கட்டுரைகள்
Published:Updated:

கடவுளின் கை அருளிய ‘கோல்’!

கடவுளின் கை அருளிய ‘கோல்’!
பிரீமியம் ஸ்டோரி
News
கடவுளின் கை அருளிய ‘கோல்’!

நெஞ்சம் மறப்பதில்லை-5

சமீபத்தில் நடந்து முடிந்த கால்பந்து உலகக்கோப்பையை அனைவருமே ஆவலோடு பார்த்திருப்போம். அந்தத் தொடரில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் அரங்கேறியிருந்தது. போர்ச்சுக்கலுக்கும் உருகுவேக்கும் இடையே நடந்த போட்டி அது. போட்டியின் முக்கியக் கட்டத்தில் போர்ச்சுக்கல் வீரர் ஃபெர்னாண்டஸ் ஒரு கோலை அடித்திருந்தார். ஆனால், இந்த கோலில் ஒரு சர்ச்சை எழுந்தது. அதாவது, இந்த கோலை ஃபெர்னாண்டஸ் அடிக்கவில்லை. அவர் கொடுத்த க்ராஸை ரொனால்டோ ஹெட்டர் செய்தே கோலாக்கினார் எனக் கூறப்பட்டது. ஃபெர்னாண்டஸ் கொடுத்த க்ராஸிற்கு ரொனால்டோ ஹெட்டர் அடிக்க முயன்றார் என்பது உண்மைதான். ஆனால், ரொனால்டோவின் தலையில் பந்து பட்டதா என்பதுதான் இங்கே கேள்வியானது. ரொனால்டோவின் தலையை ஒட்டி ரொம்பவே நெருக்கமாக பந்து சென்றிருந்தது. ஆனால், அவரின் தலையில் பந்து பட்டிருந்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை. போர்ச்சுக்கல் அணி நிர்வாகமே இது ரொனால்டோ அடித்த கோல்தான் என மேல் முறையீடெல்லாம் செய்ய முயன்றது.

இந்தச் சர்ச்சைகளையெல்லாம் ஒரு விமர்சனத் தொனியில் அணுகும் வகையில் அந்த கோலை ‘Hair Of God Goal' எனப் பெயரிட்டு ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்டடித்தனர். கடவுளின் தலை முடியால் அடிக்கப்பட்ட கோல் என ரொனால்டோவின் அந்த ஹெட்டர் குறித்து விமர்சனம் எழுந்தது. கால்பந்தைப் பொறுத்தவரைக்கும் வீரர்களுக்குக் கடவுள்கள் இறங்கி வந்து உதவி செய்வது புதிதான விஷயமே அல்ல. ரொனால்டோவின் வருகைக்கெல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்பே இங்கே ஒரு வீரருக்குக் கடவுள் இறங்கி வந்து கோல் அடித்துக் கொடுத்திருக்கிறார். யாருக்காக அந்த அதிசயம் நிகழ்ந்தது தெரியுமா? உலகக்கோப்பையைக் கையிலேந்தி உற்சாகம் பொங்க போஸ் கொடுத்த மெஸ்ஸியின் ரோல் மாடலான மரடோனாவிற்காகத்தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.

கடவுளின் கை அருளிய ‘கோல்’!

பின்னாள்களில் மரடோனாவே கடவுளாகக் கொண்டாடப்பட்டாலும், அந்த 1986 மெக்சிகோ உலகக்கோப்பைதான் அவரை அந்த அரியாசனத்தில் அமர வைத்த தொடராக அமைந்தது. அந்த உலகக்கோப்பையை அர்ஜெண்டினாவே வென்றிருந்தது. அர்ஜெண்டினாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தவர் மரடோனாதான். குறிப்பாக, அந்த இங்கிலாந்துக்கு எதிரான காலிறுதிப்போட்டியில் அவர் வெளிக்காட்டிய உத்வேகம் கால்பந்து உலகம் அதுவரை கண்டிடாதது. அர்ஜெண்டினியர்களுக்கும் பிரிட்டிஷாருக்கும் இடையே நடந்த ஃபாக்லாந்து போரினால் இந்த இங்கிலாந்து Vs அர்ஜெண்டினா போட்டியின் மீதுமே விளையாட்டு என்பதைத் தாண்டி அரசியல்ரீதியாகவும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. போட்டி தொடங்கிய 51-வது நிமிடத்தில்தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. அர்ஜெண்டின மிட் ஃபீல்டர்கள் பந்தை அப்படியே ட்ரிபிள் செய்தபடி ஒருவருக்கொருவர் பாஸ் செய்து மேலேறி வர, பாக்ஸுக்குள் அந்தப் பந்தை சரியாக ஃபினிஷ் செய்யும் முனைப்போடு மரடோனாவும் இருந்தார். பாஸாகி வந்த பந்தை மரடோனா ஹெட்டர் அடிக்க முயல, இங்கிலாந்து அணியின் கோல் கீப்பர் பீட்டர் ஷில்டனின் அபார முயற்சிகளையும் தாண்டி அது கோலாக மாறியது.

கடவுளின் கை அருளிய ‘கோல்’!

இனிதான் சர்ச்சையே ஆரம்பம். மரடோனா அந்த கோலைத் தலையால் முட்டி அடிக்கவில்லை. அவர் கையில் பட்டுதான் பந்து கோல் ஆனது என இங்கிலாந்து வீரர்கள் முறையிட்டனர். கள நடுவர் அல்-பின்-நாசர் இங்கிலாந்து வீரர்களின் வாதத்தை ஏற்கத் தயாராகவே இல்லை. இது நியாயமாக அடிக்கப்பட்ட கோல்தான் எனத் தீர்ப்பு வழங்கினார். வீடியோ ரீப்ளேவில் பார்த்தாலே பந்து மரடோனாவின் கையில் பட்டது தெளிவாகத் தெரியும். போட்டி முடிந்த பிறகான பத்திரிகையாளர் சந்திப்பில் மரடோனாவிடம் இந்த கோல் குறித்துக் கேட்கப்பட்டது. அந்த கோலை உங்களின் கையால்தானே அடித்தீர்கள்? எனக் கேட்க ‘அந்த கோல் கொஞ்சம் என்னுடைய தலையாலும் கொஞ்சம் கடவுளின் கையாலும் அடிக்கப்பட்டது' என மரடோனா பதில் கூறியிருந்தார். இதிலிருந்துதான் ‘Hand of God Goal' எனும் பதம் பிரபலமாகத் தொடங்கியது. மனிதத் தவறினால் எதிர்பாராத அதிர்ஷ்டத்தின் பலனாகக் கிடைத்ததுதான் அந்த கோல் என்பதை மரடோனா லாகவமாக அந்த ஒற்றை பதிலில் வெளிப்படுத்தியிருப்பார். ஆம், அது என்னுடைய கையில் பட்டுதான் கோல் ஆனது என மரடோனா வேறு வார்த்தைகளில் சொன்ன ஒப்புதல் வாக்குமூலம் அது. இந்த கோல் எந்த அளவுக்குக் கொண்டாடப்பட்டதோ அதே அளவுக்கு விமர்சிக்கவும்பட்டது. மரடோனா நல்ல திறமையாளர், மிகப்பெரிய வீரர். ஆனால், ஒரு மனிதராக அவர் குறுகிய மனம் படைத்தவர், ஏமாற்றுக்காரர் எனும் கருத்து பல இங்கிலாந்து வீரர்களால் சொல்லப்பட்டது.

கால்பந்து வரலாற்றில் ஒரு தனி இடம்பிடித்த இந்த ஒரு போட்டிக்கும் இந்த ஒரு கோலுக்கும் இன்றைக்குமே பெரிய மதிப்பு இருக்கிறது. அந்த ‘Hand of God' போட்டியில் மரடோனா அணிந்து ஆடிய 10ஆம் நம்பர் ஜெர்சியை அதே போட்டியில் இங்கிலாந்து அணிக்காக ஆடிய ஸ்டீவ் ஹாஜ் எனும் வீரர் நினைவுப்பரிசாக மரடோனாவிடமிருந்து பெற்றிருக்கிறார். 37 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்டீவ் ஹாஜ் சமீபத்தில் அந்த அதிசய ஜெர்சியை ஏலத்திற்குக் கொண்டு வந்தார். மலைப்பை ஏற்படுத்தும் வகையில் அந்த ஜெர்சி 9.3 மில்லியன் டாலருக்கு ஏலத்தில் விற்றது. அதேமாதிரி அந்தப் போட்டியில் பயன்படுத்தப்பட்ட கால்பந்தை ‘Hand of God' எனும் பெயர் வருவதற்கு மூலகாரணமாக இருந்த நடுவர் அல்-பின்-நாசர்தான் பாதுகாத்து வைத்திருந்தார். அவரும் சமீபத்தில் அந்தப் பந்தை ஏலத்திற்குக் கொண்டு வந்தார். 2.4 மில்லியன் டாலருக்கு அந்தப் பந்தும் ஏலத்தில் எடுக்கப்பட்டது. இந்திய மதிப்பில் தாராளமாக பல கோடிகளைத் தாண்டும்.

கடவுளின் கை அருளிய ‘கோல்’!

இதே போட்டியில்தான் மரடோனா இன்னொரு கோலையும் அடித்திருந்தார். அந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த கோல் அதுதான் எனப் பல தரப்பாலும் அங்கீகரிக்கப்பட்ட கோல் அது. 68 மீட்டருக்கு ஒற்றை ஆளாகப் பந்தை ட்ரிபிள் செய்து இங்கிலாந்தின் 5 டிஃபண்டர்களைக் கடந்து லாகவமாக கோல் கீப்பரை ஏமாறச் செய்து மரடோனாவால் அசாத்தியமாக அடிக்கப்பட்ட கோல் அது. ஆனால், அந்த கோலைவிட இந்த ‘Hand of God' கோல்தான் இன்றளவும் அதிகமாக விவாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.