Published:Updated:

`இது என் படை; இவர்களே என் வீரர்கள்!' - கத்தார் போட்டியும் இந்தியக் கேப்டனின் நெகிழ்ச்சியும் #QATIND

Qatar Vs India
Qatar Vs India ( @IndianFootball )

இந்திய அணியின் தற்காலிக கேப்டனாகச் செயல்பட்ட கோல்கீப்பர் குர்ப்ரீத் சிங், இந்தப் போட்டி இந்தியர்களால் நீண்ட காலத்துக்கு நினைவில் கொள்ளப்படும் என்றார்.

`இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டுக்கு மட்டுமே அதிக கவனம் செலுத்தப்படுகிறது' என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக இருந்து வந்தாலும், சமீபகாலமாக மற்ற விளையாட்டுகளுக்கும் உள்நாட்டில் சர்வதேசதரத்தில் லீக் ஆட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கால்பந்துக்கு ஐ.எஸ்.எல், கபடிக்குப் புரோ கபடி, பேட்மின்டன், டேபில் டென்னிஸ் எனப் பல்வேறு விளையாட்டுகளிலும் சர்வதேச வீரர்களுடன் இளம் இந்திய வீரர்கள் இணைந்து விளையாடும் வாய்ப்பு கிடைத்து வருகிறது.

Team India
Team India
@IndianFootball

கிரிக்கெட்டுக்கு அடுத்தபடியாக இந்தியா தற்போது கால்பந்து துறையில் நல்ல முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது. குறிப்பாக, கேப்டன் சுனில் சேத்திரி தலைமையிலான இளம் இந்தியா அணி ரேங்கிங்கில் தன்னைவிட முன்னணியில் இருக்கும் பல நாடுகளுக்குக் கடும் சவால் அளித்துவருகிறது. இதற்கு சமீபத்திய உதாரணம், நேற்று கத்தார் நாட்டின் தலைநகரான தோஹாவில் அந்நாட்டுக்கு எதிராக நடைபெற்ற உலகக் கோப்பை தகுதிச்சுற்று ஆட்டம்.

கடந்த 5-ம் தேதி நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி யாரும் எதிர்பாராத வகையில் ஓமன் அணிக்கு எதிராகத் தோல்வியைத் தழுவியது. ஆனால், ஆசிய சாம்பியனான கத்தார், தனது முதலாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று நம்பிக்கையுடன் களமிறங்கியது. இந்திய அணியின் கேப்டனும் நட்சத்திர ஆட்டக்காரருமான சுனில் சேத்திரி காய்ச்சல் காரணமாக பங்கேற்கவில்லை. இது இந்திய அணிக்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்பட்டது.

Goal Saving by Gurpreet Singh
Goal Saving by Gurpreet Singh
@IndianFootball

ஃபிஃபா தரவரிசைப்பட்டியலில் கத்தார் 62-வது இடத்திலும் இந்திய அணி தற்போது 103-வது இடத்திலும் இருக்கின்றன. இது ஒன் சைடு ஆட்டமாகத்தான் இருக்கும் எனப் பலரும் நினைத்த நிலையில் இந்திய அணியின் நேர்த்தியான தடுப்பாட்டம், கத்தார் அணியின் அனைத்து கோல் முயற்சிகளையும் தடுத்தது. பெரும்பாலும் பந்து, கத்தார் நாட்டு வீரர்களிடமே இருந்து வந்தாலும் இறுதிவரை அவர்களால் கோல் அடிக்க முடியவில்லை. இந்திய அணியின் சிறப்பான தடுப்பாட்டம் காரணமாக இந்த ஆண்டு கத்தார் அணியிடம் தோல்வி அடையாத ஒரே அணி என்ற பெருமையை இந்திய அணி தக்கவைத்துள்ளது.

இறுதியில் ஆட்டம் 0 - 0 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிய, இந்திய ரசிகர்கள் இந்திய அணியின் தடுப்பாட்டத்தை வெகுவாகப் பாராட்டினர். சமீபகாலத்தில் இந்திய அணியின் சிறந்த செயல்பாடு இது எனப் பல முன்னாள் வீரர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். லெஜெண்ட் வீரர் சேத்திரி இல்லாமலும் இந்திய அணி சிறப்பாக விளையாட முடியும் எனவும் பலர் கருத்து தெரிவித்து இருந்தனர்.

இந்திய அணியின் தற்காலிக கேப்டனாகச் செயல்பட்ட கோல்கீப்பர் குர்ப்ரீட் சிங், இந்தப் போட்டி இந்தியர்களால் நீண்ட காலத்துக்கு நினைவில் கொள்ளப்படும் என்றார். இந்நிலையில் தான் ஆடாவிட்டாலும் தன் வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டதாக இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்திரி பாராட்டைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகத் தனது ட்விட்டர் பதிவில், ``டியர் இந்தியா... இதுதான் எனது அணி. இவர்கள்தாம் எம் வீரர்கள். இந்தக் கணத்தில் நான் எத்தனை பெருமையாக உணர்கிறேன் என்பதைச் சொல்ல முடியாது. இதைப் பெரிய வெற்றியாகச் சொல்ல மாட்டேன். எனினும், இந்திய வீரர்கள் போராடிய விதம், மிகப் பெரியது. பயிற்சியாளர் குழுவுக்கு எனது பாராட்டுகள்” எனக் குறிப்பிட்டு இருந்தார்.

போட்டி முடிந்த பின்னர், இந்திய வீரர்களும் மைதானத்தில் இருந்த ரசிகர்களும் கொண்டாடிய விதம் மிக வைரலாகி வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு