Published:Updated:

கிறிஸ்டியானோ ரொனால்டோ இல்லாத கால்பந்து உலகக் கோப்பை? சிக்கலில் போர்ச்சுகல்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
Cristiano Ronaldo | கிறிஸ்டியானோ ரொனால்டோ
Cristiano Ronaldo | கிறிஸ்டியானோ ரொனால்டோ ( AP )

2022-ம் ஆண்டு கத்தாரில் நடக்கும் கால்பந்து உலகக் கோப்பைக்குத் தகுதி பெறும் நேரடி வாய்ப்பைத் தவறவிட்டிருக்கிறது போர்ச்சுகல். அதனால், கிறிஸ்டியானோ ரொனால்டோ அந்த உலகக் கோப்பையில் விளையாடுவது கேள்விக்குறியாகியிருக்கிறது.

கத்தாரில் அடுத்த வருடம் நடக்கவுள்ள ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடந்துகொண்டிருக்கின்றன. அதற்குத் தகுதி பெறுவதற்கு போர்ச்சுக்கல் அணிக்கு வெற்றி அல்லது டிராவே போதுமானதாக இருந்தது. ஆனால் எதிர்பாராத வகையில் கடைசி குரூப் போட்டியில் செர்பியாவுக்கு எதிராக தோல்வியடைந்ததால், உலகக் கோப்பையில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால், போர்ச்சுக்கல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியனோ ரொனால்டோ தன்னுடைய இறுதி உலகக் கோப்பையில் விளையாடுவது கேள்விக்குறியாகியுள்ளது.
Cristiano Ronaldo | கிறிஸ்டியானோ ரொனால்டோ
Cristiano Ronaldo | கிறிஸ்டியானோ ரொனால்டோ
Armando Franca

போர்ச்சுக்கல் தலைநகர் லிஸ்பன் நகரில் நடைபெற்ற உலகக் கோப்பை தகுதி சுற்றின் கடைசி போட்டியில் போர்ச்சுக்கல் செர்பியாவை எதிர்கொண்டது. முக்கியமான இந்தப் போட்டி தொடங்கிய 2வது நிமிடத்திலேயே போர்ச்சுகல் வீரர் ரெனடோ சான்சஸ் கோல் அடித்து 1-0 என முன்னிலை பெற செய்தார். மான்செஸ்டர் சிட்டி வீரர் பெர்னார்டோ சில்வா கொடுத்த பாஸை அட்டகாசமாக கோலாக்கினார் சான்சஸ்.

ஆனால், போர்ச்சுகல் ரசிகர்களின் கொண்டாட்டம் அதிக நேரம் நீளவில்லை. போட்டியின் 33வது நிமிடத்தில் செர்பிய வீரர் டுசன் டாடிக் கோல் அடித்து 1-1 என சமன் செய்தார். எளிதாகத் தடுத்திருக்கவேண்டிய பந்தைக் கோட்டைவிட்டார் போர்ச்சுகல் கோல் கீப்பர் ருய் பாட்ரிசியோ. இருந்தாலும், கடைசி வரை அந்த ஸ்கோரைத் தக்கவைத்திருந்தால் ஒரு பிரச்னையும் இருந்திருக்காது. ஆனால்...

Cristiano Ronaldo | கிறிஸ்டியானோ ரொனால்டோ
Cristiano Ronaldo | கிறிஸ்டியானோ ரொனால்டோ
Armando Franca

போட்டியின் இரண்டாம் பாதியில் மாற்று வீரராக களமிறக்கப்பட்ட செர்பியாவின் அலெக்ஸாண்டர் மிட்ரோவிச் போட்டி முடியும் தறுவாயில் 90வது நிமிடத்தில் ஹெட்டர் மூலம் கோல் அடித்து போர்ச்சுக்கல் அணிக்கு அதிர்ச்சி அளித்தார். முதல் கோலை அடித்த டாடிச் அட்டகாசமாக கிராஸ் செய்ய, அதை அற்புதமாக ஃபினிஷ் செய்தார் மிட்ரோவிச். அவர் கோல் அடித்தவுடன் செர்பிய வீரர்கள் மைதானத்தில் தாறுமாறாக ஓடி கொண்டாடினார்கள். போட்டியின் முடிவில் செர்பியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் போர்ச்சுக்கல் அணியை வீழ்த்தி 2022 கத்தார் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றது. தோல்வியடைந்த போர்ச்சுக்கல் அணி 2022 உலகக் கோப்பைக்கு தகுதி பெற வேண்டும் என்றால், அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறும் பிளே ஆப் சுற்றில் வெற்றி பெற வேண்டிய கடினமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முதல் கோல் அடித்தவுடன் உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றுவிட்டோம் என்று எண்ணிக் கொண்டிருந்த 65,000-க்கும் மேற்பட்ட போர்ச்சுக்கல் ரசிகர்கள், தங்கள் அணி போட்டியின் இறுதி நிமிடத்தில் தோல்வியடைந்ததை யாராலும் நம்ப முடியவில்லை. முக்கியமான போட்டிகளில் இறுதி நேரத்தில் கோல் அடித்து அணியை காப்பாற்றும் நட்சத்திர வீரர் கிறிஸ்டியனோ ரொனால்டோவால் கூட ஒன்றும் செய்ய இயலவில்லை. போட்டியின் முதல் பாதியில் ஒரு ப்ரீ கிக் அடித்தார். அவ்வளவே. மற்றப்படி மான்செஸ்டர் யுனைடெட் கிளப்புக்கு கடந்த சில போட்டிகளாகத் தொடரும் மோசமான ஆட்டம் இந்த போட்டியிலும் தொடர்ந்தது.

போட்டி முடிந்து விசில் அடித்தவுடன் கண்ணீர் விட்டு மைதானத்தில் ஏமாற்றத்துடன் நின்றிருந்தார் கிறிஸ்டியனோ. போர்ச்சுக்கல் அணியின் பயிற்சியாளர் பெர்னாண்டோ சான்டோஸ் கைகுலுக்க வந்தபோது கடுமையாக கடிந்து கொண்டார். 36 வயதான கிறிஸ்டியனோ ரொனால்டோ இதுவரை 4 உலகக் கோப்பை தொடர்களில் பங்கேற்றுள்ளார்.
Cristiano Ronaldo | கிறிஸ்டியானோ ரொனால்டோ
Cristiano Ronaldo | கிறிஸ்டியானோ ரொனால்டோ
AP

அவர் தன்னுடைய இறுதி உலகக் கோப்பையில் 5வது முறையாக பங்கேற்கும் வாய்ப்பு தற்போது சிக்கலாகியுள்ளது. இது கிறிஸ்டியனோ ரொனால்டோ ரசிகர்கள், போர்ச்சுக்கல் ரசிகர்களுக்கு மத்தியில் மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த கால்பந்து ரசிகர்களுக்கு இடையேயும் கலக்கத்தை உண்டாகியுள்ளது.

உலகின் தலைசிறந்த வீரரான கிறிஸ்டியனோ ரொனால்டோ அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறும் உலகக் கோப்பை பிளே ஆப் சுற்றில் தகுதி பெற்று 2022 கத்தார் உலகக் கோப்பையில் பங்கேற்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த கால்பந்து ரசிகர்களின் விருப்பம். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு