Published:Updated:

கடவுளின் தேசம் தந்த கால்பந்துக் கவிதை... சூடானி ஃப்ரம் நைஜீரியா!

Sudani from Nigeria

கால்பந்தும் கவிதையும் ஒன்றுதான். கவிதையின் உள்ளொலிகளும் கால்பந்து மைதானத்தின் கூச்சலும் கிட்டத்தட்ட ஒன்றுதான். கவிதையின் தரிசனமும் சரி கால்பந்தின் ஆக்ரோஷ உணர்வெழுச்சியும் சரி, சரியான விகிதத்தில் கலந்த ஓர் அற்புத ரசாயன சேர்க்கை 'சூடானி ஃப்ரம் நைஜீரியா'

கடவுளின் தேசம் தந்த கால்பந்துக் கவிதை... சூடானி ஃப்ரம் நைஜீரியா!

கால்பந்தும் கவிதையும் ஒன்றுதான். கவிதையின் உள்ளொலிகளும் கால்பந்து மைதானத்தின் கூச்சலும் கிட்டத்தட்ட ஒன்றுதான். கவிதையின் தரிசனமும் சரி கால்பந்தின் ஆக்ரோஷ உணர்வெழுச்சியும் சரி, சரியான விகிதத்தில் கலந்த ஓர் அற்புத ரசாயன சேர்க்கை 'சூடானி ஃப்ரம் நைஜீரியா'

Published:Updated:
Sudani from Nigeria

ஒரு ரியல் மாட்ரிட் வீரரும் ஒரு பார்சிலோனா வீரரும் ஜெர்ஸிகளை மாற்றிக்கொண்டு பார்த்ததாகப் பெரிய நினைவில்லை. கால்பந்து உலகில் நடக்கும் அரிதான சம்பவங்களில் அதுவும் ஒன்று. ஒரேயொரு முறை செர்ஜியோ ரமோஸ், நெய்மர் இருவரும் ப்ரீ சீஸன் போட்டியில் மாற்றிக்கொண்டதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த இரு நகரங்களின் கலாசார, அரசியல் வேறுபாடுகள், அணிகளுக்கிடையே இருக்கும் பகைமை, ரசிகர்களுக்கிடையே இருக்கும் வெறி, அவ்வளவு சீக்கிரம் அப்படியொரு விஷயம் நடப்பதை விட்டுவிடாது. அதையும் மீறி, மாட்ரிட்டின் வெள்ளை ஜெர்ஸியும் பார்சிலோனாவின் மெரூன்-புளூ ஜெர்ஸியும் இடம் மாறுகின்றன என்றால், அது அதீத நட்பாலும் மரியாதையாலுமே முடிந்த ஒரு விஷயம். ஏற்கெனவே சொன்னதுபோல், அது மிகவும் அரிது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கோழிக்கோடு விமான நிலையம்... வாழ்க்கையைத் தேடி கால்பந்து விளையாட இந்தியா வந்த ஒரு நைஜீரியனும் கால்பந்தே உலகம் என்று வாழும் ஒரு கேரளவாசியும்... மெஸ்ஸியின் ரசிகனான ஒருவனும், ரொனால்டோவின் ரசிகனான ஒருவனும், ரியல் மாட்ரிட் - பார்சிலோனா அணிகளின் டீ ஷர்டுகளைப் பரிமாறிக்கொண்டிருப்பார்கள். வேறுபாடுகள் உடைந்து, நட்பும் மரியாதையும் அன்பும் வெளிப்படுவதை இதைவிடக் கவித்துவமாகக் காட்சிப்படுத்தியிருக்க முடியாது. அதைப் பார்த்த அந்த நொடி... ரோமங்கள் சிலிர்த்தது, உதடுகள் விரிந்து புன்னகைத்த நேரம், அந்த இடைவெளிக்குள் ஓடி எச்சிலை அடைந்தது கண்ணீர். இந்த உணர்வுக்கு நெகிழ்ச்சி என்றுதானே பெயர்! ஆம், அதேதான்! இந்தப் படம் என்னைப் பல முறை நெகிழவைத்துக்கொண்டேதான் இருந்தது. கால்பந்தும் நேசமும் கலந்து... ஒவ்வொரு காட்சியிலும் என்னை நெகிழ்வித்துக்கொண்டேதான் இருந்தது, கடவுளின் தேசம் தந்த இந்தக் கால்பந்து கவிதை - சூடானி ஃப்ரம் நைஜீரியா!

Sudani from Nigeria
Sudani from Nigeria

வருமானம் இல்லாதபோதும், தன் வீரர்களுக்குத் தேவையானதைக் கொடுத்துவிட்டு வெறுங்கையோடு வீடு திரும்பும் ஹீரோ, நட்புக்காக மனைவியின் நகைகளை அடகு வைக்கும் நண்பன், 'இந்தப் பிள்ளையின் கழிவையும் நானே சுத்தம் செய்வேன்' எனச் சொல்லும் தாய், தாய்க்கும் மேல் உரிமைகொள்ளும் பக்கத்து வீட்டு அம்மா என்று மலையாளக் கரையோறம் மட்டுமே காண முடிந்த, 'நம்மால்' நம்பமுடியாத மனிதர்கள்தான் இந்தக் கதையிலும் மாந்தர்கள். 'இப்படி நம்ம ஊருல யாரும் இருக்காங்களா' என்ற கேள்வியை எழுப்பிக்கொண்டேதான் இருப்பார்கள்.

"ஒரு அம்மாவா நான் இப்படிச் சொல்லக்கூடாது. ஆனா, என் புள்ளையும் இப்படி அடிபட்டுப் படுத்தா, அப்பவாச்சும் அவனுக்கு இந்த அம்மாவோட தேவை இருக்கும்ல" என்று சாவித்திரி ஸ்ரீதரன் கலங்கும் இடமும், "பணம் வரும் சாமுவேல். பணம் வரும். என்கிட்டயும் பணம் இல்ல. எல்லோரும் எனக்குக் கொடுத்து உதவுறாங்க. உன்கிட்டயும் இல்லைனு எனக்குத் தெரியும். நாம பார்த்துக்கலாம்" என்று சௌபின் சாஹிர் சொல்லும் இடமும் அப்படிப் போட்டு உலுக்கும். அதே நெகிழ்வு. மலையாள சினிமாவின் வாசம் இதிலும் வீசாமல் இல்லை. ஆனால், இது அது மட்டுமில்லை. இது இன்னும் புதிதானது. இதுவரை எந்த சினிமாவும் பேசாத விளையாட்டு மொழி அது!

விளையாட்டு சினிமா என்றாலே, அதில் ஒருவரின் அல்லது ஒரு அணியின் போராட்டம், நிராகரிப்பு, சில துரோகம், சில தியாகம், தவறான அரசியல், வெற்றி, தோல்வி போன்ற அனைத்தும் கலந்திருக்க வேண்டும். அதுதான் விளையாட்டு சினிமாவின் இலக்கணமாக இருந்திருக்கிறது. இருக்கிறது. இவை எதுவுமே இல்லாத ஒரு விளையாட்டு சினிமா சாத்தியமோ? நிச்சயம் சாத்தியம். 'அதெப்படி 0-0 என்று முடியும் கால்பந்துப் போட்டி விறுவிறுப்பாகவும் நன்றாகவும் இருக்கும்' என்று கேட்பது போல்தான் இதுவும். கால்பந்தின் அழகு முடிவில் இல்லை. விழும் கோல்களில் இல்லை. ஒரு டிரிபிள், ஒரு டேக்கிள், ஒரு சேவ், ஒரு அற்புத த்ரூ பால், ஓர் அட்டகாச லாங் பாஸ், கிராஸ் பாரைத் தாண்டிச் செல்லும் பைசைக்கிள் கிக், ஆஃப் சைட் டிராப்... எல்லாமே அழகுதான். அப்படிப்பட்டதுதான் இந்தச் சினிமா.

90 நிமிடமும் கோல் இல்லாமல், கூடுதல் நேரமும் போய் 120 நிமிடங்களும் கோல் இல்லாமல் முடிந்த பல அட்டகாசமான போட்டிகளைக் கால்பந்து சந்தித்திருக்கிறது. அப்படியொரு அட்டகாசமான 120 நிமிட அனுபவம்தான் இந்தப் படம்! அதனால்தான், ஒட்டுமொத்த விளையாட்டு சினிமாக்களில் இருந்து தனித்து நின்றது இந்தப் படம்! அதனால்தான், மனதுக்கு மிகவும் அருகிலும் வந்து நின்றது.

தேசிய விருது!
66-வது தேசிய திரைப்பட விருது விழாவில், சிறந்த மலையாள மொழிப் படத்துக்கான விருதைப் பெற்றது சூடானி ஃப்ரம் நைஜீரியா

கேரளாவில் இன்னும் திருவிழாவாக நடந்துகொண்டிருக்கும் 'செவன்ஸ்' கால்பந்து தொடர், அதற்கான வரவேற்பு, அதில் நடக்கும் பணப் பரிவர்த்தனை, வீரர்கள் மாற்றம் போன்றவை அவ்வளவு ஆச்சர்யமாக இருந்தன. சென்னை முதல் கொல்கத்தா வரையிலிருந்து பல வீரர்கள், இந்தத் தொடரில் கலந்துகொள்ள வருவார்கள் என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த விளையாட்டு உலகை ஒரு முறையாவது நேரில் பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை எழாமல் இல்லை.

ஒவ்வொரு கால்பந்து சீஸன் முடியும்போதும், ஒவ்வொரு ரசிகனுமே player transfer பற்றிப் பேசுவதில் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். ஒவ்வொருவரும், அவரை வாங்க வேண்டும், இவரை வாங்க வேண்டும் என்று மேனேஜர்களாகவே மாறியிருப்பார்கள். ஒரு கால்பந்து கிளப்பை மேனேஜ் செய்ய வேண்டும் என்று ஃபேன்டஸி ஆசை ஒவ்வொருவருக்குள்ளுமே இருக்கும். ஆனால், அது முடியாது காரியம். பல மில்லியன் டாலர் பரிவர்த்தனை நடக்கும் இடத்தில், நம்மால் ஒரு துரும்பையும் வாங்க முடியாதே! FIFA போன்ற பிளேஸ்டேஷன் கேம்களும், Football Manager போன்ற மொபைல் கேம்களும் கொடிகட்டிப் பறக்க, ஒவ்வொரு கால்பந்து ரசிகனுக்குள்ளும் இருக்கும் மேனேஜர்கள் முக்கியக் காரணம்.

விருது 2!
இந்தப் படத்தில் நடித்த சாவித்திரி ஸ்ரீதரனுக்கு, சிறந்த குணச்சித்திர நடிப்புக்கான நடுவர் குழுவின் சிறப்பு விருது வழங்கப்பட்டது

ஆனால், இந்த மண்ணில் ஒரு சாமானியனாலும் ஒரு கால்பந்து கிளப் நடத்த முடிகிறது. பெரிய தொடரில் விளையாட முடிகிறது. அதைவிட முக்கியம், வெளிநாட்டு வீரர்களை ஒப்பந்தம் செய்ய முடிகிறது..! இது நிஜம்தானா! நிஜம்தானே. கேரளாவில் இது சாத்தியமே. அந்தக் கால்பந்துக் காதலர்களால் அது சாத்தியமே! மஜீத், மோஹன் பாஹன் பிளேயரை வாங்க வேண்டும் என்று பேசிக்கொண்டிருக்கும்போதெல்லாம், 'நாமும் கேரளா போய் ஒரு கிளப் ஆரம்பிக்கணும்' என்றெல்லாம் தோன்றிக்கொண்டிருந்தது.

ஒவ்வொரு வீட்டிலும் தொங்கும் கால்பந்து ஜெர்ஸிகள், கேலரி முழுக்க நின்று ஆட்டத்தைப் பார்க்கும் கூட்டம், கும்பலாகச் சேர்ந்து எல் கிளாசிகோ மேட்ச் பார்க்கும் நண்பர்கள், ஆட்டோவின் பின்னால் ஒட்டப்பட்டிருக்கும் 'ஜிடேன் headbutt' ஸ்டிக்கர், கால்பந்தால் நிரப்பப்பட்ட மலையாள செய்தித்தாளின் கடைசிப் பக்கம் எனக் கேரளாவின் கால்பந்துக் காதலைக் காட்சிப்படுத்திய விதம், அவ்வளவு பொறாமையாக இருந்தது. இங்கு ஏன் வீதிகளில் கிரிக்கெட் விளையாடுவதுபோல் கால்பந்து விளையாட முடிவதில்லை? கால்பந்து விளையாட, மணிக்கு 1,000 பணம் கட்டி, 50 மீட்டர் நீளமே கொண்ட கூண்டுக்குள் இருக்கும் டர்ஃபில்தான் விளையாட வேண்டுமா. ஏன் இங்கு மட்டும் இப்படி? கேரளாவின் மீது பொறாமை அதிகமாகவே இருக்கிறது.

Sudani from Nigeria
Sudani from Nigeria

ஜாலியான இந்த விஷயங்களுக்கு நடுவே சில சீரியஸான விஷயங்களையும் பேசியது இந்தப் படம்! கடந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பைக் கால்பந்தின்போது, 'அகதிகளை வைத்து கோப்பை வென்ற அணி என்று சாம்பியன் பிரான்ஸை சாடியவர்களுக்கும்', 'கால்பந்து ஒன்றும் உலகின் மிகச் சிறந்த விளையாட்டு இல்லை' என்று சொன்னவர்களுக்கும் இந்தப் படத்தின் ஒற்றை வசனம் பதில் சொல்லிவிடும். "நாங்கள் எங்களால் எவ்வளவு நேரம் விளையாட முடியுமோ, அவ்வளவு நேரம் கால்பந்து விளையாடிக்கொண்டே இருப்போம். ஏனெனில், அதுதான் எங்களை பசியிலிருந்து தொலைவில் வைத்திருந்தது" என்று தன் அகதி வாழ்க்கையை அந்த நைஜீரிய 'சூடானி' சொல்லும்போது, அவர்களின் வலி நமக்குள்ளும் இறங்கும்.

வாழ்க்கைக்கு அர்த்தம் தெரியாத, பசியைப் போக்க வழிதெரியாத வயதில், அந்த ஆப்பிரிக்க குழந்தைகளுக்கு ஆறுதல் அந்தப் பந்துதான். 22 குழந்தைகள் என்ற கோட்பாடுகள் இல்லை, விதிகள் இல்லை. 50 - 60 பேர் வேண்டுமானாலும் பந்தை உதைத்துக்கொண்டே இருக்கலாம். மறையும் சூரியனோடு சேர்ந்து பசியும் மறக்கும்வரை விளையாடலாம். விளையாடிக்கொண்டே இருக்கலாம். ஒரு பழைய கால்பந்து போதும் அவர்களுக்கு. இப்படியான அகதிகள் சிறப்பாகச் செயல்படும்போது, அவர்களுக்கு இருப்பிடமும் வாழ்க்கையும் கொடுக்கும் நாடுகள், ஒரு விளையாட்டு உலகையே தனியாக சர்வாதிகாரம் செய்யும் நாடுகளைவிட பலமடங்கு மேல்தானே!

காட்சிகள் ஒருபக்கம் நம்மை ஆட்கொண்டால், வசனங்கள் இன்னும் கால்பந்து வெறியை உக்கிரமாக்கின. கால்பந்து கிளப்பை விற்றுவிடலாம் என்று சொல்பவரிடம், "நாம் கால்பந்து வீரர்கள்தானே! நம் அணி தோல்வியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தாலும், ஒரு கோல் விழுந்து டிராவாவது ஆகிவிடாதா என்று கடைசி நிமிடம் வரை நம்பிக்கொண்டுதானே இருப்போம். அது நடக்காது என்று தெரிந்தாலும், அந்த நம்பிக்கையை இறுகப் பிடித்துக்கொண்டிருப்போமே. அந்த நம்பிக்கையை எப்போது விடுகிறேனோ, அப்போது இந்தப் பைத்தியக்காரத்தனைத்தை விடுகிறேன்" என்று சௌபின் சாகர் சொல்லும் இடம், 'கால்பந்தைவிடவும் வாழ்க்கைக்குப் பெரிய நம்பிக்கை தேவையா' என்று யோசிக்க வைத்தது.

ஆனால், இந்தப் படத்தின் எமோஷனல் வசனங்கள் சிரிப்புக்கும் நெகிழ்வுக்கும் இடையே சரியான இடைவெளியில் நம்மை ஆட்கொண்டே இருந்தன. இயக்குநரின் சாமர்த்தியமும் அதுதான். ஒவ்வொரு உணர்வையும் ஒவ்வொரு லேயரில், சிறப்பான முறையில் ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கிவைத்தார். அத்லெடிகோ மாட்ரிட்டின் டிஃபன்ஸுக்கும், பார்சிலோனாவின் அட்டாக்குக்கும் இடையே ரியல் மாட்ரிட்டின் மிட்ஃபீல்டை நிறுத்துவதுபோல்!

Sudani from Nigeria
Sudani from Nigeria

கவிதைகள் எப்போதும் ஆச்சர்யமானவை, சிலர் உருகி உருகி மருகிக்கொண்டிருப்பார்கள், சிலர் ஆங் கவிதைதான் எனக் கடந்து போவார்கள், சிலர் கவிதை தானே என்பார்கள். ஆனால், கவிஞர்களுக்கு ஒரு மனம் இருப்பதைப் போல, கவிதையை ரசிக்கவும் ஒரு மனம் இருக்கிறது. கால்பந்தும் கவிதையும் ஒன்றுதான். கவிதையின் உள்ளொலிகளும் கால்பந்து மைதானத்தின் கூச்சலும் கிட்டத்தட்ட ஒன்றுதான். கவிதையின் தரிசனமும் சரி கால்பந்தின் ஆக்ரோஷ உணர்வெழுச்சியும் சரி, சரியான விகிதத்தில் கலந்த ஒரு அற்புத ரசாயன சேர்க்கை 'சூடானி ஃப்ரம் நைஜீரியா'.

கால்பந்தின் ஆக்ரோஷ உணர்வெழுச்சி கைவராத, புரிபடாத ஒருவனுக்கு படத்தின் இன்னொரு முகத்தைப் பார்க்க முடியும், கவிதைகளை ரசிப்பதைப் போன்ற நெகிழ்வை படம் தரும். கால்பந்தின் சூட்சமங்கள் புரிந்த ஒருவனுக்கு கவிதை தரும் நெகிழ்வோடு கால்பந்து மைதானத்தில் பார்வையாளருக்குக் கடத்தப்படும் அத்தனை உணர்வுகளையும் சேர்த்து தரும். உதாரணத்துக்கு சில வசனங்களைப் பாருங்கள்.

"மேட்ச் பெனால்டிக்குப் போயிடுச்சு. எனக்குப் பயமா இருக்கு."

"உனக்கு மட்டுமல்ல. எல்லா மெஸ்ஸி ஃபேனுக்கும் பெனால்டினா பயம்தான்."

இந்த வசனத்தைப் படம் பார்த்து முடித்ததுமே, மெஸ்ஸி ரசிகனான என் நண்பனுக்கு அனுப்பி வம்பிழுத்தது இன்னும் ஞாபகம் இருக்கிறது.

Sudani from Nigeria
Sudani from Nigeria

"நீ அர்ஜென்டினா ஃபேனா"

"நான் நைஜீரியாக்காரன். நாங்களே உலகக் கோப்பை விளையாடுவோம். இந்தியா மாதிரி இல்ல."

'வாட் ஏ ஷேம்!' இதுக்கு நாம எப்படிப் பதில் சொல்லப்போறோம்? எப்ப நம்ம லீகோட தரத்த உயர்த்தப் போறோம்? எப்போ ஒரே லீக் ஃபார்மட்டுக்கு மாறப்போறோம். எப்போ ஐரோப்பா நம்புவோம். கடைசி நிமிஷத்துலயும் கோல் போட்டு டிரா பண்ண முடியும்..!

"மெஸ்ஸி இல்லாத அர்ஜென்டினாவைப்போல்..."

இரு... இரு... மெஸ்ஸி இருந்தும் அர்ஜென்டினா அப்படித்தான இருக்கு?!

"விளையாடத் தெரிஞ்சவனுக்கு, கேமோட அழகு புரியாதுனு சொல்வாங்க. அது சரிதான். அவனுக்கு செல்சீ புடிக்காதம்ல".

இந்த வசனத்தை நானே பேசியதுபோல்தான் இருந்தது. சில நிமிடங்கள் யோசிக்கவும் வைத்தது. 'ஏன் நிறைய பேருக்கு செல்சீ பிடிக்கல? நம்ம பிளேயிங் ஸ்டைலா? டிஃபன்ஸிவ் ஃபுட்பாலும் முக்கியம்தானே? அதுவும் ஒருவகையான அப்ரோச்தானே? எல்லா டீமும் அட்டாகிங் ஃபுட்பாலே ஆடினா டிஃபன்ஸ் என்ன ஆகும்? பேட்ஸ்மேன் மட்டுமே ஆதிக்கம் பண்ற கிரிக்கெட் மாதிரி, ஃபுட்பாலும் ஃபார்வேர்டுகள் கேம் ஆகிடாதா' யோசித்துக்கொண்டே இருந்தேன். இந்தப் படம் அப்படியே கால்பந்துக் களத்துக்குள் என்னை வைத்திருந்தது.

"ஒவ்வொருவரின் பிறப்புக்கும் ஒரு காரணம் இருக்கு. நானும் ஜிடேனும் மேனேஜர் ஆகறதுக்கே பிறந்திருக்கோம்"

ஹாஹா... இப்படி ஒவ்வொரு நிமிடமும் கால்பந்துக் களத்துக்குள்ளேயே வைத்திருந்தது அந்தப் படம். நிமிடத்துக்கு ஒருமுறை கால்பந்து மைதானத்துக்குள் என்னைப் புதைத்து, அந்தப் புற்களால் முகத்தில் வருடிக்கொண்டே இருந்தது. கால்பந்தின் வாசம் அகலவேயில்லை!

உலகக் கால்பந்து வசனங்கள் இப்படிக் கிச்சுகிச்சு மூட்ட, "செவன்ஸ் கால்பந்துக்கு உலகக் கோப்பை இல்லை. இருந்திருந்தா நாங்கதான் சாம்பியன்", "அன்சாரியோட அனௌன்ஸ்மன்ட்டும், மூங்கில் கேலரிகளும் இல்லாத உலகக் கோப்பை என்ன உலகக் கோப்பை" என்பதுபோன்ற வசனங்கள் கேரளக் கால்பந்தின் பெருமையைப் பேசிக்கொண்டிருந்தன.

இங்கு, கால்பந்தைப் பற்றித் தமிழில் ஒரு கட்டுரை எழுத வேண்டுமென்றால், அதுவே பெரும் பாடு! ஜிடேன் அப்படி என்ன செய்துவிட்டார் என்பதைப் புரியவைக்க வேண்டும். ஏன் ஆஃப் சைடு என்று விளக்க வேண்டும். டெக்னிக்கல் வார்த்தைகளை எப்படி எழுதுவது என்பதே பெரிய தலைவலியாக இருக்கும்.

ஆனால், அங்கு அப்படியில்லை. ஒரு படத்தில், தங்கு தடையின்றி உள்ளூர் கால்பந்து முதல் உலகக் கால்பந்துவரை பேச முடிகிறது. மெஸ்ஸியின் பெனால்டி தடுமாற்றத்தை ஒற்றை வசனத்தில் விளக்க முடிகிறது. செல்சீ மீதான பெரும்பான்மை மக்களின் வெறுப்பை ஒற்றைக் காட்சியில் சொல்ல முடிகிறது. ஒரு இடத்தில் உதாரணத்துக்குக்கூட "நெய்மர் பார்சிலோனாவை விட்டுப்போவதைப் பற்றி என்ன நினைக்கிற" என்று கால்பந்தோடுதான் கலந்துரையாடுகிறார்கள். மேலும் மேலும் அந்த இடத்தின் மீதான பொறாமை அதிகரித்துக்கொண்டேதான் இருந்தது. இந்தக் கால்பந்துப் பொறாமைக்கு மத்தியில்தான், அன்பே உருவான அந்த கதாபாத்திரங்கள்.

Sudani from Nigeria
Sudani from Nigeria

சந்தோஷ் சிவனின் கேமராவில் பிரமாண்டமாக ஓர் இடத்தைக் காட்டும்போது, 'இந்த ஊருக்குப் போகணும்' என்று தோன்றும். அதேதான் இந்தப் படம் பார்க்கும்போதும் தோன்றுகிறது. ஆனால், இரண்டுக்குமான வித்தியாசம் - முந்தையது 'ஒருமுறை போய் வரலாம்' என்ற எண்ணம்தான். ஆனால், அடுத்தது - அங்கு போய் வாழ்ந்து பார்க்க வேண்டும் என்றது. இந்தப் படம் அந்த எண்ணத்தைக் கொடுத்தது! படம் தொடங்கும்போது, டைட்டில் கார்டுக்குப் பின்னால் ஒரு வசனம் வரும் : "ரத்தத்தில் கால்பந்து கலக்காதவர்கள் நம் ஊரில் யாரும் இருக்கார்களா? அப்படி யாரையும் நான் பார்த்ததில்லை" என்று. நிச்சயம் அப்படிப்பட்ட ஊரில், கால்பந்து வெறியர்கள் வாழ்ந்து பார்த்துவிட வேண்டும்!

படம் முடிந்துவிடும். 'கால்பந்து விளையாடி தன் குடும்பத்தை பாதுகாப்பான உலகத்துக்கு எடுத்துச்செல்லவேண்டும்' என்று நினைத்த சூடானியின் ஆசை என்ன ஆனதென்று தெரியாது. அவன் எதிர்காலம் என்ன ஆகும் தெரியாது. சூடானிக்காகச் செலவு செய்த மஜீத், தன் நண்பனின் நகைகளை எப்படி மீட்கப் போகிறான், தன் கிளப்பை எப்படிக் கறைசேர்க்கப்போகிறான் தெரியாது. அவர்கள் போட்டியிட்டுக்கொண்டிருந்த தொடரை வென்றார்களா தெரியாது. எதற்கும் முடிவு சொல்லப்படவில்லை. ஆனாலும், அந்த 120 நிமிடங்கள் முடிந்தபோது அப்படியொரு நெகிழ்ச்சியான உணர்வு, திருப்தி ஏற்படும். டிராவான ஒரு கால்பந்துப் போட்டியைப் போலவே!

பல விளையாட்டுப் படங்கள், படுமோசமான தோல்வியைச் சந்திக்கும். மெஸ்ஸியைப் பயன்படுத்தத் தெரியாத அர்ஜென்டினா மேனேஜர்களைப்போல், அந்த அணிக்குத் தகுந்ததுபோல் ஆட முடியாத மெஸ்ஸியைப்போல். ஃப்ளாப் ஆகும். ஆனால், ஒரு சில படங்கள் மிகப்பெரிய மாஸ்டர் கிளாஸாக அமையும். பார்சிலோனாவைப்போல். மெஸ்ஸி, இனியஸ்டா, ஜாவி ஆகியோரோடு டிகி டாகாவை இணைப்பதுபோல். இந்தப் படம் அப்படியானது. பாவனைகளில் பேசிய நடிகர்கள், உருக்கும் வசனங்கள், அழகான கதை, அவற்றோடு கால்பந்து... இது ஒரு மாஸ்டர் கிளாஸ்!

ரொனால்டோவின் கால்களை முத்தமிட்ட பந்து, ஷெல்லியின் கைகளால் தடுக்கப்பட்டு, பேப்பூர் சுல்தான் பஷீரின் மடியில் தஞ்சமடைந்தால் அந்த பந்து எப்படி இருக்கும்? 'சூடானி ஃப்ரம் நைஜீரியா' படத்தைப்போல்!