Published:Updated:

Premier League: 90 நிமிடங்களில் 9 கோல்கள்! கோல் மழையில் நனைந்த மான்செஸ்டர் சிட்டி vs லெஸ்டர் போட்டி!

Kevin de Bruyne ( AP )

முதல் பாதியின் முடிவில் 4 கோல்கள் பின்தங்கியிருந்த லெஸ்டர் சிட்டி, இரண்டாவது பாதி தொடங்கிய 20 நிமிடங்களிலேயே 3 கோல்கள் அடித்தது! அந்த 3 கோல்களுக்கும் காரணமாக இருந்தார் கெலெசி இஹியனாசோ.

Premier League: 90 நிமிடங்களில் 9 கோல்கள்! கோல் மழையில் நனைந்த மான்செஸ்டர் சிட்டி vs லெஸ்டர் போட்டி!

முதல் பாதியின் முடிவில் 4 கோல்கள் பின்தங்கியிருந்த லெஸ்டர் சிட்டி, இரண்டாவது பாதி தொடங்கிய 20 நிமிடங்களிலேயே 3 கோல்கள் அடித்தது! அந்த 3 கோல்களுக்கும் காரணமாக இருந்தார் கெலெசி இஹியனாசோ.

Published:Updated:
Kevin de Bruyne ( AP )
பாக்ஸிங் டே பிரீமியர் லீக் போட்டிகளில் மான்செஸ்டர் சிட்டி, ஆர்செனல், டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர், செல்சீ என அனைத்து முன்னணி அணிகளும் வெற்றி பெற்றிருக்கின்றன. டாப் 4 பொசிஷனிலிருந்து தொடர்ந்து சறுக்கிக்கொண்டிருக்கும் வெஸ்ட் ஹாம் யுனைடட் சௌதாம்ப்டன் அணிக்கெதிராகவும் தோல்வியடைந்திருக்கிறது.

பிரீமியர் லீக் தொடரின் வழக்கமான பாக்ஸிங் டே போட்டிகள் நேற்று நடந்தன. கடந்த சில வாரங்களைப்போல், கொரோனாவால் இந்த வாரமும் சில போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன.

இந்த வாரம் ஒத்திவைக்கப்பட்ட போட்டிகள்

லிவர்பூல் vs லீட்ஸ் யுனைடட்
வோல்வர்ஹாம்ப்டன் வாண்டரர்ஸ் vs வாட்ஃபோர்ட்
பர்ன்லி vs எவர்டன்

எதிஹாட் ஸ்டேடியத்தில் நடந்த மான்செஸ்டர் சிட்டி vs லெஸ்டர் சிட்டி போட்டியில் 9 கோல்கள் அடிக்கப்பட்டன. காயத்துக்குப் பிறகு மீண்டு வந்திருக்கும் கெவின் டி புருய்னா, ஐந்தாவது நிமிடத்திலேயே கோலடித்து ஸ்கோரிங்கைத் தொடங்கிவைத்தார். 12-வது நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டி அணிக்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றினார் ரியாத் மாரஸ். 21-வது நிமிடத்தில் இல்கே குண்டோகன் மூன்றாவது கோலை அடிக்க, அடுத்த நான்காவது நிமிடத்திலேயே நான்காவது கோலை அடித்தார் ரஹீர் ஸ்டெர்லிங். இந்த கோலும் பெனால்டி மூலம் கிடைத்தது. இதனால் முதல் பாதியிலேயே 4 கோல்கள் பின்தங்கியிருந்தது லெஸ்டர் சிட்டி.

Riyad Mahrez
Riyad Mahrez
AP

இருந்தாலும், இரண்டாவது பாதி தொடங்கியதும் சிறப்பான கம்பேக்கைக் கொடுத்தது லெஸ்டர். மிகச் சிறப்பாக விளையாடிய கெலசி இஹியனாசோ, 10 நிமிட இடைவெளியில் 3 கோல்களுக்குக் காரணமாக அமைந்தார். 55-வது நிமிடத்தில் அவர் அசிஸ்ட் செய்ய, அந்த அணியின் முதல் கோலை அடித்தார் ஜேம்ஸ் மேடிசன். 59-வது நிமிடத்தில் அடோமெலா லுக்மேன் இரண்டாவது கோலை ஸ்கோர் செய்தார். இதற்கும் இஹியனாசோதான் அசிஸ்ட் செய்தார். முதல் இரண்டு கோல்களுக்கும் உதவிய அவர், 65-வது நிமிடத்தில் அவராகவே கோலடித்தார். இரண்டாம் பாதி ஆரம்பித்த 20 நிமிடங்களில் போட்டி 4-3 என விறுவிறுப்பான நிலைக்கு வந்தது.

அதன்பிறகு மான்செஸ்டர் சிட்டி மீண்டும் போட்டியைத் தங்கள் கைகளுக்குள் கொண்டுவந்தது. 69-வது நிமிடத்தில் ரியாத் மாரஸ் அசிஸ்ட் செய்ய, ஆய்மெரிக் லபோர்ட் அதை கோலாக மாற்றினார். 87-வது நிமிடத்தில் ரஹீம் ஸ்டெர்லிங் சிட்டியின் ஆறாவது கோலை அடித்து ஆட்டத்தை மொத்தமாக முடித்துவைத்தார். இந்த கோலுக்கு ரூபன் டியாஸ் அசிஸ்ட் செய்தார். 6-3 என வெற்றி பெற்ற மான்செஸ்டர் சிட்டி, புள்ளிகள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

ஆர்செனல் அணியின் அட்டகாசமான ஃபார்ம் இந்த வாரமும் தொடர்ந்தது. புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்திலிருக்கும் நார்விச் சிட்டியைப் பந்தாடியது அந்த அணி. அந்த அணியின் இளம் அட்டாக்கர்கள் தொடர்ந்து சிறப்பாக விளையாட, 5 கோல்கள் அடித்து அபார வெற்றி பெற்றனர். இளம் சென்சேஷன் புகாயோ சகா இரண்டு கோல்கள் அடித்து அசத்த, மாற்று வீரராக வந்த எமில் ஸ்மித்-ரோ இந்தப் போட்டியில் ஸ்கோர் செய்தார். கேப்டன் லகசடே, டிஃபண்டர் கீரன் டியர்னியும் ஆளுக்கு ஒரு கோல் அடித்தனர். இரண்டு கோல்களுக்கு அசிஸ்ட் செய்து, நம்பர் 10 ரோலில் தொடர்ந்து கலக்கிக்கொண்டிருக்கிறார் மார்டின் ஓடகார்ட். 18 போட்டிகளில் வெறும் 10 புள்ளிகளே பெற்றிருக்கும் நார்விச் அணிக்கு இது இன்னொரு அடியாக அமைந்திருக்கிறது.

Arsenal
Arsenal
AP

ஆன்டோனியோ கான்டேவின் வருகைக்குப் பிறகு தொடர்ந்து சிறப்பாக விளையாடிக்கொண்டிருக்கும் டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர், கிறிஸ்டல் பேலஸை எளிதாக வென்றது. ஹேரி கேன், லூகஸ் மௌரா, ஹியூங் மின் சன் என அணியின் 3 அட்டாக்கர்களும் கோலடித்து அசத்தினர். சன், கேன் ஆகியோர் கோல்களுக்கு அசிஸ்ட் செய்து ஒட்டுமொத்தமாக ஓர் அசத்தல் பெர்ஃபாமன்ஸ் கொடுத்தார் லூகஸ் மௌரா. 16 போட்டிகளில் 29 புள்ளிகள் பெற்றிருக்கிறது ஸ்பர்ஸ்.

அட்டாக்கில் சிறப்பாக இருந்தாலும், டிஃபன்ஸிவ் சொதப்பலால் தொடர்ந்து புள்ளிகளை இழந்துகொண்டே இருக்கிறது வெஸ்ட் ஹாம் யுனைடட். லண்டன் ஸ்டேடியத்தில் நடந்த போட்டியில் சௌதாம்ப்டன் அணியிடம் 2-3 என தோல்வியடைந்திருக்கிறது அந்த அணி. சீசன் தொடக்கத்தில் கோலடித்து அசத்திக்கொண்டிருந்த பென்ராமா, ஆன்டோனியோ இந்தப் போட்டியில் கோலடித்தனர். யான் பெட்னரக், ஜேம்ஸ் வார்ட்-பிரௌஸ், எல்யனூஸி ஆகியோர் கோலடிக்க, இந்த சீசனின் தங்களின் நான்காவது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது சௌதாம்ப்டன்.

Romelu Lukaku
Romelu Lukaku
AP

விலா பார்க் ஸ்டேடியத்தில் நடந்த போட்டியில் ஆஸ்டன் விலாவை 1-3 என வீழ்த்தியது செல்சீ. ஆட்டத்தின் 28-வது நிமிடத்தில் ரீஸ் ஜேம்ஸ் அடித்த கோல் 'ஓன் கோல்' மூலம் முன்னிலை பெற்றது ஆஸ்டன் விலா. 33-வது நிமிடத்தில் ஹட்சன் ஒடோய் பாக்சுக்குள் ஃபவுல் செய்யப்பட்டதால் செல்சீக்கு பெனால்டி கிடைத்தது. அதை ஜார்ஜினியோ வழக்கம்போல் கோலாக்கினார். முதல் பாதியில் 1-1 என சமநிலையோடு முடித்ததால், இரண்டாவது பாதியில் ஃபார்மேஷனை மாற்றினார் தாமஸ் டுசெல். சலோபாவுக்குப் பதிலாக லுகாகுவைக் களாமிறக்கி, 4-2-3-1 என்ற ஃபார்மேஷனுக்கு மாறினார். வந்ததும் 56-வது நிமிடத்தில் கோலடித்து முன்னிலை ஏற்படுத்திக்கொடுத்தார் லுகாகு. ஸ்டாப்பேஜ் டைமில் அவர் ஒரு பெனால்டியும் வென்று கொடுத்தார்.

ஜார்ஜினியோ அதையும் கோலாக்க, 3-1 என வெற்றி பெற்றது செல்சீ. 41 புள்ளிகளுடன் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது அந்த அணி.