Published:Updated:

10 நிமிடக் குழப்பத்தில் வெற்றியைத் தாரைவார்த்த இந்தியா! எங்கெல்லாம் சொதப்பியது புளூ டைகர்ஸ்?!

மு.பிரதீப் கிருஷ்ணா

ஓமன் அணியுடன் நடந்த உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி தோல்வியடைந்தது. 81-வது நிமிடம் வரை வெற்றியை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த புளூ டைகர்ஸ், கடைசி 10 நிமிடங்களில் செய்த குளறுபடிகளால் இரண்டு கோல்கள் வாங்கி தோல்வியடைந்தது.

India vs Oman
India vs Oman

இந்த வாரம், கால்பந்து காலண்டரின் சர்வதேச பிரேக் என்பதால் 2022 உலகக் கோப்பை, 2020 யூரோ கோப்பை போன்ற முக்கிய தொடர்களுக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன. ஆசியாவிலிருந்து உலகக் கோப்பைக்குத் தகுதிபெறுவதற்கான இரண்டாவது சுற்றுப் போட்டிகள் நேற்று தொடங்கின. ஈ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா, ஓமன் அணிகள், கவுஹாத்தி இந்திரா காந்தி மைதானத்தில் நேற்றிரவு மோதின.

முதல் பாதியில் இந்திய அணி சில நல்ல அட்டாக்கிங் மூவ்கள் மேற்கொண்டது. முந்தைய போட்டிகளைப் போல் இந்தப் போட்டியிலும் கிராஸ் பாரில் அடித்து, ஒரு கோலைத் தவறவிட்டது இந்தியா. இந்த முறை அது உதான்டாவின் முறை! இருந்தாலும், அடுத்த சில நிமிடங்களிலேயே கோலடித்தது இந்திய அணி. 23-வது நிமிடத்தில் பாக்சுக்கு அருகில் ஃப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. பிராண்டன் ஃபெர்னாண்டஸ் அதைத் தூக்கி அடிப்பார் என்று எதிர்பார்த்து, கோல் போஸ்டுக்கு அருகில் இருந்த இந்திய வீரர்களை மார்க் செய்திருந்தனர் ஓமன் வீரர்கள். ஆனால், மிகவும் துரிதமாகச் செயல்பட்ட பிராண்டன், வீரர்கள் கூட்டத்துக்கு முன்னால் பந்தை லாகவமாக பாஸ் செய்தார். அதைச் சரியாக உணர்ந்த கேப்டன் சுனில் சேத்ரி, தான் மார்க் செய்யப்பட்டிருந்த இடத்திலிருந்து ஓடி முன்னால் வந்துவிட்டார். ஓமன் வீரர்களுக்கு அங்கு என்ன நடந்தது எனப் புரியவில்லை. சேத்ரியை மார்க் செய்த வீரர்களால் சுதாரித்து அவரைப் பின் தொடரவோ, 'பிளாக்' செய்யவோ முடியவில்லை. அவர்கள் சுதாரித்த நேரம், சேத்ரியின் இடது கால் பந்தை கோல் நோக்கிச் செலுத்தியிருந்தது. ஸ்கோர் போர்டு 1-0 என மாறியிருந்தது!

37-வது நிமிடத்தில் ஓர் அற்புதமான மூவ்மென்டைத் தொடங்கினார்கள் இந்திய வீரர்கள். பெரும்பாலான ஓமன் வீரர்கள், இந்திய அணியின் பாதியில் இருக்க, ஒரு அட்டாகிங் மூவ் தொடங்கப்பட்டது. ஆனால், அனிருத் தாபாவின் ஒரு மோசமான லாங் பாஸால், அது வீணானது. அதன்பிறகு அவ்வப்போது இந்திய அணி கோல் போஸ்ட்டை முற்றுகையிட்டுக்கொண்டுதான் இருந்தது. ஆஷிக் குருணியன், பிராண்டன் ஆடிய இடது விங்கிலிருந்து சிலபல கிராஸ்கள் பாக்சுக்குள் வந்தன. ஆனால், அவற்றை இந்திய அணியால் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை.

India vs Oman
India vs Oman
twitter.com/IndianFootball

அதேசமயம், ஓமன் அணியும் சில நல்ல அட்டாக்குகளை முன்னெடுத்தது. 43-வது நிமிடத்தில் வலது விங்கிலிருந்து ஒரு கிராஸ், அதை அப்படியே அல் - மஹாய்ஜிரி ஹெடர் செய்கிறார்... நிச்சயமாக கோல் போஸ்ட்டுக்குள் சென்றிருக்கவேண்டும். அதை மிகவும் அட்டகாசமாகத் தடுத்தார் இந்திய கோல்கீப்பர் குர்ப்ரீத் சிங் சாந்து. முதல் பாதியை 1-0 என்ற முன்னிலையோடு முடித்தது இந்தியா.

இரண்டாவது பாதியில், ஓமன் அணியின் அட்டாக் கொஞ்சம் வீரியம் கூடியிருந்தது. சிறிய இடைவெளிகளில் தொடர்ந்து இந்திய கோல் பாக்சை முற்றுகையிட்டனர். இந்திய அணியின் ஆட்டம் தொய்வடையத் தொடங்கியது. 53-வது நிமிடத்தில் ஒரு ஷாட். மீண்டும் சாந்துவின் தயவால் தடுக்கப்படுகிறது. 57-வது நிமிடத்தில் ஒரு அட்டாக்... லைன் மேனின் தவறான ஆஃப் சைட் முடிவால் தடுக்கப்படுகிறது. இப்படி அடுத்தடுத்து அட்டாக்குகளை அடுக்கிக்கொண்டிருந்தது ஓமன்.

India vs Oman
India vs Oman
twitter.com/IndianFootball

கொஞ்சம் கொஞ்சமாக சோர்வடைந்த இந்திய வீரர்களின் பேட்டரி, போட்டியின் முக்கியமான கடைசி 10 நிமிடங்களின்போது முழுமையாக டவுன் ஆனது. 82-வது நிமிடத்தில், ஓமனின் பாதியிலிருந்து வந்த `lofted pass', இந்திய டிஃபண்டர்களைத் தாண்டி விழ, அதை கோலாக்கினார் அல் மந்தர். அடுத்த எட்டாவது நிமிடத்தில், அடுத்த அடி. இடது விங்கிலிருந்து பந்தைக் கடத்திக்கொண்டு வந்து அட்டகாசமாக ஷூட் செய்து இரண்டாவது கோலையும் அல் மந்தரே அடித்தார். 2-1. இந்திய ரசிகர்களின் மனதில் இடியே இறங்கியது. 10 நிமிடம் முன்புவரை 3 புள்ளிகளை கையில் வைத்திருந்த அணி, இப்போது மொத்தமாக கோட்டை விட்டு நின்றது. தொடர்ந்து ஆறாவது போட்டியாக, வெற்றி பெறத் தவறியிருக்கிறது!

வீரர்களின் சோர்வு அணியின் தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்துவிட்டதாகக் கூறினார் அணியின் பயிற்சியாளர் இகார் ஸ்டிமேக். உண்மைதான். ஆனால், அதைவிட டெக்னிக்கலாக பல அடிப்படைத் தவறுகள் நிகழ்ந்திருப்பதை அவர் சரிசெய்யவேண்டியிருக்கிறது. ஒரு அணி வெற்றி பெற, பொசிஷன்களை சரியாகத் தொடர்வது முக்கியம். அந்த இடத்தில் இந்திய அணி தொடக்கத்திலிருந்தே தவறிழைத்துக்கொண்டுதான் இருந்தது. 37-வது நிமிடத்தில் தாபா ஒரு மோசமான பாஸ் போட்டதால், கோல் வாய்ப்பு தவறியதாகச் சொன்னோம். சரிதான். ஆனால், அங்கு இந்திய வீரர்களின் பொசிஷன்களைப் பார்த்தால், பலரின் தவறுகளும் தெரியவரும்.

படம் 1a - அந்த அட்டாக் தொடங்கிய இடம். இந்திய பாக்சுக்குள் வந்து, ராகுல் பெகேவின் த்ரோவை வலது விங்குக்கு அனுப்புகிறார் சேத்ரி. உதான்டா பந்தை கன்ட்ரோல் செய்து, வலது விங்கிலிருந்து உள்நுழைய, ஸ்ட்ரைக்கர் குருணியன் வலது விங்குக்கு நகர்கிறார். அந்த அட்டாக் தொடங்கியபோது, இரண்டு ஸ்ட்ரைக்கர்களும் இந்திய பாதியில் இருந்ததால், இடது விங்கில் ஆடிய பிராண்டன் ஸ்ட்ரைக்கர் ரோலுக்கு நகர்கிறார். உதான்டாவின் பாஸ் தாபாவுக்கு வருகிறது. இப்படியான ஒரு இடத்தில், தாபா கொடுத்த பாஸ் தவறானது. ஆனால், அந்த இடத்தில் அவரை அந்த பாஸ் போட வைத்த சூழல் யார் உருவாக்கியது?

படம் 1b-யைப் பாருங்கள். மூன்று வீரர்களும் தாபாவுக்கு முன்னர் இருக்க, இரண்டு பக்கமும் பாஸ் வாங்க ஒருவர்கூட இல்லை! பிராண்டன் இடது விங்கை விட்டு வர, அந்த ஏரியா முழுமையாக காலியானது. ஒரு ஃபுல் பேக் அட்டாக்குக்குக் கைகொடுத்திருக்கவேண்டும். சுபாஷிஷ் போஸ் அதைச் செய்யவில்லை. சேத்ரி, பந்தை அடித்ததோடு நின்றுவிட்டார் போல. இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரைக்கர் அட்டாக்கில் பங்கெடுக்கவில்லை. ரௌலிங் போர்ஜஸ் சப்போர்ட்டுக்கு வரவில்லை. குறைந்தபட்சம் அந்த மூவைத் தொடங்கிய ராகுல் பெகே அட்டாகிங் தேர்டுக்கு வந்திருக்கவேண்டும். ஆனால், அவரும் இல்லை. ஒரு நல்ல மூவ். ஆனால், அந்த இடத்தில் 4 வீரர்கள் தங்களின் பங்களிப்பைச் செய்யத் தவறியிருக்கிறார்கள்!

சரி, இதனால் பெரிய இழப்பு இல்லை என்று வைத்துக்கொள்வோம். கடைசி 10 நிமிடங்களில் செய்ததெல்லாம் உச்சக்கட்ட பிழைகள்! படம் 2a, 2b பொசஷன் இந்தியாவிடம் இல்லை. இந்தியாவிடம் பொசஷன் இல்லாதபோது 4-4-2 என்ற டிஃபன்ஸிவ் லைனை அதுவரை கடைப்பிடித்துவந்தனர் (அதுவும் ஒரு சில இடங்களில்தான்). இந்த இடத்தில் உதான்டா, டிஃபன்ஸில் கைகோக்கும் மனநிலையிலேயே இல்லை. அல் மந்தர் இடது விங்கில் இருக்கிறார். ராகுல் பெகே மட்டுமே அங்கு இருக்கிறார். நடுகள வீரர்கள் மூவரும் ஒரு நேர்க்கோட்டை உருவாக்குகின்றனர். அந்த நேர்க்கோட்டில் உதான்டா இல்லை. நான்காவது வீரர் மிஸ்ஸிங். வேறு வழியில்லாமல் டிஃபன்ஸிவ் லைனையும் விட்டுவிட்டு பெகே அவரை மார்க் செய்கிறார். எதிர்பாராத lofted pass அவரையும் ஏமாற்றுகிறது. கோல்!

படம் 3a - இடது விங்கில் பந்து நகர்கிறது. பந்துடன் இருக்கும் வீரரை உதான்டா பிரஸ் செய்கிறார். அல் மந்தரை கவர் செய்யத் தயாராகிறார் ராகுல் பெகே. அங்கே ரௌலிங் போர்ஜஸ் செய்தது என்ன? பிரஸ் செய்யவும் இல்லை. அல் மந்தருக்கு பாஸ் போகும் சேனலில் இடையூறு செய்யவும் இல்லை. அவரது முக்கிய வேலையான டிஃபன்ஸிவ் லைனுக்கு சப்போர்ட் செய்வதையும் செய்யவில்லை. ஏனோதானோ என்று நகர்ந்துகொண்டிருக்கிறார். இடது விங்கில் அற்புதமாக மூவாகி, ராகுல் பெகேவை ஏமாற்றி பாக்சுக்குள் நுழைகிறார் அல் மந்தர். படம் 3b - ரௌலிங் போர்ஜஸ் வேகமாக டிஃபன்ஸிவ் லைனுக்கு சப்போர்ட் செய்ய நகர்ந்திருந்தால், அவர் எந்த இடத்தில் இருந்திருப்பாரோ, அந்த இடத்தில் இருந்துதான் ஷூட் செய்தார் அல் மந்தர். கோல்!

இந்த மூன்று இடங்கள் மட்டுமல்ல. இப்படி பல இடங்களில் பிழைகள் செய்தார்கள் இந்திய வீரர்கள். பால் பொசஷன் நம்மிடம் இல்லாதபோது, நாம் செய்யவேண்டிய அடிப்படையான விஷயம், டிஃபன்ஸிவ் லைனைச் சரியாகக் கட்டமைப்பது. அந்த அடிப்படையில் தோற்றது இந்தியா. 4-4-2 ஃபார்மேஷனில் ஆடும்போது, இரண்டு விங்கர்களும் மிகவும் துடிப்புடன் இரண்டு பக்கமும் சப்போர்ட் செய்யவேண்டும். குறிப்பாக டிஃபன்ஸில் 'டிராக்' செய்வது மிகமுக்கியம். உதான்டா அந்த இடத்தில் சொதப்பிக்கொண்டே இருந்தார். ஆனால், சீசன் முழுக்க பெங்களூரு FC அணியின் 4-3-3 ஃபார்மேஷனில் முன்களத்தில் ஆடும் ஒரு வீரரிடம் 4-4-2 ஃபார்மேஷனின் விங்கில் சிறப்பான செயல்பாட்டை எதிர்பார்த்திட முடியாது. சொல்லப்போனால் இந்தியாவுக்கு இந்த ஃபார்மேஷன்தான் மிகப்பெரிய வில்லனோ என்று தோன்றுகிறது.

இந்தப் போட்டி முடிந்ததும் சுபாஷிஷ் போஸ் போன்ற வீரர்களின் பெயர்களைச் சொல்லியே 'அவர்கள் தவறிழைத்தார்கள்' என்றார் பயிற்சியாளர். வீரர்களின் தவறுகள் சகஜம்தான். அதுவும் இந்தியா போன்ற ஒரு அணியின் வீரர்களிடம் அது எதிர்பார்க்கப்படுவதுதான். அப்படி இருக்கையில், இப்படியான பேட்டிகள் கொடுக்காமல், பிரச்னைகளைச் சரிசெய்தால் நலம். உலகக் கோப்பைக்குத் தகுதி பெறுவது என்பது இப்போதைக்கு நடக்காத கனவுதான். ஆனால், குறைந்தபட்சம் ஒருசில வெற்றிகளுக்கு முயற்சி செய்யலாம்!