பாகிஸ்தானுக்குச் செல்ல மறுப்பு தெரிவித்த பிசிசிஐ:
2023 ஆம் ஆண்டிற்கான ஆசியக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், பஹ்ரைனில் நேற்று நடைபெற்ற ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ACC) நிர்வாகக் குழுக் கூட்டத்தில், பாகிஸ்தானுக்குச் செல்ல இந்தியா விரும்பவில்லை என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) ஆசியக்கோப்பையை நடத்தும் நாடாக இருக்கும். ஆனால், பாகிஸ்தான் தவிர்த்து மற்றொரு நாட்டில் விளையாடுவதில் பிசிசிஐக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. பிசிசிஐ- யின் செயலாளரான ஜெய் ஷா, பிசிசிஐ இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்பாது என்று முன்பே கூறியிருந்தார். பாகிஸ்தானுக்கு மாற்றாக அபுதாபி, துபாய் மற்றும் ஷார்ஜா ஆகிய இடங்களில் ஆசியக்கோப்பை நடைபெற வாய்ப்புள்ளன. 6 அணிகள் பங்கேற்று விளையாடும் இந்த ஆசியக்கோப்பை, வருகிற மார்ச் மாதம் நடைபெற உள்ளது.

அரையிறுதி போட்டிக்கு முன்னேறிய சௌராஷ்டிரா!
பஞ்சாப் அணியும் சௌராஷ்டிரா அணியும் மோதிய ரஞ்சிக் கோப்பையின் காலிறுதி ஆட்டம், கடந்த ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த சௌராஷ்டிரா அணி, முதல் இன்னிங்ஸில் 303 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய பஞ்சாப் 431 ரன்கள் எடுத்து முன்னிலை வகித்தது. இரண்டாவது, இன்னிங்ஸிலும் சிறப்பாக விளையாடிய சௌராஷ்டிரா அணி, 379 ரன்கள் எடுத்து அசத்தியது. ஆனால் முதல் இன்னிங்சில் சிறப்பாக விளையாடிய பஞ்சாப் அணி இரண்டாவது இன்னிங்சில் 180 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. இதன் மூலம் சௌராஷ்டிரா அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

பிளேஆஃப்பில் தோல்வியடைந்த இந்திய இணை:
டேவிஸ் உலகக்கோப்பை டென்னிஸ் தொடரின் குரூப் -1 பிளே-ஆஃப் ஆட்டத்தில், இந்திய இணையான ரோஹன் போபண்ணா மற்றும் யூகி பாம்ப்ரி ஆகியோர் விளையாடினர். இந்த போட்டியில், உலகின் டென்னிஸ் தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள டென்மார்க் நாட்டைச் சேர்ந்த, ஹோல்கர் ரூன் மற்றும் ஜோஹன்னஸ் இங்கில்ட்சன் ஜோடியிடம் 6-2, 6-4 என்ற நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தனர். இந்த வெற்றியின் மூலம் டென்மார்க் 2-1 என முன்னிலை பெற்றுள்ளது.
டர்பனைக் கழற்றச் சொன்ன நடுவர்:
ஸ்பெயின் நாட்டில் உள்ளூர் கால்பந்து அணிகளான அரேஷியா சி vs பாதுரா டி அரிகோரியாகா, இடையே நடைபெற்ற போட்டியின் போது, 15 வயதுடைய சீக்கிய மதத்தைச் சேர்ந்த குர்பிரீத் சிங், என்ற சிறுவனின் டர்பனை நடுவர் அகற்றச் சொல்லியிருக்கிறார். அரேஷியா சி அணியின் பயிற்சியாளரும் மற்ற சக வீரர்களும் இது குறித்து நடுவரிடம் பேசுகையில், "இது அவருடைய மதம் சார்ந்த விஷயம், இதை அணிந்து கொண்டே அவர் எப்போதும் விளையாடுவார்.' என்று தெரிவித்துள்ளனர். இருப்பினும், இந்த விளக்கத்தைத் தவிர்த்த நடுவர்கள், டர்பனை கழற்றச் சொல்லியுள்ளனர். இதனால் அணியின் பயிற்சியாளரும் மற்ற சக வீரர்களும் ஆட்டத்தில் இருந்து வெளியேற முடிவு செய்தனர். இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வெற்றி பெற்ற பி.எஸ்.ஜி அணி:
பிரெஞ்சு லீக் கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பி.எஸ்.ஜி அணியும் டோலூஸ் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் காயம் காரணமாக பி.எஸ்.ஜி அணியில் நெய்மரும், கிலியன் எம்பாப்பேவும் விளையாடவில்லை. ஆட்டத்தின் 20வது நிமிடத்தில் டோலூஸ் அணி வீரர், வான் டென் பூமென் கோலடித்தார். அடுத்த 38வது நிமிடத்தில் மொரோக்கோ வீரரான அச்ராஃப் ஹக்கிமி, PSG அணிக்கு கோல் அடித்து அசத்தினார். இரண்டாவது பாதியின் 58 வது நிமிடத்தில் மெஸ்ஸி ஒரு கோலை அடித்து, PSG அணியை வெற்றி பெறச் செய்தார். இந்த வெற்றியின் மூலம் பிரஞ்சு லீக்கின் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது, பி.எஸ்.ஜி அணி.