Election bannerElection banner
Published:Updated:

ஃபிர்மினோ + மைக்கேல் ஓவன் கலவை... யார் இந்த சிவசக்தி?!

Sivasakthi
Sivasakthi

தமிழகத்தின் பெருமை, நம்பிக்கை, தமிழக கால்பந்தின் புதிய முகம்... ஒரு 18 வயது இளைஞனை இப்போதே ஏன் இப்படி அடையாளப்படுத்த வேண்டும்? காரணம் இருக்கிறது.

மேட்ச் முழுக்க ஓடிட்டே இருப்பான். கொஞ்சம் கூட ஓயமாட்டான். எப்படியாச்சும் கோலடிச்சிடுவான். அவன் கோல் அடிக்காத மேட்ச்லாம் விரல் விட்டு எண்ணிடலாம். உண்மையா சொல்றேன், இந்த வயசுல நான்லாம் இவ்ளோ திறமையா இல்ல. சிவசக்தி என்னைவிடப் பெரிய ஆளா வருவான்.
ராமன் விஜயன்

இந்தியாவின் மகத்தான ஸ்டிரைக்கர்களில் ஒருவர், தமிழகம் உருவாக்கிய மிகச் சிறந்த கால்பந்து வீரர், பலநூறு கால்பந்து வீரர்களை வடிவமைத்துக்கொண்டிருக்கும் ஒருவர், ஒரு 18 வயது இளைஞனைப் பற்றி இவ்வளவு பெருமையாகப் பேசுகிறார் என்றால், நிச்சயம் அவர் சாதாரண வீரராக இருந்துவிட முடியாது. தன்னுடைய மாணவனாகவே இருந்தாலும், `நான் இவ்ளோ திறமையா இல்ல’ என்று ஒரு சர்வதேச வீரர் அவ்வளவு எளிதாகச் சொல்லிவிடமாட்டார். இல்லையெனில், பெங்களூரு எஃப்.சி போன்ற ஒரு மிகப்பெரிய அணி இந்தத் தமிழகச் சிறுவனை ஒப்பந்தம் செய்திருக்காது. சிவசக்தி - இந்தியக் கால்பந்துக்குக் கிடைத்திருக்கும் புதுமுகம்… தமிழக கால்பந்தின் புதிய முகம்..!

ஸூம் மூலம் மைதானத்துக்குள் ரசிகர்கள்... ஃபுட்பால்ல என்னலாம் நடக்குது தெரியுமா?
சிவசக்தி எனும் அற்புத ஃபார்வேர்ட்!
ஃபிர்மினோ + ஓவன்

அவரைப் பற்றிப் பார்ப்பதற்கு முன் இங்கிலாந்து வரை போய் வருவோம்…

"மக்கள் எப்போதும் கோல்களைத்தான் பார்க்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை கோல் அடிப்பது மட்டுமே ஸ்டிரைக்கர்களின் தொழில் கிடையாது” என்று ஒருமுறை கூறினார் தியர் ஹென்றி. வெறும் கோல் கணக்கை வைத்து மட்டும் ஒரு ஸ்டிரைக்கரின் திறமையை அளவிட்டுவிட முடியாது. உதாரணமாக இப்போது ஐரோப்பாவின் சாம்பியனாக இருக்கும் லிவர்பூல் அணியை எடுத்துக்கொள்வோம். அந்த அணியின் ஸ்டிரைக்கர் ஃபிர்மினோ… சொல்லப்போனால் அந்த அணியின் இதயம் அவர்தான்.

சாடியோ மனே, முகமது சலா என இரண்டு கோல் ஸ்கோரர்களை விங்கில் வைத்திருக்கிறது அந்த அணி. அவர்களுக்கு ஏற்ப, நடுகளம் வரை இறங்கி ஆடுவார் ஃபிர்மினோ. அவரை டிராக் செய்யும் எதிரணி டிஃபண்டர்கள் பொசிஷனை இழக்கும்போது, விங்கில் இருப்பவர்கள் அந்த இடைவெளியைப் பயன்படுத்தி கோல் நோக்கிப் பாய்வார்கள். விங்கர்கள், மிட்ஃபீல்டர்கள் என இரண்டு ஏரியாவுக்கும் பாலமாக இருப்பது அவர்தான். கிரியேட்டிவான நடுகள வீரர்கள் இல்லாத அந்த அணிக்கு, நம்பர் 10 இடத்தை நிரப்புவதும் அவர்தான். அந்த இடத்தில் மற்ற ஸ்டிரைக்கர்களால் ஆடிவிட முடியாது. இன்று கால்பந்து உலகின் மிரட்டல் ஸ்ட்ரைக்கர்களாக இருக்கும் லெவண்டோஸ்கி, எம்பாப்பே, அகுவேரோ போன்றவர்களால்கூட அந்த ரோலை செய்திட முடியாது.

பிப்ரவரி 18, 2020: சென்னை

மிகவும் பிரபலமான கல்லூரியில் அமைந்திருந்த மிகமோசமான கால்பந்து ஆடுகளத்தில் தொடங்கியது அந்தப் போட்டி. எதிரணியின் இரண்டு சென்டர் டிஃபண்டர்களுக்கும் ஒரே வேலைதான் கொடுக்கப்பட்டிருந்தது - மேன் மார்க் சிவசக்தி! இருவரும் முடிந்த அளவுக்கு அந்த வேலையைச் செய்துகொண்டிருந்தனர். விங்கர்களாலும் பெனால்ட்டி பாக்சுக்குள் நுழைய முடியவில்லை. நடுகளம் வரை இறங்கி ஆடினார் சிவசக்தி. நடுகளத்தில் ஆடிய தன் அண்ணனோடு 1-2 பாக்ஸிங் செய்துகொண்டிருந்தார். ஒரு சென்டர்பேக், அவரை டிராக் செய்து வர, தன் அணியின் இடது விங்கர் பெனால்ட்டி ஏரியாவுக்குள் நுழைய வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்தார். முதல் பாதி முழுவதும், இரண்டு விங்கர்களுக்கும் இவர் கிராஸ் கொடுத்து அவர்களை ஆடவிட்டுக்கொண்டிருந்தார். ஆனால், இடது விங்கில் ஆடிய வீரரால் அன்று சிறப்பாக ஆடமுடியவில்லை. பல வாய்ப்புகள் வீணானது. 0-0 என முடிவுக்கு வந்தது முதல் பாதி. இது `ஃபிர்மினோ’ சக்தி!

சிவசக்தி பயோ

பிறந்தது : கண்டனூர், காரைக்குடி
உயரம் : 158 செ.மீ
எடை : 56 கிலோ
ஜெர்சி எண் : 19
ஃபேவரைட் ஃபூட் : வலது
ஃபேவரைட் வீரர் : கிறிஸ்டியானோ ரொனால்டோ
படிப்பு : BBA, முதல் ஆண்டு
Sivasakthi
Sivasakthi

அதே லிவர்பூல் அணிக்கு ஆடிய இன்னொரு முக்கியமான ஸ்டிரைக்கர் மைக்கேல் ஓவன். பாலன் டி ஓர் விருது வென்ற டாப் கிளாஸ் கோல் ஸ்கோரர். ஃபிர்மினோவிடமிருந்து முற்றிலும் மாறுபட்டவர். `போச்சர்’ என்று சொல்லப்படும் வகை ஃபார்வேர்ட் இவர். பாக்சுக்குள் வரும் பந்துகளைத் தவறாமல் கோலாக்கும் திறமைசாலிகளில் ஒருவர். ஆனால், பாக்சுக்குள் நின்று கோலடிப்பது எளிதான காரியம் இல்லை. உடலுக்கு இணையாக மூளையும் அங்கு செயல்பட வேண்டும். களத்தில் துல்லியமாகக் கணக்கிட வேண்டும். விங்கில் இருந்து வரும் கிராஸ், எந்த இடத்தில், எந்த உயரத்தில் வரும் என்பதைத் துல்லியமாக அறிந்திருக்க வேண்டும். நடுகளத்திலிருந்து வரும் த்ரூ பால்களை சரியாகக் கணித்து ரன் அப் மேற்கொள்ள வேண்டும்.

நடுகளத்திலிருந்தும், விங்கில் இருந்தும் வரும் பந்துகளைக் கையாளும் கடினமான முடிவுகளையும் நொடிப்பொழுதில் எடுக்க வேண்டும். ஃபர்ஸ்ட் டச்சிலேயே டார்கெட்டை நோக்கி அடிப்பதா, இன்னொரு டச் எடுத்து ஆடுவதா, far post நோக்கி அடிப்பதா, near post பக்கமே குறிவைப்பதா, கோல் கீப்பரை வளைத்து பந்தை எடுத்துச் செல்வதா இல்லை chip செய்வதா… இப்படி அத்தனை முடிவுகளையும் அந்த பெனால்டி பாக்சுக்குள் அத்தனை டிஃபண்டர்கள் சூழ்ந்திருக்கும் அந்த பரபரப்பான நேரத்தில், சற்றும் தாமதிக்காமல் எடுக்க வேண்டும். அனைத்துக்கும் மேலாக, இவை ஒவ்வொன்றையும் ஆன் சைடில் இருந்து செய்ய வேண்டும்! ஓவன் அப்படியொரு கில்லாடி.

Sivasakthi
Sivasakthi
Second Half…

இரண்டாம் பாதியின் முதல் 5 நிமிடங்கள் அதே ரோலில்தான் ஆடினார் சிவசக்தி. ஆனால், இரண்டாம் பாதியில் களமிறக்கப்பட்ட புதிய இடது விங்கர், எதிரணியின் ஃபுல் பேக்குக்கு நன்றாக சவால் அளித்துக்கொண்டிருந்தார். நேரம் போகப் போக அந்த ஃபுல்பேக் சோர்வடைய, இடது விங்கில் இப்போது அடிக்கடி ஃபைனல் தேர்டுக்குச் சென்றுகொண்டிருந்தது பந்து. அதுவரை மாணிக்கம் மோடில் இருந்த சிவசக்தி, மானிக் பாட்ஷா மோடுக்கு மாறினார். பாக்ஸுக்குள் படமெடுத்து ஆடினார். விங்கர்களின் கிராஸ்கள், சிவசக்தியின் கால் பட்டு கோல் போட்ஸ்டை நோக்கிப் பாய்ந்தன. நடுகளத்திலிருந்து வந்த பாஸ்களை, இவர் வாய்ப்புகளாக மாற்ற, எதிரணி கோல்கீப்பர் திணறத் தொடங்கினார். இரண்டாம் பாதி தொடங்கிய பத்தாவது நிமிடம் முதல் கோல்! இடது விங்கில் இருந்த கிராஸை, எந்த இரண்டாம்பட்ச யோசனையும் இல்லாமல், முதல் பாலிலேயே கோலாக்கினார் சிவசக்தி.

அடுத்த ஏழாவது நிமிடம்… உத்வேகம் கொண்டு ஆடிய விங்கர்கள் கிராஸ்களைப் பரிமாறிக்கொள்ள, பாக்ஸின் ஓரத்தில் நின்றிருந்த சிவசக்தியிடம் கிடைத்தது பந்து. டிஃபண்டர் ஒருவர் நெருங்கி வருகிறார். முதல் போஸ்ட்டில் கோல் அடிப்பது எளிது. ஆனால், கோல்கீப்பர் தடுக்கவும் வாய்ப்புகள் அதிகம். Far post-ஐ குறிவைப்பது அந்த angle-ல் நின்றிருந்தவருக்குக் கடினம். ஆனால், சற்றும் யோசிக்காமல் இரண்டாவது போஸ்டைக் குறிவைத்தார். வலது கார்னரில் துல்லியமாக விழுந்தது அந்த அழகான `கர்லர்’. அட்டகாசமான ஃபினிஷ்! வெற்றி உறுதியான அடுத்த ஐந்து நிமிடங்களில் சப்ஸ்டிட்யூட் செய்யப்பட்டார். ஓவன் மோட் முடிவுக்கு வந்தது!

கேம் ஓவர்

லிவர்பூல் ரசிகர்களின் சமீபத்திய விவாதங்களைப் பார்த்தால் வேடிக்கையாக இருக்கும். `ஃபிர்மினோ கோல் அடிப்பதில்லை. டிமோ வெர்னர் போன்ற ஒரு கோல் ஸ்கோரர்கள் வேண்டும்’ என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள் சிலர். `ஃபிர்மினோ இருப்பதால்தான் சலா, மனே கோலடிக்கிறார்கள். இல்லையெனில் அணி அவ்வளவுதான்’ என்கிறார்கள் வேறுசிலர். சரி, இரண்டும் கலந்ததுபோல் ஒரு வீரரை வாங்கவேண்டியதுதானே! வாய்ப்பில்லை. விங்கையும் நடுகளத்தையும் இணைக்கும் ஒரு ஃபார்வேர்ட், அந்த இரண்டு பொசிஷன்களுக்கும் இலக்காய் இருக்கும் ஒரு ஃபார்வேர்ட். இப்படி இரண்டு துருவங்களும் சேர்ந்த ஒரு ஸ்டிரைக்கர் கிடைப்பது அரிதிலும் அரிது! அப்படியொரு அரிய வீரர்தான் சிவசக்தி!

சிவசக்தி இரண்டு கோல்கள் அடித்ததும், அணியை வெற்றி பெற வைத்ததும் கவனிக்கப்படவேண்டிய விஷயங்கள். ஆனால், அதைவிட முக்கியமானது, இரண்டு பாதிகளிலும் அவர் ஆடிய முறை. அணியின் பிற வீரர்களின் ஆட்டத்துக்கு ஏற்ப தனது ஆட்ட முறையை மாற்றிக்கொள்வது, எல்லோரும் செய்துவிட மாட்டார்கள். எல்லோராலும் செய்துவிடவும் முடியாது. ஒரு 18 வயது வீரன், அணியின் தேவையை உணர்ந்து, தானாக… `தானாக’ தன் ஆட்டத்தை மாற்றிக்கொள்வதென்பது சாதாரண விஷயமில்லை. அப்படித் தன் ஆட்டத்தை மாற்றிக்கொள்ளும் எண்ணம், அதை மிகத் துல்லியமாக செயல்படுத்தும் திறன் இரண்டும், அவ்வளவு எளிதில் கால்பந்தில் கிடைக்கப்பெறாத ஸ்டிரைக்கர் இவர் என்பதை உணர்த்தும். ஃபிர்மினோ + ஓவன்!

Sivasakthi - A combination of Firmino & Owen
Sivasakthi - A combination of Firmino & Owen

11 வயதில் பயிற்சி பெறத் தொடங்கிய சிவசக்தி 7 ஆண்டுகளில் இந்த உயரத்தில் நிற்கிறார். தமிழகத்தில் கால்பந்தைக் காதலோடு உதைத்துக்கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்குப் பின்னாலும் இருக்கும் சோக வரலாறு சிவசக்திக்கும் பின்னும் இருக்கிறது. சொல்லப்போனால் அது அதீத சோகங்களைப் புதைத்துவைத்திருக்கிறது. கால்பந்து ஆடத் தொடங்கிய காலத்தில் தந்தை தவறிவிட, கூலி வேலை செய்யும் அம்மாவின் பொறுப்பாகிறார்கள் சிவசக்தியும் அண்ணன் சிவசுப்ரமணியும். தனி ஆளாக, அக்கம் பக்கம் ஓடி, சின்னச் சின்னச் வேலைகள் செய்து அவர்களை வளர்க்கத் தொடங்கினார் அந்தப் பெண். ராமன் விஜயனின் நோபல் அகாடெமியும் அவர்களை அரவணைத்துக்கொள்ள, இன்று தமிழகத்தின் பெருமையாய் உயர்ந்து நிற்கிறார் இந்தக் காரைக்குடிச் சிறுவன்.

தமிழகத்தின் பெருமை, நம்பிக்கை, தமிழக கால்பந்தின் புதிய முகம்…. ஒரு 18 வயது இளைஞனை இப்போதே ஏன் இப்படி அடையாளப்படுத்த வேண்டும்? காரணம் இருக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை பெங்கால், கேரளா, கோவா, நார்த் ஈஸ்ட் போன்ற இடங்கள்தான் இன்று கால்பந்தின் மையமாகப் பார்க்கப்படுகிறது. தமிழகத்துக்கு அந்தப் பட்டியலில் இப்போது இடம் தருபவர் யாரும் இல்லை. நாமே கூட, தமிழ்நாடு கால்பந்து என்றால் வட சென்னையைப் பற்றி மட்டும்தான் பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால், இந்திய கால்பந்து கொண்டாடிய வீரர்கள் பலரை உருவாக்கிய மாநிலம் இது. அப்பாராவ், ஶ்ரீராமலு, தங்கராஜ், சைமன் சுந்தரராஜ், நாகேஷ், ராமன் விஜயன் போன்ற மகத்தான வீரர்கள்… ஒலிம்பிக்கில் கோலடித்த, ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் கோலடித்த, ஈஸ்ட் பெங்கால் போன்ற மிகப்பெரிய கிளப்களுக்கு விளையாடிய ஜாம்பவான்கள்… மெட்ராசில், தஞ்சாவூரில், சிவகங்கையில் பிறந்திருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட வரலாறு கொண்ட தமிழக கால்பந்துக்கு இப்போது புதிய முகம் தேவைப்படுகிறது. சென்னையின் எஃப்.சி இரண்டு ஐ.எஸ்.எல் கோப்பைகள் வென்றிருக்கிறது. சென்னை சிட்டி ஐ-லீக் வென்றுவிட்டது. ஆனால், அந்த அணிகளில் ஆடிய தமிழக வீரர்கள் யாரும் இந்திய ரசிகர்களால் பெரிய அளவுக்குக் கொண்டாடப்படவில்லை. சேத்ரி, ஜேஜே ஆகியோர் வரிசையில் கொண்டாடப்படும் வீரர்கள் இன்னும் இங்கிருந்து வரவில்லை. பெங்காலிலும் கேரளாவிலும் ஓங்கி ஒலிக்கும் அளவுக்கு ஒரு தமிழக வீரர் தாக்கம் ஏற்படத்தவில்லை. ராவணன், எட்வின் சிட்னி, தனபால் கணேஷ், மைக்கேல் ரெஜின், சூசைராஜ், மோஹன்ராஜ், அஜித் குமார், ரொமாரியோ என ஐ.லீக், ஐ.எஸ்.எல் என அசத்திக்கொண்டிருக்கிறது ஒரு பட்டாளம். ஆனால், அவர்களால் இந்திய கால்பந்தின் எலைட் லிஸ்டில் இடம்பெற முடியுமா என்பது சந்தேகமே! திறமைகள் இல்லாமல் இல்லை. அளவு கடந்த திறமைசாலிகள் இவர்கள். அப்படியிருந்தும், இந்தச் சந்தேகம் எழக் காரணம் - அவர்கள் ஸ்ட்ரைக்கர்கள் இல்லை!

கவாஸ்கர், ஹனீஃப் முகமது, மால்டினி, பெக்கன்பர் போன்றவர்களைப் பற்றிப் பேசிய காலம் மாறிவிட்டது. இது கோலி, ரோஹித், ரொனால்டோ, மெஸ்ஸி போன்றவர்களின் காலம். அட்டாக்கர்களின் காலம்! ஒரு நாள் முழுதும் அரணாக நின்று விக்கெட் வீழ்ச்சியையும், கோல்களையும் தடுக்கலாம், ஆனால் யாரின் பெயருக்கு அருகே ரன்களின், கோல்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டிருக்கிறதோ அவர்கள்தான் பேசுபொருளாக இருக்கப்போகிறார்கள். புஜாரா, அசார் அலி போன்ற வீரர்கள் ஐ.சி.சி பிளேயர் ஆஃப் தி இயர் விருது வாங்கப்போவதில்லை. நூயர், வேன் டைக் போன்றவர்கள் இனி எந்தக் காலத்திலும் பேலன் டி ஓர் வெல்லப்போவதில்லை. இது பொழுதுபோக்கைக் கொண்டாடும் உலகம். சிக்ஸர்களையும், கோல்களையும் மட்டும் கொண்டாடும் உலகம்.

Sivasakthi with Raman Vijayan
Sivasakthi with Raman Vijayan

`ஸ்டிரைக்கர்கள் கோல் அடிக்கும் விஷயத்தில் சுயநலமாக இருக்க வேண்டும்’ என்று சொல்வார்கள். சுயநலமும், பிடிவாத குணமும் இருப்பவர்களால்தான் அதிக கோல்கள் அடிக்க முடியும். நம் இன்றைய தமிழக வீரர்களிடம் அதுதான் இல்லை. எட்வின் சிட்னி - விங்கர். இப்போது ரைட் பேக், டிஃபன்ஸிவ் மிட்ஃபீல்ட் என மாறி மாறி ஆடிக்கொண்டிருக்கிறார். நடுகள வீரரான ராவணன், எப்போதோ டிஃபண்டராக மாறிவிட்டார். மைக்கெல் ரெஜின் - ஐ.லீக் சாம்பியனுக்கு பால் பிளேயிங் மிட்ஃபீல்டர். ஐ.எஸ்.எல் சாம்பியனுக்கு டிஃபன்ஸிவ் மிட்ஃபீல்டர். கன்சிஸ்டென்ட்டாக கோலடித்துக்கொண்டிருந்த சூசைராஜும் இப்போது பொசிஷன் மாறிவிட்டார். விங் டு விங் பேக். அணியின் தேவைக்காக பொசிஷன் மாறிய சுயநலமும் பிடிவாத குணமும் இல்லாத இந்த வீரர்கள், இந்த பொழுதுபோக்கு உலகத்தில் எப்படி எலைட் வீரர்களாக வலம்வர முடியும்! அதற்கு ஒரு ஸ்ட்ரைக்கர் வேண்டும். அதற்கான பதில்தான் சிவசக்தி..!

ஆனால், இந்த 18 வயது இளைஞனால் இந்திய அரங்கில் முத்திரை பதித்துவிட முடியுமா? ஜூனியர் அரங்கிலிருந்து, சீனியர் அரங்குக்குள் நுழைந்த பலர் சறுக்கியிருக்கிறார்கள். புதிய இடத்துக்கு, புதிய மொழிக்கு, புதிய சூழ்நிலைக்குப் பழக்கப்படுத்திக்கொள்ள முடியாமல் பலர் சறுக்கியிருக்கிறார்கள். நெருக்கடியை சமாளிக்க முடியாமல் சறுக்கியிருக்கிறார்கள். சிலர், திடீரென கிடைத்த பெயருக்கும், புதிய வாழ்க்கைக்கும் அடிமையாக காணாமல் போயிருக்கிறார்கள். இப்படி ஏதோவொரு சூழ்நிலை சிவசக்தி வந்துவிடுமோ?! நிச்சயம் வாய்ப்பில்லை. சிவகங்கையில் பிறந்து, மேற்கு வங்கத்தில் கொடிநாட்டிய பயிற்சியாளரால் வளர்த்தெடுக்கப்பட்டவர் அவர். தன் குடும்பப் பின்புலத்தை, தன் கடந்த காலத்தை, கால்பந்தால் கிடைக்கப்போகும் எதிர்காலத்தை உணர்ந்தவர்.

பாஸிங் : டாப் கிளாஸ். `கில்லர்’ பாஸ்கள் செய்வதில் கில்லாடி!
லாங் பாஸ் : சுமார்
ஹெடிங் திறன் : சிறப்பு. இன்னும் கொஞ்சம் முன்னேற்றிக்கொள்ள வேண்டும்.
டிரிபிளிங் : ஃபைனல் தேர்டிலும், பாக்ஸுக்குள்ளேவும்கூட அட்டகாசமாக டிரிபிள் செய்வார்.
கன்ட்ரோல் & ஃபினிஷிங் : வேற லெவல்!
வீக் ஃபூட் : Not bad to Decent
தடுப்பாட்டம் : மோசம் இல்லை.

"அவன்லாம் எங்கனாலும் இருந்துப்பான். அகாடெமில கொடுத்ததைச் சாப்பிட்டிட்டு, இருந்த இடத்த அட்ஜெஸ்ட் பண்ணிக்கிட்டு வாழ்ந்துட்டு இருந்தவன். எப்படிப்பட்ட சூழ்நிலையையும் சமாளிச்சுப்பான்” என்று நம்பிக்கையோடு சொல்கிறார் ராமன் விஜயன்.

களத்தில் மட்டுமல்ல, களத்துக்கு வெளியேவும் ஆச்சர்யப்படும் குணங்கள் கொண்டிருக்கிறார் சிவசக்தி. "இந்த வயசு பசங்களுக்குலாம் கொஞ்சம் ஆட்டிட்யூட் இருக்கும். இவன்கிட்ட அப்படி சுத்தமா கிடையாது. ஏதோ சும்மா சொல்லணும்னு இதைச் சொல்லல. சுத்தமா எதுக்குமே ரியாக்ட் பண்ண மாட்டான். கோல் அடிச்சாலும் அப்டியே போய் நிப்பான். பாராட்டுனாலும் தலைய மட்டும் ஆட்டிட்டு போயிடுவான். நான்லாம் அவ்ளோ சீக்கிரம் பாராட்டிட மாட்டேன். அப்படி எப்பவாவது பாராட்டினாலும் ஒரு ரியாக்ஷனும் இருக்காது. எப்படித்தான் அப்டி இருக்கானு ஆச்சர்யமா இருக்கும். ஒருநாள் அவன் எதாவது பண்ணிட மாட்டானா, ஆட்டிட்யூட் காட்டிட மாட்டானா அப்டினுலாம் நானும் எதிர்பார்த்துட்டே இருக்கேன். ஆனா, இன்னும் அவன்கிட்ட பார்க்கல. அவனோட ஃபுட்பால் ஸ்கில்ஸ்லாம் தாண்டி, அந்த கேரக்டர்… அவ்ளோ சீக்கிரம் யாருக்கும் அமைஞ்சிடாது. அதுவே அவனைப் பெரிய பெரிய இடத்துக்கு எடுத்துட்டுப் போகும்” என்கிறார் விஜயன்.

அவர் சொல்வதும் சரிதான். அவ்வளவு எளிதில் சிவசக்தி பேசுவதுகூட இல்லை. கேள்விக்கு நான்கு வார்த்தைகளுக்கு மேல் பதில் வராது. கால்பந்தைப் பற்றி, அவர் கரியரைப் பற்றி என்ன கேள்வி கேட்டாலும், அவர் சொல்லும் ஒரு பதில், "கோல் அடிக்கணும்” என்பதுதான்!

"பெங்களூரு போன்ற ஒரு பெரிய அணிக்குக் கையொப்பமிட்டதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்” என்ற கேள்விக்குத் தான் இதுவரை சாதித்தது, பெங்களூரு அணியோடு நடத்திய பேச்சுவார்த்தை, அந்த அணியின் பெருமை, அங்கு அவர் சாதிக்க விரும்புவது பற்றியெல்லாம் சொல்வார் என நினைத்தால், மிகவும் சிம்பிளாக, ஆனால் ஆச்சர்யப்படும் விதத்தில் பதில் சொன்னார் அவர்: "ராமன் சார் சொன்னாரு ஒத்துக்கிட்டேன். அவர் எந்த டீமுக்கு ஆடச் சொல்றாரோ அந்த டீமுக்கு ஆடுவேன். அவ்ளோதான்”. இந்த பதிலைக் கேட்கும்போதே அவ்வளவு நெகிழ்வாக இருந்தது.

Raman Vijayan & Sivasakthi
Raman Vijayan & Sivasakthi

இதற்கு மேல் என்ன வேண்டும்? தீர்க்கமான லட்சியம், எந்த சூழ்நிலையையும் சமாளிக்கக்கூடிய தீர்க்கமான மனநிலை, அளவுகடந்த திறமை, அதைக் கொஞ்சமும் பாதிக்காத பணிவு, தன்னை வளர்த்தெடுத்தவர் மீது அளவு கடந்த நம்பிக்கையும் மரியாதையும்… சூப்பர் ஸ்டார் ஆவதற்குத் தேவையான அனைத்தும் இவரிடம் நிறைந்திருக்கிறது. பெங்களூரு அணியில் சேத்ரிக்கு சப்போர்ட் ரோல் ஆடுவதாக இருந்தாலும் சரி, அவரது இடத்தை நிரப்புவதாக இருந்தாலும் சரி.. இவரால் சிறப்பாகச் செயல்பட முடியும். ஒரே போட்டியில் ஃபிர்மினோவாகவும், ஓவனாகவும் ஆட முடிந்தவரால், அணியின் தேவையை எளிதாகப் பூர்த்தி செய்ய முடியும். அதே சமயத்தில் கோல் மழை பொழியவும் முடியவும்.

எங்க போனாலும் நல்ல பேர் வாங்கணும், எந்தக் காரணத்துக்காகவும் கெட்ட பேர் எடுத்திடக் கூடாதுனுதான் விஜயன் சார் எப்போமே சொல்வாரு. ஒவ்வொரு நாளும் முன்னேறிக்கிட்டே இருக்கணும், எப்போமே ஒழுக்கமா இருக்கணும்னு சொல்வார். அவர் சொன்ன மாதிரியே இருக்கணும்.
சிவசக்தி
பயிற்சி, பென்ச், கோல் செலிபிரேஷனில்கூட ஓகே... ஆனால், களத்துக்குள் சமூக இடைவெளியென்பது? #Bundesliga

ஒரு 18 வயது இளம் வீரரை இவ்வளவு புகழ வேண்டுமா? தன்னை அவர் நிரூபிக்கும் முன்பே இப்படிக் கொண்டாடவேண்டுமா? புகழ்வோமே. கொண்டாடுவோமே! கிரிக்கெட், பேட்மின்டன், செஸ் புரோடிஜிகளை மட்டும் கொண்டாடித் தீர்க்கும், கால்பந்தின் எதிர்கால நாயகர்களைப் பற்றிப் பேசாமலேயே விட்டுவிடுகிறோமே. அதை எப்போதும் அந்நிய விளையாட்டாகவே பார்த்ததன் விளைவு, அதில் கலக்கிய இளம் தலைமுறையினர் செய்தியில் இடம்பிடிக்க முடியாமல் போய்விட்டது. அப்போதே இப்படியானவர்களைக் கொண்டாடியிருந்தால் எத்தனையோ நட்சத்திரங்கள் இங்கு உருவாகியிருப்பார்கள். இப்படி மற்ற மாநில ரசிகர்களோடு நம் அடையாளத்துக்குப் போராடவேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. அதைத் தடுப்பதற்காகவாவது சிவசக்தியைக் கொண்டாடியாக வேண்டும். ஏனெனில், இது ஒரு வீரனின் எதிர்காலம் மட்டுமல்ல, ஒரு மாநிலத்தின் வருங்காலம்..!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு