பிரான்ஸின் லீக் 1 கால்பந்து தொடர், முழுமையாக முடியாத நிலையில் நிறுத்தப்பட்டுவிட்டது. இதற்கு மேல் போட்டிகள் நடத்தமுடியாத சூழல் ஏற்பட்டுவிட்டதால் `Points Per Game’ அடிப்படையில் பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் அணி சாம்பியனாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் ஏழாவது முறையாக பிரான்ஸின் சாம்பியனாக மகுடம் சூடியிருக்கிறது பி.எஸ்.ஜி.
கொரோனா வைரஸின் தாக்கம் ஐரோப்பாவில் அதிகமாகி இருக்கும் நிலையில், அனைத்து கால்பந்து சங்கங்களுமே சீசனை எப்படி முடிப்பது என்று புரியாமல் தவித்துக்கொண்டிருக்கின்றன. சுமார் 25,000 பேர் இறந்திருக்கும் நிலையில், செப்டம்பர் வரை எந்த விளையாட்டுப் போட்டிகளும் நாட்டில் நடக்கக் கூடாது என்று கடந்த வாரம் அறிவித்தார் பிரான்ஸ் பிரதமர் எடுவாட்ரோ ஃபிலிப்பே. ஆகஸ்ட் மாதம் வழக்கமாக புதிய சீசனே தொடங்கிவிடும். அதனால், செப்டம்பர் வரை இந்த சீசனை முடிக்காமல் வைத்திருக்க வாய்ப்பில்லை. இதைக் கருத்தில்கொண்டு சீசனை முடித்துக்கொண்டிருக்கிறது பிரான்ஸ் கால்பந்து கூட்டமைப்பு.

கொரோனாவால் நிறுத்தப்படும்போது ஒவ்வோர் அணியும் 27 அல்லது 28 போட்டிகளில்தான் விளையாடியிருந்தன. அப்படிப்பட்ட நிலையில் சீசன் டேபிளை முடிவு செய்ய Points Per Game முறையைக் கடைப்பிடித்தது பிரான்ஸ் கால்பந்து கூட்டமைப்பு. அதாவது ஓர் அணி சராசரியாக ஓர் ஆட்டத்துக்கு எத்தனை புள்ளிகள் எடுத்திருக்கிறதோ, அதன் அடிப்படையில் புள்ளிப் பட்டியல் தயார் செய்யப்பட்டது. ஏற்கெனவே இரண்டாம் இடத்திலிருந்து மர்சேவைவிட 12 புள்ளிகள் முன்னிலையில் இருந்த பி.எஸ்.ஜி, ஒரு ஆட்டத்துக்கு சராசரியாக 2.52 புள்ளிகள் எடுத்திருக்கிறது. ஆட்டத்துக்கு சராசரியாக 2 புள்ளிகள் எடுத்திருந்த மர்சே, இரண்டாம் இடம் பிடித்தது. முதல் இரண்டு இடங்களைப் பிடித்த இந்த இரு அணிகளும் அடுத்த சாம்பியன்ஸ் லீக் சீசனுக்கு நேரடியாகத் தகுதி பெற்றன. 1.79 சராசரி புள்ளிகள் எடுத்திருந்த ரெனஸ் அணி, மூன்றாம் இடம் பிடித்தது. இதன்மூலம் சாம்பியன்ஸ் லீக் தகுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றது. 1.75 சராசரி புள்ளிகளுடன் நான்காம் இடம் பிடித்த லீல், ஐரோப்பா லீகுக்குத் தகுதி பெற்றுள்ளது.
ஏற்கெனவே இரண்டாம் இடத்திலிருந்து மர்சேவைவிட 12 புள்ளிகள் முன்னிலையில் இருந்த பி.எஸ்.ஜி, ஒரு ஆட்டத்துக்கு சராசரியாக 2.52 புள்ளிகள் எடுத்திருக்கிறது.
வழக்கமாக, புள்ளிப்பட்டியலில் கடைசி 2 இடங்கள் பிடிக்கும் அணிகள், பிரான்ஸ் கால்பந்தின் இரண்டாவது டிவிஷனான 2-வது லீகிற்கு relegate செய்யப்படும். அதற்குப் பதிலாக லீக் 2-வில் முதல் இரண்டு இடம் பிடிக்கும் அணிகள் நேரடியாக முதல் டிவிஷனுக்குப் ப்ரமோட் செய்யப்படும். லீக் 1 தொடரில் 18-வது இடம் பிடிக்கும் அணி, relegation பிளே ஆப் சுற்றில் லீக் 2-வில் மூன்றாம் இடம் பிடித்த அணியோடு மோதும். அதில் வெற்றி பெறும் அணி லீக் 1 தொடரிலும், தோற்கும் அணி லீக் 2 தொடரிலும் விளையாடும். இம்முறை, இந்தப் போட்டி ரத்து செய்யப்பட்டுவிட்டது. நேரடி ப்ரமோஷன் மட்டும் முடிவு செய்யப்பட்டு, லீக் 1 தொடரில் 18-ம் இடம் பிடித்த நீம் அணி முதல் டிவிஷனிலேயே தொடரும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. லீக் 1-ல் கடைசி இரண்டு இடங்கள் பிடித்த ஏமியன், தொலோசே அணிகள் அடுத்த சீசனில் இரண்டாவது டிவிஷனில் விளையாடும். இரண்டாவது டிவிஷனில் முதல் இரு இடங்கள் பிடித்த லோரியன்ட், லென்ஸ் அணிகள் ப்ரமோட் ஆகியிருக்கின்றன.

பார்ப்பதற்கு இது சுமுகமாக எடுக்கப்பட்ட முடிவைப்போல் தெரிகிறது. ஆனால், பல அணிகள் இந்த முடிவுக்கு எதிராகவே இருக்கின்றன.
பிரான்ஸின் முன்னணி அணியான ஒலிம்பிக் லயான், போட்டிகள் தடைப்படும்போது 40 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் இருந்தது. இந்த சாம்பியன்ஸ் லீக் சீசனில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வரும் அந்த அணி, காலிறுதிக்கு முந்தைய சுற்றில் யுவன்டஸ் அணியை 1-0 என விழ்த்தி அசத்தியது. சாம்பியன்ஸ் லீக் காலிறுதிக்கு முன்னேறும் கனவோடு அந்த அணி இருந்த நிலையில், அடுத்த ஆண்டு யூரோப்பா லீகில் கூட ஆடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சராசரியாக ஆட்டத்துக்கு 1.43 புள்ளிகள் எடுத்திருக்கும் லயான், கடைசியாக வெளியிடப்பட்ட புள்ளிப் பட்டியலிலும் ஏழாவது இடமே பிடித்துள்ளது. மூன்றாம் இடம் பிடித்த ரெனஸ் அணிக்கும், இந்த அணிக்கும் 10 புள்ளிகள்தான் வித்தியாசம் இருந்தது. கையில் 10 போட்டிகள் மீதமிருந்த நிலையில், ஒருவேளை லயான் அணி அந்த இடைவெளியைக் குறைத்திருக்கலாம்.
இதுபற்றிப் பேசிய லயான் அணியின் தலைவர் ஜீன் மைக்கெல் அலாஸ், ``இது சரியான முடிவு இல்லை. ஆகஸ்ட் மாதம் பிளே ஆஃப் வைத்து முடிவு செய்திருக்கவேண்டும். ஐரோப்பாவில் பங்கேற்க முடியாதது பல மில்லியன் யூரோக்கள் நஷ்டம் ஏற்படுத்தும். அதை நாங்கள் கேட்கத்தான் போகிறோம்” என்றார். அது ஒரு வகையில் முக்கியமான விஷயம்தான். தொடர்ந்து ஐரோப்பிய தொடர்களில் பங்கேற்கும் அணியின் பொருளாதாரம், இப்படியான சூழ்நிலையில் பாதிக்கக் கூடும். அதேசமயம் ``நீஸ் (ஐந்தாம் இடம்) போன்ற சில அணிகளுக்கு இந்த முடிவு சாதகமாக அமைந்திருப்பதாக” குற்றம் சாட்டியிருக்கிறார் அவர். ஏனெனில், நீஸ் அணி, லயானைவிட அதிக ஹோம் கேம்களில் ஆடியிருக்கிறது. கால்பந்தைப் பொறுத்தவரை எந்த அணியுமே ஹோம் ஆட்டங்களில் சிறப்பாகச் செயல்பட்டு அதிக புள்ளிகள் சேர்க்கும். இந்த அடிப்படையில் நீஸ் அணியைவிட லயான் அணிக்குப் பின்னடைவுதான். அதேசமயம், நீஸ் இந்த சீசனில் இதுவரை 1 முறைதான் பி.எஸ்.ஜி-யுடன் மோதியிருக்கிறது. லயான் இரண்டு முறை மோதியிருக்கிறது. அப்படிப் பார்க்கும்போது நீஸ் அணிக்கு 1 தோல்வி குறைவாகவும், லயானுக்கு 1 தோல்வி அதிகமாகவும் ஏற்பட்டுள்ளது. இப்படிப் பல விஷயங்களால் இது சரியான முடிவாக இல்லை என்று சொல்லியிருக்கிறார் அலாஸ்.
இது சரியான முடிவு இல்லை. ஆகஸ்ட் மாதம் பிளே ஆஃப் வைத்து முடிவு செய்திருக்க வேண்டும். ஐரோப்பாவில் பங்கேற்க முடியாதது பல மில்லியன் யூரோக்கள் நஷ்டம் ஏற்படுத்தும். அதை நாங்கள் கேட்கத்தான் போகிறோம்லயான் அணியின் தலைவர் ஜீன் மைக்கெல் அலாஸ்
பல நாடுகளில் கால்பந்து சீசன்கள் இப்படி முடிவுக்கு வந்திருக்கும் நிலையில், லா லிகா, பிரீமியர் லீக் போன்ற தொடர்கள் எந்த மாதிரியான முடிவுகள் எடுக்கும் என்பதை கால்பந்து உலகம் ஆவலாக எதிர்பார்த்திருக்கிறது. லீக் 1 எடுத்திருக்கும் முடிவையே அந்த நாட்டு கால்பந்து அமைப்புகள் எடுக்கும் நிலையில், லயானைப் போல் பல அணிகள் சிக்கலுக்கு உண்டாகும், பிரச்னைகளை எழுப்பும். அனைத்தையும் சமாளித்தாகவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.