Published:Updated:

EURO 2020: செம சண்டைக்குத் தயாராகும் சுவிட்சர்லாந்து... 3 முறை சாம்பியன் ஸ்பெயினை வெல்ல முடியுமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சுவிட்சர்லாந்து ரசிகர்கள்
சுவிட்சர்லாந்து ரசிகர்கள் ( Robert Ghement )

‘’ஸ்பெயின் கடைசி இரண்டு போட்டிகளில் மட்டும் 10 கோல்கள் அடித்திருக்கிறது. செம ஃபார்மில் இருக்கும் ஸ்பெயின் நிச்சயம் சுவிட்சர்லாந்தை ஊதித்தள்ளிவிடும்’’ என்பது ஸ்பெயின் அணி ஆதரவாளர்களின் கருத்து.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பரபரப்பான கட்டத்தை நெருங்கி விட்டது யூரோ கோப்பை கால்பந்து. உலகக் கோப்பைக்கு அடுத்தபடியாக அதிகம் கவனம் பெறும் யூரோ கோப்பை 2020-ன் காலிறுதிப் போட்டிகள் நாளை முதல் தொடங்குகின்றன.

சுவிட்சர்லாந்து - ஸ்பெயின், பெல்ஜியம் - இத்தாலி, செக் குடியரசு - டென்மார்க், உக்ரேன் - இங்கிலாந்து என 8 அணிகள் காலிறுதிப் போட்டிகளில் மோத இருக்கின்றன. இதில் நாளை இரவு 9.30 மணிக்கு முதல் போட்டியாக ஸ்பெயின் VS சுவிட்சர்லாந்து அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற இருக்கிறது. நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு காலிறுதிப்போட்டியில் பெல்ஜியம் - இத்தாலி அணிகள் மோதுகின்றன.

முதல் காலிறுதிப் போட்டியில் என்ன எதிர்பார்க்கலாம்?!

சுவிட்சர்லாந்து Vs ஸ்பெயின்

முதல்முறையாக யூரோ கோப்பையில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோத இருக்கின்றன.யூரோ கோப்பை வரலாற்றில் சுவிட்சர்லாந்து காலிறுதிக்குத் தகுதி பெற்றிருப்பது இதுவே முதல்முறை. இந்த யூரோ கோப்பையைப் பொறுத்தவரை லீக் சுற்றில் வேல்ஸ் அணிக்கு எதிராக 1-1 என டிரா செய்த சுவிட்சர்லாந்து, இத்தாலியிடம் 3-0 என படுதோல்வியை சந்தித்தது. ஆனால், கடைசி லீக் போட்டியில் துருக்கியை 3-1 என தோற்கடித்து நாக் அவுட் சுற்றுக்கு தகுதிபெற்றது.

ஸ்பெயின்
ஸ்பெயின்
Jonathan NACKSTRAND

ரவுண்ட் ஆஃப் 16 போட்டியில் உலக சாம்பியன் பிரான்ஸை எதிர்த்து ஆடியது சுவிட்சர்லாந்து. எல்லோரும் பிரான்ஸ் தான் வெற்றி பெறும் எனக் கணிக்க கிட்டத்தட்ட அதுபோலவேதான் ஆட்டமும் இருந்தது. ஆட்டம் முடிய 10 நிமிடங்களே இருந்தவரை 3-1 என முன்னிலையில் இருந்தது பிரான்ஸ். ஆனால், ஆட்டத்தின் கடைசி 10 நிமிடங்களில் சுவிட்சர்லாந்து இரண்டு கோல்கள் அடிக்க ஆட்டம் சமனாகி, பின்னர் எக்ஸ்ட்ரா டைம் போய், பெனால்ட்டியில் வென்று காலிறுதிக்குள் நுழைந்திருக்கிறது சுவிட்சர்லாந்து.


இன்னொரு பக்கம் ஸ்பெயினோ மிகவும் பலம் வாய்ந்த உலகின் டாப் அணிகளில் ஒன்று. மூன்று முறை யூரோ கோப்பையை வென்றிருக்கும் ஸ்பெயின் 2020 சீசனில் ஒரு முறை கூட தோல்வியை சந்திக்கவில்லை. ஸ்வீடனுடன் 0-0 என டிரா, போலந்துடன் 1-1 என டிரா என முதல் இரண்டு போட்டிகளையும் டிராவாக்கிய ஸ்பெயின், கடைசியாக ஸ்லோவோக்கியா அணியுடன் நடைபெற்ற போட்டியில் 5-0 என கோல் மழை பொழிந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரவுண்ட் ஆஃப் 16 போட்டியில் குரோஷியாவை 5-3 என தோற்கடித்து காலிறுதிக்குள் நுழைந்துள்ளது ஸ்பெயின்.

ஸ்பெயின்
ஸ்பெயின்
Robert Ghement

‘’சுவிட்சர்லாந்து வெம்ப்லிக்குச் செல்ல தகுதியான அணி. உலக சாம்பியன்களையே வெளியேற்றியவர்கள் நிச்சயம் இந்தமுறை கோப்பை வெல்வார்கள். சுவிட்சர்லாந்து தன்னுடைய பலங்களை ஒன்று திரட்டி விளையாடும் அதே நேரத்தில், ஸ்பெயினின் பலவீனங்களையும் பயன்படுத்தி விளையாடும்’’ என்கிறார்கள் சுவிட்சர்லாந்தின் வெற்றியைக் கணிக்கும் நிபுணர்கள்.

‘’ஸ்பெயின் கடைசி இரண்டு போட்டிகளில் மட்டும் 10 கோல்கள் அடித்திருக்கிறது. செம ஃபார்மில் இருக்கும் ஸ்பெயின் நிச்சயம் சுவிட்சர்லாந்தை ஊதித்தள்ளிவிடும்’’ என்பது ஸ்பெயின் அணி ஆதரவாளர்களின் கருத்து.

ஸ்பெயின்
ஸ்பெயின்
Martin Meissner

"பிரான்சுக்கு எதிரான ஆட்டம் மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தது. எனது வீரர்கள் 120 சதவிகிதம் வெற்றிக்காக செயல்பட்டனர். ஸ்பெயினுக்கு எதிராகவும் இதேபோன்ற ஒரு ஆட்டம் இருக்கும்" என்கிறார் சுவிட்சர்லாந்தின் பயிற்சியாளர் விளாடிமிர் பெட்கோவிக். அதன் கேப்டன் கிரானிட் ஷாகாவோ ‘’ பிரான்சுக்கு எதிராக சண்டை செய்ததைப்போல, ஸ்பெயினுக்கு எதிராகவும் ஒரு சண்டை செய்வோம்" என்கிறார்.

ஸ்பெயினின் கோல் கீப்பர் யுனை சிமோன் " காலிறுதிப் போட்டியில் எங்களை எதிர்த்து விளையாடுவது யார் என்றெல்லாம் நாங்கள் யோசிக்கவே இல்லை. பிரான்ஸ், உக்ரேன், சுவிஸ் என எந்த அணியாக இருந்தாலும் கவலையில்லை. நாங்கள் வெற்றிபெற மட்டுமே இங்கே வந்திருக்கிறோம். எங்கள் லட்சியங்கள் உயர்ந்தது. நிச்சயம் வெற்றிபெறுவோம்" எனப் பேட்டியளித்திருக்கிறார்.

2020 யூரோ கோப்பையின் முதல் காலிறுதிப் போட்டியைக் காண உலகமே பரபரப்போடு காத்துக்கொண்டிருக்கிறது. உங்கள் ஆதரவு மூன்று முறை யூரோ சாம்பியனான ஸ்பெயினுக்கா, முதல்முறை காலிறுதிக்குள் நுழைந்திருக்கும் சுவிட்சர்லாந்துக்கா என கமென்ட்டில் சொல்லுங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு