கத்தாரில், உலகிலேயே முதன் முறையாக எளிதில் பிரித்து மீண்டும் பொருத்திக்கொள்ளக் கூடிய ரிமூவபிள் ஸ்டேடியத்தில் தான் உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடைப்பெற்று வருகிறது. மொத்தம் எட்டு விளையாட்டு அரங்குகளில் நடைபெற்று வருகிற 2022 உலகக்கோப்பை கால்பந்து போட்டியில், இந்த ரிமூவபிள் ஸ்டேடியமும் அடங்கும்.
பொதுவாகவே உலகக்கோப்பை போட்டிக்காக அவசர அவசரமாக சுற்றுச்சூழலை பெரிதாகக் கருத்தில் கொள்ளாமல் தற்காலிகமாக ஸ்டேடியங்கள் உருவாக்கப்படுகின்றன. போட்டிகள் முடிந்த பிறகு இதுபோன்ற ஸ்டேடியங்களால் பல இன்னல்களை அந்த நாட்டு மக்கள் தான் சந்திக்கின்றனர். இதனால் ஒவ்வொரு முறையும் FIFA அமைப்பு, போட்டி நடக்க இருக்கும் நாட்டில், சுற்றுச் சூழலைக் கருத்தில் கொண்டும், தொழிலாளர்களின் நலனைக் கருத்தில்கொண்டும் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.
கடந்த உலகக்கோப்பை போட்டி ரஷ்யாவில் நடைப்பெற்றபோது, மொத்தம் 12 அரங்குகளில் போட்டிகள் நடைபெற்றன. அதில், கலினின்கிராட் எனும் அரங்கம், ரஷ்ய மக்களால் அதிகம் விரும்பப்படும் ஒரு தீவின் மீது, டன் கணக்கான மணலைக் கொண்டு நிரப்பி கட்டப்பட்டது. இது சுற்றுச்சூழல் ஆர்வாலர்களிடம் பலத்த எதிர்ப்பைக் கிளப்பியது.
மேலும், உலகக்கோப்பை போட்டிக்குப் பின் உருவான எல்லா கழிவுகளையும் அரசாங்கம் முறையாக அப்புறப்படுத்தாமல் நிலத்தில் அப்படியே கொட்டியதில், குளிர் காலத்தில் அங்கிருந்து ஹைட்ரோஜன் சல்பைட் மற்றும் மீத்தேன் வாயுக்கள் வெளியாகி அங்கு வாழும் மக்களுக்கு பல உடல் உபாதைகளைக் கொடுத்தது. கடைசியில் குழந்தைகளுக்கு விஷ வாயு தாக்கி அந்தப் பகுதியைச் சுற்றி வாழும் குழந்தைகள் அடுத்தடுத்து உடல்நிலை சரியில்லாமல் தவித்த பிறகு தான், அரசாங்கம் அந்த குப்பைகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்தது.
இதை எல்லாம் கருத்தில் கொண்டு சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிக்கா வண்ணம் கட்டப்பட்டது தான் இந்த கத்தார் ரீமூவபிள் ஸ்டேடியம். ’ஸ்டேடியம் 974’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்டேடியத்தில் மொத்தம் 40,000 இருக்கைகள் உள்ளன. 974 பழைய ஷிப்பிங் கண்டேய்னர்களை உபயோகித்து வடிவமைக்கப்பட்டுள்ளதால் இந்த பெயர் வைத்துள்ளனர்.

இந்த விளையாட்டு அரங்கம், உலகக்கோப்பை போட்டிக்குப் பின், ஒவ்வொன்றாகக் கழற்றப்பட்டு இடம் மாற்றப்படும் என்றும் சில பாகங்கள் மக்கள் பொழுதுபோக்குக்காகவும், சிறு தொழில்களுக்காகவும் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்டேடியத்திலும் பிற விளையாட்டு அரங்குகளைப் போல கழிவறைகள், படிகட்டுகள், மிடியா ரூம் என அனைத்து வசதிகளும் இருக்கிறது.
இந்த ஸ்டேடியம் கடற்கரையையொட்டி அமைந்துள்ளதாலும் இயற்கையான காற்றோட்டம் செல்லக்கூடிய வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளதாலும், எந்த குளிர் சாதன வசதியும் தேவையில்லை. சாதாரண ஸ்டேடியங்களைவிட இந்த ரிமூவபிள் ஸ்டேடியம் 40 சதவிகிதம் குறைந்த ஆற்றலைப் பயன்படுத்துவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும், இதைப் பகுதிகளாகவோ அல்லது மொத்தமாகவோகூட வெளிநாடுகளுக்கு கப்பலில் அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு முறையும் உலகக்கோப்பை எங்கு நடக்கப் போகிறது என்ற அறிவிப்பு வெளியானதில் தொடங்கி, ஏற்பாடுகள் ஆரம்பமாவது முதல், போட்டிகள் முடிந்து சுத்தம் செய்யும் பணி வரை, 3.361 மில்லியன் டன் கார்பன் டை ஆக்ஸைடுக்கு நிகரான பல ஆபத்தான வாயுக்கள் வெளியாவதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்து இருந்தனர். ஆனால் இந்த முறை கத்தார் அரசாங்கத்தின் இந்த Eco - Friendly முயற்சி மூலம், இதே அரங்கை பல நாடுகள் பயன்படுத்தி பணத்தையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.