Published:Updated:

ISL 2022: இன்று தொடங்கும் சீஸன் 9; அணிகளின் பலம், பலவீனம் ரிப்போர்ட்!

ISL 2022

டிரான்ஸ்ஃபர், ப்ரீ சீசன் அனைத்தும் முடிந்து கோப்பையைக் கைப்பற்றத் தயாராக இருக்கும் அணிகளின் பலம், பலவீனம் ஆகிவற்றை அலசுவோம்.

ISL 2022: இன்று தொடங்கும் சீஸன் 9; அணிகளின் பலம், பலவீனம் ரிப்போர்ட்!

டிரான்ஸ்ஃபர், ப்ரீ சீசன் அனைத்தும் முடிந்து கோப்பையைக் கைப்பற்றத் தயாராக இருக்கும் அணிகளின் பலம், பலவீனம் ஆகிவற்றை அலசுவோம்.

Published:Updated:
ISL 2022
ஐ.எஸ்.எல் தொடரின் 2022-23 சீசன் அக்டோபர் 7ம் தேதி முதல் தொடங்குகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனாவின் காரணமாக கோவாவில் நடந்து வந்த இந்தத் தொடர், இப்போது முன்பைப் போல் ஹோம் - அவே ஃபார்மட்டில் நடக்கவிருக்கிறது. முக்கியமான மாற்றமாக, பிளே ஆஃப் ஃபார்மட் மாற்றப்பட்டிருக்கிறது.

புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்கள் பிடிக்கும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்குள் நுழையும். அடுத்த நான்கு இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முந்தைய சுற்றில் மோதி, அடுத்த சுற்றுக்கு நகரும். இந்த சீசனுக்கு முன்னோட்டமாக 11 அணிகளுமே டுராண்ட் கப் தொடரில் பங்கேற்றன. டிரான்ஸ்ஃபர், ப்ரீ சீசன் அனைத்தும் முடிந்து கோப்பையைக் கைப்பற்றத் தயாராக இருக்கும் அணிகளின் பலம், பலவீனம் ஆகிவற்றை அலசுவோம்.

Odisha FC

Odisha FC
Odisha FC

கடந்த சீசனில் ஏழாவது இடம் பிடித்த ஒடிசா எஃப்சி அணி இந்த சீசனுக்கு முன்பாக பல மாற்றங்கள் செய்திருக்கிறது. முன்னாள் பயிற்சியாளர் ஜோசப் கம்பாவு மீண்டும் கலிங்கா மைதானத்துக்குத் திரும்புகிறார். அவர் மட்டுமல்ல, ஸ்டிரைக்கர் டியோகோ மரிசியோ, டிஃபண்டர் கார்லோஸ் டெல்கோடோ போன்றவர்களும் ஒடிசாவுக்குத் திரும்பியிருக்கின்றனர். மரிசியோவோடு இணைந்து ஜெர்ரி மாமிங்தாமியா, பெட்ரோ மார்டின், சௌல் கிரெஸ்போ போன்ற வீரர்கள் அட்டாக்கில் பெரும் தாக்கம் ஏற்படுத்துவார்கள். தமிழக விங்கர்கள் நந்தகுமார் சேகர், மைக்கேல் சூசைராஜ் ஆகியோரும் இந்த அணியில் இருக்கிறார்கள். கோல்கீப்பர் அம்ரிந்தர் சிங், இளம் டிஃபண்டர் நரேந்திர கலோட் ஆகியோரையும் ஒப்பந்தம் செய்து டிஃபன்ஸை பலப்படுத்தியிருக்கிறது அந்த அணி. அனைத்து ஏரியாவிலும் பலமாகவே காணப்படும் ஒடிசா, டுராண்ட் கப்பில் காலிறுதியில் தான் முதல் தோல்வியை சந்தித்தது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறக்கூடிய வாய்ப்பு இந்த அணிக்கு அதிகமாகவே இருக்கிறது.

Chennaiyin FC

Chennaiyin FC
Chennaiyin FC

தொடர்ந்து தடுமாறிக்கொண்டே இருக்கும் சென்னையின் எஃப்சி இந்த முறையும் புதிய பயிற்சியாளரோடு களமிறங்குகிறது. ஜெர்மனியைச் சேர்ந்தவரான தாமஸ் பிராட்ரிக், 3 சீசன்களில் மூன்றாவது பயிற்சியாளராகப் பொறுப்பேற்றிருக்கிறார். இவரது தலைமையில் டுராண்ட் கோப்பையின் கடைசிக் கட்டத்தில் போராட்ட குணத்தைக் காட்டியது சென்னை. கேப்டன் அனிருத் தாபா மிகச் சிறப்பான ஃபார்மில் இருக்கிறார். வழக்கம்போல் வெளிநாட்டு வீரர்கள் முற்றிலும் புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்கள். முன்கள வீரர்களான பீட்டர் ஸ்லிஸ்கோவிச் மற்றும் க்வாமே கரிகாரி ஆகியோர் சற்று நம்பிக்கை கொடுத்திருக்கிறார்கள். ஆனால் இப்போது சீசன் தொடங்குவதற்கு சில தினங்கள் முன்பு நட்சத்திர வீரர் ரஃபேல் கிரிவெல்லாரோ இந்த சீசனில் ஆடமாட்டார் என்பதை உறுதி செய்திருக்கிறது அந்த அணி. இது சென்னையின் எஃப்சிக்கு மிகப்பெரிய இழப்பு. முதல் 3 போட்டிகளிலேயே ATK மோஹன் பாஹன், பெங்களூரு எஃப்சி, எஃப்சி கோவா போன்ற அணிகளை சந்திக்கிறது சென்னையின். இந்தப் போட்டிகளில் குறைந்தது 4 புள்ளிகளாவது பெற்றால் அது நல்ல தொடக்கமாக அமையும்.

Kerala Blasters:

Kerala Blasters
Kerala Blasters

கடந்த ஆண்டு இரண்டாம் இடம் பிடித்த கேரளா பிளாஸ்டர்ஸ் அணி இம்முறை சில மாற்றங்களோடு களம் காணப் போகிறது. ஜார்ஜ் பெரீரா டியாஸ் மும்பை அணிக்கு ஒப்பந்தமாகியுள்ள நிலையில், அவரது இடத்தை நிரப்ப முடியுமா என்ற கேள்வி ஏற்பட்டுள்ளது. தன்னுடைய புதிய வீரர்களை வைத்து இவான் வுகமனோவிச் அந்த இடத்தை நிரப்பினார் என்றால் நிச்சயமாக மூன்று முறை தவறிய பட்டத்தை இந்த முறை கைப்பற்றலாம். டுராண்ட் கோப்பை தொடரில் தங்களையுட ரிசர்வ் அணியையே கேரளா விளையாட வைத்தது. அதனால் போதுமான அளவுக்கு ப்ரீ சீசன் பயிற்சியில் அந்த அணி வீரர்கள் ஈடுபட்டனரா என்ற கேள்வி எழுகிறது. இருந்தாலும் வுகமனோவிச் மீது அதிக நம்பிக்கை அந்த அணியினருக்கும் ரசிகர்களுக்கும் இருக்கிறது. நீண்ட நாள்களுக்குப் பிறகு கடந்த சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது பிளாஸ்டர்ஸ். அதை இந்த சீசனிலும் அந்த அணி தொடரும் என்று எதிர்பார்க்கலாம்.

FC Goa

FC Goa
FC Goa

கடந்த ஆண்டு ஒன்பதாவது இடமே பிடித்தா கோவா அணி இப்போது மிகப் பெரிய ரிஸ்க் ஒன்றை எடுத்திருக்கிறது. தங்கள் அணியின் முன்னாள் வீரர் கார்லோஸ் பென்யாவை மேனேஜராக ஒப்பந்தம் செய்திருக்கிறது அந்த அணி. இதுவரை பயிற்சியாளராக பெரிய அனுபவம் இல்லாத அவருக்கு இந்த சீசன் மிகப்பெரிய சவாலாக அமையும். கடந்த சில ஆண்டுகளாகவே கோவா அணி தடுமாறிக்கொண்டிருக்கும் நிலையில், பென்யாவுக்கு எவ்வளவு அவகாசம் கொடுக்கப்படும் தெரியவில்லை. அதேசமயம் இகர் குராட்க்ஸேனா, ஆல்வாரோ வஸ்கீஸ் ஆகியோரை ஒப்பந்தம் செய்திருப்பது அந்த அணியின் அட்டாக்கை பலப்படுத்தியிருக்கிறது. சிரியாவைச் சேர்ந்த டிஃபண்டர் ஃபரேஸ் அர்னாட் அந்த அணியின் தடுப்பாட்டத்தை பலப்படுத்துவார். இருந்தாலும் கோல்கீப்பர் தீரஜ் சிங் கடந்த ஆண்டை விட சிறப்பாக செயல்படவேண்டும். இல்லையெனில் ஆர்ஷ்தீப் சிங்கிடம் தன் இடத்தை இலக்க நேரிடும்.

ATK Mohun Bagan

ATK Mohun Bagan
ATK Mohun Bagan

ஐஎஸ்எல் தொடரில் மீண்டும் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட ஏடிகே மோகன் பாகன் முயற்சி செய்யும். அந்த அணியில் பல முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. பிரபீர் தாஸ், சந்தேஷ் ஜிங்கன், ராய் கிருஷ்ணா மூவரையும் பெங்களூரு எஃப்சி அணிக்கு தாரை வார்த்துக் கொடுத்திருக்கிறது. இருந்தாலும் ஆஷிக் குருணியனை இந்தப் பக்கம் இழுத்து இடது விங்கை பலமாக்கியிருக்கிறார்கள். எதிர்ப்புறத்துக்கு இளம் வீரர் ஆஷிஷ் ராய் மீது நம்பிக்கை வைத்து பெரும் தொகை கொடுத்து வாங்கியிருக்கிறார்கள். நடுவில் தான் பெரும் பிரச்னை. டுராண்ட் கோப்பையில் அந்த அணியின் டிஃபன்ஸ் மிகவும் சுமாராகவே இருந்தது. அதனால் குரூப் சுற்றிலேயே வெளியேறியது அந்த அணி. அதை சரிசெய்யாவிட்டால் நிச்சயம் பிரச்னை தான். பால் போக்பாவின் அண்ணன் என்ற அதீத எதிர்பார்ப்போடு வந்த ஃபுளோரன்டின் போக்பா பெரும் ஏமாற்றமாக அமைந்திருக்கிறார். அவர், விஷால் கீத் போன்றவர்கள் சிறப்பாக செயல்படவில்லை எனில் கொல்கத்தா தடுமாறவே நேரிடும்.

Hyderabad FC

Hyderabad FC
Hyderabad FC

நடப்பு சாம்பியன் ஹைதராபாத் அணி இந்த முறையும் கோப்பையைக் கைப்பற்றுவதற்கான பலம் கொண்டிருக்கிறது. பெரிய அளவில் மாற்றங்கள் இல்லாமல் பழைய வீரர்கள் பெரும்பாலானவர்கள் தொடர்வதே அந்த அணிக்கு மிகவும் சாதகமான ஒரு விஷயம். ஃபுல் பேக் பொசிஷன்களில் மட்டும் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறன. அவர்கள் அணியில் சீக்கிரம் செட் ஆகிவிட்டால் இன்னொரு டைட்டில் சேலஞ்ச்சுக்கு ஹைதராபாத் தயார். ஆனால் அட்டாக்கைப் பொறுத்தவரை முழுக்க முழுக்க அந்த அணி பார்தலமோ ஓகபசேவை, ஜாவியர் சிவேரோவையே நம்பியிருக்கவேண்டியிருக்கிறது. ஐஎஸ்எல் தொடரின் டாப் ஸ்கோரர் இன்னும் எத்தனை போட்டிகளுக்கு கோல் மழை பொழிந்துகொண்டிருப்பார் என்று தெரியவில்லை. டுராண்ட் கோப்பையில் அரையிறுதி வரை முன்னேறியிருப்பது அந்த அணிக்கு நம்பிக்கையைக் கொடுக்கும். அதனால் நல்லபடியாக அந்த அணி ஐஎஸ்எல் சீசனைத் தொடங்கும்.

East Bengal FC

East Bengal FC
East Bengal FC

இந்த முறை... இந்த முறையாவது கொஞ்சம் சிறப்பான செயல்பாட்டை ஈஸ்ட் பெங்கால் அணி கொடுக்குமா என்று அந்த அணியின் ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றன. ஐஎஸ்எல் வரலாற்றில் விளையாடிய 40 போட்டிகளில் வெறும் நான்கில் மட்டுமே வென்றிருக்கும் அந்த அணி இந்த முறையும் பலவீனமாகவே தெரிகிறது. டிரான்ஸ்ஃபர் விண்டோவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. ஸ்டீவன் கான்ஸ்டென்ட்டீனின் பயிற்சி முறைகளிலும் முன்னேற்றம் எதுவும் தெரியவில்லை. இப்படியொரு நிலையில் மீண்டும் ஒரு கடினமான சீசனை எதிர்கொண்டிருக்கிறது ஈஸ்ட் பெங்கால். டுராண்ட் கோப்பை தொடரில் கோல் அடிக்க மிகவும் தடுமாறிய அந்த அணி, மும்பை சிட்டிக்கு எதிரான கடைசி போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது. கோலும் அடித்தது. சொல்லப்போனால் அதுவே அவர்களுக்கு ஒரு நம்பிக்கையாக அமையலாம். அவர்களின் வெளிநாட்டு வீரர்களுக்கு ஐஎஸ்எல் அனுபவம் இருப்பதால், அவர்கள் தங்களின் 100 சதவிகிதத்தை கொடுக்கவேண்டும். கடைசி 3 இடங்களைத் தவிர்த்தாலே அது ஈஸ்ட் பெங்காலைப் பொறுத்தவரை நல்ல சீசனாகத்தான் அமையும்.

Mumbai City FC

Mumbai City FC
Mumbai City FC

கிரெக் ஸ்டூவர்ட், ஜார்ஜ் பெரேரா டியாஸ், ஆல்பர்டோ நொகுவேரோ ஆகியோரை வாங்கி அட்டாக்கை பல மடங்கு பலப்படுத்தியிருக்கிறது மும்பை சிட்டி எஃப்சி. டுராண்ட் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் தோற்ற மும்பை சிட்டி எஃப்சி, அந்தத் தொடரில் கோல் மழையாகப் பொழிந்தது. இளம் விங்கர் லாலின்சுவாலா சாங்டே கோல்டன் பூட் விருதை வெல்ல, கிரெக் ஸ்டூவர்ட் கோல்டன் பால் விருதை வென்றார். அட்டாக்கில் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும், டிஃபன்ஸில் பெரிதாக சொதப்பியது அந்த அணி. ஈஸ்ட் பெங்கால், பெங்களூரு அணிகளுக்கு எதிரான போட்டிகளில் பல கோல்களை விட்டுக்கொடுத்தது அந்த அணி. அதை சரிசெய்தால் நிச்சயம் பிளே ஆஃப் சுற்றுக்குள் மும்பை சிட்டியால் நுழைந்துவிட முடியும். பலமான டிஃபன்ஸ் கொண்ட அணிகளுக்கு எதிராக மும்பையின் அட்டாக் தடுமாறலாம். ஒரு சரியான நம்பர் 9 இல்லாதது அந்த அணிக்குக் குடைச்சல் கொடுக்கலாம். ஆனால் மும்பைக்கு கோல்கள் அடிக்க நிறைய வீரர்கள் இருக்கிறார்கள். குறைந்தபட்சம் லீக் பட்டம் வெல்லவேனும் அது உதவும்.

North East United FC

North East United FC
North East United FC

மார்கோ பால்புல் தலைமையில் தங்கள் அணி எழுச்சி பெரும் என்று நார்த் ஈஸ்ட் யுனைடட் ரசிகர்கள் நம்புகிறார்கள். ஆனால் அதற்கான அணியை அந்த நிர்வாகம் கட்டமைத்திருக்கிறதா என்றால், அதற்கு இல்லை என்பதே பதிலாக இருக்கிறது. அந்த அணியில் 30 வயதைக் கடந்த வீரர்கள் மொத்தமே ஆறு பேர் தான். அதில் நால்வர் வெளிநாட்டு வீரர்கள். மேட் டெர்பிஷயர், ஜான் காஸ்டான்கா, ரோமெய்ன் ஃபிளிப்போடாக்ஸ் போன்ற வெளிநாட்டு வீரர்கள் சிறப்பாக செயல்படும்பட்சத்தில் அந்த அணியின் செயல்பாட்டில் முன்னேற்றம் காண முடியும். ஜிதின் எம்எஸ், எமில் பென்னி போன்ற இளம் இந்திய வீரர்களை வாங்கியிருப்பதை கால்பந்து வல்லுநர்கள் வெகுவாகப் பாராட்டிவருகின்றனர். இந்த ஐஎஸ்எல் சீசன் இந்த அணிக்கு மிகவும் கடினமான முறையிலேயே தொடங்கப்போகிறது. தங்கள் முதலிரு போட்டிகளிலேயே டுராண்ட் கோப்பை சாம்பியன் பெங்களூரு எஃப்சி, நடப்பு ஐஎஸ்எல் சாம்பியன் ஹைதராபாத் எஃசி ஆகிய அணிகளைச் சந்திக்கிறது நார்த்ஈஸ்ட் யுனைடட்.

Jamshedpur FC

Jamshedpur FC
Jamshedpur FC

கடந்த சீசனில் லீக் ஷீல்டை வென்ற ஜாம்ஷெட்பூர் அணி, இம்முறை பல்வேறு மாற்றங்களோடு களம் காண்கிறது. முதலில் பயிற்சியாளர் ஓவன் காய்ல் இப்போது அணியில் இல்லை. அவருக்குப் பதில் இன்னொரு இங்கிலாந்து மேனேஜர் எய்டி பூத்ராய்ட் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றிருக்கிறார். இவர் தான் மேனேஜராகப் பதிவேற்ற 2005-06 சீசனில் வாட்ஃபோர்ட் அணிக்கு ப்ரீமியர் லீகுக்கு புரமோஷன் பெற்றுக் கொடுத்தார். அதேபோன்ற ஒரு முதல் சீசன் செயல்பாட்டை ஜாம்ஷெட்பூர் அணியிடம் கொடுப்பது அவ்வளவு எளிதாக இருக்காது. ஏனெனில் அந்த அணி பல முன்னணி வீரர்களை இழந்திருக்கிறது. குறிப்பாக கோல் மெஷின் கிரெக் ஸ்டூவர்ட்டை அவர்கள் நிச்சயம் மிஸ் செய்வார்கள். அந்த இடத்தை அனைவரும் சேர்ந்து நிரப்பவேண்டும். நான்கு ஆண்டுகளுக்கு முன் தங்கள் அணிக்கு ஆடிய வெல்லிங்டன் பிரியாரியை மீண்டும் அழைத்துவந்திருக்கிறார்கள். அவருடைய அனுபவம் நிச்சயம் அந்த அணிக்குக் கைகொடுக்கும். பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைவதற்கான அத்தனை அம்சங்களும் இந்த அணிக்கு இருக்கிறது.

Bengaluru FC

Bengaluru FC
Bengaluru FC

டுராண்ட் கோப்பையை வென்று மிகவும் நம்பிக்கையாக ஐஎஸ்எல் தொடருக்குள் நுழையப்போகிறது பெங்களூரு எஃப்சி. ராய் கிருஷ்ணா போன்ற ஒரு கோல் மெஷினை ஒப்பந்தம் செய்ததில் மீண்டும் கோப்பையைக் கைப்பற்றியே ஆகவேண்டும் என்ற தங்களுடைய மனநிலையைத் தெளிவாக வெளிப்படுத்திவிட்டது அந்த அணி. அவரும் சுனில் சேத்ரியும் ஆடினாலே எதிரணிகளுக்குப் பிரச்னைதான். அதில் இளம் தமிழக வீரர் சிவசக்தி வேறு கோல் மழையாகப் பொழிகிறார். இப்படி மூன்று முரட்டுத்தனமான கோல் ஸ்கோரர்கள் இருப்பது அந்த அணியை அசைக்க முடியாத சக்தியாக மாற்றியிருக்கிறது. அட்டாக் மட்டுமல்லாமல், சந்தேஷ் ஜிங்கன், பிரபிர் தாஸ் போன்றவர்களையும் ஒப்பந்தம் செய்து டிஃபன்ஸையும் பலப்படுத்தியிருக்கிறது டெஸ் பக்கிங்ஹமின் அணி. ஒட்டுமொத்தமாக அனைத்து ஏரியாக்களுமே பக்காவாக இருப்பதால் நிச்சயம் பெங்களூரு எஃப்சி கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பில் இருக்கும்.