Published:Updated:

வாரத்துக்கு 5 கோடி ரூபாய் சம்பளம்... மான்செஸ்டர் சிட்டிக்கு மாறுவாரா மெஸ்ஸி?

Leonel Messi
Leonel Messi ( AP )

கடந்த ஆண்டு நடந்த பல விஷயங்கள் மீண்டும் நடந்துகொண்டிருக்கின்றன. அதில் முக்கியமானது - மெஸ்ஸி டிரான்ஸ்ஃபர் டிராமா. பார்சிலோனாவைவிட்டு விலகுகிறார் என்று 2020-ல் கிளம்பிய பூதம், இப்போது இன்னொரு ரவுண்ட் அடிக்கிறது. மான்செஸ்டர் சிட்டி அவரை ஒப்பந்தம் செய்யலாம் என்ற செய்தி பரவிவருகிறது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு 13 வயது இளம் மெஸ்ஸியை ஒப்பந்தம் செய்தது பார்சிலோனா. அடுந்த 4 ஆண்டுகளில் சீனியர் அணிக்குக் களமிறங்கியவர், இன்று கால்பந்து உலகின் மகத்தான ஜாம்பவானாக மாறி நிற்கிறார். 10 லா லிகா கோப்பைகள், 4 சாம்பியன்ஸ் லீக் கோப்பைகள், 3 கிளப் உலகக் கோப்பைகள், 6 பேலன் டி ஓர் விருதுகள் என அவர் வென்ற விருதுகளும் பட்டங்களும் நீண்டுகொண்டே போகும். ஆனால், சமீப காலமாக மெஸ்ஸி - பார்சிலோனா உறவில் பெரும் விரிசல் உண்டாகியிருக்கிறது.

Leonel Messi
Leonel Messi

கடந்த சில ஆண்டுகளாக முன்பைப் போல் ஐரோப்பிய அரங்கில் பார்சிலோனாவால் ஆதிக்கம் செலுத்தமுடியவில்லை. தொடர்ந்து ஆறாவது சீசனாக சாம்பியன்ஸ் லீக் ஃபைனலுக்குள் முன்னேற முடியாமல் வெளியேறியிருக்கிறது. இந்த விரக்தி ஒருபக்கம் இருக்க, முன்னாள் பார்சிலோனா கிளப் தலைவர் போர்டமோ உடனான உறவில் விரிசல் உண்டானது. மெஸ்ஸி எதிர்பார்த்தது எதுவும் அணியில் நடக்காமல் போக, பயிற்சியாளர்கள் அடிக்கடி மாற, கடந்த ஆண்டு மெஸ்ஸி நிச்சயம் பார்சிலோனாவைவிட்டு வெளியேறிவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

பொதுவாக, ஒரு வீரரின் ஒப்பந்தத்தில் ஒரு வருடம் மட்டுமே இருக்கும்போது, அவர் அந்த அணியில் தொடர விரும்பாதபோது எந்த அணியும் அந்த வீரரை விற்கவே நினைக்கும். ஏனெனில், ஒப்பந்தம் முடிந்த பிறகு அந்த வீரர் எந்த அணிக்கு வேண்டுமானாலும் சென்றுவிடலாம். மெஸ்ஸியின் ஒப்பந்தம் இந்த சீசனோடு முடிகிறது. போர்டமோ இருந்ததால், அவரும் புதிய ஒப்பந்தம் கையெழுத்திட விரும்பவில்லை. அதனால், அப்போதே ஒரு நல்ல தொகைக்கு அவரை பார்சிலோனா விற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மான்செஸ்டர் சிட்டி அவரை வாங்குவதில் ஆர்வம் காட்டியது. ஆனால், அதற்கு முட்டுக்கட்டையிட்டார் போர்டமோ.

மெஸ்ஸியின் ஒப்பந்தப்படி, அவர் ஒப்பந்த காலம் முடிவதற்கு முன் வேறு அணிக்குச் செல்லவேண்டுமானால் 700 மில்லியன் யூரோக்கள் கொடுக்கவேண்டும். அந்தத் தொகையைக் கொடுத்தால் மட்டுமே அவரை விடமுடியும் என்று சொல்லிவிட்டார் போர்டமோ. 2021-ல் ஒன்றுமே இல்லாமல் அனுப்புவதற்கு, ஒரு வருடம் முன்பாக ஒரு டீசன்ட்டான தொகைக்கு விற்றுவிடுவார்கள் என்று கடைசிவரை எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், போர்டமோ பிடிவாதமாக இருந்தார். ஒருகட்டத்தில் பொறுமை இழந்த மெஸ்ஸி, வேண்டா வெறுப்பாக இந்த சீசன் பார்சிலோனாவிலேயே தொடர்வதாக அறிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த சீசன் கொஞ்சம் கொஞ்சமாக சூழ்நிலை மாறத் தொடங்கியது. அன்சு ஃபடி, பெட்ரி போன்ற இளைஞர்களின் எழுச்சி, போர்டமோ ராஜினாமா, புதிய தலைவர் லபோர்டா பதவியேற்பு, மெஸ்ஸியின் கோல் மழை, இரண்டாம் பாதியில் பார்சிலோனாவின் எழுச்சி என பாசிடிவ் விஷயங்கள் தொடர்ந்ததால், மெஸ்ஸி பார்சிலோனாவில் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. எப்படியும் புதிய ஒப்பந்தம் கையெழுத்திட்டுவிடுவார் என்று பார்கா ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், மீண்டும் மான்செஸ்டர் சிட்டி அவரை ஒப்பந்தம் செய்யத் தயாராகிறது என்ற செய்தி வலம் வந்துகொண்டிருக்கிறது.

Leonel Messi with Pep Guardiola
Leonel Messi with Pep Guardiola

கடந்த சில ஆண்டுகளாகவே டிரான்ஸ்ஃபர் மார்கெட்டில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறது மான்செஸ்டர் சிட்டி. கார்டியோலா மேனேஜர் ஆனதிலிருந்து அவருக்குத் தேவையான வீரர்களை எப்படியேனும் ஒப்பந்தம் செய்துவிடுகிறது அந்த அணி. கார்டியோலா பார்சிலோனா பயிற்சியாளராக இருந்தபோதுதான் அந்த அணி ஐரோப்பாவின் மிகச் சிறந்த அணியாக உருவெடுத்தது. மெஸ்ஸி உலக நாயகனாக விஸ்வரூபம் எடுத்தார். அதனால், கார்டியோலா - மெஸ்ஸி காம்போ மீண்டும் ஒண்றினையும் என்று பல வருடங்களாக எதிர்பார்த்துவருகின்றனர்.

ஆண்டுக்கு 25 மில்லியன் டாலர் பவுண்ட் சம்பளம் பெறக்கூடிய ஒப்பந்தத்தை மான்செஸ்டர் சிட்டி அணியோடு மெஸ்ஸி கையெழுத்திடலாம் என்ற செய்தி இப்போது கால்பந்து வட்டாரத்தில் பரவி வருகிறது. நம்மூர் மதிப்பில் கிட்டத்தட்ட 260 கோடி சம்பளம். ஒரு வாரத்துக்கு கிட்டத்தட்ட 5 கோடி ரூபாய் சம்பளம். இது இங்கிலாந்து கால்பந்து வரலாற்றில் யாரும் பெற்றிடாத ஒரு தொகை! இது ஒரு ஆண்டு ஒப்பந்தமாக இருக்கும் என்றும், இரண்டு தரப்பும் விரும்பினால், இன்னொரு வருடத்துக்கு அது நீட்டிக்கப்படலாம் என்றும் தெரிகிறது. ஆனால், கடந்த ஆண்டு இதைவிட அதிக எதிர்பார்ப்புகள் இருந்தும் இந்த டிரான்ஸ்ஃபர் நடக்கவில்லை. அதனால், இந்த மெஸ்ஸி டிராமா இன்னும் சில நாள்களுக்குத் தொடரும் என்று எதிர்பார்க்கலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு