Published:Updated:

பிரீமியர் லீக்: 4 கோல்கள் அடித்த கெவின் டி புருய்னா... கோப்பையை நோக்கி நகரும் மான்செஸ்டர் சிட்டி!

Kevin de Bruyne ( AP )

இரண்டாவது இடத்திலிருக்கும் லிவர்பூலை விட 3 புள்ளிகள் அதிகம் பெற்றிருப்பதோடு, கோல் வித்தியாசத்திலும் 7 கோல்கள் அதிகம் வைத்திருக்கிறது மான்செஸ்டர் சிட்டி. அடுத்த இரண்டு போட்டிகளில் 4 புள்ளிகள் எடுத்தாலே அந்த அணி பிரீமியர் லீக் பட்டம் வென்றுவிடும்.

பிரீமியர் லீக்: 4 கோல்கள் அடித்த கெவின் டி புருய்னா... கோப்பையை நோக்கி நகரும் மான்செஸ்டர் சிட்டி!

இரண்டாவது இடத்திலிருக்கும் லிவர்பூலை விட 3 புள்ளிகள் அதிகம் பெற்றிருப்பதோடு, கோல் வித்தியாசத்திலும் 7 கோல்கள் அதிகம் வைத்திருக்கிறது மான்செஸ்டர் சிட்டி. அடுத்த இரண்டு போட்டிகளில் 4 புள்ளிகள் எடுத்தாலே அந்த அணி பிரீமியர் லீக் பட்டம் வென்றுவிடும்.

Published:Updated:
Kevin de Bruyne ( AP )
கெவின் டி புருய்னாவின் அட்டகாசமான ஆட்டத்தால் வோல்வர்ஹாம்ப்டன் வாண்டரர்ஸ் அணியைப் பந்தாடியது மான்செஸ்டர் சிட்டி. முதல் நிமிடம் முதல் 90-வது நிமிடம் வரை தன் வித்தையைக் காட்டிக்கொண்டே இருந்த டி புருய்னா 4 கோல்கள் அடித்து அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் பிரீமியர் லீக் புள்ளிப் பட்டியலில் லிவர்பூல் அணியுடனான 3 புள்ளி இடைவெளியை தக்கவைத்திருக்கிறது மான்செஸ்டர் சிட்டி.

மோலின்யூ மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் இரு அணிகளும் ஆரம்பத்தில் இருந்தே அட்டாக் செய்தன. அதனால், முதல் அரை மணி நேரத்திலேயே 4 கோல்கள் அடிக்கப்பட்டன. முதல் கோல் ஏழாவது நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டி அடித்தது. அட்டாகிங் தேர்டில் பந்தை மீட்ட டி புருய்னா, பெர்னார்டோ சில்வா உடன் 1-2 ஆடினார். பந்தைப் பெற்ற சில்வா, பாக்சுக்குள் த்ரூ பால் கொடுக்க, அதை தன் இடது காலால் கோல் நோக்கி அடித்து ஸ்கோர் செய்தார்.

உடனே வோல்வர்ஹாம்ப்டன் அணியும் அட்டாக் செய்தது. பந்தோடு பாக்ஸுக்குள் நுழைந்த சிகுன்யோ கோலடிப்பார் என்று எதிர்பார்ப்பதற்குள், ஆய்மரிக் லபோர்ட் மிகச் சிறப்பாக அதை டேக்கிள் செய்தார். ஆனால், அடுத்த சில நிமிடங்களிலேயே வோல்வ்ஸ் அணி கோலடித்தது. அட்டாக் செய்த மான்செஸ்டர் சிட்டி வீரர்கள் பந்தைத் தவறவிட, வோல்வ்ஸ் வீரர்கள் கவுன்ட்டர் அட்டாக் செய்தனர். ரௌல் கிமினஸ், பெட்ரோ நெடோவுக்கு பந்தை பாஸ் செய்ய, அவர் அதை டென்டோன்கரிடம் அனுப்பினார். பாக்சின் ஓரத்திலிருந்து ஷுட் செய்து அதை கோலாக்கினார் டென்டோன்கர். ஆட்டம் 1-1 என சமனானது.

ஆனால், அந்த சமநிலை 5 நிமிடம் கூட நீடிக்கவில்லை. இடது விங்கில் இருந்த ஜின்சென்கோவுக்கு பந்தை பாஸ் செய்துவிட்டு முன்னேறினார் டி புருய்னா. அதை பாக்சுக்குள் இருந்த ஸ்டெர்லிங்குக்கு அனுப்ப நினைத்தார் ஜின்சென்கோ. ஆனால், வோல்வ்ஸ் கோல்கீப்பர் ஜோஸே சா அதைத் தடுத்தார். இருந்தாலும் பந்து பாக்சுக்குளேயே ரீபௌண்ட் ஆனது. அதை டி புருய்னாவே கோலாக்கி மிண்டும் மான்செஸ்டர் சிட்டிக்கு முன்னிலை ஏற்படுத்திக்கொடுத்தார்.

டி புருய்னாவின் தாண்டவம் அதோடு நிற்கவில்லை. 24-வது நிமிடத்தில் மூன்றாவது கோலையும் அடித்து ஹாட்ரிக்கை நிறைவு செய்தார் அவர். ரஹீம் ஸ்டெர்லிங் ஏற்படுத்திக் கொடுத்த வாய்ப்பை கோலாக்கி, முன்னிலையை இரட்டிப்பாக்கினார் டி புருய்னா. அதன்பிறகு ரோட்ரி, ஸ்டெர்லிங் போன்றவர்கள் முயற்சி செய்தாலும் முதல் பாதியில் கோல் அடிக்கப்படவில்லை. அதனால், முதல் பாதி 1-3 என முடிவுக்கு வந்தது.

Kevin de Bruyne
Kevin de Bruyne
AP

இரண்டாவது பாதி தொடங்கிய மூன்றாவது நிமிடத்திலேயே ரஹிம் ஸ்டெர்லிங் கோலடித்தார். ஆனால், அவர் ஆஃப் சைடில் இருந்ததால் அது நிராகரிக்கப்பட்டது. 57-வது நிமிடத்தில் வோவர்ஹாம்ப்டன் வாண்டரர்ஸ் இரண்டாவது கோலை அடித்திருக்கும். அந்த அணிக்குக் கிடைத்த கார்னர் வாய்ப்பிலிருந்து கானர் கோடி அற்புதமாக கோல் நோக்கி அடித்தார். ஆனால், அதை மிகச் சிறப்பாகத் தடுத்தார் மான்செஸ்டர் சிட்டி கோல்கீப்பர் எடர்சன். மூன்று நிமிட இடைவெளியில் இன்னொரு கோல் விழுந்தது. ஆனால், அதை அடித்தது மான்செஸ்டர் சிட்டி.

பாக்ஸின் இடது பக்கம் இருந்த ஃபில் ஃபோடன், வலது பக்கம் முன்னேறிய ரஹீம் ஸ்டெர்லிங்கின் பாதையில் பந்தை அனுப்பினார். ஆனால், அது வோல்வ்ஸ் டிஃபண்டரின் காலில் பட்டு ரீபௌண்ட் ஆனது. அதுவரை என்ன நடந்ததோ, அதுவே மீண்டும் நடந்தது. பந்து ரீபௌண்ட் ஆன இடத்தில் டி புருய்னா சரியான நேரத்தில் இருந்தார். மீண்டும் பந்தை கோல் நோக்கி அடிக்க, மான்செஸ்டர் சிட்டிக்கு நான்காவது கோல் விழுந்தது. 67-வது நிமிடத்தில் டி புருய்னா ஐந்தாவது கோலையும் அடித்திருப்பார். அவர் அடித்த ஷாட், போஸ்ட்டில் பட்டு வெளியேறியது. அடுத்த சில நிமிடங்களில் வோல்வ்ஸ் இரண்டு முயற்சிகள் செய்தது. ஆனால், அவை கோலாகவில்லை.

ஆட்டத்தின் 84-வது நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டி ஐந்தாவது கோலை அடித்தது. கான்சலோ ஏற்படுத்திக் கொடுத்த வாய்ப்பை கோலாக்கி, சிட்டிக்கு 4 கோல்கள் முன்னிலை ஏற்படுத்திக் கொடுத்தார் ரஹீம் ஸ்டெர்லிங். அதன்பிறகு பல வாய்ப்புகள் உருவாகியும் இரு அணிகளாலும் எவற்றையும் கோலாக்க முடியவில்லை. இறுதியில் 5-1 என மான்செஸ்டர் சிட்டி வெற்றி பெற்றது. இதன் மூலம் 89 புள்ளிகளைத் தொட்டது அந்த அணி. இரண்டாவது இடத்திலிருக்கும் லிவர்பூலை விட 3 புள்ளிகள் அதிகம் பெற்றிருப்பதோடு, கோல் வித்தியாசத்திலும் 7 கோல்கள் அதிகம் வைத்திருக்கிறது மான்செஸ்டர் சிட்டி. அடுத்த இரண்டு போட்டிகளில் 4 புள்ளிகள் எடுத்தாலே அந்த அணி பிரீமியர் லீக் பட்டம் வெல்வது உறுதியாகிவிடும்.

Liverpool vs Aston Villa
Liverpool vs Aston Villa
AP
முன்னதாக நடந்த போட்டியில் லிவர்பூல் அணி 2-1 என ஆஸ்டன் விலாவை வீழ்த்தியது. ஜோயல் மாடிப், சாடியோ மனே ஆகியோர் லிவர்பூல் அணிக்காக கோலடித்தனர். செல்சீ அணி 3-0 என லீட்ஸை வீழ்த்தியது. மேசன் மௌன்ட், கிறிஸ்டியன் புலிசிக், ரொமேலு லுகாகு ஆகியோர் கோலடித்தனர். லெஸ்டர் சிட்டி 3-0 என நார்விச் சிட்டியை வீழ்த்தியது. வாட்ஃபோர்ட், எவர்டன் அணிகள் மோதிய போட்டி 0-0 என டிராவில் முடிந்தது.