ஜெர்மனி மட்டுமல்லாமல், போர்ச்சுகல், ஆஸ்திரியா, செக் குடியரசு, டென்மார்க், அல்பேனியா, ஹங்கேரி, போலாந்து, எஸ்தோனியா, மான்டனேக்ரோ என ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகளில் கால்பந்து லீக் தொடங்கிவிட்டது. கோஸ்டா ரிகா, இஸ்ரேல் போன்ற நாடுகளிலும் போட்டிகள் நடக்கத் தொடங்கவிட்டன. இங்கிலாந்து, ஸ்பெயின், இத்தாலி போன்ற ஒருசில நாடுகள் தவிர்த்து, கிட்டத்தட்ட அனைத்து லீக் தொடர்களுமே நடந்துகொண்டிருக்கின்றன. கால்பந்து உலகில் நடந்துவரும் அப்டேட்கள் இங்கே…
பயிற்சியால் ஏற்பட்ட பாதிப்பு
ஆஸ்திரியாவின் புண்டஸ்லிகா தொடரில், சாம்பியன் பட்டத்தில் பெரிய தாக்கம் ஏற்படுத்தும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த LASK அணி, கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறீயதற்காகத் தண்டிக்கப்பட்டுள்ளது. தொடர் தொடங்குவதற்கு முன் அணிகளின் பயிற்சி செய்ய சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. தொடக்கக் கட்டத்தில், வீரர்கள் சிறு சிறு குழுக்களாக மட்டுமே பயிற்சி மேற்கொள்ளவேண்டும் என்றிருந்த நிலையில், LASK வீரர்கள் மொத்தமாகப் பயிற்சி செய்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விஷயத்தை விசாரித்த புண்டஸ்லிகா நிர்வாகம், சாம்பியன்ஷிப் சுற்றிலிருந்து அந்த அணிக்கு 6 புள்ளிகளைக் குறைத்து அறிக்கை வெளியிட்டது. ரெகுலர் சுற்று முடிந்தபோது 27 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தது அந்த அணி. சால்ஸ்பெர்க், 24 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் இருந்தது. அதனால் 21 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது LASK. அதுமட்டுமல்லாமல், சாம்பியன்ஷிப் ரவுண்டின் முதல் சுற்றில் ஹார்ட்பெர்க் அணிக்கெதிராகத தோற்றதால், LASK இப்போது சால்ஸ்பெர்க் அணியைவிட 6 புள்ளிகள் பின்தங்கிவிட்டது.

ஐ.எஸ்.எல் டிரான்ஸ்ஃபர்கள்
ஐ.எஸ்.எல் அணிகள் ஆஃப் சீசன் டிரான்ஸ்ஃபர்களைத் தொடங்கிவிட்டன. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சந்தேஷ் ஜிங்கன் சில நாள்கள் முன்பு அந்த அணியிலிருந்து வெளியேறினார். இப்போது ஹைதராபாத் எஃப்.சி அணி, இந்தியாவின் முன்னணி கோல்கீப்பர் சுப்ரதா பாலை ஒப்பந்தம் செய்திருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக ஜாம்ஷெட்பூர் அணிக்கு ஆடிக்கொண்டிருந்தவர், இரண்டு ஆண்டுகளுக்கு ஹைதராபாத் அணியோடு ஒப்பந்தம் செய்திருக்கிறார். சில நாள்களுக்கு முன் கோல்கீப்பர் கமல்ஜித்துடனான ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், அவரை ரிலீஸ் செய்திருந்தது ஹைதராபாத் அணி. முன்னாள் சாம்பியன் பெங்களூரு எஃப்.சி, இரண்டு வீரர்களை ஒப்பந்தம் செய்திருக்கிறது. டிஃபண்டர் பிரதீக் சௌத்ரி, கோல்கீப்பர் லால்துமாவியா ரால்டே இருவரும் அந்த அணியோடு புதிதாக இணைந்திருக்கிறார்கள்.
பிரீமியர் லீகிலும் 5 சப்ஸ்டிட்யூட்கள்
கொரோனா பாதிக்குப் பிறகு போட்டிகள் தொடங்கியபோது, மூன்றுக்குப் பதிலாக 5 சப்ஸ்டிட்யூட்கள் பயன்படுத்தலாம் என்று ஃபிஃபா அறிவித்திருந்தது. ஜெர்மனி, ஆஸ்திரியா போன்ற நாடுகளில் அது கடைப்பிடிக்கப்பட்டுவந்தபோதும், பிரீமியர் லீக் அந்த முடிவை உறுதிப்படுத்தவில்லை. சமீபத்தில் நடந்த பிரீமியர் லீக் அணிகளின் கூட்டத்தில், அந்த முடிவு உறுதிசெய்யப்பட்டுள்ளது. வழக்கமாக 7 வீரர்கள் மட்டும் பெஞ்சில் இருக்க அனுமதிக்கப்படும். இப்போது அந்த எண்ணிக்கை ஒன்பதாக உயர்த்தப்பட்டுள்ளது. மற்றபடி, மற்ற லீகுகளில் கடைப்பிடிக்கப்படும் 3 ஸ்டாப்பேஜ் விதி பிரீமியர் லீகிலும் கடைப்பிடிக்கப்படும். அதாவது. 5 மாற்று வீரர்கள் அனுமதிக்கப்பட்டாலும், சப்ஸ்டிட்யூஷனுக்காக ஆட்டத்தை ஒரு அணி 3 முறை மட்டுமே நிறுத்த முடியும். அதை பிரீமியர் லீகும் கடைப்பிடிக்கும்.