Published:Updated:

Champions League: லிவர்பூலைப் பந்தாடிய நெபோலி; தோல்விக்குப் பிறகு பயிற்சியாளரை இழந்த செல்சீ!

Champions League

பிரீமியர் லீக் தொடரில் லிவர்பூல் தடுமாறிக்கொண்டிருப்பதால் இந்தப் போட்டி பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இறுதியில் 4-1 என படுதோல்வி அடைந்தது லிவர்பூல்.

Champions League: லிவர்பூலைப் பந்தாடிய நெபோலி; தோல்விக்குப் பிறகு பயிற்சியாளரை இழந்த செல்சீ!

பிரீமியர் லீக் தொடரில் லிவர்பூல் தடுமாறிக்கொண்டிருப்பதால் இந்தப் போட்டி பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இறுதியில் 4-1 என படுதோல்வி அடைந்தது லிவர்பூல்.

Published:Updated:
Champions League
2022-23 சாம்பியன்ஸ் லீக் சீசன் இந்த வாரம் தொடங்கியிருக்கிறது. வழக்கத்தைப் போல் சில அதிர்ச்சிகரமான முடிவுகளை முதல் சுற்றிலேயே கொடுக்கத் தொடங்கியிருக்கிறது சாம்பியன்ஸ் லீக்.

யாரும் எதிர்பாராத வகையில் லிவர்பூல் அணிக்கு 4-1 என மிகப்பெரிய தோல்வியைப் பரிசளித்தது நெபோலி. அதை விடப் பெரிய அதிர்ச்சியாக முன்னாள் சாம்பியன் செல்சீயை வீழ்த்தியது குரோஷியாவின் டைனமோ ஜாக்ரப் அணி. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் vs யுவன்டஸ் போட்டியில், 2-1 என வெற்றி பெற்றது பிஎஸ்ஜி. செவ்வாய்க் கிழமை நடந்த போட்டியில் செல்சீயை தங்கள் சொந்த மண்ணில் எதிர்கொண்டது டைனமோ ஜாக்ரப். செல்சீ அணியின் புதுவரவான ஸ்டிரைக்கர் பியர் எமரிக் அபாமெயாங் இந்தப் போட்டியில் அறிமுகம் ஆனதால் கோல்கள் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்பைப் போலவே நல்ல முறையில்தான் போட்டியைத் தொடங்கியது செல்சீ. ஆனால் வழக்கம்போல் அவர்களால் வாய்ப்புகளை கோல்களாக மாற்ற முடியவில்லை. மாறாக 13வது நிமிடத்திலேயே கோல் வாங்கியது அந்த அணி. அற்புதமான கவுன்ட்டர் அட்டாக்கை டைனமோ மேற்கொள்ள, அதன் வழியாக கோலடித்தார் மிஸ்லேவ் ஆர்சிச்.

Champions League
Champions League

இந்த அதிர்ச்சியிலிருந்து கடைசி வரை செல்சீயால் மீண்டு வர முடியவில்லை. கோல் அடித்த உத்வேகத்தில் மிகச் சிறப்பாக டிஃபண்ட் செய்தது டைனமோ ஜாக்ரப். அதேசமயம் செல்சீயாலும் நல்ல வாய்ப்புகளை உருவாக்க முடியவில்லை. இறுதியில் 1-0 என ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்தது டைனமோ ஜாக்ரப். எளிதான குரூப்பில் இருப்பதாக செல்சீ ரசிகர்கள் நிம்மதியாக இருந்த நிலையில், இந்தத் தோல்வி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் புதன்கிழமை மதியம், பயிற்சியாளர் தாமஸ் டுசெலை பதவியிலிருந்து விலக்கும் இன்னுமொரு அதிர்ச்சிகரமான முடிவை எடுத்திருக்கிறது செல்சீ நிர்வாகம். அந்த முடிவு இந்தப் போட்டியின் முடிவால் ஏற்பட்டது இல்லை என்றாலும், இதுவும் ஒரு நல்ல காரணமாக அமைந்துவிட்டது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
இருந்தாலும் சாம்பியன்ஸ் லீக் தொடரைப் பொறுத்தவரை செல்சீக்குச் சாதகமாகவும் ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கிறது. ஆர்பி சால்ஸ்பெர்க், ஏசி மிலன் அணிகள் மோதிய போட்டி 1-1 டிராவில் முடிந்தது. அதனால் டைனமோவுக்கு எதிரான தோல்வி செல்சீயை பெரிய அளவு பாதிக்காது. முதல் நாள் இந்த அதிர்ச்சி எனில், அடுத்த நாள் அதைவிடப் பேரதிர்ச்சியைக் கொடுத்தது சாம்பியன்ஸ் லீக் தொடர்.

கடந்த சீசன் இறுதிப் போட்டி வரை முன்னேறிய லிவர்பூல், நெபோலியை டியாகோ ஆர்மாண்டோ மரடோனா மைதானத்தில் சந்தித்தது. பிரீமியர் லீக் தொடரில் லிவர்பூல் தடுமாறிக்கொண்டிருப்பதால் இந்தப் போட்டி பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இறுதியில் 4-1 என படுதோல்வி அடைந்தது லிவர்பூல். நெபோலி வெற்றி பெற்றது நிச்சயம் பெரியம் விஷயம் இல்லை. அதுவும் நல்ல அணிதான். ஆனால் போட்டி முழுக்க ஆக்கிரமித்து, பல உலகத்தர வீரர்கள் நிறைந்த லிவர்பூல் அணி மீது ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்துவது சாதாரண விஷயம் இல்லை. அதை அரங்கேற்றியது நெபோலி.

Champions League
Champions League

ஐந்தாவது நிமிடத்திலேயே நெபோலிக்கு ஒரு பெனால்டி கிடைத்தது. க்வராத்ஷெலியா மிகச் சிறப்பாக பாக்சுக்குள் நுழைந்து ஜீலின்ஸிக்கு பாஸ் கொடுத்தார். அவர் அடித்த ஷாட் ஜேம்ஸ் மில்னர் கையில் பட, நெபோலிக்கு பெனால்டியை வழங்கினார் நடுவர். அதை கோலாக மாற்றினார் ஜீலின்ஸ்கி. 13 நிமிடங்களில் அந்த அணிக்கு இன்னொரு பெனால்டி கிடைத்தது. விக்டர் ஒசிமென் பாகுக்குள் நுழைய, அவரை விர்ஜைல் வேன் டைக் ஃபவுல் செய்து பெனால்டியை தாரை வார்த்துக் கொடுத்தார். ஆனால் இம்முறை பெனால்டியை எடுத்த ஒசிமென் அதைத் தவறவிட்டார். இருந்தாலும் நெபோலி தொடர்ந்து அட்டாக்கில் ஈடுபட்டுக்கொண்டே இருந்தது.

ஆனால் ஒவ்வொரு 13 நிமிட இடைவெளியிலும் லிவர்பூலை வாட்டியது நெபோலி. பெனால்டியைத் தவறவிட்ட 13 நிமிடங்களில், அதாவது 31வது நிமிடத்தில் அந்த அணியின் இரண்டாவது கோலை அங்கீஸா அடிக்க, அடுத்த 13 நிமிடங்களில் மூன்றாவது கோலை அடித்தார் ஓசிமெனுக்குப் பதில் மாற்று வீரராகக் களமிறங்கிய ஜியோவானி சிமியொன். முதல் பாதியின் முடிவிலேயே 3 கோல்கள் பின்தங்கியது லிவர்பூல். இரண்டாவது பாதியில் லிவர்பூல் அணி மிகுந்த உத்வேகத்தோடு விளையாடும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், இரண்டே நிமிடத்தில் இன்னொரு கோலையும் வாங்கியது அந்த அணி.

அனைத்து லிவர்பூல் வீரர்களும் அட்டாக்கில் கவனம் செலுத்த, கவுன்ட்டர் அட்டாக்கில் சிறப்பாகச் செயல்பட்டு கோலடித்தது நெபோலி. இந்த கோலையும் ஜீலின்ஸ்கி அடித்தார். ஆனால் அடுத்த 2 நிமிடங்களிலேயே லூயிஸ் டியாஸ் மூலம் பதில் கோல் திருப்பியது லிவர்பூல். அது மாற்றத்துக்கான தொடக்கமாக இருக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், நெபோலி வீரர்கள் சிறப்பாக டிஃபண்ட் செய்து மேலும் கோல் விழாமல் பார்த்துக்கொண்டனர்.

இறுதியில் 4-1 என மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது நெபோலி. இதே குரூப்பில் நடந்த மற்றொரு போட்டியில் 4-0 என ரேஞ்சர்ஸ் அணியை வீழ்த்தியது அயாக்ஸ். அயாக்ஸ், நெபோலி அணிகளின் வெற்றி, லிவர்பூலுக்கு சற்று பாதகமான விஷயமே.
Champions League
Champions League

இந்த வாரம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டி பிஎஸ்ஜி vs யுவன்டஸ். பார்க் டெஸ் பிரின்சஸ் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் 2-1 என வெற்றி பெற்றது பாரிஸ் செயின்ட் ஜெர்மைன். எதிர்பார்த்ததைப் போலவே கிலியன் எம்பாப்பே பட்டையைக் கிளப்பினார். 22 நிமிடங்களுக்குள்ளாகவே 2 கோல்கள் அடித்து அசத்தினார் அவர். 53வது நிமிடத்தில் வெஸ்டன் மெக்கன்னி கோலடித்து யுவன்டஸ் அணிக்கு சற்று நம்பிக்கை கொடுத்தார். ஆனால் அந்த அணியால் இரண்டாவது கோலை அடிக்க முடியவில்லை. இறுதியில் 2-1 என வெற்றி பெற்றது பிஎஸ்ஜி.

குரூப் ஆஃப் டெத் என்று கருதப்படும் குரூப் C-யில் நடந்த முக்கியமான போட்டியில் இன்டர் மிலன் அணியை 2-0 என வீழ்த்தியது பேயர்ன் மூனிச். அதேபோல் விக்டோரிய பிளாசன் அணியை 5-1 என வீழ்த்தியது பார்சிலோனா. அந்த அணியின் நட்சத்திர வீரர் ராபர்ட் லெவண்டோஸ்கி ஹாட்ரிக் அடித்து அசத்தினார்.

சாம்பியன்ஸ் லீக் முடிவுகள்: கேம் வீக் 1

பொருஷியா டார்ட்மண்ட் 3-0 எஃப்சி கோபன்ஹேவன்

டைனமோ ஜாக்ரப் 1-0 செல்சீ

பென்ஃபீகா 2-0 மக்காபி ஹைஃபா

செல்டிக் 0-3 ரியல் மாட்ரிட்

பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் 2-1 யுவன்டஸ்

ஆர்பி லீப்சிக் 1-4 ஷக்தார் டொனட்ஷ்க்

சால்ஸ்பெர்க் 1-1 மிலன்

செவியா 0-4 மான்செஸ்டர் சிட்டி

அயாக்ஸ் 4-0 ரேஞ்சர்ஸ்

என்ட்ராக்ட் ஃபிராங்க்ஃபர்ட் 0-3 ஸ்போர்டிங் சிபி

அத்லெடிகோ மாட்ரிட் 2-1 போர்டோ

பார்சிலோனா 5-1 விக்டோரியா பிளாசன்

கிளப் புரூக் 1-0 பேயர்ன் லெவர்கூசன்

இன்டர் மிலன் 0-2 பேயர்ன் மூனிச்

நெபோலி 4-1 லிவர்பூல்

டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் 2-0 மார்ஸே