Published:Updated:

Football Updates: எல் கிளாசிகோவை வென்றது ரியல் மாட்ரிட்; லிவர்பூலிடம் வீழ்ந்தது மான்செஸ்டர் சிட்டி!

Team Real Madrid ( Real Madrid )

எதிர்பார்த்ததைப் போலவே பார்சிலோனாவின் பிரச்னைகள் ரியல் மாட்ரிட் அணிக்குச் சாதகமாக அமைந்தன. மிகவும் நிதானமாக விளையாடிய ரியல் மாட்ரிட் சிறப்பாக டிஃபண்ட் செய்து அசத்தியது.

Football Updates: எல் கிளாசிகோவை வென்றது ரியல் மாட்ரிட்; லிவர்பூலிடம் வீழ்ந்தது மான்செஸ்டர் சிட்டி!

எதிர்பார்த்ததைப் போலவே பார்சிலோனாவின் பிரச்னைகள் ரியல் மாட்ரிட் அணிக்குச் சாதகமாக அமைந்தன. மிகவும் நிதானமாக விளையாடிய ரியல் மாட்ரிட் சிறப்பாக டிஃபண்ட் செய்து அசத்தியது.

Published:Updated:
Team Real Madrid ( Real Madrid )
கால்பந்து உலகின் மிகப்பெரிய போட்டியாகக் கருதப்படும் எல் கிளாசிகோவை வென்று லா லிகா புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியிருக்கிறது ரியல் மாட்ரிட். கரிம் பென்சிமா, ஃபெடரிகோ வால்வெர்டே, ராட்ரிகோ ஆகியோர் கோலடிக்க 3-1 என பார்சிலோனாவை வீழ்த்தியது கார்லோ ஆன்சலோட்டியின் அணி.

ஸ்பெய்னின் இரு பெரும் கிளப்களான ரியல் மாட்ரிட், பார்சிலோனா அணிகள் மோதும் போட்டி எல் கிளாசிகோ. இரு வேறு அரசியல் சித்தாந்தங்களுக்கு இடையிலான போர் கால்பந்து களத்துக்குள் வந்து மிகப்பெரிய விளையாட்டு ரைவல்ரி உருவானது. இளம் வீரர்களின் வருகையில் புதியதொரு அத்தியாத்தைத் தொடங்கவிருக்கும் எல் கிளாசிகோ, இந்த சீசனில் முதல் முறையாக சான்டியாகோ போர்னபூ மைதானத்தில் நடந்தது. ஜாவி பயிற்சியாளரான பின் நடந்த முதல் கிளாசிகோவில் (கடந்த சீசன்) இதே மைதானத்தில் 4-0 என பார்சிலோனா வெற்றி பெற்றிருந்தது. அதனால் அதற்கு ரியல் பழிவாங்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது.

Real Madrid
Real Madrid
Real Madrid

இந்தப் போட்டிக்கு முன்பாக அட்டகாசமான ஃபார்மில் இருந்தது பார்சிலோனா. 8 போட்டிகளில் 7 வெற்றி, 1 டிரா என 22 புள்ளிகளோடு முதலிடத்தில் இருந்தது அந்த அணி. 8 போட்டிகளிலும் சேர்த்து மொத்தமே 1 கோல் தான் விட்டிருந்தது அந்த அணி. அதேசமயம் லெவண்டோஸ்கியின் அட்டகாசமான ஃபார்மினால் கோல்களும் அடித்துக் குவித்துக்கொண்டிருந்தது. ரியல் மாட்ரிட்டும் அதே அளவு புள்ளிகளே பெற்றிருந்தாலும் கோல் வித்தியாச அடிப்படையில் இரண்டாவது இடத்தில் இருந்தது. அதுமட்டுமல்லாமல் 8 போட்டிகளில் ஒன்றில் மட்டும்தான் அந்த அணி கோல் விடவில்லை. இருந்தாலும், பார்சிலோனா அணியில் பல வீரர்கள் காயத்தால் அவதிப்பட்டது அவர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

எதிர்பார்த்ததைப் போலவே பார்சிலோனாவின் பிரச்னைகள் ரியல் மாட்ரிட் அணிக்குச் சாதகமாக அமைந்தன. சென்டர் பேக் பொசிஷனில் ஆடும் அரோஹோ, கிறிஸ்டன்சன் இருவருமே காயமடைந்திருந்தால் ரைட் பேக் பொசிஷனில் அதுவரை ஆடிய ஜூல் கூண்டே, சென்டர் பேக்காக ஆடவேண்டியிருந்தது. அவருமே காயத்திலிருந்து இப்போதுதான் அணிக்குத் திரும்பியிருந்தார். ரைட் பேக் பெயரினும் காயத்தால் அவதிப்படவே, கடந்த சில போட்டிகளாகவெ செர்ஜி ராபர்டோ அங்கு விளையாடிவருகிறார். ஜாவியின் திட்டத்தில் இல்லாத இந்த டிஃபன்ஸிவ் காம்போ அவர்களுக்குப் பாதகமாகத்தான் அமைந்தது.

மிகவும் நிதானமாக விளையாடிய ரியல் மாட்ரிட் சிறப்பாக டிஃபண்ட் செய்து அசத்தியது. சரியான நேரங்களில் கவுன்ட்டர் அட்டாக்கையும் தொடுத்தது. 12வது நிமிடத்தில் பார்சிலோனா வீரர்களைச் சரியாகச் சமாளித்து நடுகளத்தில் இருந்து த்ரூ பால் ஒன்றை அனுப்பினார் டோனி குரூஸ். இடது விங்கில் அதை நோக்கிப் பாய்ந்தார் வினிசியஸ் ஜூனியர். முன்பே சொன்னதுபோல் கூண்டே - ராபர்டோ இணை சரியான புரிதல் இல்லாமல் தவித்ததால், அவர்களால் சரியான இடத்தில் சரியான முடிவை எடுக்க முடியவில்லை. அதிவிரைவாகப் பாய்ந்த வினிஷியஸ் பந்தோடு பார்சிலோனா பாக்சுக்குள் நுழைந்தார். கோல்கீப்பர் டெர் ஸ்டெகன் முன்னால் வர, பந்தை 'சிப்' செய்ய முயற்சி செய்தார் வினிஷியஸ். அதை டெர் ஸ்டெகன் தடுத்துவிட்டாலும், பாக்சின் ஓரத்தில் இருந்த பென்சிமாவின் கால்களுக்குச் சென்றது பந்தை. அதை சிறப்பாக கோலாக்கி ரியல் மாட்ரிட் அணிக்கு முன்னிலை ஏற்ப்டுத்திக் கொடுத்தார் அந்த அணியின் கேப்டன்!

அடுத்த சில நிமிடங்களில் பார்சிலோனாவுக்கு ஒரு மிகச் சிறந்த வாய்ப்பு கிடைத்தது. வலது விங்கில் இருந்து ஒரு அற்புதமான கிராஸை பாக்சுக்குள் அனுப்பினார் ரஃபினியா. அதை கோலாக்க டி யாங் பாய்ந்தார். ஆனால் அதைத் தவறவிட்டார். இருந்தாலும் இரண்டாவது போஸ்ட்டுக்கு அருகே வந்த லெவண்டோஸ்கி அதை கோலாக்கிவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருடைய ஷாட் போஸ்ட்டுக்கு மேலே சென்றுவிட, பார்சிலோனா ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். தொடர்ந்து பார்சிலோனா மாட்ரிட்டின் இடது விங்கை குறிவைத்து அட்டாக்குகள் செய்து கொண்டேதான் இருந்தது. இருந்தாலும் அதை சிறப்பாக டிஃபண்ட் செய்தனர் மாட்ரிட் வீரர்கள்.

Real Madrid
Real Madrid
Real Madrid

பார்சிலோனா பதில் கோல் திருப்பும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், 35வது நிமிடத்தில் இரண்டாவது கோலை அடித்தது ரியல் மாட்ரிட். ஃபெர்லாண்ட் மெண்டி கொடுத்த பாஸை, பாக்சுக்கு வெளியே மிகவும் கடினமான கோணத்தில் இருந்து கோலாக்கினார் வால்வர்டே. அதனால் முதல் பாதி 2-0 என முடிவுக்கு வந்தது.

52வது நிமிடத்தில் பாக்சுக்கு வெளியே இருந்து ஒரு அதி அற்புதமான கோலை அடித்தார் பென்சிமா. போட்டி மொத்தமாக முடிந்துவிட்டது என்று நினைத்துக்கொண்டிருக்க, ஆஃப் சைட் என்று கோல் மறுக்கப்பட்டது.

இரண்டாவது பாதியில் பல மாற்றங்கள் செய்தார் பார்சிலோனா பயிற்சியாளர் ஜாவி. அது ஒருவழியாக கடைசி கட்டத்தில் பலன் கொடுத்தது. 83வது நிமிடத்தில் அந்த அணிக்கு முதல் கோல் விழுந்தது. இடது விங்கில் முன்னேறிய அலஹாண்ட்ரோ பால்டே பெனால்டி ஏரியாவுக்குள் பந்தை அனுப்பினார். முதல் போஸ்ட் அருகே நின்றுகொண்டிருந்த லெவண்டோஸ்கி அதை பேக் ஹீல் மூலம் இரண்டாவது போஸ்ட்டுக்கு அனுப்பினார். அங்கு நின்றிருந்த ஃபெரன் டாரஸ் அதை எளிதாக கோலாக்க, போட்டிக்கு உயிர் வந்தது.

பார்சிலோனா இரண்டாவது கோலுக்குப் போராட, கவுன்ட்டர் அட்டாக்கில் இன்னொரு கோலை அடித்தது ரியல் மாட்ரிட். வால்வெர்டே படுவேகமாக நுழைந்து பார்சிலோனா பாக்சுக்கு அருகே இருந்த ராட்ரிகோவிடம் பந்தைக் கொடுத்தார். ஆனால் ராட்ரிகோவை எரிக் கார்சியா ஃபவுல் செய்ய, அந்த அணிக்கு பெனால்டி கிடைத்தது. அதை கோலாக்கி ரியல் மாட்ரிட்டுக்கு வெற்றியை உறுதியாக்கினார் ராட்ரிகோ! இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது ரியல் மாட்ரிட்.

இந்தப் போட்டி அளவுக்கு எதிர்பார்க்கப்பட்டிருந்த இன்னொரு போட்டி பிரீமியர் லீகில் அரங்கேறியது. அன்ஃபீல்ட் மைதானத்தில் லிவர்பூல் அணியை எதிர்கொண்டது மான்செஸ்டர் சிட்டி. இந்த சீசனில் லிவர்பூல் தடுமாறி வருவதால், சிட்டி வென்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கோல் வெறியோடு திரியும் எர்லிங் ஹாலண்ட்டை லிவர்பூல் எப்படியோ தடுத்துவிட்டது. அதையும் மீறி ஹாலண்ட் அடித்த ஷாட்களை மிகச் சிறப்பாக தடுத்தார் லிவர்பூல் கோல்கீபர் ஆலிசன். 

Liverpool vs Man City
Liverpool vs Man City
Liverpool

தொடர்ந்து அட்டாக்கில் ஈடுபட்டிருந்த மான்செஸ்டர் சிட்டி 63வது நிமிடத்தில் கோலடித்து முன்னிலை ஏற்படுத்திக் கொடுத்தார் ஃபில் ஃபோடன். ஆனால் அதற்கு முன்பாக எர்லிங் ஹாலண்ட் ஃபவுல் செய்ததாக VAR உறுதி செய்ததால் அந்த கோல் நிராகரிக்கப்பட்டது. சிட்டி தான் கோலடிக்கும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்க யாரும் எதிர்பாராமல் லிவர்பூல் கோலடித்தது. அதுவும் முகமது சலா கோலடித்தார். டி புருய்னா அடித்த சுமாரான கிராஸை கைப்பற்றிய ஆலிசன், சலாவை ரிலீஸ் செய்ய, கன்சலோவைக் கடந்து சென்று எடர்சனை ஏமாற்றி, லிவர்பூலுக்கு முன்னிலை ஏற்படுத்திக் கொடுத்தார் சலா. 

ஒரு ஃபவுலுக்காக ரெஃப்ரியைத் திட்டியதால், லிவர்பூல் பயிற்சியாளர் ஜார்கன் கிளாப் ரெட் கார்ட் பெற்றார். கடைசி நேரத்தில் மான்செஸ்டர் சிட்டி பல முயற்சிகள் செய்தும் அவர்களால் எதையுமே கோலாக்க முடியவில்லை. இதனால் 1-0 என வெற்றி பெற்றது லிவர்பூல்.

இந்த சீசனில் மான்செஸ்டர் சிட்டி அடைந்திருக்கும் முதல் தோல்வி இது. சிட்டியின் இந்த தோல்வியால், புள்ளிப் பட்டியலில் 4 புள்ளிகள் முன்னிலையோடு கெத்தாக அமர்ந்திருக்கிறது ஆர்செனல். மற்ற அணிகளை விட 1 போட்டி குறைவாக விளையாடியிருக்கும் லிவர்பூல், எட்டாவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது.

பிரீமியர் லீக் மேட்ச் டே 10 முடிவுகள் 

பிரென்ட்ஃபோர்ட் 2 - 0 பிரைட்டன் அண்ட் ஹோவ் ஆல்பியான்

லெஸ்டர் சிட்டி 0 - 0 கிறிஸ்டல் பேலஸ்

ஃபுல்ஹாம் 2 - 2 போர்ன்மௌத்

வோல்வர்ஹாம்ப்டன் வாண்டரர்ஸ் 1 - 0 நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட்

டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் 2 - 0 எவர்டன்

ஆஸ்டன் விலா 0 - 2 செல்சீ

லீட்ஸ் யுனைடட் 0 - 1 ஆர்செனல்

மான்செஸ்டர் யுனைடட் 0 - 0 நியூகாசிள் யுனைடட்

சௌதாம்ப்டன் 1 - 1 வெஸ்ட் ஹாம் யுனைடட்

லிவர்பூல் 1 - 0 மான்செஸ்டர் சிட்டி