Published:Updated:

Premier League: மான்செஸ்டர் யுனைடட் - 3, ஆர்செனல் - 5, ஹாலண்ட் - 9; 'Mid-week' ரவுண்ட் அப்!

Premier League

இந்த சீசனில் பெரும் எழுச்சி பெற்றிருக்கும் ஆர்செனல், தங்கள் இளம் வீரர்களின் அற்புதமான ஆட்டத்தால் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வருகிறது.

Premier League: மான்செஸ்டர் யுனைடட் - 3, ஆர்செனல் - 5, ஹாலண்ட் - 9; 'Mid-week' ரவுண்ட் அப்!

இந்த சீசனில் பெரும் எழுச்சி பெற்றிருக்கும் ஆர்செனல், தங்கள் இளம் வீரர்களின் அற்புதமான ஆட்டத்தால் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வருகிறது.

Published:Updated:
Premier League
பிரீமியர் லீக் தொடரில் தொடர்ச்சியாக ஐந்தாவது வெற்றியைப் பதிவு செய்து அமர்க்களப்படுத்தியிருக்கிறது ஆர்செனல். 2022-23 சீசனில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கும் ஒரே அணி ஆர்செனல் தான். அதேசமயம் ஆரம்பத்தில் தடுமாற்றத்தோடு சீசனைத் தொடங்கிய மான்செஸ்டர் யுனைடட் இப்போது தொடர்ச்சியாக மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது.

லிவர்பூல் அணி கடைசி டச்சில் கோலடித்து நியூகாசில் யுனைடட்டை வீழ்த்த, எர்லிங் ஹாலண்ட் அடித்த ஹாட்ரிக் மூலம் நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட் அணியை 6-0 என பந்தாடிய மான்செஸ்டர் சிட்டி. மற்ற முன்னணி அணிகளெல்லாம் 3 புள்ளிகளை உறுதி செய்துவிட, செல்சீ எதிர்பாராத தோல்வியைச் சந்தித்தது. டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணியும் வெற்றியைத் தவறவிட்டு 1 புள்ளியோடு திருப்திபட்டுக்கொண்டது.

Manchester United F.C.
Manchester United F.C.

இந்த சீசனில் பெரும் எழுச்சி பெற்றிருக்கும் ஆர்செனல், தங்கள் இளம் வீரர்களின் அற்புதமான ஆட்டத்தால் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வருகிறது. வியாழக்கிழமை நடந்த போட்டியில் அந்த அணி ஆஸ்டன் விலாவை 2-1 என வீழ்த்தியது. சிறப்பான ஃபார்மில் இருக்கும் அந்த அணியின் புதுவரவு கேப்ரியல் ஜீசுஸ் 30வது நிமிடத்தில் அந்த அணிக்கு முன்னிலை ஏற்படுத்திக்கொடுத்தார். ஜகா பாக்சுக்குள் அனுப்பிய கிராஸ், ஆஸ்டன் விலா டிஃபண்டர் கொன்ஸா மீது பட்டு சென்றது. அதை கோல்கீப்பர் எமிலியானோ மார்டீனஸ் சரியாகத் தடுக்காமல் போக, கேப்ரியல் ஜீசுஸ் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அதை கோலாக்கினார். ஆர்செனல் அணிக்காக இதுவரை விளையாடிய 5 பிரீமியர் லீக் போட்டிகளில் 3 கோல்கள் அடித்துள்ள ஜீசுஸ், 3 அசிஸ்ட்களும் செய்திருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

74வது நிமிடத்தில் டக்லஸ் லூயிஸின் அற்புத கோல் ஆட்டத்தை சமனுக்குக் கொண்டுவந்தது. விலாவுக்குக் கிடைத்த கார்னரை லூயிஸ் தான் எடுத்தார். சிறப்பாக அவர் 'curl' செய்து அனுப்பிய பந்து அனைத்து ஆர்செனல் வீரர்களையும் ஏமாற்றி இரண்டாவது போஸ்ட்டில் கோலானது. ஆனால் இரண்டே நிமிடத்தில் மீண்டும் முன்னிலைக்கு வந்தது ஆர்செனல். இந்த இரண்டாவது கோலை அடித்தது அந்த அணியின் இன்னொரு நட்சத்திரமாக மிண்ணிக்கொண்டிருக்கும் கேப்ரியல் மார்டினெல்லி. டோமியாஸு கொடுத்த பாஸை, புகாயோ சகா பாக்சுக்கு கிராஸ் செய்ய, அதை சிறப்பாக ஃபினிஷ் செய்தார் மார்டினெல்லி. இதன் மூலம் இந்த சீசனில் ஐந்தாவது வெற்றியையும் பதிவு செய்தது.

Leicester City F.C.
Leicester City F.C.

வெள்ளிக்கிழமை நடந்த போட்டியில் மான்செஸ்டர் யுனைடட் 1-0 என லெஸ்டர் சிட்டியை வீழ்த்தியது. மார்கஸ் ரேஷ்ஃபோர்ட் கொடுத்த பாஸை சிறப்பாக கோலாக்கி 23-வது நிமிடத்தில் அந்த அணிக்கு முன்னிலை ஏற்படுத்திக் கொடுத்தார். அதன்பிறகு இரு அணிகளுமே கோலடிக்கவில்லை. சொல்லப்போனால் இந்தப் போட்டியில் பெரிய கோல் முயற்சிகளே இரு அணிகளும் செய்யவில்லை. இரண்டாம் பாதியில் பெரும் பங்கு லெஸ்டர் வசம் தான் பந்து இருந்தது. இருந்தாலும் அவர்களால் டீ கேவை சோதிக்க முடியவில்லை. ஜேம்ஸ் மேடிசன் அடித்த ஃப்ரீ கிக் தான் அந்த அணிக்கு சவாலாக இருந்திருக்கும். இந்த வெற்றியின் மூலம் தொடச்சியாக மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்தது எரிக் டென் ஹாகின் மான்செஸ்டர் யுனைடட் அணி. முதல் இரு போட்டிகளிலும் படுதோல்வி அடைந்திருந்த அந்த அணி இப்போது மீளத் தொடங்கியிருக்கிறது.

இந்த ஐந்தாவது சுற்றுப் போட்டிகளில் மிகவும் பரபரப்பாக இருந்தது லிவர்பூல் vs நியூகாசில் யுனைடட் போட்டி தான். கிட்டத்தட்ட 1 மணி நேரம் இந்தப் போட்டியில் லிவர்பூல் அணி பின்தங்கி தான் இருந்தது. முதல் பாதியில் நியூகாசில் யுனைடட் அணியின் அறிமுக வீரர் அலெக்சாண்டர் ஈசாக் அடித்த கோல் லிவர்பூலை பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்கியது. ஆட்டத்தின் 61வது நிமிடத்தில் ஃபிர்மினோ கோலடித்து லிவர்பூல் ரசிகர்களுக்கு உயிர் கொடுத்தார். அதன்பிறகு பல முயற்சிகளை அந்த அணி மேற்கொண்டும் எதுவும் உதவவில்லை. கிட்டதட்ட ஆட்டத்தின் கடைசி ஷாட்டில் அந்த அணிக்கு இரண்டாவது கோல் கிடைத்தது. இளம் வீரர் ஃபேபியோ கார்வாலோ ஸ்டாப்பேஜ் டைமின் எட்டாவது நிமிடத்தில் கோலடித்து கிளாப்பின் அணிக்கு 3 புள்ளிகள் பெற்றுக் கொடுத்தார்.

Liverpool F.C.
Liverpool F.C.

எடிஹாட் மைதானத்தில் நடந்த போட்டியில் நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட் அணிக்கு எதிராக 6 கோல்கள் அடித்தது நடப்பு சாம்பியன் மான்செஸ்டர் சிட்டி. கிறிஸ்டல் பேலஸ் அணிக்கு எதிரான முந்தைய போட்டியில் ஹாட்ரிக் அடித்து அசத்திய இளம் ஸ்டிரைக்கர் எர்லிங் ஹாலண்ட், இந்தப் போட்டியிலும் ஹாட்ரிக் அடித்து மிரட்டினார். அதுவும் 38 நிமிடங்களுக்குள்ளாகவே! பிரீமியர் லீக் வரலாற்றில் இவ்வளவு விரைவாக (5 போட்டிகளில்) இரண்டு ஹாட்ரிக்குகள் எந்த வீரரும் அடித்ததில்லை. இந்த 5 போட்டிகளில் மொத்தம் 9 கோல்கள் அடித்து மிரட்டிக் கொண்டிருக்கிறார் ஹாலண்ட். ஜோ கன்சலோ 1 கோலும், மற்றொரு இளம் ஸ்டிரைக்கர் ஹூலியன் ஆல்வரஸ் 2 கோல்களும் அடித்தனர். இந்த வெற்றியின் மூலம் 13 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது மான்செஸ்டர் சிட்டி.

செல்சீ அணியின் தடுமாற்றம் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஏற்கெனவே லீட்ஸ் யுனைடட் அணிக்கு எதிராக தோற்றிருந்த செல்சீ, இந்த வாரம் சௌதாம்ப்டன் அணிக்கு எதிராகவும் தோற்றது. ரஹீம் ஸ்டெர்லிங் அடித்த கோல் மூலம் முன்னிலை பெற்ற அந்த அணி, தடுப்பாட்டத்தில் சில கவனச் சிதறல்களால் 2 கோல்கள் விட்டு தோல்வியைச் சந்தித்தது. 5 போட்டிகளின் முடிவில் 7 புள்ளிகள் மட்டுமே பெற்றிருக்கும் செல்சீ இப்போது பத்தாவது இடத்தில் இருக்கிறது.

பிரீமியர் லீக் முடிவுகள் - மேட்ச் டே 6

கிறிஸ்டல் பேலஸ் 1 - 1 பிரென்ட்ஃபோர்ட்

ஃபுல்ஹாம் 2 - 1 பிரைட்டன் அண்ட் ஹோவ் ஆல்பியான்

சௌதாம்ப்டன் 2 - 1 செல்சீ

லீட்ஸ் யுனைடட் 1 - 1 எவர்டன்

போர்ன்மௌத் 0 - 0 வோல்வர்ஹாம்ப்டன் வாண்டரர்ஸ்

மான்செஸ்டர் சிட்டி 6 - 0 நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட்

ஆர்செனல் 2 - 1 ஆஸ்டன் விலா

வெஸ்ட் ஹாம் யுனைடட் 1 - 1 டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர்

லிவர்பூல் 2 - 1 நியூகாசில் யுனைடட்

லெஸ்டர் சிட்டி 0 - 1 மான்செஸ்டர் யுனைடட்

டாப் 5 அணிகள்

ஆர்செனல் - 15 புள்ளிகள்

மான்செஸ்டர் சிட்டி - 13 புள்ளிகள்

டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் - 11 புள்ளிகள்

பிரைட்டன் அண்ட் ஹோவ் ஆல்பியான் - 10 புள்ளிகள்

மான்செஸ்டர் யுனைடட் - 9 புள்ளிகள்

டாப் 5 கோல்-ஸ்கோரர்கள்

எர்லிங் ஹாலண்ட் (மான்செஸ்டர் சிட்டி) - 9

அலெக்சாண்டர் மிட்ரோவிச் (ஃபுல்ஹாம்) - 5

ஹேரி கேன் (டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர்) - 4

ராட்ரிகோ (லீட்ஸ் யுனைடட்) - 4

வில்ஃப்ரைட் ஜாஹா (கிறிஸ்டல் பேலஸ்) - 4