Published:Updated:

6 நிமிடத்தில் 3 கோல்கள்! பிரீமியர் லீக் சாம்பியன் ஆனது மான்செஸ்டர் சிட்டி!

Premier League Champions ( AP )

37 சுற்றுகளின் முடிவில் மான்செஸ்டர் சிட்டி 90 புள்ளிகளுடனும், லிவர்பூல் 89 புள்ளிகளுடனும் இருந்தன. கோல் வித்தியாசத்தில் மான்செஸ்டர் சிட்டி முன்னிலை பெற்றிருந்தது.

6 நிமிடத்தில் 3 கோல்கள்! பிரீமியர் லீக் சாம்பியன் ஆனது மான்செஸ்டர் சிட்டி!

37 சுற்றுகளின் முடிவில் மான்செஸ்டர் சிட்டி 90 புள்ளிகளுடனும், லிவர்பூல் 89 புள்ளிகளுடனும் இருந்தன. கோல் வித்தியாசத்தில் மான்செஸ்டர் சிட்டி முன்னிலை பெற்றிருந்தது.

Published:Updated:
Premier League Champions ( AP )

2021-22 சீசன் பிரீமியர் லிக் சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறது மான்செஸ்டர் சிட்டி. சீசனின் கடைசி நாள் மான்செஸ்டர் சிட்டி ஜெயிக்குமா, லிவர்பூல் ஜெயிக்குமா என்று பெரும் பரபரப்போடு செல்ல, இரு அணிகளும் மாறி மாறி சொதப்பின. இறுதியில் ஒருவழியாக வெற்றி பெற்று 1 புள்ளி வித்தியாசத்தில் சாம்பியன் ஆனது மான்செஸ்டர் சிட்டி!

மான்செஸ்டர் சிட்டி, லிவர்பூல் இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி கடந்த சில மாதங்களாகவே கடுமையாக இருந்துவருகிறது. சீசனின் பெரும் பகுதி இரு அணிகளுக்கும் இடையில் ஒரு புள்ளி வித்தியாசமே இருந்தது. 37 சுற்றுகளின் முடிவில் மான்செஸ்டர் சிட்டி 90 புள்ளிகளுடனும், லிவர்பூல் 89 புள்ளிகளுடனும் இருந்தன. கோல் வித்தியாசத்தில் மான்செஸ்டர் சிட்டி முன்னிலை பெற்றிருந்தது. அதனால், மான்செஸ்டர் சிட்டி வெற்றி பெறத் தவறி லிவர்பூல் வெற்றி பெற்றாலே தவிர மான்செஸ்டர் சிட்டி முதலிடத்திலிருந்து இறங்காது. அதனால், இந்த சீசனின் கடைசி சுற்று பெரும் எதிர்பார்ப்பைப் பெற்றது. 2012 சீசனைப் போல் இந்த முறையும் நிறைய டிராமாக்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அது எல்லாமே அரங்கேறின.

பொதுவாக பிரீமியர் லீக் தொடரின் கடைசி சுற்றுப் போட்டிகள் (மொத்தம் 10 போட்டிகள்) ஒரே நேரத்தில்தான் நடக்கும். மான்செஸ்டர் சிட்டி எடிஹாட் மைதானத்தில் ஆஸ்டன் விலாவைச் சந்தித்தது. லிவர்பூல் அணி ஆன்ஃபீல்டில் வோல்வர்ஹாம்ப்டன் வாண்டரர்ஸை எதிர்கொண்டது. ஆட்டத்தின் மூன்றாவது நிமிடத்திலேயே கோலடித்து லிவர்பூலுக்கு அதிர்ச்சி கொடுத்தது வோல்வ்ஸ். கோல்கீப்பர் ஜோஸே சா அடித்தா கோல் கிக் அட்டாகிங் தேர்டுக்குள் நுழைய, வலது பக்கம் பந்தோடு நுழைந்து பெனால்டி ஏரியாவுக்கு கிராஸ் செய்து ரௌல் ஹிமினெஸ். அதை பெட்ரோ நெடோ கோலாக்கினார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இருந்தாலும் 24-வது நிமிடத்தில் ஒரு அற்புதமான கோலை ஸ்கோர் செய்து ஆட்டத்தை சமனாக்கினார் சாடியோ மனே. மறுபக்கம், ஆஸ்டன் விலாவோ மான்செஸ்டர் சிட்டிக்கு அதிர்ச்சி கொடுத்தது. 37-வது நிமிடத்தில் லூகாஸ் டீன்யா கொடுத்த கிராஸை ஹெட்டர் மூலம் கோலாக்கினார் மாட்டி கேஷ். முதல் பாதியின் முடிவில் ஆன்ஃபீல்டில் ஸ்கோர் 1-1 எனவும், எடிஹாடில் 0-1 எனவும் இருந்தது. இரு அணிகளும் 90 புள்ளிகளில் நீடித்தாலும், கோல் வித்தியாச அடிப்படையில் சிட்டி முன்னிலையில் இருந்தது.

இரண்டாவது பாதியில் சிட்டிக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. 69-வது நிமிடத்தில் ஆஸ்டன் விலாவின் இரண்டாவது கோலை அடித்தார் முன்னாள் லிவர்பூல் வீரர் கொடினியோ. அந்த அணி போட்டியை வெற்றி பெற 3 கோல்கள் தேவை. அதேசமயம் லிவர்பூல் 1 கோல் அடித்தாலும், அந்த அணி முதலிடத்துக்கு முன்னேறிவிடும். இப்படிப்பட்ட நிலையில், பரபரப்பு இன்னும் பல மடங்கு அதிகரித்தது.

Manchester City Fans
Manchester City Fans
AP

லிவர்பூல் கோப்பையை வென்றுவிடும் என்று எல்லோரும் கருதிய நிலையில், ஒரு 6 நிமிட இடைவெளியில் அனைத்தையும் மாற்றியது மான்செஸ்டர் சிட்டி. 75-வது நிமிடம் வரை ஒரு கோல் கூட அடிக்காத அந்த அணி, அடுத்த 6 நிமிடங்களில் 3 கோல்கள் அடித்தது. 76-வது நிமிடத்தில், வலது விங்கில் இருந்து ரஹீம் ஸ்டெர்லிங் கொடுத்த கிராஸை சிறப்பாக ஹெட்டர் மூலம் கோலாக்கினார் இல்கே குண்டோகன். அடுத்த 2 நிமிடங்கள் கழித்து பாக்சுக்கு வெளியே இருந்து ராட்ரி அடித்த ஷாட் யாரும் எதிர்பாராத வகையில் கோலானது. போட்டியை சமநிலைக்கு கொண்டுவந்ததால், லிவர்பூலை விட 1 புள்ளி முன்னிலை பெற்றது மான்செஸ்டர் சிட்டி. இருந்தாலும், லிவர்பூல் கோலடித்துவிட்டால் பட்டம் கையை விட்டுப் போய்விடும். அதனால், மான்செஸ்டர் சிட்டி ஓயவில்லை.

அடுத்த மூன்றாவது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் அடித்து மான்செஸ்டர் சிட்டிக்கு முன்னிலை ஏற்படுத்திக் கொடுத்தார் குண்டோகன். இம்முறை வலது பக்கம் பாக்ஸுக்குள் நுழைந்து டி புருய்னா கொடுத்த கிராஸை சிறப்பாக கோலாக்கினார் அவர். அதனால், 3-2 என முன்னிலை பெற்றது மான்செஸ்டர் சிட்டி. லிவர்பூல் அணி 84-வது நிமிடத்தில் இரண்டாவது கோலையும், 89-வது நிமிடம் மூன்றாவது கோலையும் அடித்தது. 3-1 என வெற்றி பெற்றது. இருந்தாலும், மான்செஸ்டர் சிட்டி ஒரு புள்ளி அதிகம் பெற்றதால், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சாம்பியன் பட்டம் வென்றது.

Pep Guardiola
Pep Guardiola
AP

மற்ற போட்டிகளில் வாட்ஃபோர்ட் அணியை 2-1 என வீழ்த்தியது மூன்றாவது இடத்திலிருந்த செல்சீ. நார்விச் சிட்டியை 5-0 என வீழ்த்தி நான்காவது இடத்தையும், அடுத்த சாம்பியன்ஸ் லீக் சீசனின் ஸ்லாட்டையும் உறுதி செய்தது. ஆர்செனல், மான்செஸ்டர் யுனைடட் அணிகள் யூரோபா லீக் இடங்களில் முடித்தன. ஏழாவது இடம் பிடித்த வெஸ்ட் ஹாம் யுனைடட் யூரோபா கான்ஃபர்ஸ் லீகில் விளையாடும் வாய்ப்பை பெற்றது.

புள்ளிப் பட்டியலின் மேலே அத்தனை கலேபரங்கள் நடந்துகொண்டிருக்க, கீழேயும் சில பரபரப்பான போட்டிகள் இருந்தன. ஒவ்வொரு பிரீமியர் லீக் சீசனிலும் கடைசி 3 இடங்களை (18 முதல் 20-வது இடம்) பிடிக்கும் அணிகள், 'ரிலகேட்' ஆகிவிடும். அதாவது முதல் டிவிஷனிலிருந்து, இரண்டாவது டிவிஷனுக்குத் தள்ளப்படும். ஏற்கெனவே நார்விச், வாட்ஃபோர்ட் அணிகள் இந்த சீசனில் ரிலகேட் ஆகிவிட்டன. அந்த மூன்றாவது இடத்தைத் தவிர்க்க, லீட்ஸ் யுனைடட், பர்ன்லி அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.

Jurgen Klopp
Jurgen Klopp
AP

இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன் இரு அணிகளும் 35 புள்ளிகள் பெற்றிருந்தன. இருந்தாலும் கோல் வித்தியாச அடிப்படையில் பர்ன்லி லீட்ஸுக்கு முன்பாக இருந்தது. நேற்று நடந்த போட்டியில் பர்னிலி அணி நியூகாசில் யுனைடட் அணியை சந்தித்தது. காலம் வில்சனின் இரு கோல்கள் பர்ன்லியை வீழ்த்த, பிரென்ட்ஃபோர்ட் அணியை 2-1 என வீழ்த்தி பிரீமியர் லீகில் நீடிக்கிறது லீட்ஸ் யுனைடட்.

இந்த சீசனில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் ஃபார்வேர்ட் ஹியூங் மின் சன், லிவர்பூல் ஃபார்வேர்ட் முகமது சலா ஆகியோர் 23 கோல்கள் அடித்து முதலிடம் பிடித்தனர். அவர்கள் இருவருமே கோல்டன் பூட் வென்றனர். கிறிஸ்டியானோ ரொனால்டோ 18 புள்ளிகளுடன் மூன்றாவது இடம் பிடித்தார்.