Published:Updated:

``மூணாவது கோலுக்கு அப்புறம் கோச் கொடுத்த டிப்ஸ்... கப் அடிச்சோம்!'' - மைக்கேல் சூசைராஜ்

Michael Soosairaj

எங்க ஊரப் பத்திப் பேசுனாலே செம ஃபீல் வருது. முன்னலாம் ரொம்ப ஜாலியா சுத்திட்டு இருப்போம். கடல்ல குளிக்கிறது, தென்னந்தோப்புக்குப் போய் தேங்காய் திருடி சாப்பிட்றது, ஃபுட்பால் விளையாடுறதுனு செம ரவுஸா இருக்கும்.

``மூணாவது கோலுக்கு அப்புறம் கோச் கொடுத்த டிப்ஸ்... கப் அடிச்சோம்!'' - மைக்கேல் சூசைராஜ்

எங்க ஊரப் பத்திப் பேசுனாலே செம ஃபீல் வருது. முன்னலாம் ரொம்ப ஜாலியா சுத்திட்டு இருப்போம். கடல்ல குளிக்கிறது, தென்னந்தோப்புக்குப் போய் தேங்காய் திருடி சாப்பிட்றது, ஃபுட்பால் விளையாடுறதுனு செம ரவுஸா இருக்கும்.

Published:Updated:
Michael Soosairaj

தமிழக கால்பந்து ரசிகர்களின் புதிய ஹீரோவாக உருவெடுத்திருக்கிறார் மைக்கேல் சூசைராஜ். சென்னை சிட்டி, ஜாம்ஷெட்பூர், ATK என மூன்று ஆண்டுகளில் மூன்று அணிகள்… ஒவ்வொரு இடத்திலும் தன் திறமையை நிரூபித்துக்கொண்டே இருக்கிறார். தன் அணிகள் எதிர்பார்த்த ஒவ்வொரு பொசிஷனிலும் அசத்திக்கொண்டிருக்கிறார். 90 லட்சம் கொடுத்து அவரை வாங்கி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது ATK. ஆனால், விங்கரான அவருக்குக் கொடுக்கப்பட்டது விங்பேக் ரோல். இரண்டு முறை பட்டம் வென்ற மிகப்பெரிய அணி, 90 லட்சம் என்கிற மிகப்பெரிய தொகை… இந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் மிகவும் மாறுபட்ட பொசிஷன். அனைத்தையும் சிறப்பாக… மிகச் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார் சூசைராஜ். தன் புதிய பொசிஷனிலும் பட்டையைக் கிளப்பி முத்திரை பதித்திருக்கிறார். இன்னும் சில நாள்களில் இந்திய அணியில் அசைக்க முடியாத இடத்தைப் பிடிக்கப்போகும் அவரிடம் இந்த க்வாரன்டீன் நேரத்தில் ஒரு பேட்டி...

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``புரொஃபஷனல் கரியரில் முதல் பட்டம் வென்றிருக்கிறீர்கள். இந்த உணர்வு எப்படி இருக்கிறது?"

``நான் செம ஹாப்பி. நிறைய விளையாடியிருக்கேன். ஆனால், என் புரொஃபஷனல் கரியர்ல இதுவரை டைட்டில் ஜெயிச்சதில்லை. நிறைய இண்டிவிஜுவல் டிராஃபி ஜெயிச்சிருக்கேன். ஆனா, டீம் டைட்டில் ஜெயிச்சதில்லை. ஒரு பிளேயருக்கு டீம் டைட்டில் ரொம்பவே முக்கியம். அவங்க கரியர்ல என்ன பண்ணிருக்காங்கனு சொல்றது டீம் டைட்டில்தான். முதல் முறைய டைட்டில் ஜெயிச்சிருக்கிறது அவ்ளோ சந்தோஷமா இருக்கு. என்ன சொல்றதுன்னே தெரியல. ரொம்ப ரொம்ப ஹாப்பியா இருக்கேன்."

Regin & Soosairaj
Regin & Soosairaj

``ATK மாதிரி ஒரு பெரிய டீம் உங்களோட Release Clause மீட் பண்ணியிருக்கிறது மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் நெருக்கடியையும் ஏற்படுத்தும். நீங்க அந்த நெருக்கடியை உணர்ந்தீங்களா? அதை எப்படி சமாளிச்சு ஒரு அட்டகாசமான பெர்ஃபாமன்ஸ் கொடுத்தீங்க?"

``ஒரு இந்தியன் பிளேயரை 90 லட்சம் கொடுத்து வாங்கினது அதுதான் முதல் முறைனு நினைக்கிறேன். அப்போ எனக்கு அது தெரியல. அப்றம்தான் தெரிஞ்சது. நிறைய பேர்கிட்ட இருந்து டெக்ஸ்ட் வர ஆரம்பிச்சுது. அப்போ கொஞ்சம் அழுத்தம் தர்றதா உணர ஆரம்பிச்சேன். அப்புறம் சோஷியல் மீடியால இதைப் பத்தி நிறைய டிஸ்கஷன் போயிட்டிருந்தது. ஒரு கொல்கத்தா கிளப்கு ஆடுறேன்கிறதே பெரிய விஷயம். ஆனா, அது என்னோட ஆட்டத்தைப் பாதிக்காம பார்த்துக்க ஆரம்பிச்சேன்.

பயிற்சி எடுக்கிறது நல்லா பண்ணேன். பயிற்சியாளருக்கும் என்னோட கேம் பிடிச்சிருந்தது. அப்பவே என்னைக் கூப்பிட்டு, `எப்ப கூப்பிட்டாலும் எந்த பொசிஷனுக்குனாலும் ரெடியா இரு'னு சொன்னார். ATK-ல இருக்க டொமஸ்டிக் பிளேயர்ஸ் நிறைய பேர் இந்திய அணிக்கு ஆடினவங்க. பெஞ்ச்ல இருந்த பிளேயர்ஸ், அதைத்தாண்டி கேலரில இருந்தவங்ககூட இந்தியாக்கு ஆடுனவங்க. அவங்களுக்கு மத்தியில ரெகுலரா ஆடுறது சாதாரண விஷயமில்ல. கிட்டத்தட்ட முதல் சீஸன்லயே 21 கேம் ஆடியிருக்கேன். சந்தோஷமா இருக்கு."

``நீங்க வேற பொசிஷன்ல ஆடத் தயாரா இருக்கணும்னு கோச் முன்னாடியே சொல்லிட்டாரா? இருந்தாலும் எப்படி விங்பேக் பொசிஷனுக்கு ரெடி ஆனீங்க? விங்கரா ஆடுறதுக்கு அது ரொம்பவும் வித்யாசமான ரோல். ரெண்டு பக்கமும் மேனேஜ் பண்ணணும். எப்படி அதுக்கு செட் ஆனீங்க?"

``ஆமா, விங்பேக்கா ஆடுறது அதிகமா வேலை வாங்கும். அட்டாக்கிங் தேர்ட்லயும் இருக்கணும், டிஃபன்ஸிவ் தேர்ட்லயும் இருக்கணும். அந்த இடத்துல ஆடுறது அவ்ளோ சுலபம் இல்ல. நாங்க 5-3-2 ஃபார்மேஷன்ல ஆடுனதால, அதுதான் எனக்கான வேலைனு புரிஞ்சது. தொடக்கத்துல ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. முதல்ல கொஞ்சம் சுமாராத்தான் ஆடுனேன். எனக்கே திருப்தியா இல்ல. ஆனா, கோச் திருப்தியா இருக்குனு சொன்னார். நல்லா ஊக்கப்படுத்தினார். சீக்கிரமே அந்த ரோல்க்கு என்னை செட் ஆக்கிட்டேன். ஒரு 5-6 கேம்க்கு அப்புறம் எனக்கு ஈசி ஆகிடுச்சு. ஒரு விங்பேக் கோல் அடிக்கிறது ஈசியான விஷயமில்ல. நான் கோல் அடிச்சதுக்கு அப்புறம் என்னோட தன்னம்பிக்கை அதிகமாச்சு. ரொம்பவுமே திருப்தியா இருந்துச்சு. ஆட்டத்துக்கு ஆட்டம் 10-11 கிலோமீட்டர் ஓடியிருக்கேன், (சிரித்துக்கொண்டே) ஸ்டாமினா நல்லா அதிகமாயிருக்கு!"

Michael Soosairaj
Michael Soosairaj

``பெங்களூருக்கு எதிரான செமி ஃபைனல்ல ஒரு கட்டத்துல ரெண்டு கோல் பின்தங்கியிருந்தீங்க. 3 கோல்கள் அடிக்க வேண்டிய கட்டாயம் இருந்துச்சு. அப்போ எவ்ளோ நெருக்கடி இருந்துச்சு. எப்படி அந்த கம்பேக் சாத்தியமாச்சு?"

``கண்டிப்பா அந்த கிரெடிட் கோச்சுக்குதான். அவராலதான் அது முடிஞ்சது. செமி ஃபைனல் முதல் லெக்ல தோத்ததுக்கப்புறம் ரொம்பவே சோர்ந்து போயிட்டோம். ஆனா, கோச் ரொம்ப நம்பிக்கையா இருந்தார். எங்களை பயங்கரமா உற்சாகப்படுத்தினார். `நாம கண்டிப்பா ஜெயிப்போம். ஒரு கோச்சா என்னால உறுதியா சொல்ல முடியும். யாரும் கவலைப்படாதீங்க. நீங்க எப்டி விளையாடுனீங்கனு நான் பார்த்தேன். நிச்சயமா நாம ஜெயிப்போம்’னு சொன்னார். முதல் லெகுக்கு அப்புறம் 5 - 6 நாள் இடைவெளி இருந்துச்சு. ஆனா, அப்போ யாருமே அந்தத் தோல்வியைப் பத்திப் பேசல. ஆட்டிட்யூட் அந்த அளவுக்கு பாசிட்டிவா இருந்துச்சு. அது எங்களுக்கு ரொம்பவே உதவியா இருந்துச்சு. நம்பிக்கையோட ஆடினோம்.

செகண்ட் லெக் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி மோடிவேஷனல் வீடியோலாம் போட்டுக் காட்டினார். அந்தத் தருணம் செமையா இருந்துச்சு. ரெண்டாவது பாதியில ரெண்டு கோல் அடிக்க வேண்டியிருந்துச்சு. அப்போகூட `இதே மாதிரி ஆடுங்க ஜெயிச்சிடலாம்’னு கூலா சொன்னார். மூணாவது கோல் அடிச்சதும் முழுக்க முழுக்க டிஃபண்ட் பண்ணணும்னு மட்டும் சொன்னார். அவர் சொன்னதைச் செஞ்சோம். ஜெயிச்சோம்."

``ஆனா, ஹபாஸ் வழக்கமா அப்படி கூலா இருக்க மாட்டார்தானே! டிரெய்னிங்லயும், டிரெஸ்ஸ்ங் ரூம்லயும் பொதுவா அவரோட அப்ரோச் எப்படி இருக்கும்? அவருக்குக் கீழ விளையாடுற அனுபவம் எப்படி இருக்கு?"

``நான் விளையாடுனதுல பெஸ்ட் கோச் அவர்தான். அவரோட டிரெய்னிங் ஸ்டைலே ரொம்ப வித்யாசமா இருக்கும். ஒவ்வொரு டீமுக்கு எதிராகவும் ஒரு திட்டம் இருக்கும். அதைத்தான் அந்த வாரம் முழுக்க பயிற்சி பண்ணுவோம். அது எனக்கு ரொம்பவே புதுசு. அதே மாதிரி டீமை பயங்கரமா ரீட் பண்ணுவார். மத்த டீம் நமக்கு எதிரா என்ன பிளான் பண்ணுவாங்கனு எங்ககூட டிஸ்கஸ் பண்ணுவார். அதெல்லாம் ரொம்ப வித்யாசமா இருக்கும். பயிற்சியைப் பொறுத்தவரைக்கும் அவர் ஸ்ட்ரிக்ட்தான். நாம கரெக்டா இருந்தா, அவரும் கூலா இருப்பார். கோச்னா அப்படித்தானே இருக்கணும். எனக்கு ஆரம்பத்துல சின்ன பதற்றம் இருந்துச்சு. என்னத் தனியா கூப்பிட்டு நம்பிக்கையா பேசுனார். அவருக்குக்கீழ விளையாடுறது ரொம்பவே பிடிச்சிருக்கு.

நீங்க சொன்ன மாதிரி அவரு பொதுவாவே அப்டிலாம் இருக்க மாட்டாரு. லீக் ஸ்டேஜ்ல்லாம் பயங்கரமா டென்ஷன் ஆகி பேசியிருக்காரு. நல்லாவே கோபப்பட்டிருக்காரு. ஆனா, செமி ஃபைனல் டைம்ல எல்லாம் அப்படியே மாறிடுச்சு. அந்தச் சூழ்நிலையை எப்படி சமாளிக்கணும்னு அவருக்கு நல்லாத் தெரிஞ்சிருக்கு. ஏற்கெனவே ரெண்டு முறை டைட்டில் ஜெயிச்சவராச்சே!"

Michael Soosairaj
Michael Soosairaj

``உங்களோட ஸ்பெஷாலிட்டியான கர்லர்ஸ் (Curler) பத்திச் சொல்லுங்க. அதுக்காக எவ்ளோ நேரம் ஒதுக்குவீங்க?"

``(சிரிக்கிறார்) சொல்லப்போனா சீஸன் வரைக்கும் எனக்கு அது பத்தி தெரியாது. கேரளா பிளாஸ்டர்ஸ்கூட அடிச்ச கோலுக்கு அப்றம்தான் நமக்கு அது நல்லா வருதுனு புரிஞ்சது. அதுக்குப்புறம் தினமும் பயிற்சிக்கு அப்புறம் 10-15 பால் அதை ட்ரை பண்ணத் தொடங்கினேன். நல்லா அவுட்சைட் வந்து பெண்ட் பண்ணி, ஃபார் போஸ்டை டார்கெட் பண்வேன். திருப்திகரமான கோலாகும்போது ஒரு நல்ல ஃபீல் வரும். அதுதான் நம்மளோட ஸ்டைல்னு புரிஞ்சது. கோச்சும் `இதுதான் உன்னோட டிரேட்மார்க்’னு சொன்னாரு. அது எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. ரொனால்டோ, மெஸ்ஸி அடிக்கிற கோல் எல்லாம் அடிக்கடி பார்ப்பேன். கொடினியோவோட கர்லர்ஸ் எனக்கு ரொம்பப் பிடிக்கும்."

``உங்க அண்ணன் கூட ரொம்ப நாள் கழிச்சு திரும்ப ஆடியிருக்கீங்க. அதுவுமில்லாம ரெண்டு பேரும் சேர்ந்து கப் அடிச்சிருக்கீங்க. இந்த அனுபவம் எப்படி இருக்கு?"

``நாங்க புரொஃபஷனலா சென்னை லீக்ல ஒண்ணா ஆடியிருக்கோம். ஆனா, ஐ-லீக்ல ஆட முடியல. இப்போ திரும்ப சேர்ந்து ஆடுறது சந்தோஷமா இருக்கு. அவருக்கு சீஸன் ஸ்டார்டிங்ல காயம் இருந்துச்சு. அதுக்குப் பிறகு அதுல இருந்து மீண்டு டீம்ல ரெகுலர் ஆனதுலாம் பெரிய விஷயம். அவரை நினைச்சு ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஐ.எஸ்.எல் வரலாற்றுல பிரதர்ஸ் ரெண்டு பேரு ஒண்ணா கப் அடிக்கிறது இதுதான் முதல் முறைனு நினைக்கிறேன். பெருமையா இருக்கு."

Michael Soosairaj
Michael Soosairaj

``தமிழ்நாட்டுப் பையன் சென்னைக்கு எதிரா ஃபைனல் ஜெயிச்ச அனுபவம் பத்தி சொல்லுங்க…"

``ரொம்ப வித்யாசமாத்தான் இருக்கு. நிறைய ரசிகர்கள் சோஷியல் மீடியால மெசேஜ் பண்ணுவாங்க. `நீங்க கோல் அடிக்கணும் ப்ரோ. ஆனா, சென்னை ஜெயிக்கணும்’னு நிறைய பேர் சொல்வாங்க. பார்த்துட்டு சிரிப்பேன். ஆனா, சந்தோஷமா இருக்கும். நம்மளை இவ்ளோ ஃபாலோ பண்றாங்களேனு நினைக்கும்போது பெருமையா இருக்கும். எனக்கும் சென்னைக்கு ஒருநாள் ஆடணும்னு ஆசைதான். ஒருநாள் நடக்கும்னு எதிர்பார்ப்போம்."

``ரசிகர்கள் யாரும் இல்லாம, காலி மைதானத்துல ஃபைனல் ஆடுனது எப்படி இருந்துச்சு?"

``உண்மைய சொல்லணும்னா ஃபைனல் ஆடுன மாதிரியே தெர்ல. ஃபைனலுக்கான உழைப்பா முழுசாக் கொடுத்தோம். ஆனா, அந்த ஃபீல் கிடைக்கல. அந்த சத்தம் இல்லாம ஒரு மாதிரியா இருந்துச்சு. செமி ஃபைனல்ல கொல்கத்தால கிட்டத்தட்ட 50,000 பேருக்கு நடுவுல ஆடுனோம். அது வேற லெவல் ஃபீலிங்கா இருந்துச்சு. ரசிகர்களோட சத்தம் நம்மள எப்போமே இன்னும் ஓட வைக்கும். அந்த சத்தம் பயங்கர கூஸ்பம்ஸா இருக்கும். அதெல்லாம் எதுமே இல்லாம ஃபைனல்ல ஆடுனது ஒருமாதிரி கஷ்டமா இருந்துச்சு."

Michael Soosairaj
Michael Soosairaj

``மறுபடியும் இந்தியன் கேம்ப்புக்கு கால் அப் வந்திருக்கே!"

``ஆமா. சந்தோஷமா இருக்கு. தாய்லாந்துக்கு எதிரா முதல் கேப் கிடைச்சது. அது வேற லெவல் அனுபவமா இருந்துச்சு. ரெண்டாவது கேம்ப்ல நான் ஒழுங்கா பெர்ஃபார்ம் பண்ணல. இப்போ மறுபடியும் வாய்ப்பு கிடைச்சிருக்கு. கோச் ஏற்கெனவே என்கிட்ட பேசினாரு. கொஞ்சம் வெயிட் போட சொல்லியிருக்காரு. இப்ப வேற கேம்ப் தள்ளிப்போயிடுச்சு. இந்தியன் டீம்ல தொடர்ந்து ஆடுவேன்னு எதிர்பார்க்கிறேன்."

``இங்க கால்பந்தை கரியரா தேர்வு செய்ற தைரியம் இங்க எல்லோருக்கும் வந்திடாது. எதிர்காலம் மேல ஒரு பயம் இருக்கும். நீங்க எப்படி உங்க முடிவுல தீர்க்கமா இருந்தீங்க?"

``நான் சென்னை லீக்ல ஆடிட்டு இருந்தப்போ வேலைக்கு ஒரு ஆஃபர் வந்துச்சு. அப்போ கரியர்மேல கொஞ்சம் சந்தேகம் இருந்துச்சு. பயம் இருந்துச்சு. ஆனா, ரெஜின் அண்ணாதான் ‘என்ன ஆனாலும் உன் லட்சியத்த விட்றாத. பார்த்துக்கலாம்’ அப்டினு தைரியமா சொன்னாரு. பெங்களூரு எஃப்.சி ஐ-லீக்ல ஆடிட்டிருந்தப்போ ஒரு ஆஃபர் வந்துச்சு. ஆனா, அவரால அப்போ அத ஏத்துக்க முடியல. அந்தச் சூழ்நிலை எனக்கு வந்திடக்கூடாதுனு சொன்னார். நானும் இதுதான் முழு நம்பிக்கையோட இறங்கிட்டேன்.

இப்போ நாங்க ஆடுறதால எல்லோருக்கும் ஒரு நம்பிக்கை வந்திருக்கு. ஐ-லீக், ஐ.எஸ்.எல் ஆடுனா நல்ல கரியர் அமையும்னு நம்புறாங்க. ஊர்ல நிறைய பேரு வந்து அவங்க குழந்தைங்க ஃபுட்பால் விளையாடுறதுக்கு கருத்து கேப்பாங்க. நிறைய விசாரிப்பாங்க. அதெல்லாம் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. இங்க எல்லாம் மாறிட்டு இருக்கு. ஃபுட்பால்ல கரியர் இருக்கு."

``இப்போ கொல்கத்தால தினமும் என்ன பண்ணிட்டு இருக்கீங்க? எப்படி டைம் பாஸ் ஆகுது?"

``சும்மா அப்படியே நெட்ஃப்ளிக்ஸ், பழைய ஃபுட்பால் மேட்ச், GOT இதெல்லாம் பார்த்து டைம் ஓட்டிட்டு இருக்கேன். அப்புறம் கொஞ்ச நேரம் நியூஸ் பார்ப்பேன். இன்ஸ்டா கொஞ்ச நேரம் நோண்டுவேன். ஃபேன்ஸ்லாம் சென்னைக்கு வாங்க ப்ரோனு சொல்லிட்டே இருக்காங்க. அந்த போஸ்ட்லாம் படிக்க செமையா இருக்கும். அப்புறம் கொஞ்ச லோக்கல் பிளேயர்ஸ்லாம் டிப்ஸ் கேப்பாங்க. அவங்க கூட டிஸ்கஸ் பண்ணுவேன். இப்டித்தான் தினமும் ஓடிட்டு இருக்கு."

``தூத்தூர் பத்தி சொல்லுங்க. உங்க கரியர்ல உங்க ஊரோட தாக்கம் எவ்ளோ இருக்கு?"

``நிறைய. முழுக்க முழுக்க எங்க ஊரோட தாக்கம்தான். ஆக்சுவலி, எங்க ஊரு இரவிப்புத்தன்துறை. சுத்தி இருக்க கொஞ்ச ஊரெல்லாம் சேர்த்து தூத்தூர்னு சொல்வாங்க. எங்க ஊரு கடற்கரையோரம் இருக்கு. அங்க ரெண்டே விஷயம்தான். ஒண்ணு மீன் பிடிக்கிறது. ரெண்டாவது ஃபுட்பால். மொத்தம் அங்க 12 ஊர் இருக்கு. எப்படி 12 சர்ச் இருக்குமோ, அதே மாதிரி 12 கிரவுண்ட் இருக்கும். 200-300 மீட்டர் இடைவெளியில ஒரு கிரவுண்ட் இருக்கும். பீச், ஃபுட்பால்னு அது ஒரு குட்டி பிரேசில்.

அங்க எல்லோருமே அவங்களாவே ஃபுட்பால் கத்துக்கிட்டவங்கதான். எல்லோரும் பயங்கர ஸ்கில் காட்டுவாங்க. டிரிபிளிங்லாம் செமையா பண்ணுவாங்க. நானே சின்ன வயசுல சும்மா டிரிபிள் பண்ணிக்கிட்டேதான் இருப்பேன். இப்போ பண்றதுலாம் டிரிபிளிங்கே இல்ல (சிரிக்கிறார்). அண்டர் 14 தமிழ்நாடு டீமுக்கு கேப்டன் பண்ணப்போ வெறித்தனமா டிரிபிள் பண்ணிட்டு இருப்பேன். அப்போ நிறைய பேரு என் டிரிபிளிங் பத்தியேதான் பேசுவாங்க.

என்னவிட நிறைய நல்ல பிளேயர்ஸ் அங்க இருக்காங்க. குடும்ப சூழ்நிலையால ஃபுட்பால விட்டவங்க நிறைய அங்க. இப்பக்கூட `தொடர்ந்து விளையாடிட்டிருந்திருக்கலாமோ. நமக்கும் நல்ல கரியர் அமைஞ்சிருக்குமோ’னு புலம்புவாங்க. எல்லோருக்குமே ஃபுட்பால் அவ்ளோ பிடிக்கும். இப்போகூட எங்களோட மேட்சலாம் எல்லோரும் சேர்ந்து புரொஜக்டர் வச்சு பாப்பாங்க. ஆனாப் பாருங்க, டீம்னு வந்தா சென்னையின்குத்தான் சப்போர்ட் பண்ணுவாங்க.

எங்க ஊரப் பத்திப் பேசுனாலே செம ஃபீல் வருது. முன்னலாம் ரொம்ப ஜாலியா சுத்திட்டு இருப்போம். கடல்ல குளிக்கிறது, தென்னந்தோப்புக்குப் போய் தேங்காய் திருடி சாப்பிட்றது, ஃபுட்பால் விளையாடுறதுனு செம ரவுஸா இருக்கும். ஆனா, இப்போ ஊருக்குள்ள போனா கொஞ்சம் வேற மாதிரி இருக்கு. பொறுப்பான பையனா எல்லோரும் பாக்குறதால, முன்ன மாதிரி இருக்க முடியல."