Published:Updated:

தொடரும் பெர்னார்டோ சில்வா மாஸ்டர் கிளாஸ். முதலிடத்துக்கு முன்னேறிய மான்செஸ்டர் சிட்டி!

Bernardo Silva
News
Bernardo Silva ( AP )

டி புருய்னா காயத்தால் தொடர்ந்து ஆடாமல் இருக்கும் நிலையில், அவரின் இடத்தை சிறப்பாக நிரப்பிக்கொண்டிருக்கிறார் பெர்னார்டோ சில்வா. கடைசியாக விளையாடிய 8 பிரீமியர் லீக் போட்டிகளில் 6 கோல்கள், 1 அசிஸ்ட் என பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறார் அவர்.

பிரீமியர் லீக் பட்டத்துக்கான ரேஸில் முதலிடத்துக்கு முன்னேறியது மான்செஸ்டர் சிட்டி. வாட்ஃபோர்ட் அணிக்கெதிரான போட்டியில் 3-1 என வெற்றி பெற்ற பெப் கார்டியோலாவின் அணி, லிவர்பூலைவிட 1 புள்ளியும், செல்சீயை விட 2 புள்ளிகளும் அதிகம் பெற்றிருக்கிறது. இந்த வாரம் வரை முதலிடத்திலிருந்த செல்சீ, வெஸ்ட் ஹாம் யுனைடட் அணிக்கெதிராக தோற்றதால் மூன்றாவது இடத்துக்குப் பின்தங்கியது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

தடுமாறும் செல்சீ

இந்த சீசன் தொடங்கியதிலிருந்தே செல்சீ, மான்செஸ்டர் சிட்டி, லிவர்பூல் என மூன்று அணிகளும் முதலிடத்துக்காக கடுமையாகப் போராடிக்கொண்டிருக்கின்றன. இந்த வாரம் வரை தாமஸ் டுசெலின் செல்சீ அணியே முதலிடத்திலிருந்தது. ஆனால், இந்த வாரம் முக்கியமான லண்டன் டெர்பி போட்டியில், 3-2 என வெஸ்ட் ஹாம் அணிக்கெதிராகத் தோல்வியடைந்தது. தொடர்ந்து காயத்தால் அவதிப்பட்டுவரும் அந்த அணி, கடந்த சில வாரங்களாக புள்ளிகளை இழந்துகொண்டே இருக்கிறது.

நட்சத்திர நடுகள வீரர்களான என்கோலோ கான்டே, கோவசிச் இருவரும் காயத்தால் அவதிப்பட்டுவருகின்றனர். டிஃபண்டர் சில்வெல் இந்த சீசனையே தவறவிடும் நிலையில் இருக்கிறார். லுகாகு, புலிசிக் ஆகியோர் இப்போதுதான் காயத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டுவருகின்றனர். ஜார்ஜினியோவும் சில பிரச்னைகளுடனேயே விளையாடிக்கொண்டிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்படி பல வீரர்களை இழந்து கஷ்டப்படும் செல்சீ, கடந்த மாதம் பர்ன்லி அணிக்கெதிராக சொந்த கிரவுண்டில் நடந்த போட்டியை டிரா செய்தது. மான்செஸ்டர் யுனைடட் அணிக்கெதிராகவும் ஒரு தவறு செய்து கோல் வாங்கி வெற்றியை இழந்தது. வாட்ஃபோர்ட் அணிக்கெதிராகக் கூட போராடியே 2-1 என வெற்றி பெற்றது. கடந்த சில வாரங்களாக ஓரிருவர் செய்யும் தவறுகளாலேயே கோல் வாங்கிக்கொண்டிருக்கிறது. அதேபோல், இந்த வாரமும் ஒரு சில தவறுகள் செய்து தோற்றிருக்கிறது.

West Ham United vs Chelsea
West Ham United vs Chelsea
AP

வெஸ்ட் ஹாம் நடுகள வீரர் ஜெராட் போவன் அட்டகாசமாக அடி செல்சீயின் டிஃபன்ஸுக்கு பெரும் தொல்லை கொடுத்தார். முதல் பெனால்டியை வென்று கொடுத்தவர், இரண்டாவது கோலை அடித்து ஆட்டத்தை சமன் செய்தார். கடைசி தருணத்தில், டிஃபண்டர் ஆர்தர் மசுவாகு அடித்த ஒரு அட்டகாச கோலால், முன்னிலை பெற்றது அந்த அணி. இந்த வெற்றியின் மூலம் நான்காவது இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளது டேவிட் மாய்ஸின் அணி.

போராடி வென்ற லிவர்பூல்

செல்சீ தடுமாறிய சில மணி நேரங்கள் கழித்து லிவர்பூலும் வெற்றிக்காக பெரிதாக தடுமாறவேண்டியிருந்தது. வோல்வர்ஹாம்ப்டன் வாண்டரர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் லிவர்பூலின் அதிரடி அட்டாகிங் கூட்டணியால் கோலடிக்க முடியவில்லை. முகமது சலா, சாடியோ மனே, டியாகோ ஜோடா கூட்டணியை சிறப்பாகக் கையாண்டது வோல்வ்ஸின் டிஃபன்ஸ். முதலிடத்துக்கு முன்னேற மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்தபோது அதைத் தவறவிட கிளாப் விரும்பவில்லை. தன் பிரம்மாஸ்திரமான டிவாக் ஒரிஜியை களமிறக்கினார்.

Divock Origi
Divock Origi
AP

அவர் களமிறங்கினால் கோல் வந்துதானே தீரவேண்டும். கூடுதல் நேரத்தின் நான்காவது நிமிடத்தில் சலா கொடுத்த பாஸை சிறப்பாக கன்ட்ரோல் செய்து கோலாக்கினார் ஒரிஜி. மொத்தம் 17 ஷாட்கள் அடித்தது லிவர்பூல். அதில் 5 ஷாட்கள் கோல் நோக்கிப் பாய்ந்தது. வோல்வ்ஸ் டிஃபண்டர்களும், கோல்கீப்பர் ஜோஸே சாவும் சிறப்பாக செயல்பட்டு அதைத் தடுத்தனர். ஆனால், ஒரிஜியின் அந்த ஒரு ஷாட், 94 நிமிட போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது. பத்தாவது வெற்றி பெற்றிருக்கும் லிவர்பூல், 34 புள்ளிகள் பெற்றிருக்கிறது.

தொடரும் பெர்னார்டோ சில்வா ராஜ்ஜியம்

லிவர்பூலின் முன்னிலை என்னவோ சில நிமிடங்கள் மட்டுமே நீடித்தது. இரவு நடந்த போட்டியில் வாட்ஃபோர்டை வீழ்த்தி முதலிடத்துக்கு முன்னேறியது மான்செஸ்டர் சிட்டி. டி புருய்ன் காயத்தால் தொடர்ந்து ஆடாமல் இருக்கும் நிலையில், அவரின் இடத்தை சிறப்பாக நிரப்பிக்கொண்டிருக்கிறார் பெர்னார்டோ சில்வா.

Bernardo Silva
Bernardo Silva
AP

2019-19 சீசனில் அந்த கிளப்பின் சிறந்த வீரருக்கான விருதை வென்றவருக்கு கடந்த ஆண்டு அதிக நிமிடங்கள் கிடைக்கவில்லை. இந்த சீசனுக்கு முன்பு அவர் வேறு அணிக்குச் சென்றவிடுவார் என்றும் பேசப்பட்டது. ஆனால், இந்த சீசன் தனக்கான வாய்ப்பை கச்சிதமாகப் பற்றிக்கொண்டார். அதோடு, சிட்டியின் மிகமுக்கிய வீரராகவும் உருவெடுத்திருக்கிறார். கடைசியாக விளையாடிய 8 பிரீமியர் லீக் போட்டிகளில் 6 கோல்கள், 1 அசிஸ்ட் என பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறார் அவர்.

வாட்ஃபோர்ட் அணியின் டிஃபன்ஸையும் ஒரு கை பார்த்த பெர்னார்டோ சில்வா இரண்டு கோல்கள் அடித்து அசத்தினார். ஸ்டெர்லிங் தன் பங்கிற்கு ஒரு கோல் அடிக்க 3-1 என வெற்றி பெற்றது நடப்பு சாம்பியன் சிட்டி. 35 புள்ளிகளுடன் இப்போது முதலிடத்தில் இருக்கிறது சிட்டி.

மீண்டு எழுகிறது டாட்டன்ஹாம்

தொடர் தோல்விகளால் பயிற்சியாளர் நூனோ எஸ்பெரிடோ சான்டோவை வெளியேற்றி, ஆன்டோனியோ கான்டேவை பணியமர்த்தியது ஸ்பர்ஸ். தொடக்கத்தில் அவரும் வெற்றிக்குப் போராடவேண்டியிருந்தது. ஆனால், இப்போது கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது. பிரீமியர் லீகில் தொடர்ந்து மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்து, ஐந்தாவது இடத்துக்குக் குதித்திருக்கிறது.

Tottenham Hotspurs vs Norwich City
Tottenham Hotspurs vs Norwich City
AP

நேற்று நடந்த நார்விச் அணிக்கெதிரான போட்டியை 3-0 என வென்றது ஸ்பர்ஸ். லூகாஸ் மௌரா, டேவின்சன் சான்செஸ், ஹியூங் மின் சன் மூவரும் கோலடித்தனர். மற்ற அணிகள் 15 போட்டிகள் விளையாடியிருக்கும் நிலையில், டாட்டன்ஹாம் 14 போட்டிகளில் மட்டுமே விளையாடியிருக்கிறது. பர்ன்லி அணியுடனான போட்டி பனியால் பாதிக்கப்பட்டதால் இன்னும் ஒரு போட்டி கூடுதலாக ஆடவேண்டியிருக்கிறது. இப்போது நான்காவது இடத்திலிருக்கும் வெஸ்ட் ஹாம் அணி, ஸ்பர்ஸை விட 2 புள்ளிகள் தான் அதிகம் பெற்றிருக்கிறது. அதனால், சாம்பியன்ஸ் லீக் ஸ்பாட்டுக்குள் வர அந்த அணிக்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.