Published:Updated:

வெற்றி, டிரா, தோல்வி… ரொனால்டோவின் 4 அணிகளும் 3 முடிவுகளும்! #FootballRoundUp

Ronaldo ( AP )

இந்த சீஸனை ஓரளவு சிறப்பாகவே தொடங்கிய ரியல் மாட்ரிட், கடந்த சில வாரங்களாக மீண்டும் சொதப்பத் தொடங்கியிருக்கிறது. கடைசியாக விளையாடிய 4 போட்டிகளில் ஒரு வெற்றி, 2 டிரா, 1 தோல்வி.

வெற்றி, டிரா, தோல்வி… ரொனால்டோவின் 4 அணிகளும் 3 முடிவுகளும்! #FootballRoundUp

இந்த சீஸனை ஓரளவு சிறப்பாகவே தொடங்கிய ரியல் மாட்ரிட், கடந்த சில வாரங்களாக மீண்டும் சொதப்பத் தொடங்கியிருக்கிறது. கடைசியாக விளையாடிய 4 போட்டிகளில் ஒரு வெற்றி, 2 டிரா, 1 தோல்வி.

Published:Updated:
Ronaldo ( AP )

சர்வதேச கால்பந்து பிரேக் முடிந்து, கிளப் போட்டிகள் மீண்டும் தொடங்கிவிட்டன. ஐரோப்பியர்களின் வீக் எண்ட் மீண்டும் கொண்டாட்ட மூடுக்கு வந்துவிட்டது. ஆனால், இந்த வாரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரசிகர்களுக்கு முழுமையான கொண்டாட்டமாக இருந்திருக்குமா என்பதுதான் தெரியவில்லை. அந்த ஜாம்பவானின் ரசிகராக இருப்பது கொண்டாட்டம் என்றாலும், சில தர்மசங்கடமான சூழல்களும் ஏற்படும். அவருக்காகவே ஒரு அணியை ஆதரிக்கத் தொடங்கியவர்கள், அவர் அணி மாறிய பிறகு எந்த அணிக்கு ஆதரவு கொடுப்பது என்று தவிப்பார்கள். வீக் எண்ட் ஆனால் GGMU என்று பாடுவார்கள். மிட்வீக் சாம்பியன்ஸ் லீக் போட்டி என்றால் ஹாலா மாட்ரிட் என்பார்கள். அந்த இரு அணிகளும் மோதும்போது குழப்பத்தில் நொந்துபோவார்கள். இப்போது போதாக்குறைக்கு மனிதர் யுவன்டஸ் பக்கம் போய்விட, இப்போது அவர்களின் அலமாரிகளில் சிவப்பு, வெள்ளை டி ஷர்ட்களோடு சேர்ந்து கருப்பு வெள்ளை ஜெர்சியும் தொங்கிக்கொண்டிருக்கும்.

இந்தக் கால்பந்தில் என்ன பிரச்னையெனில், பல வருடங்கள் ஆதரித்துவிட்ட அணியை உடனடியாகக் கண்டுக்காமல் விட்டுவிட முடியாது. அந்தப் பாசம் அவ்வளவு சீக்கிரம் மறைந்திடாது. ஆக, பிரீமியர் லீக், லா லிகா, சீரி ஏ என அத்தனையும் பார்த்தாக வேண்டிய கட்டாயம் இவர்களுக்கு எப்போதுமே இருக்கும். இப்படிப்பட்டவர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சிக்கலாகவே அமைந்திருக்கிறது. ரொனால்டோ தற்சமயம் வீற்றிருக்கும் யுவன்டஸ் வெற்றி பெற்றுவிட்டாலும், அவருடைய முந்தைய அணிகள் எதுவுமே இந்த வாரம் வெற்றி பெறவில்லை. அனைத்துமே எதிர்பார்த்ததற்கு எதிராகவே நடந்தேறியிருக்கின்றன.

Ronaldo
Ronaldo
AP

முதலிடத்தைத் தக்கவைத்த யுவன்டஸ்

தொடர்ந்து 8 சீஸன்களாக சீரி ஏ பட்டம் வென்று அசைக்க முடியாத சக்தியாக விளங்கிவரும் யுவன்டஸ், இந்த முறையும் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது. பொலோன்யா அணியுடனான போட்டியில் 2 - 1 என்ற கோல் கணக்கில் வென்று இந்த சீஸனில் எட்டாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது அந்த அணி. ஆட்டத்தின் 19-வது நிமிடத்தில், இடது விங்கில் இருந்து யுவன்டஸ் வீரர் கொடுத்த கிராஸைத் தடுக்க முற்பட்டார், பொலோன்யாவின் இடது ஃபுல் பேக் லடிஸ்லேவ் கிரெய்கி. ஆனால், அவரது முதல் டச் கொஞ்சம் பலமாக இருந்தது. அவர் சுதாரித்து பந்தை மீட்பதற்குள் அருகில் இருந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ, அதைக் கைப்பற்றி வலது பக்கம் கோல் நோக்கி முன்னேறினார். பாக்சுக்குள் சென்றதும், ஃபர்ஸ்ட் போஸ்ட் நோக்கி அவர் பந்தை அடிக்க, பந்தின் வேகம் கோல்கீப்பர் ஸ்கொருப்ஸ்கியை எளிதாக ஏமாற்றியது. யுவன்டஸ் 1- 0. கடந்த 9 நாள்களில், தான் ஆடிய 3 போட்டிகளிலுமே கோலடித்துள்ளார் சி.ஆர்.7.

26 நிமிடம், டனிலோ கோல். ஆனால், இது யுவன்டஸ் டனிலோ அல்ல. வேற டனிலோ! யுவன்டஸ் பாக்சுக்குள் நின்றிருந்த பொலோன்யா அணியின் டிஃபண்டர் டனிலோவை, யுவன்டஸ் வீரர்கள் யாரும் மார்க் செய்யாமல் விட்டுவிட, அட்டகாசமாகக் கோலடித்து ஆட்டத்தை சமன் செய்தார் அவர். அடுத்த சில நிமிடங்கள் யுவன்டஸ் கொஞ்சம் திணறிப்போனது. நான்காவது நடுவரிடம் வாக்குவாதம் செய்த யுவன்டஸ் மேனேஜர் சர்ரி மஞ்சள் அட்டை பெற, அடுத்த சில நிமிடங்களிலேயே நடுகள வீரர் ராபியாட்டும் தன் பங்குக்கு ஒரு மஞ்சள் அட்டை பெற்றார். அதன்பின் இரு அணிகளுமே எதிரணிகளைத் தங்கள் அட்டாக்கால் கொஞ்சம் பயமுறித்தன. இருந்தாலும் முதல் பாதியில் அதன்பின் கோல்கள் விழவில்லை. இரண்டாவது பாதியில் ரொனால்டோவின் அற்புதமான ஹெட்டரை பொலோன்யா கோல்கீப்பர் அட்டகாசமாகத் தடுத்தார். இருந்தாலும், யுவன்டஸ் கோல் அடிப்பதை அவர்களால் ரொம்ப நேரம் கட்டுப்படுத்த முடியவில்லை. 54-வது நிமிடத்தில் பல குழப்பங்களுக்கு இடையே இரண்டாவது கோலை அடித்தது `ஓல்டு லேடி.’

வலது விங்கில் இருந்த வந்த கிராஸைக் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறினார் பெர்னார்டேஷி. ஆனால், அவரது டச் ரொனால்டோவிடம் ஒரு வழியாகச் சென்றது. இப்போது ரொனால்டோ தடுமாற, கீழே விழும்போது பெர்னார்டேஷிக்குப் பாஸ் போட நினைத்தார் அவர். ஆனால், அது ஓடிவந்துகொண்டிருந்த பெர்னார்டேஷியின் கால்களில் பட்டுச் சென்றது. இருந்தாலும், அது சக வீரர் ப்யானிச்சிடம்தான் சென்றது! பாக்சுக்கு வெளியே இருந்த அவர் கோல் நோக்கி ஷூத் செய்ய, பொலோன்யோ வீரரின் காலில் பட்டு வெளியேறியது. ஆனால், அதே வேகத்தில் இன்னொரு பொலோன்யா வீரரின் காலில் பட்டு, மீண்டும் அந்த அணியின் பாக்சுக்குள்ளேயே சென்றது. இந்த முறை பந்தை வசப்படுத்தியது ஹிகுவெய்ன். இரண்டு ஆண்டுக்கு முன்பே காலாவதியாகிவிட்ட அவரால், அதைச் சரியாகக் கட்டுக்குள் வைத்திருக்க முடியவிலை. பொலோன்யா வீரர் டேக்கிள் செய்துவிட்டார். டேக்கிள் செய்த பந்தை கிளியர் செய்ய ஓடிய அவர், ஓடிவந்த இன்னொரு சகவீரரின் மீது மோத, இருவருமே கீழே விழுந்து பந்தைக் கோட்டைவிட்டனர். ஒருவழியாக அந்தப் பந்தை பொலோன்யா டிஃபண்டர் வசப்படுத்தி சொரியானோவுக்குப் பாஸ் போட, மோசமாக டச் செய்து பந்தை மீண்டும் பெனால்டி ஏரியாவுக்கு அனுப்பினார் அவர். பெனால்டி ஏரியாவில் இருந்த ரொனால்டோ கோல் நோக்கி அடிக்க, ஓடி வந்துகொண்டிருந்த மாடியா பனியின் காலில் பட்டு ரீ பவுண்ட் ஆனது, பந்து. இப்போது மீண்டும் ப்யானிச்சிடம் கிடைக்க, ஒருவழியாகக் கோலடித்து, ஒட்டுமொத்த களேபரத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்தார் அந்த போஸ்னிய வீரர்.

அதன்பின் பொலோன்யா அணி கிராஸ்களால் யுவன்டஸ் டிஃபன்ஸுக்கு சிக்கல் ஏற்படுத்தியது. சான்டாண்டர் செய்த ஹெட்டர் கிராஸ், பாரில் பட்டு வெளியேற, அந்த ரீ பவுண்டை பைசைக்கிள் கிக் மூலம் கோல் நோக்கி அனுப்பினார் அவர். இம்முறை யுவன்டஸ் ஜாம்பவான் பஃபன் அதைத் தடுத்துவிட, தப்பிப் பிழைத்தது நடப்பு சாம்பியன். சமீப காலமாக யுவன்டஸ் ஆடும் ஆட்டம், முழுமையான ஆதிக்கம் செலுத்துவதாக இருப்பதில்லை. இருந்தாலும், அனுபவ வீரர்கள் நிறைந்திருக்கும் அந்த அணி, 3 புள்ளிகளைப் பெறும் கலையை நன்றாகத் தெரிந்துவைத்திருக்கிறது. அதே சமயம், கடந்த சில வாரங்களாக ஆரோன் ராம்ஸி, ஜார்ஜியோ சீலினி, மேடியோ டி ஷிக்லியோ, டக்ளஸ் கோஸ்டா போன்ற முன்னணி வீரர்கள் பலரும் காயத்தால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தாலும், அந்த அணியின் பெஞ்ச் டெப்த் அவர்களைக் காப்பாற்றியிருக்கிறது. இதுவரை 8 போட்டிகளில், 7 வெற்றி, 1 டிரா என 22 புள்ளிகளுடன் முதலிடத்தில் அமர்ந்திருக்கிறது யுவன்டஸ்.

Rashford
Rashford
AP

யுனைடட் டிரா… மாட்ரிட் தோல்வி..!

இந்த சீஸனை ஓரளவு சிறப்பாகவே தொடங்கிய ரியல் மாட்ரிட், கடந்த சில வாரங்களாக மீண்டும் சொதப்பத் தொடங்கியிருக்கிறது. கடைசியாக விளையாடிய 4 போட்டிகளில் ஒரு வெற்றி, 2 டிரா, 1 தோல்வி. சனிக்கிழமை நள்ளிரவு மலோக்ரா அணிக்கெதிராக நடந்த போட்டியில் தோல்வியடைந்து, லா லிகா புள்ளிப்பட்டியலின் முதலிடத்தை பார்சிலோனாவுக்குத் தாரை வார்த்திருக்கிறது அந்த அணி. அசேன்சியோவின் சீஸன் தொடங்கும் முன்பே முடிவடைந்திருந்த நிலையில், கேரத் பேல், ஹசார்ட், மோட்ரிச், குரூஸ், லூகாஸ் வஸ்கீஸ், நாசோ என முன்னணி வீரர்கள் பலரும் காயத்தால் அவதிப்பட, ஜிடேனின் அணி சற்று வலுவிழந்தது. இருந்தாலும், இது தோற்க வேண்டிய போட்டியே இல்லை. இதற்கு முன் வெறும் 7 புள்ளிகளோடு ரிலகேஷன் ஜோனில் இருந்த ஒரு அணிக்கெதிராக 14 ஷாட்கள் அடித்தும் கோலடிக்க முடியவில்லையெனில் என்ன செய்வது? போன சீஸனின் பாதியில் ஜிடேன் பதவியேற்றதால், `அடுத்த ஃபுல் சீஸன் மாஸ் காட்டிடுவோம் புல்’ என்று நம்பிக்கொண்டிருந்தார்கள் ரியல் ரசிகர்கள். இப்போது, வண்டி மீண்டும் பள்ளத்துக்குள்தான் இறங்கிக்கொண்டிருக்கிறது.

இது ஒரு எதிர்பாராத முடிவென்றால், யுனைடட் டிரா செய்ததும் எதிர்பாராத முடிவுதான். தொடர்ந்து 17 லீக் போட்டிகளில் வெற்றி பெற்று சாதனையை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த லிவர்பூலை எதிர்த்து ஆடும்போது, அந்த அணி வெற்றி பெறும் என்று அதன் ரசிகர்களே நம்பியிருக்க மாட்டார்கள். ஏனெனில், இந்த சீஸனில் அவர்களின் பர்ஃபாமன்ஸ் அப்படி. ஆனால், ஒருவழியாக 3 - 4 - 3 ஃபார்மேஷனைப் பயன்படுத்தித் தன் தலையைக் காத்துக்கொண்டார் யுனைடெட் பயிற்சியாளர் ஷோல்ஷர். சலா இல்லாத லிவர்பூல் அணி, அட்டாக்கில் வழக்கமான பலத்தைக் காட்ட முடியவில்லை. மகுயர், லிண்டலாஃப், ரோயோ அடங்கிய யுனைடெட் பேக் லைனும் ஓரளவு திடமாக இருக்க, கவுன்டர் அட்டாக்கில் என்னவோ யுனைடெட்தான் மிரட்டியது. முதல் பாதியில் ரேஷ்ஃபோர்ட் கோலடித்து யுனைட்டடை முன்னிலைப்படுத்தியபோது ஓல்டு டிராஃபோர்டில் எழுந்த சத்தம்… கடைசியாக சர் அலெக்ஸ் ஃபெர்குசனுக்கு செண்ட் ஆஃப் கொடுக்கும்போதுதான் அப்படிக் கத்தியிருப்பார்கள். அவர்களுக்கே அவ்வளவு ஆச்சர்யம். லலானா கோலடித்து ஆட்டத்தை சமனாக்கினாலும், யுனைடட் ரசிகர்களுக்கு இது வெற்றிதான்!

எல்லாம் சரி, ரொனால்டோ 4 அணிகளுக்கு விளையாடியிருக்காரே! ஆம், அவருடைய முதல் சீனியர் கிளப்பான ஸ்போர்டிங் பற்றி யாருமே கண்டுகொண்டதில்லை. அது போர்ச்சுகல் லீகில் ஆடுவதும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், இந்த வாரம்தான் அந்த கிளப் பற்றி பல ரொனால்டோ ரசிகர்களும் மகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். தங்கள் மைதானத்துக்கு ரொனால்டோவின் பெயரைச் சூட்ட யோசித்துக்கொண்டிருப்பதாக அவர்கள் தெரிவிக்க, ஸ்போர்டிங் முதல் முறையாக ரொனால்டோ ரசிகர்களின் பார்வையில் பட்டது. ஆனால், பாவம்… போர்ச்சுகலின் மூன்றாம் தர லீகில் ஆடும் கத்துக்குட்டி அணியான அல்வேர்காவிடம் தோற்று டகா டி போர்ச்சுகல் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது அந்த முன்னணி அணி. ஒரு வெற்றி, ஒரு எதிர்பாராத தோல்வி, ஒரு எதிர்பாராத மகிழ்ச்சி, ஒரு சென்டிமென்ட்டல் தோல்வி… ஒவ்வொன்றும் ஒவ்வொரு வெரைட்டியான முடிவாக இருக்கிறது பாவம்!