எல்லா அணிகளும் விறுவிறுப்பான அட்டாக் ஆட்டத்தில் அதிக கவனம் செலுத்தி, டிபென்ஸில் கோட்டைவிடுவது தெரிகிறது. அதிலும் முக்கியமாக ஸ்பர்ஸ், எவர்டன், மான்செஸ்டர் யுனைட்டெட், செல்சீ அணிகள் தடுப்பு ஆட்டத்தை வலுப்படுத்தாமல் டேஞ்சர் ஜோனில் நிற்கின்றன.

இரண்டு கோல்கள் முன்னிலையில் இருந்து மீண்டு, மேட்சை டிரா செய்து, ஒரு பாயின்ட்டை பெற்றுள்ளது அர்செனல். கைல் வாக்கர் பீட்டர்ஸுக்குப் பதிலாக வெர்ட்டோங்கனையும், இத்தனை நாள்கள் பெஞ்சில் வைத்திருந்த கிரிஸ்டியன் எரிக்சனையும் இறக்கிவிட்டது ஸ்பர்ஸ். அர்செனல் அணி நிகோலஸ் பெபே, அபாமயாங், லகாசெட் என மூன்று ஃபார்வர்டு பிளேயர்களையும் முதல் முறையாக சேர்த்துக் களமிறக்கியது. ஆட்டம் ஆரம்பித்த 10-வது நிமிடத்திலேயே பந்தை வாங்கிக்கொண்டு ஹியூங் மின் சன் பொறுமையாகக் காத்திருந்து ஓட, எரிக் லெமேலா முன்னேறி பந்தை வாங்கி அடிக்க, கோல் கீப்பர் கையில் பட்டு டிஃப்லெக்ட் ஆகி விழுந்த பந்தை கூலாக கோலாக்கினார், எரிக்சன்.
40-வது நிமிடத்தில், பாக்ஸுக்குள் பந்தைத் தட்டாமல், பந்தை வைத்திருந்த பிளேயரைத் தட்டி பெனால்ட்டி கொடுத்தார், கிரானித் ஷாகா. ஸ்பர்ஸ்க்கு மீண்டும் ஒரு கோல். ஆனால், முதல் பாதி முடியும் முன்பே மீண்டது அர்செனல். இஞ்சுரி டைமில் பந்தைத் தடுத்து, அப்படியே ஒரு பாஸ் கொடுத்தார், குண்டூசி. அந்தப் பந்து, பெப்பேவின் பாஸ் மூலம் லாகசெட்டுக்குப் போக, டிஃபெண்டர்களின் ப்ரெஷரைத் தாக்குப்பிடித்து, பந்தை இரண்டு முறை தட்டி, கால்களில் நிறுத்தி பொறுமையாக ஒரு கோல்! அர்செனல் பீரங்கி மீண்டும் உயிர்பெற்றது.

71-வது நிமிடம். 8 பிளேயர்களைத் தாண்டி கோல் பாக்ஸ்க்குள் குண்டூசி கொடுத்த லாங் பாஸை ஒரே டச்சில் கோலாக்கினார், அபாமயாங். ஆட்டத்தை டிரா செய்து, ஒரு பாயின்ட்டை தூக்கிச் சென்றது அர்செனல். அர்செனலின் டிஃபன்ஸில் இருக்கும் பெரிய ஓட்டையில் கோல் போஸ்ட் தெளிவாகத் தெரிகிறது. சீக்கிரம் ஓட்டையை அடைக்கவில்லை என்றால் அர்செனல் டாப் 4 இடங்களுக்குள் வருவது கஷ்டம்.
லிவர்பூல்-பர்ன்லி விளையாடிய போட்டியில், ஆரம்பம் முதல் லிவர்பூலின் ஆதிக்கம் தென்பட்டது. லிவர்பூலின் டிஃபன்ஸ் இந்த ஆண்டு ப்ரீமியர் லீகை ஜெயிக்க உதவும். ட்ரென்ட் அலெக்சாண்டர் அர்னால்டு அடித்த ஷாட், பர்ன்லி வீரர் வுட்ஸ் மீது பட்டு, ஒரு பெரிய வானவில்போல சென்று கோல் போஸ்ட்டுக்குள் ஸ்மூத்தாக விழுந்தது. வீடியோ கேமில்கூட சுலபமாகச் செய்ய முடியாது. ராபர்ட் ஃபிர்மினோவின் கோல், அவருக்கு 'பிரீமியர் லீகில் 50 கோல் அடித்த முதல் பிரேசில் வீரர்' என்ற பெயர் வாங்கிக்கொடுத்துள்ளது.

கிரிஸ்டல் பேலஸ் அடித்த ஒரு கோலை சமன் செய்ய, போராடிப் போராடி கடைசியில் ஒரு கோல் அடித்தது ஆஸ்டன் வில்லா. ஆனால், கீழே விழுந்ததுபோல ஏமாற்றியதை VAR-ல் பார்த்துவிட்டு அடித்த கோலை கேன்சல் செய்தது மட்டுமல்ல, விழுந்து புரண்ட பிளேயருக்கு யெல்லோ கார்டும் கொடுத்துவிட்டார், ரெஃபிரி. நெய்மர்கள் ஜாக்கிரதை!
மான்செஸ்டர் யுனைட்டெட், சவுதாம்ப்டனுடன் நடைபெற்ற போட்டியில், முதல் 10 நிமிடங்களிலேயே கோல் அடித்தது. ஆனால், சவுதாம்ப்டன் வீரர் யானிட் வெஸ்டர்கார்டு ஒரு ஹெட்டர் அடித்து, அந்த கோலை சமன்செய்துவிட்டார். கடைசி 20 நிமிடத்தில் எதிரணியின் 10 பிளேயர்களே இருந்தபோதும், யுனைட்டெட் அணியால் கோல் அடிக்க முடியவில்லை. 21 ஷாட்ஸ் அடித்தும் ஒன்றும் எடுபடவில்லை. இதே வேளை, இன்னொரு மான்செஸ்டர் அணியான சிட்டி, எந்தப் பிரச்னையும் இல்லாமல் 4-0 என பிரிட்டன் அண்ட் ஹோவ் ஆல்பியானைத் தோற்கடித்துள்ளது. சிறப்பான ஆட்டக்காரர்களான மான்செஸ்டர் சிட்டிக்கு முதல் இடம் மட்டும்தான் மிஸ்ஸிங்.

டாமி ஆப்ரஹாமின் சுறுசுறுப்பான ஆட்டத்தால் செல்சீ ஜெயிக்கும் நிலையில் இருக்க. கர்ட் ஜூமாவின் ஓன்-கோல் செல்ஸியின் வெற்றியைத் தள்ளிப்போட்டுவிட்டது. முன்னொரு காலத்தில், ஐரோப்பாவின் பெஸ்ட் டிஃபன்சிவ் அணி எனப் பெயர்பெற்ற செல்சீ, கவனக்குறைவால் இரண்டு கோல்களை கோட்டைவிட்டுள்ளது. வரப்போகும் ஆட்டங்களில் ராவுல் ஜிம்னெஸ், முகமது சாலா போன்ற வீரர்களை செல்சீயின் தடுப்புச்சுவர் சமாளிப்பது சந்தேகம்தான்!