Published:Updated:

மெஸ்ஸியின் முதல் கோல்… பாரிஸ் அணியில் கால்பந்து பிதாமகனின் வெற்றிக் கணக்கு தொடங்கிய த்ரில் தருணம்!

ஐரோப்பிய கால்பந்து வரலாற்றில் முதல்முறையாக மெஸ்ஸியின் கோல் பார்சிலோனாவுக்காக அல்லாமல் வேறு அணிக்காக விழுந்திருக்கிறது. முதல்முறையாக வேறு அணி ஜெர்ஸியில் கோல் அடித்து கைகளை வான் நோக்கி உயர்த்தியிருக்கிறார் லயோனல் மெஸ்ஸி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

லயோனல் மெஸ்ஸி எப்போது பாரிஸ் அணிக்கு தன்னுடைய முதல் கோலை அடிப்பார் என மெஸ்ஸி ரசிகர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த கால்பந்து உலகமே எதிர்பார்த்து கொண்டிருந்தது… இறுதியாக அந்த சம்பவம் நேற்றிரவு நடந்தேறிவிட்டது.

பார்சிலோனா அணியில் இருந்து வெளியேறி பாரிஸ் அணியில் இணைந்த லயோனல் மெஸ்ஸி ரீம்ஸ் அணிக்கு எதிராக ஆகஸ்ட் 30 அன்று முதல் போட்டியில் விளையாடினார். அந்த போட்டியில் கோல் எதுவும் அடிக்கவில்லை. அதன்பிறகு பங்கேற்ற 2 போட்டிகளிலும் கோல் அடிக்கவில்லை. அடுத்த 3 போட்டிகளில் காயம் காரணமாக விளையாடாமல் இருந்தார். இதனால் மெஸ்ஸி பாரிஸ் அணிக்கு எப்போது முதல் கோலை அடிப்பார் என்று அனைவரும் காத்திருந்தனர்.

மறுபுறம் மெஸ்ஸியுடன் எப்போதும் ஒப்பிட்டு பேசப்படும் கிறிஸ்டியனோ ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இணைந்ததில் இருந்து இதுவரை 4 கோல்கள் அடித்துவிட்டார். இது மெஸ்ஸிக்கும் மெஸ்ஸி ரசிகர்களுக்கும் மிகுந்த அழுத்தத்தை கொடுத்தது.

மெஸ்ஸி
மெஸ்ஸி
Christophe Ena

இந்நிலையில் காயத்தில் இருந்து மீண்ட லயோனல் மெஸ்ஸி மான்செஸ்டர் சிட்டி அணிக்கு எதிராக ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் தொடரின் லீக் போட்டியில் நேற்றிரவு ஆடுவது உறுதி செய்யப்பட்டது. இங்கிலாந்து பிரிமீயர் லீகின் சாம்பியன், கடந்த ஆண்டு ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீகின் ரன்னர் அப் என பலம் வாய்ந்த மான்செஸ்டர் சிட்டி அணியை பாரிஸ் செயின்ட் அணி தன்னுடைய சொந்த மண்ணில் நேற்று எதிர்கொண்டது. மான்செஸ்டர் அணியில் சூப்பர் ஸ்டார் என்று யாரும் இல்லை என்றாலும், கெவின் டி புரூனே, ஜாக் கிரியலிஸ், ஃபெர்னாண்டோ சில்வா, ரியாத் மெக்ரேஸ், ஸ்டெர்லிங், ரூபன் டையஸ் என அணியில் விளையாடும் வீரர்கள் அனைவரும் தரம் வாய்ந்தவர்கள். அந்த அணியின் பயிற்சியாளர் பெப் கார்டியாலோ உலகின் சிறந்த பயிற்சியாளர்களில் ஒருவர்.

மெஸ்ஸி, நெய்மார், எம்பாப்பே என உலகின் சிறந்த வீரர்களை உள்ளடக்கிய பாரிஸ் செயின்ட் அணியும் சிட்டி அணிக்கு சளைத்தவர்கள் அல்ல. இதனால் கால்பந்து ரசிகர்கள் மத்தியில் இந்த போட்டியை காண விறுவிறுப்பு கூடி இருந்தது.

போட்டி தொடங்கிய ஆட்டத்தின் 8-வது நிமிடத்தில் பாரிஸ் செயின்ட் ஜெர்மன் அணியின் இட்ரிஸ்ஸா குயே சிட்டியின் டி பாக்சில் நெய்மார் பாஸ் செய்த ஒரு பந்தை கோல் கம்பத்தின் மூலையில் அருமையாக அடித்து கோலாக்கினார். அடுத்து மான்செஸ்டர் சிட்டி அதிக அழுத்தம் கொடுத்து ஆடி,கோல் அடிப்பதற்கான சில வாய்ப்புகளை உருவாக்கிய போதும் கோல் அடிக்கவில்லை. ஸ்டெர்லிங் ஒரு பந்தை தலையால் முட்டி கோல் அடிக்க முயற்சித்த போது, கோல் கம்பத்தில் பட்டு திரும்ப வந்தது. அதை ஃபெர்னாண்டோ சில்வா எளிதாக கோல் அடித்து இருக்கலாம். ஆனால் கோல் கம்பத்திற்கு மேல அடித்து, சமன் செய்யும் எளிதான வாய்ப்பை வீணாக்கினார்.

மெஸ்ஸி
மெஸ்ஸி
Michel Euler

அதன்பின் சிட்டி அணி வீரர்கள் கோல் அடிக்க முயற்சித்த அனைத்து பந்துகளையும் பாரிஸ் செயின்ட் ஜெர்மன் அணியின் கோல் கீப்பர் கியான்லுகி டொனரூமா அருமையாக தடுத்து அவர்களுக்கு எரிச்சலூட்டினார். இத்தாலி அணி 2020 யூரோ கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்த கியான்லுகி டொனரூமாவின் முதல் பாரிஸ் செயின்ட் ஜெர்மன் போட்டி இதுவாகும்.

1-0 என்ற பின்தங்கிய நிலையில் இரண்டாம் பாதி ஆட்டத்தை தொடங்கிய சிட்டி அணியால் கோல் வாய்ப்புகளை உருவாக்க முடிந்ததே தவிர கோல் அடிக்க முடியவில்லை. சிட்டி அணியில் சரியாக கோல் அடிக்க ஸ்ட்ரைக்கர் இல்லாத பலவீனம் தெளிவாகத் தெரிந்தது. இரு அணிகளும் சரிக்கு சமமாக எதிர் தாக்குதல் தொடுத்து கொண்டிருந்தனர்.

மெஸ்ஸி
மெஸ்ஸி
Christophe Ena

போட்டியின் 74-வது நிமிடத்தில் மைதானத்தின் பாதியில் இருந்து பந்தை பெற்று உருட்டி வந்த லயோனல் மெஸ்ஸி, டி பாக்ஸ் அருகில் கிலியன் எம்பாப்பே-க்கு பாஸ் செய்ய, அதை மெஸ்ஸிக்கு மீண்டும் பாஸ் செய்தார் எம்பாப்பே. கோல் கம்பத்துக்கு 18 மீட்டர் தொலைவில் இருந்து மெஸ்ஸி பந்தை உதைக்க, சுழன்று கொண்டு கோல் கம்பத்தின் மூலையில் சென்று அற்புதமான கோலானது. அவ்வளவுதான். வழக்கமான பார்சிலோனா கோல் போல, மெஸ்ஸி தன்னுடைய முதல் கோலை அடித்து விட்டு, துள்ளி குதித்து சக வீரர்களுடன் மைதானத்தில் ஓடினார். பாரிஸ் மைதானம் முழுவதும் நிரம்பி இருந்த ரசிகர்கள் ‘’மெஸ்ஸி’’, ‘’மெஸ்ஸி" என கூறி ஆரவாரம் செய்தனர்.

மேற்கொண்டு இரு அணிகளும் கோல் அடிக்காததால் பாரிஸ் செயின்ட் ஜெர்மன் அணி 2-0 என்ற கோல் கணக்கில் சிட்டி அணியை வீழ்த்தியது. இந்த வருடம் சாம்பியன்ஸ் லீக் தொடரை வெல்லும் அணி எனக் கணிக்கப்பட்டிருக்கும் பாரிஸ் செயின்ட் ஜெர்மன் அதற்கேற்றது போல் விளையாடி வெற்றி பெற்றது. மான்செஸ்டர் சிட்டி அணி நன்றாக விளையாடிய போதிலும்,கோல் அடிக்கும் வாய்ப்புகளை வீணாக்கியதால் தோல்வியுற்றது.

போட்டி முடிந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய மான்செஸ்டர் சிட்டி பயிற்சியாளர் பெப் கார்டியாலோ,"போட்டியில் தோல்வியுற்றது வருத்தமாக இருக்கிறது என்றாலும், லயோனல் மெஸ்ஸி கோல் அடித்தது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. ஏனென்றால் பார்சிலோனா அணியில் இருக்கும் போது மெஸ்ஸி என்னை மகிழ்வித்தார்" என்று சொன்னார்.

மெஸ்ஸி
மெஸ்ஸி
Christophe Ena

பெப் கார்டியாலோ லயோனல் மெஸ்ஸியை 2008-2012 வரை பார்சிலோனா அணியில் வழிநடத்தியவர். பெப் கார்டியாலோவுக்கு மட்டும் இல்லை,மெஸ்ஸி ரசிகர்களை தாண்டி ஒட்டுமொத்த கால்பந்து ரசிகர்களுக்கும் மெஸ்ஸி பாரிஸ் அணிக்கு தன்னுடைய முதல் கோலை அடித்தது மகிழ்ச்சிக்குரிய ஒன்றுதான்.

மெஸ்ஸியின் கோல் வேட்டைத் தொடர வேண்டும் என வேண்டுதல்களில் இறங்கிவிட்டார்கள் மெஸ்ஸி ரசிகர்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு