Published:Updated:

மாரடைப்புக்கு பின் மீண்டும் களம் புகும் எரிக்சன்; ஜனவரி டிரான்ஸ்ஃபர் விண்டோ ஹைலைட்ஸ்!

Christian Eriksen

கடந்த யூரோ 2020 தொடரின்போது மாரடைப்பு ஏற்பட்டு களத்திலேயே விழுந்த டென்மார்க் வீரர் கிறிஸ்டியன் எரிக்சனை ஆறு மாத காலத்துக்கு ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

Published:Updated:

மாரடைப்புக்கு பின் மீண்டும் களம் புகும் எரிக்சன்; ஜனவரி டிரான்ஸ்ஃபர் விண்டோ ஹைலைட்ஸ்!

கடந்த யூரோ 2020 தொடரின்போது மாரடைப்பு ஏற்பட்டு களத்திலேயே விழுந்த டென்மார்க் வீரர் கிறிஸ்டியன் எரிக்சனை ஆறு மாத காலத்துக்கு ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

Christian Eriksen

ஜனவரி டிரான்ஸ்ஃபர் விண்டோ முடிந்துவிட்டது. வழக்கத்துக்கு மாறாக பல முன்னணி அணிகள் பெரிய தொகை செலவு செய்திருக்கின்றன. ஒருசில அணிகள் சுமார் 100 மில்லியன் டாலர்கள் வரையிலுமே பணத்தை வாரி இறைத்திருக்கின்றன. ஃபிளிப் கொடினியோ, வௌட் வெகோர்ஸ்ட், கீரன் டிரிப்பியர் போன்றவர்கள் தாங்கள் இருந்த அணியிலிருந்து சிறிய அணிகளுக்கு மாற, கிறிஸ்டியன் எரிக்சன் மீண்டும் கால்பந்து களத்துக்குத் திரும்பி ரசிகர்களை நெகிழ வைத்திருக்கிறார்.

ஜனவரி மாதம் தொடங்கும் டிரான்ஸ்ஃபர் விண்டோவில் அவ்வளவாக பெரிய மாற்றங்கள் ஏதும் நிகழாது. அதிகப்படியாக ஒன்றிரண்டு பெரிய டிரான்ஸ்ஃபர்கள் மட்டுமே நடக்கும். இம்முறை அப்படியான டிரான்ஸ்ஃபர்கள் நிறைய நிகழ்ந்திருக்கின்றன. இந்த விண்டோவின் மிகப்பெரிய டிரான்ஸ்ஃபர் செய்திருக்கிறது யுவன்டஸ். ஃபியோரன்டினா அணிக்காக கோல் மழை பொழிந்துகொண்டிருந்த டுசான் விளாஹோவிச் 90 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அந்த அணியால் வாங்கப்பட்டிருக்கிறார். இந்த சீசனில் விளையாடிய 20 சீரி ஆ போட்டிகளில் 17 கோல்கள் அடித்து மிரட்டியிருக்கிறார் விளாஹோவிச். ஆர்செனல் அணி அவரை வாங்க பெரும் முயற்சிகள் எடுத்திருந்தாலும், அவர் இத்தாலியிலேயே இருக்க முடிவு செய்துவிட்டார்.

மோசமான பொருளாதார நிலையில் இருந்த (இருந்ததாக சொல்லிக்கொண்ட) பார்சிலோனா திடீரென பெரிய பெரிய டிரான்ஸ்ஃபர் செய்திகளில் அடிபடத் தொடங்கிவிட்டது. ஜாவியின் பயிற்சியில் பெரிய மாற்றங்களைக் கண்டுகொண்டிருக்கும் அந்த அணி, நிறைய ஸ்பெய்ன் வீரர்களை ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கிறது. மான்செஸ்டர் சிட்டியிலிருந்து இளம் விங்கர் ஃபெரன் டாரஸை 60.5 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியது.

அதுமட்டுமல்லாமல், வோல்வர்ஹாம்ப்டன் வாண்டரர்ஸ் அணியிலிருந்து மற்றொரு ஸ்பெய்ன் விங்கர் அடாமா டிரயோரே லோன் மூலம் அந்த அணிக்கு ஒப்பந்தமாகியிருக்கிறார். ஸ்பெய்ன் ஸ்டிரைக்கர் அல்வாரோ மொராடாவை லோன் மூலம் ஒப்பந்தம் செய்ய முயன்றனர். ஆனால், அது நடக்கவில்லை. அதற்குப் பதிலாக, ஆர்செனல் அணியால் ரிலீஸ் செய்யப்பட்ட பியர் எமரிக் அபாமெயாங்கை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

Dusan Vlahovic
Dusan Vlahovic
AP

பிரீமியர் லீகில் மிகப்பெரிய டிரான்ஸ்ஃபரை அரங்கேற்றியது லிவர்பூல். போர்டோ அணியில் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருந்த விங்கர் லூயிஸ் டியாஸை 49.5 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஒப்பந்தம் செய்திருக்கிறது ஜார்ஜன் கிளாப்பின் அணி. முகமது சலாவின் ஒப்பந்தம் சீக்கிரம் முடிவடையும் நிலையில், சாடியோ மனே முந்தைய ஃபார்மில் இல்லாத நிலையில், அணியின் முன்னேற்றத்துக்கு டியாஸின் வருகை மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

இந்த விண்டோவில் அதிகம் செலவு செய்தது நியூகாசிள் யுனைடட் தான். புதிய உரிமையாளர்கள் வந்த பிறகு பல மில்லியன் டாலர்கள் செலவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்ததைப் போலவே சில தரமான வீரர்களை ஒப்பந்தம் செய்தது அந்த அணி. முதலில் இங்கிலாந்து ரைட் பேக் கீரன் டிரிப்பியர் அந்த அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அத்லெடிகோ மாட்ரிட் அணிக்கு ஆடிக்கொண்டிருந்தவர், மீண்டும் இங்கிலாந்துக்கு வந்திருக்கிறார். சென்டர் பேக் பொசிஷனுக்கு பலரையும் டார்கெட் செய்த அந்த அணியால், கடைசியில் பிரைட்டன் அண்ட் ஹோவ் ஆல்பியான் வீரர் டேன் பர்னைத்தான் வாங்க முடிந்தது.

நடுகளத்தில் லயான் வீரர் புரூனோ கிமாரஸை சுமார் 45 மில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கியிருக்கிறது அந்த அணி. அந்த டிஃபன்ஸிவ் மிட்ஃபீல்டர் நியூகாசிளுக்கு வருவாரா மாட்டாரா என்று பெரும் சந்தேகம் எழுந்துகொண்டே இருந்தது. இருந்தாலும், விண்டோ முடிவதற்கு சில நாள்கள் இருக்கும்போது அவரை ஒப்பந்தம் செய்துவிட்டது அந்த அணி. பர்ன்லி அணியிலிருந்த ஸ்டிரைக்கர் கிறிஸ் வுட்டையும் அந்த அணி ஒப்பந்தம் செய்திருக்கிறது. ஆஸ்டன் விலாவின் லெஃப்ட் பேக் மாட் டார்கெட், லோன் மூலம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

Mike Egerton
Mike Egerton

எவர்டன் அணியிலிருந்து லூகாஸ் டீன்யாவை ஒப்பந்தம் செய்ததால், டார்கெட்டை லோனில் அனுப்பியிருக்கிறது ஆஸ்டன் விலா. இந்த விண்டோவில் சில சிறப்பான வீரர்களைக்கொண்டு வந்திருக்கிறது அந்த அணி. முக்கியமாக பார்சிலோனாவிலிருந்து பிளிப் கொடினியோவை லோன் மூலம் கொண்டுவந்திருக்கிறார்கள். அவரோடு லிவர்பூல் அணியில் விளையாடிய ஸ்டீவன் ஜெரார்ட் இப்போது லிவர்பூல் பயிற்சியாளராக இருப்பதால், அவர் குறைவான ஊதியத்துக்கு இந்த அணிக்கு வந்திருக்கிறார். இவரோடு, ராபின் ஓல்சன், காலம் சாம்பர்ஸ் ஆகியோரையும் லோன் மூலம் கொண்டுவந்திருக்கிறது விலா.

புதிய பயிற்சியாளராக ஃபிராங்க் லாம்பார்டை கொண்டுவந்திருக்கும் எவர்டன், கடைசி நாளில் சில அட்டகாசமான டீல்கள் செய்திருக்கிறது. டீன்யாவுக்குப் பதிலாக உக்ரைன் வீரர் மிகலென்கோவை வாங்கியிருந்த அந்த அணி, கடைசி நாளில் டெலே அலியை வாங்கியிருக்கிறது. மான்செஸ்டர் யுனைடட் அணியில் அதிக வாய்ப்புகள் பெறாமல் இருந்த இளம் வீரர் டானி வான் டி பீக்கை லோன் மூலம் கொண்டுவந்திருக்கிறார்கள்.

டெலே அலியை எவர்டனுக்கு வித்த டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர், யுவன்டஸ் நடுகள வீரர் ராட்ரிகோ பென்டங்கரை வாங்கியிருக்கிறது. இன்னொரு யுவன்டஸ் வீரர் குலுசெவ்ஸ்கியை லோன் மூலம் கொண்டுவந்திருக்கிறார் ஆன்டோனியோ கான்டே.

பிரீமியர் லீக் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் மான்செஸ்டர் சிட்டி, இளம் ரிவர் பிளேட் ஸ்டிரைக்கர் ஹூலியன் ஆல்வராஸை வாங்கியிருக்கிறது. இவர் எதிர்காலத்துக்கான நட்சத்திரமாகப் பார்க்கப்படுகிறார்.

Christian Eriksen collapsed during Euro 2020 match against Finland
Christian Eriksen collapsed during Euro 2020 match against Finland

பல முன்னணி வீரர்கள் அணிகள் மாறியிருந்தாலும், ரசிகர்களை நெகிழ வைத்தது பிரென்ட்ஃபோர்ட் செய்த ஒரு ஒப்பந்தம்தான். கடந்த யூரோ 2020 தொடரின்போது மாரடைப்பு ஏற்பட்டு களத்திலேயே விழுந்த டென்மார்க் வீரர் கிறிஸ்டியன் எரிக்சனை ஆறு மாத காலத்துக்கு ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். இன்டர் மிலன் அணியில் விளையாடிக்கொண்டிருந்த அவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கால்பந்துக்குத் திரும்புவதால் ரசிகர்கள் மிகவும் நெகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள்.