Published:Updated:

டேவிட் Vs கோலியாத்… மீண்டும் தொடர்ந்த லிவர்பூல் - ஏ.சி.மிலன் யுத்தமும், சாம்பியன்களின் கதையும்!

லிவர்பூல் - ஏ.சி.மிலன் ( Rui Vieira )

இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியபோது மைதானம் முழுவதும் இருந்த லிவர்பூல் ரசிகர்கள் "You'll never walk Alone" என ஒரு சேர லிவர்பூல் அணியின் பாடலை பாடி, வீரர்களுக்கு நம்பிக்கையும் உற்சாகமும் ஊட்டினார்கள். லிவர்பூல் அணி வீரர்களின் மன உறுதியும் ரசிகர்களின் நம்பிக்கையும் வீண் போகவில்லை.

டேவிட் Vs கோலியாத்… மீண்டும் தொடர்ந்த லிவர்பூல் - ஏ.சி.மிலன் யுத்தமும், சாம்பியன்களின் கதையும்!

இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியபோது மைதானம் முழுவதும் இருந்த லிவர்பூல் ரசிகர்கள் "You'll never walk Alone" என ஒரு சேர லிவர்பூல் அணியின் பாடலை பாடி, வீரர்களுக்கு நம்பிக்கையும் உற்சாகமும் ஊட்டினார்கள். லிவர்பூல் அணி வீரர்களின் மன உறுதியும் ரசிகர்களின் நம்பிக்கையும் வீண் போகவில்லை.

Published:Updated:
லிவர்பூல் - ஏ.சி.மிலன் ( Rui Vieira )

‘One Night in Istanbul’... இந்த வார்த்தையை அறியாத கால்பந்து ரசிகர்கள் மிகவும் குறைவாகத்தான் இருப்பார்கள். 2005-ம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியை நினைவுகூறும் லிவர்பூல் ரசிகர்களின் சொல்லாடல் இது. லிவர்பூல் ரசிகர்கள் மட்டும் இல்லை,கால்பந்து ரசிகர்கள் அனைவராலும் மறக்க முடியாத இறுதிப்போட்டியாக இது அமைந்தது.

2003 ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் சாம்பியனான இத்தாலியின் ஏ.சி.மிலன் அணியை 1985-ம் ஆண்டுக்கு பின் இறுதி போட்டிக்கு முன்னேறிய இங்கிலாந்தின் லிவர்பூல் அணி எதிர்கொண்டது. ஏ.சி.மிலன் அணி கோப்பையை வெல்லும் என்பதே கால்பந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பு. ஏனென்றால் ஏ.சி.மிலன் அணி முழுக்க முழுக்க தரமான, திறமையான வீரர்களைக் கொண்டிருந்தது.

2005-ல் லிவர்பூல்
2005-ல் லிவர்பூல்

கால்பந்து உலகின் சிறந்த தடுப்பாட்ட வீரர் என புகழப்படும் பாலோ மால்டினியுடன், நெஸ்டா, ஸ்டாம், காஃபு, கெட்டுஸ்ஸா, பிர்லோ, சீடோர்ப், செவ்சென்கோ, கிரிஸ்போ, ரிக்கார்டோ காகா என தரம் வாய்ந்த வீரர்களை உள்ளடக்கிய அணி. கோல் போஸ்ட்டில் எப்படிப்பட்ட பந்தையும் தடுக்கும் திறமை கொண்ட பிரேசில் கோல்கீப்பர் டிடா நிற்கிறார். இந்த அணியை எதிர்கொள்ளவே ஒரு துணிவு வேண்டும். இதில் லிவர்பூல் அணியால் வெற்றி கொள்ள இயலுமா என்பதே மிகப்பெரிய கேள்வியாக இருந்தது.

லிவர்பூல் அணி ஸ்டீவன் ஜெரார்டு, ஸாபி அலோன்ஸா போன்ற ஓரிரு இளம் நட்சத்திர வீரர்களை கொண்டிருந்தது. மற்ற லீவர்பூல் வீரர்கள் அனைவருமே ஓரளவு விளையாடக் கூடியவர்களாக இருந்தார்கள். கிட்டத்தட்ட தாவீது கோலியாத்தை எதிர்கொண்ட கதைதான். அதற்கேற்றார்போல போட்டி தொடங்கிய முதல் நிமிடத்திலேயே பிர்லோ அடித்த ஃப்ரீ கிக்கை ஏ.சி.மிலன் கேப்டன் பாலோ மால்டினி மின்னல் வேகத்தில் காலில் உதைத்து கோலாக்கினார். மிலன் அணி தொடுத்த உயர் அழுத்த ஆட்டத்தினால் 39,44-வது நிமிடங்களில் அடுத்தது கோல்கள் விழுந்தன. இந்த இரண்டு கோல்களையும் கிரிஸ்போ அடித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

லிவர்பூல் அணி வீரர்கள் களத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றார்கள். ஆட்டம் முற்றிலும் கையை விட்டு சென்ற நிலைமை. 0-3 என்ற கோல் கணக்கில் பின்தங்கி இருக்கிறது லிவர்பூல். மிகச்சிறந்த தடுப்பாட்ட அணியை தாண்டி மீண்டெழுந்து வெற்றி பெறுவது அவ்வளவு சாதரணமான விஷயமா என்ன? சில லிவர்பூல் ரசிகர்கள் மைதானத்தில் கண்ணீர் விட்டு அழத் தொடங்கினார்கள். ஆனால், லிவர்பூல் வீரர்கள் துவண்டு விடவில்லை.

இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியபோது மைதானம் முழுவதும் இருந்த லிவர்பூல் ரசிகர்கள் "You'll never walk Alone" என ஒரு சேர லிவர்பூல் அணியின் பாடலை பாடி, வீரர்களுக்கு நம்பிக்கையும் உற்சாகமும் ஊட்டினார்கள். லிவர்பூல் அணி வீரர்களின் மன உறுதியும் ரசிகர்களின் நம்பிக்கையும் வீண் போகவில்லை.

ஏசி மிலன் வீரர் Brahim Diaz
ஏசி மிலன் வீரர் Brahim Diaz
Rui Vieira

ஆட்டத்தின் 54-வது நிமிடத்தில் கிராஸ் ஒன்றை தலையால் முட்டி அற்புதமாக கோல் அடித்தார் லிவர்பூல் கேப்டன் ஸ்டீவன் ஜெரார்டு. உடனே 56-வது நிமிடத்தில் விளாமிடிர் (Vladimír Šmicer) கோல் கம்பத்தின் ஓரத்தில் துல்லியமாக கோல் அடித்து லிவர்பூல் ரசிகர்களை உற்சாசம் கொள்ளச்செய்தார். என்ன நடக்கிறது என்று மிலன் வீரர்கள் தடுமாறி கொண்டிருந்த போதே, டி பாக்ஸில் ஸ்டீவன் ஜெரார்டை கீழே தள்ளிவிட்டு, லிவர்பூல் அணிக்கு பெனால்ட்டி கிடைக்க வழி செய்து கொடுத்துவிட்டார்கள்.

போட்டியின் 60-வது நிமிடத்தில் பெனால்ட்டி வாய்ப்பை அலோன்சா கோலாக்கினார். அவ்வளவுதான். லிவர்பூல் ரசிகர்களின் ஆரவாரத்தில் அரங்கமே அதிர ஆரம்பித்தது. 3 கோல்கள் பின்தங்கி இருந்து,

தோல்வி நிச்சயம் என்று நினைத்து கொண்டிருந்த வேளையில், 6 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து 3 கோல்களை அடித்து கோல் எண்ணிக்கையை சமன் செய்தது லிவர்பூல் அணி. அதன் பிறகு மிலன் அணியினர் கோல் அடிக்க முயற்சித்த அத்தனை வாய்ப்புகளையும் முறியடித்தனர். இந்த போட்டி நம் கையை விட்டு போய்விடக்கூடாது என உயிரைக் கொடுத்து விளையாடினர் லிவர்பூல் வீரர்கள்.

லிவர்பூல்
லிவர்பூல்
Rui Vieira

90 நிமிடங்கள் முடிந்து கூடுதல் நேரத்திலும் யாரும் கோல் அடிக்காததால், ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கோப்பை யாருக்கு என முடிவு செய்ய போட்டி பெனால்ட்டி ஷுட் அவுட்டுக்குச் சென்றது. பெனால்ட்டி ஷூட் அவுட்டில் லிவர்பூல் கோல் கீப்பர் ஜெர்ஸி டுடெக் இரண்டு கோல்களை தடுக்க இறுதியாக லிவர்பூல் அணி 3-2 என்ற கோல் கணக்கில் பெனால்ட்டி ஷூட் அவுட்டில் வெற்றி பெற்று 2005 ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் வெற்றியாளராக வாகை சூடியது.

2005 சாம்பியன்ஸ் லீக் தோல்வி மிலன் அணிக்கு ஆறாத வடுவாக மாறி இருந்தது. லிவர்பூல் அணிக்கு பதிலடி கொடுக்கும் வாய்ப்பு கூடிய சீக்கிரமே கிடைத்தது. 2007 சாம்பியன்ஸ் லீக் இறுதி போட்டிக்கு இம்முறையும் மிலன் அணியும் லிவர்பூல் அணியும் தகுதி பெற்றன. கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரில் நடைபெற்ற போட்டியில் 2005-ம் ஆண்டு பங்கேற்ற வீரர்களில் இரண்டு அணிகளிலும் பெரிய அளவில் மாற்றம் இல்லை,பயிற்சியாளர்கள் உட்பட. மிலன் வீரர்கள் பதிலடி கொடுத்து பழி தீர்த்தே ஆக வேண்டும் என்று ஆக்ரோஷமாக விளையாடினார்கள். பிலிப்போ (Filippo Inzaghi) போட்டியின் 45, 82-வது நிமிடத்தில் கோல் அடித்து முன்னிலை பெறச் செய்தார். ஆரம்பத்தில் லிவர்பூல் அணி வீரர்கள் எவ்வளவு முயன்றும் கோல் அடிக்க முடியவில்லை. போட்டியின் 89-வது நிமிடத்தில் லிவர்பூல் வீரர் குயிட் தலையால் முட்டி கோல் அடித்தார். மீண்டும் இஸ்தான்புல் அதிசயம் நடக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் மேற்கொண்டு கோல் அடிக்க முடியாததால்,மிலன் அணி வெற்றி பெற்று லீவர்பூல் அணிக்கு பதிலடி கொடுத்து 2007 சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றது.

2007-ம் ஆண்டுக்குப் பிறகு லிவர்பூல், ஏ.சி.மிலன் இரு அணிகளாலும் சாம்பியன்ஸ் லீக் தொடரில் பெரிதாக சோபிக்க இயலவில்லை. ஆனால், கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப்பிறகு 2018-ம் ஆண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறியது லிவர்பூல். அந்த ஆண்டு ரியல் மாட்ரிட் அணியிடம் தோல்வியுற்று, கோப்பையை இழந்த லிவர்பூல் அணி அடுத்த ஆண்டிலும் சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டிக்கு முன்னேறி டாட்டன்ஹாம் ஸ்பர்ஸ் அணியை வீழ்த்தி 2019 சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றது. ஆனால், மறுபுறம் மிலன் அணி ஐரோப்பிய கால்பந்தில் தன்னுடைய மோசமான சரிவை சந்தித்து சாம்பியன்ஸ் லீக் போட்டிகளுக்குக் கூட 2014-ல் இருந்து தகுதி பெறவில்லை. இந்த சூழலில்தான் 2021-ம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றது ஏ.சி.மிலன்.

லிவர்பூல் VS ஏ.சி.மிலன்
லிவர்பூல் VS ஏ.சி.மிலன்
Rui Vieira

2021 சாம்பியன்ஸ் லீக் தொடரின் ஒரே பிரிவில் லிவர்பூல், மிலன் அணிகள் இடம்பெற்றன. நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற பரபரப்பான முதல் சுற்று ஆட்டத்தில் லிவர்பூல் அணி மிலன் அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி கொண்டது. மிலன் அணி தோற்ற போதிலும், ஆட்டத்தின் முதல் பாதியில் 2-1 என்று முன்னிலை வகித்தது மிலன். ஐரோப்பிய கால்பந்தில் ஏ.சி.மிலன் மீண்டெழுந்த அற்புதமான தருணம் என்று கால்பந்து ரசிகர்கள் இதை கொண்டாடுகின்றனர். தோல்வியைத் தாண்டி 7 முறை ஐரோப்பிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற மிலன் அணி மீண்டும் ஐரோப்பிய கால்பந்தில் பங்கேற்பதே கால்பந்து ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டம்தான்!