Published:Updated:

ராபர்டோ மான்சினி... களத்துக்கு வெளியே நின்று விளையாடிய இத்தாலியின் கேம் சேஞ்சர்!

யூரோ 2020 தொடரை யார் வெல்வார்கள் என்ற கேள்விக்கு பிரான்ஸ், பெல்ஜியம், போர்ச்சுகல், இங்கிலாந்து என 2 மாதங்களுக்கு முன்பு பல பதில்கள் கூறப்பட்டன. அந்தப் பட்டியலில் இத்தாலியின் பெயர் பெரிதாகத் தென்படவே இல்லை.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

காரணம் - ஒவ்வொரு அணியைப் பற்றியும் அலசும்போது எத்தனை சூப்பர் ஸ்டார்கள் இருக்கிறார்கள், எல்லா இடங்களுக்கும் சரியான வீரர்கள் இருக்கிறார்களா, ஒவ்வொரு இடத்துக்கும் சரியான மாற்று இருக்கிறதா என்று பல விஷயங்களை அலசுவார்கள். இத்தாலி, மற்ற பாக்ஸ்களையெல்லாம் டிக் அடித்தாலும், அந்த முதல் பாக்ஸை அவர்களால் டிக் செய்ய முடியவில்லை.

பிரான்ஸ்க்கு எம்பாப்பே, கான்டே இருக்கிறார்கள்...

போர்சுகலுக்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ, புரூனோ ஃபெர்னாண்டஸ்...

பெல்ஜியமை வெற்றி பெறவைக்க லுகாகு, டி புருய்னா, ஹசார்ட்...

இப்படி ஃபேவரிட்ஸ் என்று கருதப்பட்ட ஒவ்வொரு அணியிலும் ஐரோப்பிய அளவில் கலக்கிய ஸ்டார்கள், தனி ஆளாக ஆட்டத்தை மாற்றக்கூடிய சூப்பர் ஸ்டார்கள் இருந்தார்கள். ஆனால், இத்தாலியில் அப்படி யாரும் இல்லை. நல்ல தரமான வீரர்கள் அணியில் நிறைந்திருந்தாலும், தனி ஆளாக ஆட்டத்தை மாற்றக்கூடிய மேட்ச் வின்னர்கள் இல்லை. அதனால், இத்தாலி - டார்க் ஹார்ஸ், அண்டர்டாக் என்ற பட்டியலுக்குள்தான் அடைக்கப்பட்டிருந்தது.

Roberto Mancini
Roberto Mancini
AP

எப்படித் தெரியும்... 26 பேர் அடங்கியிருந்த அந்த வீரர்களின் பட்டியலுக்குள் மட்டுமே அடைக்கப்பட்டிருந்தால் எப்படித் தெரியும். அந்த அணியின் உச்சபட்ச சூப்பர் ஸ்டார்தானே அந்தப் பட்டியலை அறிவித்தது. ராபர்டோ மான்சினி - தனி ஆளாக ஆட்டத்தை மாற்றக்கூடிய கேம் சேஞ்சர், இத்தாலியின் நூற்றாண்டுகால அடையாளத்தை, அரை தசாப்தத்தில் மாற்றிக் காட்டிய ஒற்றை மனிதர்... இத்தாலி இந்தக் கோப்பையை வெல்வதற்கு, டார்க் ஹார்ஸாகக் கருதப்பட்ட அணிக்குக் கடிவாளம் கட்டி, அதன்மேல் ஏறி, தன் அசைவுகளால் வழிநடத்தி, அதை வெற்றிக் குதிரையாகவும் மாற்றியிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்படி என்ன செய்துவிட்டார் மான்சினி?

மிகவும் எளிதாகச் சொல்லவேண்டுமெனில், வெஸ்ட் இண்டீஸ் அணியை வைத்துக்கொண்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஜெயித்தால் எப்படி இருக்கும்! டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் எட்டாவது இடத்தில் இருக்கும் ஒரு அணி, அதுவும் டி-20 மோடிலேயே ஒருநாள் போட்டியை ஆடும் ஒரு அணியை வைத்து, கன்சிஸ்டென்ஸி இல்லாத அந்த வீரர்களை வைத்து எப்படி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஜெயிக்க முடியும். மான்சினி இத்தாலியை வைத்து அரங்கேற்றியிருப்பது அப்படியொன்றுதான்!

Roberto Mancini
Roberto Mancini
AP

சூப்பர் ஸ்டார்கள் இல்லை என்பதையெல்லாம் விட, இத்தாலியின் இந்த 10 - 15 வருட வரலாறும் அவர்களுக்கு எதிராக இருந்தது. 2006 உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்று சிகரத்தில் ஏறி நின்றிருந்த 'அசுரி', அடுத்த 2 உலகக் கோப்பைகளிலும் குரூப் சுற்றோடு நடையைக் கட்டியது. 2018 உலகக் கோப்பைக்கு தகுதி பெறவே தவறியது. சிகரத்தில் நின்றவர்கள் பாதாளம் தொட்டார்கள். இத்தாலிய கால்பந்தை மீட்டெடுக்கும் மாபெரும் பொறுப்பு மான்சினியின் கைகளுக்கு வந்தது.

ஸ்வீடனுடனான உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில், ஒரு முறை கூட இத்தாலி ஸ்டிரைக்கர்கள் எதிரணியின் பாதியில் இல்லாததைக் கவனித்த மான்சினி, அதை மாற்றுவதே இத்தாலிக்கு முக்கியம் என்பதை வலியுறுத்தினார். டிஃபன்ஸிவ் ஆட்டம் போதும் என்ற முடிவுக்கு வந்தார். அவர் மாற்ற நினைத்தது ஆட்ட முறையை மட்டும் என்று நினைத்தால் அது சாதாரண விஷயமாகத்தான் தெரியும். ஆனால், அவர் மாற்ற முடிவு செய்தது, இத்தாலி கால்பந்தின் மகத்தான அடையாளத்தை. கொஞ்சம் பிசகினாலும் புலி வாலைப் பிடித்த கதையாக மாறிவிடும். மான்சினி பின்வாங்கவில்லை.

Roberto Mancini
Roberto Mancini
AP

ஸ்பெய்னைப் போல் பால் பொசஷன் வைக்க வேண்டுமா, ஜெர்மனியைப் போல் பிரஸ் செய்யவேண்டுமா, போர்ச்சுகல் போல் கவுன்ட்டர் அட்டாக் செய்யவேண்டுமா, பெல்ஜியம் போல் மிட்ஃபீல்டில் சான்ஸ் கிரியேட் செய்யவேண்டுமா... டைரக்ட் ஃபுட்பால் ஆடவேண்டுமா, இல்லை பழைய இத்தாலியைப் போல் டிஃபன்ஸிவ் ஆட்டம் ஆடவேண்டுமா? மான்சினியின் அணியால் எதுவும் முடியும். எந்த ஆட்டத்தையும் கையில் எடுக்க முடியும். களத்துக்கு ஒரு ஆயுதத்தோடு கையாளவும் முடியும், அனைத்தையும் ஒன்றாக சேர்த்து எதிராளியைப் பந்தாடவும் முடியும்.

தொடர்ந்து பால் பொசஷன், அட்டாக் என்று தங்களின் புது கேமால் பட்டையைக் கிளப்பிய இத்தாலி, அரையிறுதியில் ஸ்பெய்னுக்கு எதிராக தங்கள் பழைய வித்தையைக் கையில் எடுத்தது. ஆரம்பத்தில் இருந்து ஸ்பெய்ன் அட்டாக் செய்ய, கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டத்தை மாற்றினார்கள். முதல் சில நிமிடங்கள் வழக்கம்போல் ஃபுல் டெம்போவில் பிரஸ் செய்தவர்கள், போகப்போக அட்டாக்கிங் தேர்டில் மட்டும் பிரஸ் செய்தார்கள். டிஃபன்ஸிவ் ஏரியாவில் ஸ்பெய்ன் அட்டாக்கர்களுக்கு இடம் கிடைத்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார்கள். அப்படியே அது முழுமையான டிஃபன்ஸாக மாறியது. சுவராய், அரணாய், அசைக்க முடியாத மாபெரும் மதிலாய் உருமாறும் அந்த டிஃபன்ஸிவ் மிருகம் உயிர் பெற்றது. ஸ்பெய்ன் தொடர்ந்து அட்டாக் செய்ய, அதைத் தடுத்துத் தடுத்து கவுன்ட்டர் அட்டாக்கில் கோல். Italy is back!

Roberto Mancini
Roberto Mancini
AP

இதுதான் மான்சினி எனும் கேம் சேஞ்சரின் தாக்கம். அவருக்கு வெற்றி பெறத் தெரியும். இன்று மாபெரும் சக்தியாய் உருவெடுத்திருக்கும் மான்செஸ்டர் சிட்டியை சாம்பியன்களின் அரங்கில் அறிமுகப்படுத்திவைத்தவரே அவர்தானே. தான் அழைத்து வந்த வீரர்கள் ஒவ்வொருவருக்கும் வாய்ப்பு கிடைக்கவேண்டும் என்றும் நினைப்பார், பெலடோலி போல் அசால்ட்டாக தவறு செய்யும் வீரரை யோசிக்காமல் வெளியேற்றவும் செய்வார். 34 போட்டிகளாக இத்தாலியை தோற்கவிடாமல் வழிநடத்திக்கொண்டிருக்கிறார். இப்போது ஐரோப்பாவின் சாம்பியனாகவும் ஆக்கியிருக்கிறார். களத்தில் இருப்பவர்கள் மட்டுமா கேம் சேஞ்சர்கள்.... மான்சினி போன்ற ஜீனியஸும் மிகப்பெரிய கேம் சேஞ்சர்தான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு