்கள் அடித்திருந்தது. அதனால், தமிழ்நாடு vs பஞ்சாப் போட்டியில் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்துக்கு ஆளானது நம் அணி. டிரா செய்தாலும் கோல் வித்தியாச அடிப்படையில் பஞ்சாப் காலிறுதிக்கு முன்னேறிவிடும்.

இந்நிலையில் கடைசி குரூப் போட்டி நேற்று நடந்தது. முக்கியமான போட்டி என்பதால் சில அதிரடி மாற்றங்களை செய்திருந்தார் பயிற்சியாளர் கோகிலா. முந்தைய போட்டிகளில் 4-4-2 ஃபார்மேஷனில் விளையாடிய அணியை 4-3-3 ஃபார்மேஷனுக்கு மாற்றினார். காயத்தால் பாதிக்கப்பட்டிருந்த மாளவிகாவுக்கு பதிலாக ஜூகியை உள்ளே கொண்டுவந்தார். அவர் டிஃபன்ஸில் ஆட, இடது ஃபுல்பேக் பவித்ரா நடுகளத்துக்கு மாறினார். பிரியதர்ஷினி ஃபார்வேட் லைனுக்கு நகர்ந்தார். சுமித்ராவுக்கு பதிலாகக் களமிறக்கப்பட்டார் பாண்டிச்செல்வி.
போன மேட்ச் எதிர்பார்த்த மாதிரி அமையல. இருந்தாலும், அதை உடனே மறந்திடனும்னு பொண்ணுங்ககிட்ட சொல்லிட்டேன். பஞ்சாப் மேட்ச்ல ஜெயிச்சா ஃபைனல் நிச்சயமா போயிடலாம்னு சொன்னேன். எல்லோரும் நம்பிக்கையோட விளையாடினாங்க. இந்த மேட்ச்ல அட்டாக் பண்றது ரொம்ப முக்கியம்ன்றதால ஃபார்மேஷனை மாத்தினேன். மாளவிகாவால விளையாட முடியாததால அவங்களை வெளிய எடுத்தோம். முதல்ல இருந்தே நல்லா அட்டாக் பண்ணிட்டேதான் இருந்தோம். எல்லாருமே சூப்பரா விளையாடினாங்க. இந்த வின்னிங் மென்ட்டாலிட்டி ஒடிசா மேட்சுல நமக்கு சாதகமா இருக்கும்னு நினைக்கிறேன்பயிற்சியாளர் கோகிலா

எதிர்பார்த்ததைப் போலவே தொடர்ந்து அட்டாக் செய்தது தமிழ்நாடு. அதன் பலனாக 25-வது நிமிடத்தில் முதல் கோல் விழுந்தது. தெலங்கானாவுக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் அடித்து அசத்திய துர்கா, தமிழ்நாட்டின் கோல் கணக்கைத் தொடங்கினார். 45-வது நிமிடத்தில், பஞ்சாப் பாக்சுக்குள் டிஃபண்டர் சகுந்தலா ஃபவுல் செய்ய தமிழ்நாட்டுக்கு பெனால்டி கிடைத்தது. போக, சகுந்தலாவுக்கு ரெட் கார்டும் கிடைத்தது. பெனால்டியை கௌசல்யா கோலாக்க, 2-0 என்று முதல் பாதியில் முன்னிலை பெற்றது தமிழ்நாடு.
இரண்டாவது பாதியில் 10 வீராங்கனைகளோடு விளையாடிய பஞ்சாப் அணியால், தமிழக வீராங்கனைகளின் விஸ்வரூபத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. தெலங்கானாவுக்கு எதிராக 8 கோல்கள், மேற்கு வங்கத்துக்கு எதிராக 1 கோல் என முதலிரண்டு போட்டிகளில் 9 கோல்கள் அடித்து அமர்க்களப்படுத்திய சந்தியா, இந்தப் போட்டியிலும் ஹாட்ரிக் கோல் அடித்து மிரட்டினார். இரண்டாவது பாதியில் பிரியதர்ஷினியும் கோலடிக்க, 6-0 என வெற்றி பெற்றது தமிழ்நாடு.
3 போட்டிகளில் 7 புள்ளிகள் பெற்று H குரூப்பை வென்றனர் நம் பெண்கள். இதன்மூலம் காலிறுதிக்கும் முன்னேறினர். சந்தியா இதுவரை 12 கோல்கள் அடித்து அசத்தியிருக்கிறார். விளையாடிய 3 போட்டிகளிலும் கோலடித்திருக்கிறார். துர்கா - 4, சரிதா - 4, மாளவிகா - 3, பிரியதர்ஷினி - 2, கௌசல்யா - 1 ஆகியோரும் இதுவரை கோலடித்திருக்கின்றனர். சுமித்ரா, பாண்டிச்செல்வி போன்றவர்கள் அசிஸ்ட்களாக செய்து அசத்திக்கொண்டிருக்கின்றனர்.
நாளை பகல் 2.30 மணிக்கு நடக்கும் காலிறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த ஒடிசா அணியோடு மோதுகிறது தமிழ்நாடு.