இறுதிப்போட்டியில் ஃபிரான்ஸூக்கு எதிராக அர்ஜெண்டினா உதைத்து வென்றிருக்கும் அந்தப் பந்தின் பெயர் 'அல்-ஹில்ம்'. அப்படியெனில், 'The Dream' என்று அர்த்தம். அதாவது, கனவு! பந்தை உதைத்துத் தள்ளி உச்சப்பட்சமான உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்பது அத்தனை வீரர்களின் கனவும். மெஸ்ஸியும் அதே கனா உடையவர்தான். இப்போது அந்த உலகக்கோப்பை கனா மெஸ்ஸிக்கு நிறைவேறியிருந்தாலும் இதற்கு அடித்தளமாக அவர் ஒரு பெரும் பிரயாணம் செய்திருக்கிறார். அதன் வழியே நாமும் அப்படியே பயணித்து கத்தார் உலகக்கோப்பையின் கொண்டாட்டங்களை சென்றடைவோம்!

2006 இல் 19 வயது கூட நிறைவடையாத நிலையில் ஜெர்மனி உலகக்கோப்பையில் மெஸ்ஸி களமிறங்கியிருந்தார். செர்பியாவிற்கு எதிரான போட்டிதான் அவருக்கு முதல் போட்டி. நெதர்லாந்தில் நடந்த 20 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பைத் தொடரில் அர்ஜெண்டினா வெல்வதற்கு அதி முக்கிய பங்களிப்பை அளித்தவர் பதின்ம வயது மெஸ்ஸிதான். 6 கோல்களை அந்தத் தொடரில் மட்டும் அடித்திருந்தார். அந்தத் தொடரில், கோல்டன் பூட், கோல்டன் பால் எல்லாம் அவருக்குதான். செர்பியாவிற்கு எதிராக 75 வது நிமிடத்தில் மெஸ்ஸியின் களமிறக்கலுக்கு பின்னால் இருந்த கதை இதுதான். 75 வது நிமிடத்தில் உள்ளே வந்த மெஸ்ஸி, தனது முதல் மாயாஜாலத்தை நிகழ்த்த எடுத்துக் கொண்டது என்னவோ மூன்று நிமிடங்கள்தான். ஆம், களத்திற்குள் கால்பதித்த மூன்றாவது நிமிடத்திலேயே க்ரெஸ்போவுக்கு ஒரு அசிஸ்ட்டை கொடுத்து அணியின் கோல் எண்ணிக்கையை உயர்த்தியிருந்தார். மெஸ்ஸியின் 35 வயது கால்களே அசிஸ்ட்களோடு திருப்திப்பட்டுக் கொள்வதில்லை. எனில், அந்த 19 வயது கால்கள் மட்டும் திருப்திப்பட்டுக் கொள்ளுமா என்ன? கோலுக்காக துடிதுடித்தது சீறிப்பாய்ந்தது. களமிறங்கி 13 வது நிமிடத்தில் மெஸ்ஸிக்கு தேவையான அந்த கோல் கிடைத்துவிட்டது.
மரடோனாவிற்கு பிறகு மந்திர தந்திரங்கள் அத்தனையையும் தனது இடது காலில் பொதிந்து வைத்துள்ள மாவீரன் ஒருவன் அர்ஜெண்டினாவிற்கு கிடைத்துவிட்டான் என உலகுக்கு அறிவிக்கப்பட்ட நொடி அது.
செர்பியாவை புரட்டியெடுத்து அர்ஜெண்டினா அந்த போட்டியை பயங்கரமாக வென்றது. நெதர்லாந்துக்கு எதிரான அடுத்த போட்டியில் தொடக்க லெவனிலேயே மெஸ்ஸிக்கு அணியில் இடம் கொடுக்கப்பட்டது. நாக் அவுட்டுக்கு அர்ஜெண்டினா தகுதிபெறவே மீண்டும் மெஸ்ஸி பென்ச்சுக்கு போனார். ஜெர்மனிக்கு எதிரான காலிறுதியில் பெனால்டி சூட் அவுட்டில் அர்ஜெண்டினா கோட்டைவிட்டது. மெஸ்ஸி ஒரு ஓரமாக உட்கார்ந்து கையறு நிலையில் தனது காலணியை ஆட்டியபடியே வெறித்து போய் அமர்ந்திருப்பார்.
ஒரு நல்ல அறிமுகமாக மெஸ்ஸிக்கு அந்த 2006 ஜெர்மனி உலகக்கோப்பை அமைந்தது. அதைத்தவிர மெஸ்ஸிக்கு அந்த உலகக்கோப்பையில் பெரிய கதாபாத்திரம் கிடைக்கவே இல்லை. 2006 இல் மெஸ்ஸி ஒரு அறிமுக வீரர். அவரின் இளம்பிராயத்து வித்தைகளை அறிந்து அவர் மீது ரசிகர்களுக்கு ஒரு ஆர்வம் இருந்தது அவ்வளவுதான். ஆனால், 2010 தென்னாப்பிரிக்க உலகக்கோப்பை அப்படியில்லை.
ஜெர்மனிக்கும் தென்னாப்பிரிக்கவுக்கும் உலகக்கோப்பை இடம்பெயர்ந்த நான்கு வருட இடைவெளியில் மெஸ்ஸி ஒரு ஸ்டாராக, இல்லை இல்லை அர்ஜெண்டினாவின் இரட்சகனாக உருமாறத் தொடங்கிவிட்டார்.

2008 பீஜிங் ஒலிம்பிக்ஸில் அர்ஜெண்டினாவிற்கு தங்கம் வென்று கொடுத்தார். 2009, 2010 இல் கால்பந்து உலகின் தலைசிறந்த வீரருக்கு வழங்கப்படுகிற பாலோன் டி'ஆர் விருதை அடுத்தடுத்து தொடர்ந்து வென்றிருந்தார். இவற்றையெல்லாம் விட கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது அந்த நம்பர் '10'. அறிமுகமாகி முதல் ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு நம்பர் 18, 19 ஜெர்சிக்களை பயன்படுத்தி வந்த மெஸ்ஸி இந்த உலகக்கோப்பையில் தான் முதல் முதலாக 'நம்பர் 10' ஜெர்சியோடு களமிறங்கினார். ஜெர்சி மட்டுமில்லை. அந்த நம்பர் 10 ஜெர்சிக்கு உயிரூட்டி பெரும் மதிப்புமிக்கதாக மாற்றிய அர்ஜெண்டின கால்பந்து கடவுள் 'டியாகோ மரடோனா'வும் இந்த முறை மெஸ்ஸி பக்கம் நின்றார். ஆம், மரடோனாதான் அர்ஜெண்டினாவின் பயிற்சியாளர்.
நம்பர் 10 க்கும் அர்ஜெண்டினா மற்றும் உலகக்கோப்பைக்குமே பெரும் சம்பந்தம் உண்டு. அதைப்பற்றியும் பேசியே ஆக வேண்டும். 1986 இல் அர்ஜெண்டினா உலகக்கோப்பையை வென்றபோது மரடோனா ஹீரோ என்பது பெரும்பாலானோர் அறிந்த விஷயம். ஆனால், 1978 இல் அர்ஜெண்டினா முதல் முறையாக உலகக்கோப்பையை வென்றிருந்தது. அந்த உலகக்கோப்பையில் அர்ஜெண்டின அணியின் நாயகராக திகழ்ந்தவர் 10 ஆம் நம்பர் ஜெர்சி அணிந்த மரியோ கெம்பஸே. இறுதிப்போட்டியில் நெதர்லாந்துக்கு எதிராக இரண்டு கோல்களை அடித்து அர்ஜெண்டின அணி முதல் முறையாக உச்சபட்ச கௌரவ நிலையை அடைய மிக முக்கிய காரணமாக இருந்தார். ஆக, அந்த 10 ஆம் நம்பருக்குரிய எதிர்பார்ப்பும் மெஸ்ஸி தோளில் கூடுதல் பளுவாக ஏறிக்கொண்டது.

கடவுளும் அரசனும் ஒரே இடத்தில் கூடி ஒரே இலக்கை நோக்கி 2010 உலகக்கோப்பைக்கான திட்டமிடலை தொடங்கினர். ஆயினும், மரடோனா தற்போது விண்ணிலிருந்து ஆசி வழங்கும் சமயத்தில் கிடைத்த ரிசல்ட், அப்போது மரடோனா பயிற்சியாளராக இருந்த போது கிடைக்கவில்லை.
அந்தத் தொடரிலும் ஜெர்மனியிடம் அடி வாங்கி காலிறுதியோடு அர்ஜெண்டின அணி வெளியேறியது. மெஸ்ஸியும் எதுவும் சாதிக்கவில்லை. ஒரு கோல் கூட அடிக்கவில்லை. ஒரே ஒரு அசிஸ்ட்டோடு திருப்திப்பட்டுக் கொண்டார். பெரிய எதிர்பார்ப்புடன் ரிலீசாகி பெருத்த ஏமாற்றத்தை கொடுக்கும் பெரிய பட்ஜெட் படமாகத்தான் இந்த 2010 உலகக்கோப்பை அர்ஜெண்டினாவுக்கு அமைந்திருந்தது.
2014 உலகக்கோப்பையில் முற்றிலும் வேறான கதையாடலை அர்ஜெண்டினா நிகழ்த்தியது. மெஸ்ஸியின் மாஸ் இன்னும் கூடியிருந்தது. அவர் ஒரு உலக சூப்பர் ஸ்டார். அர்ஜெண்டினாவை தாண்டியும் அவருக்கான ரசிகர் வட்டம் உலகம் முழுவதும் பரவியிருந்தது. எண்ணிலடங்கா விருதுகள், பார்சிலோனாவுக்காக எக்கச்சக்க சாதனைகள், விண்ணுயர புகழ் என மெஸ்ஸி ஒரு உச்சபட்ச இடத்தில் இருந்தார்.

மெஸ்ஸிதான் அர்ஜெண்டினா. அர்ஜெண்டினாதான் மெஸ்ஸி எனும் நிலை அது. இந்த முறை இத்தனை பெரிய எதிர்பார்ப்பையும் பொறுப்பையும் மெஸ்ஸி சரியாக மடைமாற்றி தரமான செயல்பாடுகளை காண கொடுத்தார்.
இந்த பிரேசில் உலகக்கோப்பையில் மட்டும் மெஸ்ஸி நான்கு கோல்களை அடித்திருந்தார். கூடுதலாக ஒரு அசிஸ்ட்டும் கூட. நடப்பு உலகக்கோப்பைக்கு முன்பு வரைக்கும் மெஸ்ஸியின் ஆகச்சிறந்த உலகக்கோப்பை பெர்ஃபார்மென்ஸ் என்றால் இதுதான். இறுதிப்போட்டியில் ஜெர்மனியிடம் அர்ஜெண்டினா தோற்ற இந்தத் தொடரில் சிறப்பாக ஆடியதற்காக தங்கப் பந்தை மெஸ்ஸியே வென்றார். பள்ளிப்பருவத்தில் பார்த்த ஆட்டம் அது. மெஸ்ஸி ஒரு ஓரமாக விரக்தியோடு அமர்ந்திருந்த சித்திரமும் தோல்வி கொடுத்த அயர்ச்சியில் நடந்து சென்ற காட்சியும் இன்னும் அப்படியே மனதில் நிற்கிறது. அன்றும் மெஸ்ஸி கண்ணீர் சிந்தினார். இன்றும் மெஸ்ஸி கண்ணீர் சிந்தினார். ஆனால், இரண்டுக்குமே ஏகப்பட்ட வேறுபாடு இருக்கிறது.
முதலாவது இயலாமையின் வெளிப்பாடு. இரண்டாமவது பேரானந்தத்தின் வெளிப்பாடு.

சரி இதைப் பற்றி பின்னால் பேசுவோம். இடையில் 2018 உலகக்கோப்பை ஒன்று இருக்கிறதே! ரஷ்யாவில் நடந்த இந்த உலகக்கோப்பையில் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் அர்ஜெண்டினா இதே ஃபிரான்ஸிடம் தோற்றிருந்தது. இந்த உலகக்கோப்பையும் மெஸ்ஸிக்கு அத்தனை உவப்பாக அமையவில்லை. ஒரே கோல்...ஒரே அசிஸ்ட்தான். அவர் பார்சிலோனாவுக்கு மட்டும்தான் கோலும் அடிப்பார் கோப்பையையும் வெல்வார் என்கிற விமர்சனம் இன்னும் ஒரு கட்டை கூடுதலாக உரத்து எழத் தொடங்கியது. 2016 இல் ஒரு முறை மெஸ்ஸி சர்வேதச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதேபோன்ற அறிவிப்பு மீண்டும் வரும் என செய்திகள் கூட வெளியானது. ஆனால், மின்னல் வேகத்தில் டிரிபிள் செய்த கால்கள் அத்தனை எளிதில் இயக்கத்தை முடக்கிவிடாது இல்லையா? 2018 ரஷ்ய வீழ்ச்சியிலிருந்து மெஸ்ஸி மீண்டு வந்தார். அர்ஜெண்டினாவும் மீண்டெழுந்தது.இந்த முறை எல்லாமே கொஞ்சம் நன்றாக நிகழ தொடங்கியது. தொடர்ந்து ரன்னர்-அப் ஆகிக்கொண்டிருந்த கோபா அமெரிக்க தொடரில் கடந்த ஆண்டு பிரேசிலை வீழ்த்தி அர்ஜெண்டினா சாம்பியன் ஆனது. மெஸ்ஸியும் மிரட்டியெடுத்தார்.
4 கோல்கள் கூடவே 5 அசிஸ்ட்டுகள். தொடரில் மொத்தமாக அர்ஜெண்டினா அடித்திருந்த 13 கோல்களில் 9 கோல்களில் மெஸ்ஸியின் பங்களிப்பு இருந்தது.
மீண்டும் உலகக்கோப்பைக்கான எதிர்பார்ப்புகள் உருவாகத் தொடங்கியது. இந்த முறையும் ஏமாற்றத்தை எதிர்கொள்ளும் யோசனை மெஸ்ஸிக்கு இல்லை. ஏனெனில், கத்தார்தான் அவரின் கடைசி உலகக்கோப்பை. அதை அவரே அறிவித்தும்விட்டார். பின்வாங்க நினைத்தாலும் காலம் அதற்கு கைக்கொடுக்காது என்பதால் நிச்சயமாக கடைசி உலகக்கோப்பைதான் என முடிவே ஆகிவிட்டது.
(மெஸ்ஸியே தான் ஓய்வுபெறப்போவதில்லை என கூறியதாக இப்போது சில செய்திகள் வெளியாகியிருக்கிறது. அது உண்மையெனில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சிதான். ஆனால், மெஸ்ஸி ஓய்வுபெறாவிட்டாலும் அடுத்த உலகக்கோப்பை வரை ஆடுவாரா என்பது சந்தேகமே. அதற்கான சாத்தியங்களும் குறைவே!)
டீயுயலில் தன்னிடமிருந்து பந்தை பறிக்க நினைக்கும் எதிராளியிடம் மெஸ்ஸி எத்தகு குணத்தை வெளிக்காட்டுவார்? போராடுவார்...மீண்டும் போராடுவார்.....இறுதியில் வெல்வார்.

அவ்வளவுதான். கத்தார் உலகக்கோப்பை சார்ந்த எதிர்பார்ப்புகளுக்கு எதிராக மெஸ்ஸி ஒரு Duel ஐத்தான் நிகழ்த்தியிருக்கிறார். இறுதியில் தனது ட்ரேட் மார்க் ஸ்டைலில் வெல்லவும் செய்திருக்கிறார். ஆரம்பமே கொஞ்சம் ஏமாற்றம்தான். சவுதி அரேபியாவிற்கு எதிராகவே தோல்வி.
ஆனால், அர்ஜெண்டினாவும் மெஸ்ஸியும் அதை ஒரு 'Wake Up Call' ஆகவே பார்த்தனர். முதல் போட்டியிலிருந்தே மெஸ்ஸி ஸ்கோர் செய்ய தொடங்கிவிட்டார். இந்தத் தொடரில் ஒரே ஒரு போட்டியை தவிர அத்தனை போட்டியிலும் மெஸ்ஸி ஸ்கோர் செய்திருக்கிறார். இதுவரையிலான உலகக்கோப்பைகளில் நாக் அவுட்டில் மெஸ்ஸி கோலே அடித்ததில்லை என்பதுதான் சோக வரலாறு. ஆனால், இந்த உலகக்கோப்பையில் அத்தனை நாக் அவுட் போட்டிகளிலும் கோல் அடித்திருக்கிறார். உலகக்கோப்பை வரலாற்றில் யாரும் இப்படி ஒரு சாதனையை செய்ததில்லை.
இந்தத் தொடர் முழுவதும் 7 கோல்கள். 3 அசிஸ்ட்டுகள். மொலினாவுக்கும் அல்வரஸூக்கும் செய்து கொடுத்த அசிஸ்ட்டுகளை அப்படியே கண்ணில் வைத்து ஒத்திக்கொள்ளலாம். இதெல்லாம் போக பெனால்டி சூட் அவுட்களிலும் தொடர்ச்சியாக முதல் ஷாட்டை எடுத்து ஒரு நேர்மறை தொடக்கத்தை உருவாக்கிக் கொடுத்துக் கொண்டே இருந்தார். இறுதிப்போட்டி வரை அது தொடர்ந்தது. ஒரு அணியாக சிறப்பாக ஆடியதே அர்ஜெண்டினாவின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம். அந்த அணி மனப்பாங்கையும் தலைவனாக முன்நின்று ஏற்படுத்திக் கொடுத்தார். டி மரியா, லட்டாரோ மார்ட்டினஸ், அல்வரஸ் இவர்களுக்கெல்லாம் அவர் உருவாக்கிக் கொடுத்த வாய்ப்புகள்தான் அதற்கு சாட்சி!

இந்த உலகக்கோப்பையில் மட்டும் கிட்டத்தட்ட 700 நிமிடங்களை மெஸ்ஸி போட்டிகளின் போது களத்தில் செலவளித்திருக்கிறார். வேறெந்த வீரரும் இத்தனை நிமிடங்களுக்கு களத்தில் ஓடியாடவில்லை. அடுத்த வரலாற்று நாயகனாக உருவெடுத்து நிற்கும் எம்பாப்பே உட்பட!
கடைசி உலகக்கோப்பையில் ஆடும் வீரர் இந்தளவுக்கு வியர்வை சிந்துவதே அணியின் மற்ற வீரர்களுக்கு பெரும் உத்வேகத்தைதான் கொடுத்திருக்கும். தனிப்பட்ட அளவில் பெரும் உழைப்பைக் கொட்டி அணியை முன்நிறுத்தியதன் பலனாக அர்ஜெண்டினாவிற்கு 86 க்குப் பிறகு மீண்டும் ஒரு உலகக்கோப்பை கிடைத்திருக்கிறது. மெஸ்ஸியும் ஒரு வரலாற்று நாயகனாக மரடோனாவிற்கு அருகேயே சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார்.

'வாழ்க்கை ஒரு வட்டம்' என்பது மெஸ்ஸியின் உலகக்கோப்பைப் பயணத்திற்கு முழுமையாகப் பொருந்திப் போகும். 2005 இல் இளையோருக்கான உலகக்கோப்பையோடும் தங்கப்பந்தோடும் களம்புகுந்தவர், இப்போது நீண்ட கால ஏக்கமான அந்த மாபெரும் உலகக்கோப்பையை வென்று கூடவே தங்கப்பந்தையும் வென்றிருக்கிறார்.
ThankYou Messi!!