சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் மான்செஸ்டர் சிட்டி அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ரியல் மாட்ரிட். பரபரப்பான அரையிறுதியின் கடைசி நிமிடம், 2 கோல்கள் பின்தங்கியிருந்த ரியல் மாட்ரிட் ஒரு மகத்தான கம்பேக்கை அரங்கேற்றி இறுதிப் போட்டிக்குள் நுழைந்திருக்கிறது. மே 29-ம் தேதி பாரிஸில் நடக்கும் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து கிளப்பான லிவர்பூல் உடன் அந்த அணி மோதும்.
2021-22 சீசன் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் ரியல் மாட்ரிட், மான்செஸ்டர் சிட்டி அணிகள் மோதின. கடந்த வாரம் எடிஹாட் மைதானத்தில் நடந்த முதல் சுற்றுப் போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணி 4-3 என வெற்றி பெற்றிருந்தது. மான்செஸ்டர் சிட்டி அணிக்காக கெவின் டி புருய்னா, கேப்ரியல் ஜீசுஸ், ஃபில் ஃபோடன், பெர்னார்டோ சில்வா ஆகியோர் கோலடித்தனர். ரியல் மாட்ரிட் ஸ்டிரைக்கர் கரிம் பென்சிமா இரண்டு கோல்களும், இளம் விங்கர் வினிசியஸ் ஜுனியர் ஒரு கோலும் அடித்திருந்தனர்.
இந்நிலையில் அந்த அரையிறுதியின் இரண்டாவது சுற்று ஆட்டம் ரியல் மாட்ரிட் அணியின் சொந்த மைதானமான சான்டியாகோ போர்னபோவில் இன்று அதிகாலை நடந்தது. முதல் சுற்றின்போது காயமடைந்த டிஃபண்டர் டேவிட் அலாபாவுக்குப் பதில் நாசோ களமிறங்கினார். ராட்ரிகோவுக்குப் பதிலாக ஒரு கூடுதல் மிட்ஃபீல்டராக கசிமிரோவை களமிறக்கினார் ரியல் மாட்ரிட் மேனேஜர் கார்லோ ஆன்சலோடி. மான்செஸ்டர் சிட்டி அணியிலும் 2 மாற்றங்கள் இருந்தது. முதல் சுற்றுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த ஜோ கன்சலோ திரும்பியதால், லெஃப்ட் பேக் ஜின்சென்கோ விளையாடவில்லை. ரைட் பேக்கிலும் ஜான் ஸ்டோன்ஸுக்குப் பதிலாக கைல் வாக்கர் அணிக்குத் திரும்பினார்.
ஒரு கோல் பின்தங்கியிருந்த ரியல் மாட்ரிட் அணி ஆரம்பத்திலேயே அட்டாக் செய்தது. அதனால் அந்த அணிக்கு இரண்டாவது நிமிடத்திலேயே ஃப்ரீ கிக்கும் கிடைத்தது. நான்காவது நிமிடத்தில் அந்த அணிக்கு ஒரு மிகச் சிறந்த வாய்ப்பு கிடைத்தது. டேனி கர்வகால் வலது விங்கில் இருந்து அனுப்பிய கிராஸை பென்சிமா ஹெட்டர் செய்தார். ஆனால், அது போஸ்ட்டுக்கு மேலே சென்றுவிட்டது. பென்சிமாவின் திறனுக்கு அது நிச்சயம் கோல் ஆகியிருக்கவேண்டும்.
ஆட்டத்தின் எட்டாவது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் மிட்ஃபீல்டர் கசிமிரோ டி புருய்னாவைத் தள்ளிவிட, இரு அணி வீரர்களும் சண்டையிடத் தொடங்கினர். அதில் லூகா மோட்ரிச், ஆய்மரிக் லபோர்ட் ஆகியோருக்கு இடையில் மோதல் எல்லை மீற இருவருக்கும் யெல்லோ கார்ட் கொடுக்கப்பட்டது. அடுத்த நிமிடமே மான்செஸ்டர் சிட்டி கோலடிக்க முற்பட்டது. பாக்சுக்கு வெளியே இருந்து தன் டிரேட் மார்க் லெஃப்ட் ஃபூட் மூலம் மாரஸ் ஒரு ஷாட் அடித்தார். ஆனால், அதை ரியல் மாட்ரிட் கோல்கீப்பர் திபோ கோர்ட்வா தடுத்துவிட்டார். அடுத்த 5 நிமிடங்கள் கழித்து மான்செஸ்டர் சிட்டி இன்னொரு முயற்சியும் மேற்கொண்டது. இம்முறை டி புருய்னா அடித்த ஷாட் கோர்ட்வாவின் கைகளுக்கே சென்றது.

அடுத்த 5 நிமிடங்களில் இரண்டு அணிகளும் மாறி மாறி முயற்சிகள் மேற்கொண்டன. முதலில் வினிசியஸ் ஜூனியர் ஒரு அற்புதமான வாய்ப்பை வெளியே அடுத்து கோலைத் தவறவிட்டார். அடுத்து பெர்னார்டோ சில்வாவின் முயற்சியை கோர்வா தடுத்துவிட, சில நிமிடங்களிலேயே இன்னொரு ஷாட் அடித்தார். ஆனால் இது போஸ்ட்டுக்கு வெளியே சென்றுவிட்டது. 39-வது நிமிடத்தில் ஃபில் ஃபோடன் யாரும் எதிர்பாராத வகையில் கோல் நோக்கி ஒரு ஷாட் அடித்தார். அதை மிகச் சிறப்பாகத் தடுத்தார் கோர்ட்வா. அதனால் முதல் பாதி 0-0 என முடிவுக்கு வந்தது.
இரண்டாவது பாதியின் தொடக்கத்திலேயே ரியல் மாட்ரிட்டுக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்தது. வலது விங்கில் இருந்து பெனால்டி ஏரியாவுக்குள் ஒரு கிராஸை அனுப்பினார் கர்வாகால். அந்த வாய்ப்பை வினிசியஸ் ஜூனியர் தவறவிட்டார். முதல் பாதியைப்போல் இரண்டாவது பாதியில் அதிக முயற்சிகள் மேற்கொள்ளப்படாவிட்டாலும், இரண்டு அணிகளும் கோலடிப்பதில் கவனம் செலுத்திக்கொண்டே இருந்தன. ரியல் மாட்ரிட் அணியால் பல வாய்ப்புகளை உருவாக்கிய போதிலும், கோல் நோக்கி அவர்களால் ஒரு ஷாட் கூட அடிக்க முடியவில்லை. உச்சபட்ச ஃபார்மில் இருக்கும் கரிம் பென்சிமா ஆட்டத்தில் பெரிய தாக்கத்தை உருவாக்கவில்லை.

இந்நிலையில், ரியல் மாட்ரிட்டின் பைனல் கனவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மான்செஸ்டர் சிட்டி கோலடித்தது. ஆட்டத்தின் 73-வது நிமிடத்தில், பெர்னார்டோ சில்வா கொடுத்த பாஸை வலது விங்கில் பெற்ற மாரஸ் வழக்கம்போல் தன் இடது கால் மூலம் ஒரு ஷாட் அடிக்க, அது கோர்ட்வாவை ஏமாற்றி கோலானது. அதனால், இரண்டு கோல்கள் முன்னிலை பெற்றது மான்செஸ்டர் சிட்டி. அதன்பிறகு இரண்டு அணிகளும் பல மாற்றங்கள் செய்தன. லூகா மோட்ரிச், கசிமிரோ போன்ற சீனியர்களை வெளியில் எடுத்துவிட்டு அசான்சியோ, எடுவார்டோ கமவிங்கா போன்ற இளம் வீரர்களைக் களமிறக்கினார் ஆன்சலோடி. கார்டியாலோவோ வழக்கம்போல் தன் நடுகளத்தை பலப்படுத்தினார். போட்டி எப்படியும் தங்களுக்கு சாதகமாகத்தான் முடியப்போகிறது என்ற நம்பிக்கையில் டி புருய்னா, மாரஸ் ஆகியோரை வெளியே எடுத்தார். ஆனால், அவர் எதிர்பார்த்தபடி போட்டி முடியவில்லை.
90-வது நிமிடம் வரை டார்கெட் நோக்கி ஒரு கோல் கூட அடித்திடாத ரியல் மாட்ரிட், சில நொடிகளில் ஆட்டத்தை மாற்றியது. 90-வது நிமிடத்தில் கமவிங்கா கொடுத்த கிராஸை கோல் போஸ்ட்டின் இடது புறம் இருந்த பென்சிமா, வாலி மூலம் பாக்சுக்குள் அனுப்பினார். அதை தன் அற்புதமான டச்சின் மூலம் கோலாக்கினார் இளம் விங்கர் ராட்ரிகோ. இந்த கோல் கொடுத்த உத்வேகத்தில் உடனடியாக மான்செஸ்டர் சிட்டி கோல் போஸ்ட்டை முற்றுகையிட்டது ரியல் மாட்ரிட். வலது பக்கமிருந்து டேனி கர்வாகால் பெனால்டி ஏரியாவுக்கு ஒரு கிராஸை அனுப்பினார். அதை ஹெட்டர் மூலம் கோலாக்கினார் ராட்ரிகோ. 2-1 ரியல் மாட்ரிட் இந்தப் போட்டியில் முன்னிலை பெற, அரையிறுதி ஆட்டம் 5-5 என சமநிலையை எட்டியது.
ஆட்டம் கூடுதல் நேரத்துக்குப் போக, அதன் மூன்றாவது நிமிடத்திலேயே ரியல் மாட்ரிட் அணிக்குப் பெனால்டி கிடைத்தது. கரிம் பென்சிமாவை பாக்சுக்குள் ரூபன் டியாஸ் தள்ளிவிட, அதன் மூலம் கிடைத்த பெனால்டியை கோலாக்கினார் பென்சிமா. 10 நிமிடம் முன்பு வரை கோல் நோக்கி ஒரு ஷாட் கூட அடித்திடாத ரியல் மாட்ரிட், இப்போது 3 கோல்கள் அடித்திருந்தது. மூன்றாவது கோலை அடித்திருந்த பென்சிமா தன் முழு வேகத்தோடு ஆட முடியாமல் தடுமாறினார். அதனால், அவருக்குப் பதில் டேனி சபயோஸ் களமிறக்கப்பட்டார். அதன்பிறகு, ஆட்டத்தை சமனாக்குவதற்குத் தேவையான கோலை அடிக்க மான்செஸ்டர் சிட்டி பெரும் முயற்சி எடுத்தது. கூடுதல் நேரத்தின் முதல் பாதி முடியும் நேரத்தில் ஒரு அற்புதமான கிராஸை அனுப்பினார் கன்சலோ. அதை மிகச் சிறப்பாக கோர்ட்வோ தடுத்துவிட, ரீபௌண்ட் ஃபெர்னாண்டினியோவின் கால்களுக்குச் சென்றது. ஆனால், அவரால் அதை கோலாக்க முடியவில்லை.

கூடுதல் நேரத்தின் இரண்டாம் பாதியி மான்செஸ்டர் சிட்டி தொடர்ந்து பல முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், அவர்களால் கோலடிக்க முடியவில்லை. இறுதியில் இந்தப் போட்டியை 3-1 என ரியல் மாட்ரிட் வென்றது. முதல் சுற்றில் அந்த அணி 3-4 என தோற்றிருந்தாலும், ஒட்டுமொத்தமாக 6-5 என இந்த அரையிறுதியை வென்றது. இதன்மூலம், 14-வது சாம்பியன்ஸ் லீக் கோப்பையை நோக்கி பயணிக்கிறது ரியல் மாட்ரிட்.