Published:Updated:

ஏழாவது முறையாக பாலன் டி ஓர் விருது வென்ற மெஸ்ஸி... 33 புள்ளிகளில் தவறவிட்ட லெவண்டோஸ்கி!

Lionel Messi ( AP )

மொத்தமாக 613 புள்ளிகள் பெற்றார் மெஸ்ஸி. 33 புள்ளிகள் மட்டும் குறைவாகப் பெற்று இரண்டாவது இடம் பிடித்தார் லெவண்டோஸ்கி. ஜார்ஜினியோ 460 புள்ளிகள் பெற்றார். கிறிஸ்டியானோ ரொனால்டோ 178 புள்ளிகள் பெற்று ஆறாம் இடமே பிடித்தார்.

ஏழாவது முறையாக பாலன் டி ஓர் விருது வென்ற மெஸ்ஸி... 33 புள்ளிகளில் தவறவிட்ட லெவண்டோஸ்கி!

மொத்தமாக 613 புள்ளிகள் பெற்றார் மெஸ்ஸி. 33 புள்ளிகள் மட்டும் குறைவாகப் பெற்று இரண்டாவது இடம் பிடித்தார் லெவண்டோஸ்கி. ஜார்ஜினியோ 460 புள்ளிகள் பெற்றார். கிறிஸ்டியானோ ரொனால்டோ 178 புள்ளிகள் பெற்று ஆறாம் இடமே பிடித்தார்.

Published:Updated:
Lionel Messi ( AP )

கால்பந்து உலகின் மிக உயரிய விருதாகக் கருதப்படுவது பாலன் டி ஓர். பிரான்ஸ் கால்பந்து சங்கத்தால் வருடா வருடம் கொடுக்கப்படும். இடையில் ஒருசில ஆண்டுகள் மட்டும் ஃபிஃபாவுடன் இணைந்து கொடுக்கப்பட்டது. 'தங்கப்பந்து' என்பதுதான் இதன் அர்த்தம். இவ்விருதை மெஸ்ஸி அதிகபட்சமாக 6 முறையும், கிறிஸ்டியானோ ரொனால்டோ 5 முறையும் வென்றிருந்தனர். இவர்கள் இருவருக்கும் இதிலும் கடும் போட்டி நிலவியது. 2008-ம் ஆண்டில் இருந்து இவர்கள் இருவருமே ஒவ்வொரு முறையும் விருதை மாறி மாறி வென்றுகொண்டிருந்தனர். 2018-ல் மட்டும் குரேஏசிய வீரர் லூகா மோட்ரிச் இவ்விருதை வென்றிருந்தார். 2019-ல் மெஸ்ஸி மீண்டும் வென்று ரொனால்டோவை முந்த, கொரோனா காரணமாக 2020 விருது ரத்து செய்யப்பட்டது.

கால்பந்து உலகின் முக்கியமான பத்திரிகையாளர்கள், தேசிய அணியின் கேப்டன்கள், பயிற்சியாளர்களுக்கு இவ்விருதைத் தேர்ந்தெடுப்பதற்கான ஓட்டுரிமை கொடுக்கப்படும். மொத்தம் 30 வீரர்கள் இறுதி பட்டியலுக்குத் தேர்ந்தெடுப்பார்கள். அவர்களுள் 6 பேரை வாக்களிப்பவர்கள் தேர்ந்தெடுக்கவேண்டும். அதில் தாங்கள் முன்னுரிமை கொடுக்கும் வீரர் யார் என்பதையும் வரிசையாகப் பட்டியலிடவேண்டும். அதன் அடிப்படையில் வீரர்களுக்குப் புள்ளிகள் கிடைக்கும். யார் அதிக புள்ளிகள் பெறுகிறாரோ அவரே வெற்றியாளர்.

ஓர் ஆண்டு இடைவெளிக்குப் பிறகு கொடுக்கப்படுவதால், இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அதுமட்டுமல்லாமல், வழக்கத்தை விடவும் போட்டி அதிகமாக இருந்தது. எப்போதும் இரண்டு வீரர்களுக்கு நடுவே தான் கடும் போட்டி இருக்கும். மூன்றாவது இடம் பிடிக்கும் வீரரேவும் கூட குறைவான புள்ளிகள் பெறுவர். ஆனால், இம்முறை கடுமையான மும்முணைப் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Messi with his first international trophy
Messi with his first international trophy

ஜாம்பவான் லயோனல் மெஸ்ஸி கிளப் அளவில் பார்சிலோனா அணிக்கு மிகச் சிறப்பாகச் செயல்பட்டார். பல போட்டிகளில் தனி ஆளாகப் போராடி அணியைக் கரைசேர்த்தார். அதுமட்டுமல்லாமல், சர்வதேச அளவில் தன் முதல் கோப்பையையும் அவர் வென்றிருந்தார். பிரேசில் அணியை வீழ்த்தி அர்ஜென்டினா கோபா அமெரிக்கா கோப்பையைத் தூக்கியபோது மொத்த உலகமும் மெஸ்ஸிக்காகக் கொண்டாடியது. அந்தத் தொடரில் அதிக கோல்கள் அடித்தது, அதிக அசிஸ்ட்கள் செய்தது, சிறந்த வீரருக்கான விருது வாங்கியது, எல்லாமே மெஸ்ஸி தான்!

சமீப காலங்களில் கோப்பைகள் வெல்வது இந்த விருதைத் தேர்ந்தெடுப்பதில் முக்கிய அங்கம் வகிக்கிறது. அதனால், பல சர்ச்சைகள் எழுந்தாலும் ஒரு வீரர் வெல்லும் கோப்பை, இங்கு அவருக்கு சாதகமாகவே இருக்கிறது. அந்த வகையில் ஜார்ஜினியோ இவ்விருதை வெல்வதற்கும் பெரிய வாய்ப்பு உருவானது. செல்சீ கிளப்புக்காக சாம்பியன்ஸ் லீக் கோப்பை வென்றவர், இத்தாலிக்காக யூரோ கோப்பையையும் வென்றார். இரண்டு மிகப்பெரிய கோப்பைகள் வென்றிருந்தாலும், இந்த விருதுக்குப் பரிசீலிக்கப்படக் காரணம், இரு அணிகளிலும் அவரது செயல்பாடு.

Jorginho - the midfield maestro
Jorginho - the midfield maestro

ஒரு கட்டத்தில் சாம்பியன்ஸ் லீக் தொடருக்கே தகுதி பெறுமோ என்று நினைக்கப்பட்ட செல்சீ அணிக்கு, புதிய பயிற்சியாளர் டுசெல் வந்ததும் புத்துயிர் கிடைத்தது. டுசெலின் திட்டத்தில் மிகமுக்கிய அங்கமாக இருந்தது ஜார்ஜினியோ. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட என்கோலோ கான்டே அடிக்கடி காயத்தால் அவதிப்பட்டபோது, தன் அனுபவத்தால் அணியின் நடுகளத்தை அற்புதமாக செயல்படவைத்தார். அதேபோல் இத்தாலி அணியின் நடுகளத்திலும் மிகமுக்கிய அங்கம் வகித்தார். இரு அணிகள் வென்றதற்கும் இவரின் பங்களிப்பு ஈடு இணையற்றது. ஒரு நடுகள வீரர் இரு அணிகளுக்கும் முக்கிய தூணாக இருந்தது பெரும் கவனத்தைப் பெற்றது.

மூன்றாவது ராபர்ட் லெவண்டோஸ்கி. சர்வதேச அரங்கில் கோப்பை வெல்லவில்லை. சாம்பியன்ஸ் லீகும் கிடைக்கவில்லை. ஆனால், ஏலியன் லெவல் ஃபார்மில் இருக்கிறார். கோல் மழை என்று கூட சொல்ல முடியாது. அதற்கும் மேல். 2020-21 சீசனில், 40 போட்டிகளில் 48 கோல்கள் அடித்து மிரட்டியிருந்தார். அதுமட்டுமல்லாமல், 2020-ம் ஆண்டுக்கான விருது இவருக்குத்தான் கிடைத்திருக்கவேண்டும். 47 போட்டிகளில் 55 கோல்கள் அடித்திருந்தார் லெவண்டோஸ்கி.

Robert Lewandowski
Robert Lewandowski
AP

அதோடு, அவர் ஆடும் பேயர்ன் மூனிச் அணியோ, சாம்பியன்ஸ் லீக், கிளப் உலகக் கோப்பை, புண்டஸ்லிகா, DFB-போகல், DFB சூப்பர் கப் என இருக்கும் அத்தனை கோப்பைகளையும் வென்றிருந்தது. அதனால், நிச்சயம் அவர்தான் வென்றிருப்பார். ஆனால், விருதே கொடுக்காமல் கல்தா கொடுத்தது பிரான்ஸ் கால்பந்து சங்கம். அதனால், இம்முறை லெவண்டோஸ்கித்தான் கிடைக்கவேண்டும் என்று கால்பந்து ரசிகர்கள், விமர்சகர்கள் என பலரும் விரும்பினர்.

இந்நிலையில் இன்று அதிகாலை நடந்த விருது விழாவில், மற்ற இருவரையும் பின்னுக்குத்தள்ளி மெஸ்ஸி மீண்டும் இவ்விருதை வென்றிருக்கிறார். மொத்தமாக அவர் 613 புள்ளிகள் பெற்றார். 33 புள்ளிகள் மட்டும் குறைவாகப் பெற்று இரண்டாவது இடம் பிடித்தார் லெவண்டோஸ்கி. ஜார்ஜினியோ 460 புள்ளிகள் பெற்றார். கிறிஸ்டியானோ ரொனால்டோ 178 புள்ளிகள் பெற்று ஆறாம் இடமே பிடித்தார். கடந்த சீசன், யுவன்டஸ் அணிக்காக அவர் எந்த முக்கிய கோப்பைகளும் வெல்லவில்லை.

பெண்களுக்கான பாலன் டி ஓர் விருதை பார்சிலோனாவின் அலெக்சியா புதேயாஸ் வென்றார். கடந்த ஆண்டு பெண்களுக்கான லா லிகா, சாம்பியன்ஸ் லீக் என இரு பெரும் கோப்பைகளையும் வென்று அசத்தியது பார்சிலோனா. அந்த அணியின் சூப்பர் ஸ்டாரான புதேயாஸ் பெரிய போட்டி இல்லாமல் இவ்விருதை வென்றார்.

Alexia Putellas
Alexia Putellas
AP

இளம் வீரர்களுக்கு வழங்கப்படும் கோபா டிராபியை பார்சிலோனாவின் பெட்ரி வாங்கினார். பார்சிலோனா, ஸ்பெய்ன் (யூரோ), ஸ்பெய்ன் அண்டர் 23 (ஒலிம்பிக்ஸ்) என 3 அணிகளுக்கு ஒரு முழு சீசனும் உழைத்துக் கொட்டிய அவருக்கு இவ்விருது கிடைத்திருப்பது மிகவும் பொருத்தமானது. சிறந்த கோல்கீப்பருக்கான யாஷின் டிராபியை இத்தாலியின் கியான்லூயி டொன்னரும்மா பெற்றார்.

இந்த ஆண்டு புதிதாக இரண்டு விருதுகள் அறிமுகம் செய்யப்பட்டன. சிறந்த ஸ்டிரைக்கருக்கான விருதை ராபர்ட் லெவண்டோஸ்கியும், சிறந்த கிளப்புக்கான விருதை ஐரோப்பிய சாம்பியன் செல்சீயும் வென்றன.