Published:Updated:

மான்செஸ்டர் யுனைடெடும் பெனால்டி பரிதாபங்களும்! #ManchesterUnited #PremierLeague

Paul Pogba
News
Paul Pogba ( AP )

இரண்டு போட்டிகளில் 5 புள்ளிகளை இழந்திருக்கிறார்கள். எல்லாம் பெனால்டியால்! இந்த முறை அதைத் தவறவிட்டது போக்பா இல்லை. இனவெறியைக் கட்டவிழ்க்க முடியாது. கடந்த வாரம் போல் கோபத்தையும் கொட்ட முடியாது. நொந்துகொள்ளத்தான் முடியும்.

அலெக்ஸ் ஃபெர்குசன் ஓய்வு பெற்று 6 ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்போது ஆடிய அஸ்திவாரத்தை சரிசெய்ய இன்னும் போராடிக்கொண்டிருக்கிறது மான்செஸ்டர் யுனைடெட். டேவிட் மாய்ஸ், ரயான் கிக்ஸ், லூயி வான் கால், ஜோசே மொரினியோ, ஓல் கன்னர் ஷோல்ஸ்கர் என உள்ளூர்க்காரர், உலகத்தர மேனேஜர்கள், முன்னாள் வீரர்கள் அனைவரையும் முயன்று பார்த்துவிட்டார்கள். டி மரியா, லுகாகு, டீபே என மில்லியன்கள் கொட்டி வாங்கிய வீரர்களும் இன்று விற்கப்பட்டுவிட்டார்கள்.

அணியின் அச்சாணியாய்க் கருதப்பட்ட போக்பா, உள்ளே வெளியே ஆட்டம் ஆடிக்கொண்டிருக்கிறார். என்னென்னவோ செய்து பார்த்தும், இன்னும் அவர்களால் தங்களின் பழைய ஃபார்மை, பழைய பெருமையை மீட்டெடுக்க முடியவில்லை. ஆயிரம் பிரச்னைகள் அவர்களை வதைத்துக்கொண்டிருக்க, இப்போது பெனால்டியும் அவர்களை படுத்துவதுதான் பெரும் கொடுமை!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
ஆகஸ்ட் 11, 2019 - ஓல்டு டிராஃபோர்ட்

இந்த சீசனின் முதல் போட்டியிலேயே செல்சீயைச் சந்தித்தது யுனைடெட். ஆட்டத்தின் 18-வது நிமிடத்தில், ரேஷ்ஃபோர்டை பாக்ஸுக்குள் ஃபவுல் செய்கிறார் செல்சீ டிஃபண்டர் கர்ட் சூமா. பெனால்டி வழங்குகிறார் ரெஃப்ரீஆன்டோனி டெய்லர். பெனால்டி ஸ்பாட்டில் ரேஷ்ஃபோர்ட். கொஞ்சம் ஆச்சர்யமாக இருந்தது. முந்தைய சீசன்களில் போக்பாதான் பெரும்பாலான பெனால்டிகளை எடுத்துக்கொண்டிருந்தார். ஆனால், இப்போது போக்பா களத்தில் இருக்கும்போதே ரேஷ்ஃபோர்ட் பெனால்டி எடுக்கச் சென்றது அதிர்ச்சியாக இருந்தது.

Manchester United
Manchester United
AP

அணியை விட்டுப் போகவேண்டும் என்ற மனநிலையில் இருக்கும் ஒரு வீரரைத் தக்கவைக்க கேப்டனின் ஆர்ம் பேண்ட், பெனால்டி எடுக்கும் உரிமை போன்றவற்றைக் கொடுப்பது வழக்கம். ஆனால், வழக்கமாக அவருக்கு இருக்கும் உரிமையே கொடுக்கப்படவில்லை என்பது அதிர்ச்சிதானே. ஒருவேளை, போக்பாவின் மோசமான பெனால்டி ரெக்கார்டால் அவருக்கு அந்த உரிமை மறுக்கப்பட்டதா... இல்லை, ரேஷ்ஃபோர்டின் 100 சதவிகித ரெக்கார்டால் அவர் ரெகுலர் பெனால்டி டேக்கராகிவிட்டாரா தெரியவில்லை. எப்படியோ, ரேஷ்ஃபோர்ட் எடுத்தார், கோல் அடித்தார். செல்சீயின் மீதான ஆதிக்கம் தொடங்கியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆகஸ்ட் 20, 2019 - மோனினாக்ஸ் மைதானம்

வோல்வர்ஹாம்ப்டன், மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் மோதும் ஆட்டம் 1-1 சமநிலையில் இருக்கிறது. 68-வது நிமிடத்தில், மார்ஷியலுடன் ஓர் அட்டகாசமான 'ஒன்-டூ பாஸிங்' செய்து பாக்ஸுக்குள் நுழைகிறார் போக்பா. வோல்வ்ஸ் டிஃபண்டர் கானர் கோடி போக்பாவை ஃபவுல் செய்ய, பெனால்டி வழங்கப்படுகிறது. இந்த முறை பெனால்டி ஸ்பாட்டில் நின்றது பால் போக்பா! வழக்கமாக பெனால்டி ஸ்பாட்டில் செய்யும் எந்த வித்தையும் காட்டவில்லை. சாதாரணமாக பெனால்டியை எடுத்தார். வோல்வ்ஸ் கீப்பர் பட்ரிசியோவின் வலதுபுறம் மிகவும் பலமாக அடித்தார். பவர் இருந்தது. ஆனால், துல்லியம் இல்லை. எளிதாகத் தடுத்தார் பட்ரிசியோ. போக்பாவின் மோசமான பெனால்டி ரெகார்டு தொடர்ந்தது. 2019-ல் மட்டும் நான்காவது முறையாக பெனால்டியைத் தவறவிட்டார்.

Paul Pogba
Paul Pogba
AP

உடனே அத்தனை யுனைடெட் ரசிகர்களும் கொந்தளித்தார்கள். 'ஏன் போக்பா பெனால்டி எடுத்தார்' என்று குமுறினார்கள். 'ரேஷ்ஃபோர்ட் எடுத்திருக்கவேண்டியதுதானே' என்று புலம்பினார்கள். ஆட்டம் 1-1 என டிராவிலேயே முடிய, இரண்டாவது வாரத்திலேயே 2 புள்ளிகளை யுனைடெட் இழக்க, இன்னும் உக்கிரமானார்கள் ரசிகர்கள். போக்பாவை வசைபாடினார்கள். போட்டிக்குப் பிறகு, "ரேஷ்ஃபோர்டுக்குப் பதில் ஏன் போக்பா பெனால்டி எடுத்தார்" என்ற கேள்வி ஷோல்ஸ்கரிடம் கேட்கப்பட, "அவர்கள் இருவருமே எங்கள் அணியின் பெனால்டி டேக்கர்கள்தான். செல்சீக்கு எதிராக ரேஷ்ஃபோர்ட் நம்பிக்கையாக இருந்தார். அவர் எடுத்தார். இன்று போக்பா நம்பிக்கையாக இருந்தார். அதனால், அவர் எடுத்தார்" என்று பதில் சொன்னார்.

ஆகஸ்ட் 24, 2019 - ஓல்டு டிராஃபோர்ட்

1-0 என முன்னிலை வகிக்கிறது கிறிஸ்டல் பேலஸ். 69-வது நிமிடம்... ஸ்காட் மெக்டாமினாய், பேலஸ் மிட்ஃபீல்டர் மிலிவோஜெவிச்சால் ஃபவுல் செய்யப்படுகிறார். மூன்றாவது பிரீமியர் லீக் போட்டியில், மூன்றாவது பெனால்டியைப் பெறுகிறது யுனைடெட். இந்த முறை ரசிகர்களின் ஆஸ்தான நாயகன் ரேஷ்ஃபோர்ட். இதுவரை தன் சீனியர் கால்பந்துப் பயணத்தில் ஒரு பெனால்டியைக்கூடத் தவறவிடாத ரேஷ்ஃபோர்ட். ரெட் டெவில்ஸ் ரசிகர்கள் பெருமூச்சு விட்டார்கள். `நல்லவேளை போக்பா இல்லை' என்று நிம்மதியடைந்தார்கள். ஆனால், அவர்களுக்கு இந்த 6 ஆண்டுகளில் எதுதான் நல்லபடியாக நடந்தது?

Marcus Rashford
Marcus Rashford

ஒரு பெனால்டியால் ஒரு வாரம் முழுதும் பிரளயமாகிக்கிடக்க, மீண்டும் ஒரு பெனால்டி தவறியது. இந்த முறை யுனைடெடின் நம்பிக்கை நாயகன் மார்கஸ் ரேஷ்ஃபோர்ட் பெனால்டியைத் தவறவிட்டார். யுனைடெட் ரசிகர்களால் எப்படி ரியாக்ட் செய்வதென்றே தெரியவில்லை. 2-1 என அந்தப் போட்டியில் தோற்றுவிட்டார்கள். 3 புள்ளிகளையும் தவறவிட்டார்கள். இரண்டு போட்டிகளில் 5 புள்ளிகளை இழந்திருக்கிறார்கள். எல்லாம் பெனால்டியால்! இந்த முறை அதைத் தவறவிட்டது போக்பா இல்லை. இனவெறியைக் கட்டவிழ்க்க முடியாது. இளம் வீரர் வேறு. கடந்த வாரம் போல் கோபத்தையும் கொட்ட முடியாது. நொந்துகொள்ளத்தான் முடியும். கடந்த ஆறு ஆண்டுகளாக தொடர்ந்து எதைச் செய்துகொண்டிருக்கிறார்களோ அதை மட்டும்தான் செய்ய முடியும்.

அவர்களால் வேறு என்ன செய்ய முடியும்? அலெக்ஸ் ஃபெர்குசனின் நாள்களையும், ரொனால்டோவும் ரூனியும் எப்படி பெனால்டிகளை கோலாக்கினார்கள் என்பதையும் நினைத்து நினைத்து வெதும்ப மட்டுமே முடியும். மாய்ஸ் போன்ற ஒரு புதிய மேனேஜருக்கு அவகாசம் தரக்கூட பொறுமை இல்லாமல் அவரைத் தூக்கினார்கள். அடுத்து பணியமர்த்திய அணியின் ஜாம்பவான் வீரர் கிக்ஸ் மீதும் நம்பிக்கை இல்லை. வான் காலைக் கொண்டுவந்தார்கள். அவர் கேட்டவர்களையெல்லாம் வாங்கினார்கள். டி மரியா, டீபே, ஸ்வெய்ன்ஸ்டேகர், ரோயோ, பிளைண்ட், ஸ்னெய்டர்லைன் யாரும் எதிர்பார்த்ததுபோல் விளையாடவில்லை. அதனால், அடுத்து வந்த மொரினியோவுக்குப் பல இடங்களில் முட்டுக்கட்டை போட்டார்கள். சிட்டியின் எழுச்சிக்கு முன் யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை. அடுத்து மீண்டும் மாற்றம். இப்போது ஷோல்ஸ்கரிடம் வந்து நிற்கிறது.

Paul Pogba
Paul Pogba
AP

6 ஆண்டுகள் ஆனாலும், இதில் 5 மேனேஜர்கள் மாறிவிட்டாலும், இன்னும் யுனைடெட் மாறுவதாகத் தெரியவில்லை. இப்போதும் வீரர்கள் வருவதும் போவதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. அணியின் எந்தத் திட்டத்திலும் ஒரு தீர்க்கம் இல்லை. இவர்தான் ஆஸ்தான பெனால்டி டேக்கர் என்று சொல்ல முடியவில்லை. `இருவருமே பெனால்டி டேக்கர்’ என்கிறார் மேனேஜர்.

போக்பாவைத் தக்கவைக்கத் தடுமாறுகிறார்கள் என்பது அதில் தெளிவாகத் தெரிகிறது. ஒரு மகத்தான அணியால், அணியின் வீரர்களைத் தக்கவைக்க முடியவில்லை என்பதே மிகப்பெரிய சோகம். இவை மாறினால் மட்டுமே மான்செஸ்டர் மீண்டும் சிவப்பாகும்!