1. 1958 ஆம் ஆண்டு கால்பந்து உலகக்கோப்பைத் தொடர் ஸ்வீடன் நாட்டில் நடைபெற்றது. இதில் வேல்ஸ் அணிக்கு எதிரான காலிறுதி போட்டியில், பிரேசில் அணிக்காக விளையாடி உலகக்கோப்பையில் தனது முதல் கோலை பதிவு செய்தார். அப்போது பீலேவுக்கு வயது 17 ஆண்டுகள் 239 நாட்கள் மட்டுமே. உலகக் கோப்பை வரலாற்றில் இளம் வயதில் கோல் அடித்த வீரர் என்ற சாதனையை பீலே படைத்தார்.

2. அதே 1958 ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் பிரான்ஸ் அணிக்கு எதிராக பீலே 'ஹாட்ரிக் கோல்' அடித்து அசத்தினார். உலகக்கோப்பையில், இளம் வயதில் 'ஹாட்ரிக்' கோல் அடித்த வீரர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆனார். மேலும் இறுதிப்போட்டியில் ஸ்வீடன் அணியை வீழ்த்திய பிரேசில் அணி, முதல்முறையாக உலகக்கோப்பையை வென்றது. இந்த வெற்றியின் மூலம் பீலே, இளம் வயதில் உலகக் கோப்பை வென்ற வீரர் எனும் சாதனையையும் படைத்தார்.

3. 1958, 1962, 1970 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற FIFA உலக கோப்பையில் பிரேசில் அணி, சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த மூன்று உலகக் கோப்பை தொடரிலும் பிரேசில் அணிக்காக பீலே விளையாடினார். மூன்று முறை உலக கோப்பையை வென்ற ஒரே வீரர் என்ற பெருமையும் பீலேவுக்கு கிடைத்தது. வேறு எந்த வீரரும் மூன்று முறை உலக கோப்பையை வென்ற அணியில் இடம் பிடித்தது கிடையாது.

4. பிரேசில் அணிக்காக 92 ஆட்டங்களில் விளையாடிய இவர், 77 கோல்கள் அடித்துள்ளார். பிரேசில் அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற பெருமையும் பெற்றுள்ளார். தன் வாழ்நாளில் பல்வேறு விதமான கால்பந்து போட்டிகளில் 1,283 கோல்கள் அடித்துள்ளதாக பீலே 2015 ஆம் ஆண்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
5. 1959 ஆம் ஆண்டில் மட்டும் மொத்தமாக 127 கோல்கள் அடித்துள்ளார் என்றும், 1961 ஆம் ஆண்டில் மட்டும் 110 கோல்களை அடித்துள்ளார் என்றும் FIFA தெரிவித்துள்ளது.
6. பீலே, உலகக்கோப்பை போட்டிகளில் 10 கோல் அசிஸ்ட்களை (assist) செய்துள்ளார். இது இன்று வரை யாராலும் முறியடிக்கப்படாத சாதனையாகும். இதில் குறிப்பாக, 1958 ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதி போட்டியில் 1 அசிஸ்ட் மற்றும் 1970 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதி போட்டியில் 2 அசிஸ்ட்களையும் செய்துள்ளார். உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் அதிக அசிஸ்ட்களை (3) செய்த வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

இவ்வாறு கால்பந்தாட்டத்தில் பல சாதனைகளை படைத்த பிரேசில் ஜாம்பவான் பீலே, 'கருப்பு முத்து' (The black pearl) என்று அழைக்கப்படுகிறார். 82 வயதான பீலே, உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இவருடைய மறைவிற்கு உலகின் முன்னணி கால்பந்தாட்ட வீரர்கள் முதல் பல்வேறு நாடுகளில் உள்ள கால்பந்து ரசிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வரை இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.