Published:Updated:

35-வது முறையாக லா லிகா கோப்பை வென்றது ரியல் மாட்ரிட்! எப்படி சாத்தியமானது இந்த வெற்றி?

Real Madrid ( AP )

இரண்டு முக்கிய டிஃபண்டர்களை இழந்திருந்த ரியல் மாட்ரிட், ஒரு புதிய டிஃபண்டரை மட்டுமே ஒப்பந்தம் செய்தது. பேயர்ன் மூனிச் அணியிலிருந்து ரியல் மாட்ரிட் அணிக்கு வந்தார் ஆஸ்திரிய கேப்டன் டேவிட் அலாபா.

35-வது முறையாக லா லிகா கோப்பை வென்றது ரியல் மாட்ரிட்! எப்படி சாத்தியமானது இந்த வெற்றி?

இரண்டு முக்கிய டிஃபண்டர்களை இழந்திருந்த ரியல் மாட்ரிட், ஒரு புதிய டிஃபண்டரை மட்டுமே ஒப்பந்தம் செய்தது. பேயர்ன் மூனிச் அணியிலிருந்து ரியல் மாட்ரிட் அணிக்கு வந்தார் ஆஸ்திரிய கேப்டன் டேவிட் அலாபா.

Published:Updated:
Real Madrid ( AP )

லா லிகா கோப்பையை 35-வது முறையாக வென்று சரித்திரம் படைத்திருக்கிறது ரியல் மாட்ரிட் கால்பந்து அணி. இந்த சீசனில் இன்னும் நான்கு போட்டிகள் மீதமிருக்கும் நிலையிலேயே ஸ்பெய்னின் சாம்பியனாக முடி சூடியிருக்கிறது. 34 போட்டிகளின் முடிவில் 81 புள்ளிகள் பெற்றிருக்கிறது அந்த அணி. இரண்டாவது இடத்திலிருக்கும் செவியா 17 புள்ளிகள் பின்தங்கியிருக்கிறது. 33 போட்டிகளில் விளையாடியிருக்கும் பார்சிலோனா வெறும் 63 புள்ளிகள்தான் பெற்றிருக்கிறது!

2021-22 லா லிகா சீசன் பெரும்பாலும் ஒருதலை பட்சமாகவே சென்றது. மெஸ்ஸி வெளியேறிய பிறகு பலம் குறைந்த பார்சிலோனா அணி எந்த வகையிலும் கோப்பைக்குப் போராடவில்லை. ஒருகட்டத்தில் ஒன்பதாவது பத்தாவது இடத்திலெல்லாம் தத்தளித்துக்கொண்டிருந்தது. அதேசமயம் நடப்பு சாம்பியன் அத்லெடிகோ மாட்ரிட்டும் பெரிதாக சோபிக்கவில்லை. செவியா போன்ற அணிகளாலும் மற்ற அணிகளின் சரிவைப் பயன்படுத்திக்கொள்ள முடியவிலை. அதனால், ரியல் மாட்ரிட் அணிக்கு இந்த சீசன் ரொம்பவும் எளிதாகிவிட்டது.

சொல்லப்போனால் இந்த சீசன் ரியல் மாட்ரிட் அணிக்கு எளிதாக இருக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. கடந்த ஆண்டு மிக நெருக்கமாக வந்து பட்டத்தை இழந்திருந்தாலும், செர்ஜியோ ரமோஸ், ரஃபேல் வரேன் இல்லாமல் களமிறங்கியதால் அந்த அணி கோப்பை வெல்லும் என்று பெரிதாக யாரும் நம்பவில்லை. கேப்டன் செர்ஜியோ ரமோஸ் ஒப்பந்தத்தை நீட்டிக்காமல் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியில் இணைந்தார். ரஃபேல் வரேனை மான்செஸ்டர் யுனைடட் அணி வாங்கிவிட்டது. இரண்டு முக்கிய சென்ட்டர் டிஃபண்டர்கள் இல்லாமல் ரியல் மாட்ரிட் களமிறங்கியதாலும், பார்சிலோனா மெஸ்ஸியை இழந்திருந்ததாலும், கடந்த ஆண்டைப் போல் இந்த ஆண்டும் அத்லெடிகோ வெல்ல வாய்ப்பு இருப்பதாகவே கருதினர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இரண்டு முக்கிய டிஃபண்டர்களை இழந்திருந்த ரியல் மாட்ரிட், ஒரு புதிய டிஃபண்டரை மட்டுமே ஒப்பந்தம் செய்தது. பேயர்ன் மூனிச் அணியிலிருந்து ரியல் மாட்ரிட் அணிக்கு வந்தார் ஆஸ்திரிய கேப்டன் டேவிட் அலாபா. போதாதற்கு டேனி கர்வாகல் வேறு அடிக்கடி காயத்தால் அவதிப்பட்டார். விளையாடிய போட்டிகளிலும் முன்பைப் போல் ஆட முடியவில்லை. இருந்தாலும், கார்லோ ஆன்சலோடி கைவசம் இருந்த வீரர்களை வைத்தே சமாளித்தார். லூகாஸ் வாஸ்கிஸ் வழக்கம்போல் டிஃபன்ஸின் வலது பக்கம் தேவையான நேரங்களில் சிறப்பாக செயல்பட்டார். எந்த இடத்தில் ஓட்டை விழுந்தாலும் அதை அடைக்கத் தயாராக இருந்தார் நாசோ. கிட்டத்தட்ட வெறும் 7 டிஃபண்டர்களை வைத்துக்கொண்டே இந்த சீசனைக் கடந்தது ரியல் மாட்ரிட்.

Real Madrid
Real Madrid
AP

சரி நடுகளமாவது முன்பைப் போல் இருந்ததா என்றால் அதுவும் இல்லை. மார்டின் ஓடகார்டை ஆர்செனலுக்கு விற்றுவிட்டு எடுவார்டோ கமவிங்காவை வாங்கியது ரியல் மாட்ரிட். அந்த இளம் வீரர் மிகச் சிறப்பாகவே செயல்பட்டார். ஆனால், முன்னணி வீரர்கள் எதிர்பார்த்த செயல்பாட்டைக் கொடுக்கவில்லை. டோனி குரூஸ், கசமிரோ போன்றவர்களால் முன்பைப் போல் சிறப்பாக ஆட முடியவில்லை. பல போட்டிகளை மோட்ரிச் காப்பாற்றினாலும் அவரால் சீராக ஆட முடியவில்லை. ஃபெடரிகோ வெல்வர்டே மட்டும் தான் பெரும் நம்பிக்கையாகத் திகழ்ந்தார்.

அட்டாக்கிலும் அதே கதைதான். பேல், ஹசார்ட் இருவரும் இருந்தார்களே இல்லையே என்று தெரியாததைப் போலத்தான் இந்த சீசனும் இருந்தனர். ஆன்சலோட்டி திரும்ப வந்திருந்தாலும், இஸ்கோவால் கம்பேக் கொடுக்க முடியவில்லை. அசான்சியோ ஒரு போட்டியில் சிறப்பாக செயல்பட்டால், அடுத்த போட்டியில் சொதப்பினார். மரியானோ, ஜோவிச் இருவரைப் பற்றியும் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. இளம் வீரர்கள் ராட்ரிகோ, வினிசியஸ் ஜூனியர் இருவரும் தான் அட்டாக்கில் நம்பிக்கை கொடுத்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்படி அத்தனை ஏரியாவும் சுமாராகவே இருக்கும் ஒரு அணி லா லிகா கோப்பை வென்றிருப்பது சாதாரண விஷயமா? அதுவும் இன்னும் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியிலும் நீடித்துக்கொண்டிருக்கும்போது இந்தக் கோப்பையை வென்றிருப்பது சாதாரண விஷயமா? இது எப்படி முடிந்தது? எல்லாம் ஒரே ஆளின் காரணமாகத்தான். கரிம் பென்சிமா!

34 வயதில் தனி ஆளாக ஒரு மிகப்பெரிய அணியைத் தன் தோளில் தூக்கிச் சுமந்தார் பென்சிமா. சுமந்தது மட்டுமல்லாமல் அவர்களை ஒவ்வொரு தொடரிலும் எல்லைக் கோட்டைத் தாண்டி எடுத்துச் சென்றுகொண்டிருக்கிறார். இதுவரை இந்த லா லிகா சீசனில் விளையாடிய 29 போட்டிகளில் 26 கோல்கள் அடித்து அசத்தியிருக்கிறார் அவர். கோல்கள் அடித்தது மட்டுமல்ல. 11 அசிஸ்ட்களும் செய்திருக்கிறார். ஒட்டுமொத்தமாக 37 கோல்களில் அவர் பங்களிப்பு இருக்கிறது. அதாவது, ஒரு போட்டிக்கு 1.28 கோல் பங்களிப்புகள்! இது மட்டுமல்ல. சாம்பியன்ஸ் லீக் தொடரிலும் 10 போட்டிகளில் 14 கோல்கள் அடித்து முரட்டு ஃபார்மில் இருக்கிறார் பென்சிமா. இப்படி தன் வாழ்நாளின் உச்சகட்ட ஃபார்மில் இருக்கும் ஒரு ஸ்டிரைக்கர் இருக்கும்போது அந்த அணி சிறப்பாக செயல்படாதா என்ன!

Karim Benzema
Karim Benzema
AP

குறிப்பாக பென்சிமா, வினிசியஸ் கூட்டணி எதிரணிகளுக்குப் பெரும் தலைவலியாக அமைந்தது. பென்சிமா முழுமையான நம்பர் 9-ஆக இல்லாமல், ஃபால்ஸ் 9 போல விளையாடியது அணிக்குப் பெரிதும் உதவியது. இடது விங்கில் இருந்து வினிசியஸ் சிக்கல்கள் ஏற்படுத்து பென்சிமாவுக்கு செட் செய்து கொடுக்க, கச்சிதமாக அந்த வாய்ப்புகளை கோலாக்கிக்கொண்டே இருந்தார் பென்சிமா.

இந்த வீரர்களை பயிற்சியாளர் ஆன்சலோட்டி பயன்படுத்திய விதமும் குறிப்பிடப்படவேண்டியது. தோற்கவேண்டிய பல போட்டிகளில் அவர் கொண்டுவந்த மாற்றங்கள் போட்டியின் முடிவுகளை மாற்றின. தன் அனுபவத்தை சிறப்பாகப் பயன்படுத்தி, தன் முதல் லா லிகா கோப்பையை வென்றிருக்கிறார் அவர். ஐரோப்பாவின் டாப் 5 லீக் அனைத்தையும் வென்ற முதல் பயிற்சியாளர் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார் அவர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism