Published:Updated:

செல்சீயை வீழ்த்திய மான்செஸ்டர் சிட்டி... பிரீமியர் லீக் பட்டத்தை உறுதி செய்துவிட்டதா?

Manchester City vs Chelsea ( AP )

இந்த வெற்றியின் மூலம் 22 போட்டிகளில் 56 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருக்கிறது மான்செஸ்டர் சிட்டி. செல்சீயோ 43 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலிருக்கிறது.

செல்சீயை வீழ்த்திய மான்செஸ்டர் சிட்டி... பிரீமியர் லீக் பட்டத்தை உறுதி செய்துவிட்டதா?

இந்த வெற்றியின் மூலம் 22 போட்டிகளில் 56 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருக்கிறது மான்செஸ்டர் சிட்டி. செல்சீயோ 43 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலிருக்கிறது.

Published:Updated:
Manchester City vs Chelsea ( AP )
பிரீமியர் லீக் டைட்டில் ரேஸில் அசைக்க முடியாத முன்னிலை பெற்றிருக்கிறது மான்செஸ்டர் சிட்டி. செல்சீ அணிக்கெதிரான போட்டியை 1-0 என வெற்றி பெற்று, இரண்டாம் இடம் பிடித்திருக்கும் லிவர்பூலை விட 11 புள்ளிகள் அதிகம் பெற்றிருக்கிறது பெப் கார்டியோலாவின் அணி.

எதிஹாட் ஸ்டேடியத்தில் நடந்த இந்தப் போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தியது மான்செஸ்டர் சிட்டி. பல டிஃபண்டர்கள் காயமடைந்திருந்ததால், செல்சீயின் பின்களத்தில் நிறைய மாற்றங்களை செய்திருந்தார் தாமஸ் டுகெல். அதிக போட்டிகளில் விளையாடிடாத இஸ்மாயில் சார், இப்போட்டியைத் தொடங்கவேண்டியதாக இருந்தது.

எப்போதும் இடது சென்டர்பேக் பொசிஷனில் ஆடும் ருடிகர், வலது சென்டர் பெக் பொசிஷனில் விளையாடினார். டிஃபன்ஸில் சில பிரச்னைகள் இருந்தாலும், மற்ற ஏரியாக்கள் அவர்களுக்குக் கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நடுகளம், அட்டாக் என அனைத்து ஏரியாக்களும் ஏமாற்ற, மிகவும் தடுமாறியது செல்சீ.

ஆட்டத்தின் 39-வது நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டிக்கு மிகப்பெரிய வாய்ப்பொன்று கிடைத்தது. செல்சீ பாக்சுக்கு அருகே பொசஷனை இழந்தார் மடியோ கோவசிச். பந்தை மீட்டெடுத்த டி புருய்னா, கிரீலிஷுக்கு பாஸ் செய்தார். பந்தோடு பாக்சுக்குள் நுழைந்து கோல் நோக்கி அடித்தார். ஆனால், கிரீலிஷை நோக்கி முன்னால் வந்த செல்சீ கோல்கீப்பர் கெபா அரிஸபலாகா அதை அட்டகாசமாகத் தடுத்தார். நிறைய முறை செல்சீ கோலை முற்றுகையிட்டிருந்தாலும், மிகப்பெரிய வாய்ப்புகளை சிட்டியால் அதிகம் உருவாக்க முடியவில்லை. செல்சீயோ, சிட்டி பாக்சுக்கு அருகில்கூட செல்லவில்லை. முதல் பாதி 0-0 என முடிவுக்கு வந்தது.

Kevin de Bruyne
Kevin de Bruyne
AP

இரண்டாம் பாதியின் ஆரம்பத்திலேயே செல்சீக்கு ஓர் அற்புதமான வாய்ப்பு கிடைத்தது. தனக்குக் கிடைத்த த்ரூ பாலை, சிட்டி பாக்ஸின் ஓரத்தில் நின்று கோல் நோக்கி அடித்தார் ரொமேலு லுகாகு. ஆனால், அதை மிகச் சிறப்பாகத் தடுத்தார் சிட்டி கோல்கீப்பர் எடர்சன்.

70-வது நிமிடத்தில் கெவின் டி புருய்னா அடித்த அற்புத கோல் மான்செஸ்டர் சிட்டிக்கு முன்னிலை ஏற்படுத்திக் கொடுத்தது. கெபா அடித்த கோல் கிக்கை, மான்செஸ்டர் சிட்டி டிஃபண்டர்கள் அடுத்தடுத்து மீட்டு டி புருய்னாவிடம் கொடுத்தனர். களத்தின் நடுவே பந்தைப் பெற்றவர், வேகமாக முன்னேறினார். எங்கோலோ கான்டே அவரிடமிருந்து பந்தைப் பறிக்க முயற்சி செய்தார். ஆனால், அவரிடமிருந்து தப்பித்து பாக்சுக்கு சற்று வெளியே இருந்து கோல் நோக்கி அடித்தார். மிகவும் அற்புதமாக அடிக்கப்பட்ட அந்த ஷாட், கெபாவை ஏமாற்றி கோலானது. அதன்பிறகு இரண்டு அணிகளும் கோல் அடிக்காததால், ஆட்டம் 1-0 என முடிவுக்கு வந்தது.

இந்த வெற்றியின் மூலம் 22 போட்டிகளில் 56 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருக்கிறது மான்செஸ்டர் சிட்டி. செல்சீயோ 43 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலிருக்கிறது. இரு அணிகளுக்குமிடையேயான இடைவெளி 10 புள்ளிகளிலிருந்து 13 புள்ளிகளாக உயர்ந்திருக்கிறது. அதேசமயம் 21 போட்டிகளில் ஆடியிருக்கும் லிவர்பூல், 45 புள்ளிகள் பெற்றிருக்கிறது. அந்த அணி 22-வது போட்டியை வென்றாலும், மான்செஸ்டர் சிட்டி கிளாப்பின் அணியைவிட 8 புள்ளிகள் அதிகம் பெற்றிருக்கும். கார்டியோலாவின் நான்காவது பிரீமியர் லீக் பட்டத்தை நோக்கி கம்பீரமாகப் பயணித்துக்கொண்டிருக்கிறது மான்செஸ்டர் சிட்டி.

லிவர்பூல் பின்தங்கியிருந்தாலும் தங்கள் சிறப்பான ஆட்டத்தைத் தொடந்துகொண்டிருக்கிறது. வெள்ளிக்கிழமை ஆர்செனல் அணியுடனான கரபாவோ கோப்பை அரையிறுதியில் விளையாடிய அந்த அணி, இரண்டு நாள் இடைவெளிக்குப் பிறகு பிரீமியர் லீக் போட்டியில் பிரென்ட்ஃபோர்ட் அணியோடு மோதியது. சலா, மனே என இரண்டு பெரிய ஸ்டார்கள் இல்லாதிருந்தாலும், ஃபேபினியோ, அலெக்ஸ் ஆக்ஸ்லேட் சேம்பெர்லெய்ன், டகுமி மினாமினோ என புதிய கோல்ஸ்கோரர்கள் அணியின் வெற்றிக்குப் பெரிதாக உதவினர்.

செல்சீயை வீழ்த்திய மான்செஸ்டர் சிட்டி... பிரீமியர் லீக் பட்டத்தை உறுதி செய்துவிட்டதா?
Jon Super
பிரீமியர் லீகில் வெற்றி பெறத் தவறிக்கொண்டிருக்கும் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் மோசமான ஃபார்ம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. தங்கள் கடைசி பிரீமியர் லீக் போட்டியில் வோல்வர்ஹாம்ப்டன் வாண்டரர்ஸ் அணியுடன் 1-0 எனத் தோல்வியடைந்திருந்த யுனைடெட், ஆஸ்டன் விலாவுக்கு எதிராக 2-2 என டிரா செய்தது.

ஆறாவது நிமிடத்திலேயே புரூனோ ஃபெர்னாண்டஸ் கோலடித்து அமர்க்களமாக ஆரம்பித்துவைத்தார். 67-வது நிமிடத்தில் மீண்டும் அவர் கோலடிக்க, இரண்டு கோல்கள் முன்னிலை பெற்றிருந்தது மான்செஸ்டர் யுனைடெட். ஆனால், அதன்பிறகு சூப்பரான கம்பேக் கொடுத்தது ஆஸ்டன் விலா. 77-வது நிமிடத்தில் ஜாகப் ராம்ஸி கோலடித்து அந்த இடைவெளியைக் குறைத்தார். மீண்டும் பிரீமியர் லீகுக்குத் திரும்பிய கொடினியோ, 68-வது நிமிடம் ஆஸ்டன் விலாவுக்காக அறிமுகம் ஆனார். 68-வது நிமிடம் களம் கண்ட அவர், 82-வது நிமிடத்தில் தன் முதல் கோலையும் அடித்தார். அந்த கோலுக்கான அசிஸ்டையும் ஜேகப் ராம்ஸியே செய்தார். இறுதியில் 2-2 என போட்டி டிரா ஆனது.

செல்சீயை வீழ்த்திய மான்செஸ்டர் சிட்டி... பிரீமியர் லீக் பட்டத்தை உறுதி செய்துவிட்டதா?
Rui Vieira

மான்செஸ்டர் யுனைடெட் போல், வெஸ்ட் ஹாம் யுனைடட் அணியும் சமீபமாக புள்ளிகளைத் தவறவிட்டுக்கொண்டிருக்கிறது. லீட்ஸ் யுனைடெட் அணிக்கான போட்டியில் 2-3 எனத் தோற்றது வெஸ்ட் ஹாம். உச்சபட்ச ஃபார்மில் இருக்கும் ஜெராட் போவன் இந்தப் போட்டியிலும் கோலடித்தார். இன்னொரு கோலை பாப்லோ ஃபொர்னால்ஸ் ஸ்கோர் செய்தார். லீட்ஸ் அணிக்காக மூன்று கோல்களையுமே ஜேக் ஹாரிசன் அடித்து அமர்க்களப்படுத்தினார்.

தொடர்ந்து சொதப்பிக்கொண்டிருந்த எவர்டன், இந்த வாரம் நார்விச் சிட்டிக்கு எதிராக 2-1 எனத் தோல்வியடைந்தது. இதன்மூலம், எவர்டன் அணியின் பயிற்சியாளர் ரஃபேல் பெனிட்ஸ் பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். 19 போட்டிகளில் 19 புள்ளிகளுடன் 16-வது இடத்தில் தத்தளித்துக்கொண்டிருக்கிறது எவர்டன்.