Published:Updated:

Premier League: தொடரும் ஆலிசன் பெக்கரின் தவறுகள்... வெற்றியைத் தவறவிட்ட லிவர்பூல்!

Alisson Becker
News
Alisson Becker

ஆஸ்டன் விலா, லெஸ்டர் போன்ற அணிகளிலும் நிறையப் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இந்நிலையில், இந்த வாரம் நடக்கவிருந்த 6 போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன.

அவ்வப்போது தவறு செய்துகொண்டிருக்கும் லிவர்பூல் கோல்கீப்பர் ஆலிசன் பெக்கர் நேற்றும் ஒரு மிகப்பெரிய தவறு செய்ய, டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிக்கெதிரான போட்டியில் வெற்றி வாய்ப்பைத் தவறவிட்டிருக்கிறது லிவர்பூல். போட்டி 2-2 என டிரா ஆனதால், இப்போது டைட்டில் ரேஸில் 3 புள்ளிகள் பின்தங்கியிருக்கிறது. செல்சீயும் வெற்றி பெறத் தவறியதால், மான்செஸ்டர் சிட்டியைவிட 6 புள்ளிகள் குறைவாகப் பெற்று மூன்றாம் இடத்தில் நீடிக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஓமைக்ரன் பரவுவதால் மீண்டும் கால்பந்து போட்டிகள் பாதிப்புக்குள்ளாகத் தொடங்கிவிட்டன. கடந்த சில வாரங்களாகவே சில போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஒருசில அணிகள் கடுமையாகவே பாதிக்கப்பட்டிருக்கின்றன. டாட்டன்ஹாம் அணி முதல் முறையாக பாதிக்கப்பட, அவர்களின் இரண்டு போட்டிகள் தள்ளிப் போனது. பிரென்ட்ஃபோர்ட் அணியில் வீரர்கள், பயிற்சியாளர்கள் உள்பட 13 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மான்செஸ்டர் யுனைடட் அணியிலோ 6-7 வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் நிலையில் இருக்கிறார்கள் என்று கூறப்பட்டது. இதுபோக, ஆஸ்டன் விலா, லெஸ்டர் போன்ற அணிகளிலும் நிறையப் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இந்நிலையில், இந்த வாரம் நடக்கவிருந்த 6 போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன.

ஒத்திவைக்கப்பட்ட போட்டிகள்

மான்செஸ்டர் யுனைடட் vs பிரைட்டன் அண்ட் ஹோவ் ஆல்பியான்
ஆஸ்டன் விலா vs பர்ன்லி
சௌதாம்ப்டன் vs பிரென்ட்ஃபோர்ட்
வாட்ஃபோர்ட் vs கிறிஸ்டல் பேலஸ்
வெஸ்ட் ஹாம் யுனைடட் vs நார்விச் சிட்டி
எவர்டன் vs லெஸ்டர்
Arsenal players celebrating the goal
Arsenal players celebrating the goal
AP

சனிக்கிழமை மட்டுமே நடக்கவிருந்த 6 போட்டிகளில் 5 போட்டிகள் தள்ளிவைக்கப்பட, எல்லண்ட் ரோடில் லீட்ஸ் யுனைடட், ஆர்செனல் ஆட்டம் எவ்வித தடங்கலும் இல்லாமல் தொடங்கியது. சமீப வாரங்களாக படுமோசமாக டிஃபண்ட் செய்துகொண்டிருக்கும் லீட்ஸ் யுனைடட் இந்தப் போட்டியிலும் அந்த மோசமான செயல்பாட்டைத் தொடர்ந்தது. இளம் வீரர் கேப்ரியல் மார்டினெல்லி 28 நிமிடத்திற்குள்ளாகவே இரண்டு கோல்கள் அடித்தார். 42-வது நிமிடத்தில் புகாயோ சகாவும் கோலடிக்க, முதல் பாதியின் முடிவிலேயே 3 கோல்கள் முன்னிலை பெற்றது ஆர்செனல்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

75-வது நிமிடத்தில் ரஃபினியா பெனால்டி மூலம் ஒரு கோல் அடித்தார். மாற்று வீரராக எமில் ஸ்மித் ரோவ் தன் அட்டகாச ஃபார்மைத் தொடர்ந்தார். இந்தப் போட்டியிலும் அவர் கோலடிக்க, ஆர்செனல் 4-1 என வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 32 புள்ளிகள் பெற்று நான்காவது இடத்துக்கு முன்னேறியது ஆர்டேடாவின் அணி.

Riyad Mahrez
Riyad Mahrez
AP

இந்த சீசனில் மிகச் சிறப்பாக விளையாடிக்கொண்டிருக்கும் நடப்பு சாம்பியன் மான்செஸ்டர் சிட்டி, நியூகாசிள் யுனைடட் அணியை 4-0 என வீழ்த்தியது. கேப்டன் ரூபென் டியாஸ் கோலடித்து ஸ்கோரைத் தொடங்கிவைத்தார். டிஃபண்டராக இருந்தாலும் தொடர்ந்து அசத்திக்கொண்டிருந்த ஜோ கன்சலோ டியாஸின் கோலுக்கு அசிஸ்ட் செய்ததோடு, இரண்டாவது கோலையும் அடித்தார். கன்சலோவின் கோலுக்கு அசிஸ்ட் செய்த மாரஸ், இரண்டாவது பாதியில் கோலடித்து முன்னிலையை மூன்றாக்கினார். ரஹீம் ஸ்டெர்லிங் 86-வது நிமிடத்தில் கோலடிக்க, அந்த அணி 4-0 என வெற்றி பெற்றது. 18 போட்டிகளில் விளையாடியிருக்கும் சிட்டி, இதுவரை 44 புள்ளிகள் பெற்றிருக்கிறது.

மோலினியூ மைதானத்தில் நடந்த வோல்வர்ஹாம்ப்டன் வாண்டரர்ஸ் vs செல்சீ ஆட்டம் 0-0 என முடிந்தது. 15-வது நிமிடத்தில் வோல்வ்ஸ் வீரர் டேனியல் பொடன்ஸ் கோலடித்தார். ஆனால், அப்போது ரௌல் கிமினெஸ் ஆஃப் சைடில் இருந்ததால், அந்த கோல் மறுக்கப்பட்டது. அதன்பிறகு இரண்டு அணிகளும் கோலடிக்கவே இல்லை. முதல் பாதி முழுக்கவே வோல்வ்ஸ்தான் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்தது. இருந்தாலும், இரண்டாம் பாதியில் கம்பேக் கொடுத்தது செல்சீ. நன்றாக அட்டாக் செய்தார்கள். இருந்தாலும், அவர்களால் கோலடிக்க முடியவில்லை. புலிசிக் தனக்குக் கிடைத்த ஒரு வாய்ப்பை கோல் நோக்கி அடித்தும் அதை வோல்வ்ஸ் கோல்கீப்பர் ஜோஸே ஸா சிறப்பாகத் தடுத்தார். தொடர்ந்து இரண்டாவது போட்டியாக டிரா செய்திருக்கும் செல்சீ, 38 புள்ளிகள் பெற்றிருக்கிறது.

Andy Robertson received a red
Andy Robertson received a red
AP

இந்த கேம்வீக்கின் கடைசிப் போட்டியான டாட்டன்ஹாம் vs லிவர்பூல் 2-2 என முடிந்தது. ஆட்டத்தின் 13-வது நிமிடத்தில் எண்டோம்பலே கொடுத்த அற்புதமான பாஸை கோலாக்கினார் ஸ்பர்ஸ் ஸ்டிரைக்கர் ஹேரி கேன். ஆனால், 35-வது நிமிடத்தில் டியோகோ ஜோடோ கோலடித்து ஆட்டத்தை சமனாக்கினார். அந்த கோலுக்கு அசிஸ்ட் செய்த ஆண்டி ராபர்ட்சன், 69-வது நிமிடத்தில் கோலடித்து லிவர்பூலுக்கு முன்னிலை ஏற்படுத்திக் கொடுத்தார். ஆனால், அடுத்த சில நிமிடங்களிலேயே ஆலிசன் செய்த தவற்றைப் பயன்படுத்தி ஹியூங் மின் சன் கோலடித்தார். 77-வது நிமிடத்தில் ராபர்ட்சன் ரெட் கார்டு வேறு வாங்கியதால், லிவர்பூலால் மூன்றாவது கோலை அடிக்க முடியவில்லை. இறுதியில் ஆட்டம் 2-2 என முடிந்தது.

லிவர்பூல் 41 புள்ளிகளுடன் (18 போட்டிகள்) இரண்டாவது இடத்திலும், ஸ்பர்ஸ் 26 புள்ளிகளுடன் (15 போட்டிகள்) ஏழாவது இடத்திலும் இருக்கின்றன.