Published:Updated:

"பலர் கால்பந்து கனவை மறந்து திருமணம் செய்தனர்! ஏன்னா..." இந்தியத் துணைப் பயிற்சியாளர் நிவேதா ராமதாஸ்

நிவேதா ராமதாஸ்

"ஒருபோதும் ஆண்கள் அணியின் பயிற்சியாளராகப் பெண் இருப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அப்போது பெண் பயிற்சியாளர்களுக்குப் பெண்கள் அணியிலும் வாய்ப்பு இல்லை என்றால் என்னதான் செய்வார்கள்?" - நிவேதா ராமதாஸ்

"பலர் கால்பந்து கனவை மறந்து திருமணம் செய்தனர்! ஏன்னா..." இந்தியத் துணைப் பயிற்சியாளர் நிவேதா ராமதாஸ்

"ஒருபோதும் ஆண்கள் அணியின் பயிற்சியாளராகப் பெண் இருப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அப்போது பெண் பயிற்சியாளர்களுக்குப் பெண்கள் அணியிலும் வாய்ப்பு இல்லை என்றால் என்னதான் செய்வார்கள்?" - நிவேதா ராமதாஸ்

Published:Updated:
நிவேதா ராமதாஸ்
இந்தியாவில் U17 கால்பந்து உலகக்கோப்பைத் தொடர் வரும் அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளது. இதில் பங்கேற்கும் இந்திய அணியின் துணைப் பயிற்சியாளராகத் தமிழகத்தைச் சேர்ந்த நிவேதா ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

"காஞ்சிபுரத்தில் பிறந்த நான் அரசுப் பள்ளியில் படித்து வந்தேன். அப்போது பள்ளியின் விளையாட்டு தினமன்று நான் ஓடுவதைப் பார்த்து என்னைக் கால்பந்து அணிக்குத் தேர்வு செய்தனர். நானும் விளையாட வந்தால் தினம் கடைசி இரண்டு வகுப்புகளிலிருந்து தப்பிக்கலாம் என்றுதான் விளையாடத் தொடங்கினேன். அப்படித் தொடங்கியது பின்பு கால்பந்து மீது தீவிர காதலாக மாறியது. போட்டிகளை வென்று கொடுக்கும் போது மக்களின் ஆரவாரத்தைப் பார்க்கும் போது நான் பெரிய விஷயம் செய்கிறேன் என்று தோன்றியது" என்று பேசத் தொடங்கினார் நிவேதா.

உங்களுக்கு வயது வெறும் 30தான். ஆனால் பயிற்சியாளராகப் பல ஆண்டுகள் அனுபவம் உள்ளது. ஏன் சிறுவயதிலேயே பயிற்சியாளராக மாறினீர்கள்?

நிவேதா ராமதாஸ்
நிவேதா ராமதாஸ்

"நான் கால்பந்து விளையாடியபோது சில போட்டிகளே நடக்கும். வருடம் முழுவதும் பயிற்சி செய்தாலும் தென் மாநில போட்டிகள், அனைத்திந்திய போட்டிகள், தேசிய அளவிலான சீனியர் போட்டிகள் மட்டும்தான் நடைபெறும். இப்போது தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு லீக் போட்டிகள் எல்லாம் நடக்கின்றன. ஆனால் அப்போது இதுபோன்ற லீக் போட்டிகள் எல்லாம் பல காரணங்களால் நடைபெறவில்லை. அதனால் அடுத்த கட்டத்திற்குச் செல்வதற்கான வாய்ப்புகள் பெரிதாக இல்லை. அதே சமயம் கால்பந்தையும் விட மனசில்லை. இதனால் நான் வேலை ரீதியாக என்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்த போதுதான் பயிற்சியாளராக மாறலாம் என்ற முடிவை எடுத்தேன்."

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஒரு பிளேயராக இருந்து பயிற்சியாளராக மாற என்னென்ன செய்தீர்கள்?

"பயிற்சியாளராக வேண்டும் என்று முடிவெடுத்தவுடன் என் சீனியர்ஸிடம் அதற்கான அறிவுரைகள் கேட்டேன். அப்போதுதான் பயிற்சியாளர் ஆவதற்கென டிப்ளோமா கோர்ஸ் ஒன்றை இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தி வருகிறது என்பதை அறிந்தேன். அதற்குப் பதிவிடும் வரை எனக்கு அதனுடைய முக்கியத்துவம் தெரியவில்லை. அங்குச் சென்ற பின்தான் இதைப் பயன்படுத்தி இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திலும் அரசு வேலையிலும் சேரலாம் என்று தெரியவந்தது. 21 வயதிலேயே டிப்ளோமா பட்டம் பெற்றேன். அப்படியே பயிற்சியாளர் உரிமம் என்ற பல விஷயங்களைப் பற்றித் தெரிந்துகொண்டேன். இதெல்லாம் பார்த்து எனக்குப் பயிற்சியாளர் ஆகவேண்டும் என்ற ஆர்வம் அதிகமானது. பயிற்சியாளர் உரிமம் பெறுவதற்கான வழிகளைப் பின்பற்றி தமிழ்நாட்டில் AFC-B உரிமம் பெற்ற முதல் தமிழ்ப் பெண் என்ற பெருமையைப் பெற்றேன். அந்த உரிமம் பெற்றதால்தான் பின்னர் தமிழக அணியின் பயிற்சியாளர் ஆனேன்."

நிவேதா ராமதாஸ்
நிவேதா ராமதாஸ்

உலகக்கோப்பைக்கான இந்திய U17 பெண்கள் கால்பந்து அணியின் துணை பயிற்சியாளரானது எப்படி இருக்கிறது?

"எனக்குப் பயிற்சியாளராக ஆவதற்கு அழைப்பு வந்தவுடன் பயம்தான் இருந்தது. பயிற்சியாளராகச் சிறுவயதில் இவ்வளவு பெரிய வாய்ப்பு சரியாக இருக்குமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதே சமயம் இந்தப் பெரிய வாய்ப்பை நான் தவறவிட விரும்பவில்லை. இப்போது நான் பயிற்சியாளரானால் நம் மாநிலத்தில் பலருக்கும் அது ஒரு நம்பிக்கையைத் தரும் என்ற எண்ணத்தில் இதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டேன். அணியின் தலைமை பயிற்சியாளர் தாமஸுக்கு 63 வயது, நிறைய அனுபவங்களைப் பெற்றவர். அவருடன் அனுபவங்களின் அளவை ஈடுகட்ட, தினமும் படிக்கவும் தொடங்கியுள்ளேன். என்னை அவர் எப்போதும் இருப்பது போல் சாதாரணமாக இருக்கச் சொன்னார். அது எனக்கு ஒரு நம்பிக்கையைத் தந்தது."

உலகக்கோப்பையில் இந்திய அணியிடம் என்ன எதிர்பார்க்கலாம்?

"ஒரு நல்ல தொடரை எதிர்பார்க்கலாம். உடல்ரீதியாகவும் விளையாட்டு ரீதியாகவும் பெண்கள் அவர்களைத் தொடர் பயிற்சியின் மூலம் மேம்படுத்தியுள்ளனர். முன்பு ஆடிய அணிக்கும் இப்போது ஆடப்போகும் அணிக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கும்."

தமிழ்நாடு பெண்கள் அணியின் பயிற்சியாளராக இருந்த அனுபவங்கள் பற்றிச் சொல்லுங்கள்?

"முதல் இரண்டு முறை நான் துணை பயிற்சியாளர் மற்றும் அணியின் மேலாளராகத்தான் இருந்தேன். அப்போது என்னோடு விளையாடிய வீராங்கனைகளுடன் நான் பயிற்சியாளராக இருந்தது பெருமையாக இருந்தது. நான் சரியான பாதையில்தான் செல்கிறேன் என்ற நம்பிக்கையைத் தந்தது. என்னோடு விளையாடிய வீராங்கனைகள் என்பதால் அவர்களின் திறமையைக் கண்டறிய எளிதாக இருந்தது. நான் வீரர்களை அவர்கள் விருப்பத்தின்படி விளையாடச் சொல்லுவேன். அதனால் ஒரு போதும் வயதின் காரணத்தால் ஈகோ சண்டை வந்ததில்லை. மேலும் தமிழ்நாட்டின் கால்பந்து கலாச்சாரம் மற்றும் ஃபார்மேஷன் ஆகியவற்றை நன்கு அறிந்திருந்தேன். சீனியர் நேஷனல் போட்டியில் மூன்றாவது இடம் பிடித்தோம். அதன்பின் என் செயல்பாடுகளைப் பார்த்து 2021ல் சீனியர் தமிழ்நாடு அணியின் தலைமைப் பயிற்சியாளராக என்னைத் தேர்வு செய்தார்கள்."

நிவேதா ராமதாஸ்
நிவேதா ராமதாஸ்

2018ல் தமிழ்நாடு அணி சீனியர் நேஷனல் சாம்பியன்ஷிப் ஜெயித்த போது நீங்கள் அந்த அணியின் மேனேஜர். ஆனால் அந்த அணிக்கு நீண்ட காலமாய் அங்கிகாரமே கிடைக்காதது எப்படி இருந்தது? இப்போது அரசாணை வழங்கப்பட்டும் எதுவும் நடக்கவில்லையாமே?

"நாங்கள் சாம்பியன்ஷிப் ஜெயித்து தமிழ்நாடு திரும்பும் போது பல எதிர்பார்ப்புகள் இருந்தன. வரலாறு படைத்தது எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என்று நினைத்தோம். ஆனால் பலருக்கும் நாங்கள் ஜெயித்தது தெரியவே இல்லை. அப்போதுதான் தமிழ்நாட்டில் கால்பந்து நிலைமை எப்படி இருக்கிறது என்பதை நன்கு புரிந்து கொண்டோம். சக விளையாட்டு வீரர்களுக்கே அதைப் பற்றித் தெரியாத போது எப்படி அதிகாரிகளுக்கெல்லாம் தெரியும் என்ற கேள்வி இருந்தது. பல தனியார் நிறுவனங்களிலெல்லாம் வேலைக்காக முயற்சி செய்தோம். ஆனால் எதுவும் சாத்தியப்படவில்லை. ஒரு கட்டத்தில் நம்பிக்கையை இழந்துவிட்டோம். சிலர் திருமணம் செய்து கொண்டனர். சிலர் தொடர்ந்து விளையாடினார்கள். சிலர் தேர்வு எழுதி அரசு வேலைகள் பெற்றார்கள். இப்படி இருந்த எங்களுக்கு இந்தாண்டு அரசு மூலம் அங்கீகாரம் கிடைத்தது திருப்தியாக இருந்தது. பணம் மற்றும் வேலைக்கான அரசாணை பிறப்பித்தது உண்மைதான். ஆனால் இன்றுவரை எதுவும் எங்களிடம் வந்து சேரவில்லை!"

சமீபத்தில் இந்தியப் பெண்கள் அணியின் பயிற்சியாளர் அலெக்ஸ் அம்ப்ரோஸ் பாலியல் துன்புறுத்தலுக்காக POCSO சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பற்றி...

"இது போன்ற விஷயங்கள் பள்ளி, கல்லூரி அணி தொடங்கி தேசிய அணி வரை தொடர்ந்து நடைபெறுகிறது. இதற்கு முதலில் பெண்களையே பெண்கள் அணியின் பொறுப்புகளில் நியமிக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் இது போன்ற விஷயங்களைப் பற்றிப் புகாரளிக்க நிறையப் பெண்கள் பாதுகாப்பு கமிட்டி உள்ளது. அது பற்றிய விழிப்புணர்வைப் பெண்களிடையே ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நண்பர்களும் பெற்றோர்களும் இந்த விஷயங்களை வெளியில் தைரியமாகச் சொல்வதற்கான சூழலை ஏற்படுத்தித் தரவேண்டும். இதுபோன்று தவறுகள் செய்யும் பயிற்சியாளர்களைப் பயிற்சி அளிப்பதிலிருந்து தடை செய்து சிறையில் அடைக்க வேண்டும். ஒரு சிலர் விளையாட்டில் நிறைய வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காகப் பயிற்சியாளர்கள் கேட்பதற்கு ஒப்புக்கொள்ளுகிறார்கள். இது அப்பாவி பெண்களையும் பாதித்து விடுகிறது. விளையாட்டு வீராங்கனைகள் தைரியமாக இருக்க வேண்டும். இன்றும் என் வீராங்கனைகளிடம் நான் சொல்லும் ஒரு விஷயம், யார் தவறு செய்தாலும் தைரியமாக வெளியில் சொல்லுங்கள். அது நானாக இருந்தாலும் சரி."

நிவேதா ராமதாஸ்
நிவேதா ராமதாஸ்

பெண்கள் அணிக்குப் பெண்கள் பயிற்சியாளராக இருப்பதால் கிடைக்கும் பயன்கள் என்ன?

"ஒரு வீராங்கனை மாதவிடாய் நாள்களில் இருக்கும் போது ஒரு பெண் பயிற்சியாளரிடம் உடனே அதை வெளிப்படுத்த முடியும். ஆனால் ஒரு ஆண் பயிற்சியாளரிடம் சொல்லச் சற்று தயக்கம் இருப்பது இயல்பு. அதுமட்டுமில்லாமல் நிறையப் பெண்கள் பயிற்சியாளர் ஆகவேண்டும் என்ற ஆசையுடன் படிக்கிறார்கள். ஆனால் பலருக்கு வேலை கிடைப்பது கடினமாக உள்ளது. இதற்கும் ஆண்கள் அணியை ஆண்களும் பெண்கள் அணியைப் பெண்களும் பார்த்துக்கொள்வது தீர்வாக இருக்கும். ஒருபோதும் ஆண்கள் அணியின் பயிற்சியாளராகப் பெண் இருப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அப்போது பெண் பயிற்சியாளர்களுக்குப் பெண்கள் அணியிலும் வாய்ப்பு இல்லை என்றால் என்னதான் செய்வார்கள்? ஒரு பெண் வீராங்கனையாக இருந்து பயிற்சியாளர் ஆகும்போது அவர்களுக்கு அணியைப் பற்றி நிறையப் புரிதல் இருக்கும்."

லீக் போட்டிகள் சமீபமாக நடைபெறுவதில்லை. அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

"ஒரு வீரர் பயிற்சி செய்வதே நிறையப் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதற்காகத்தான். அதற்கான பெரிய தளம்தான் லீக் தொடர். அதுமட்டுமின்றி ஒரு வீரர் முதல் போட்டியில் விளையாடுவதற்கும் கடைசி போட்டியில் விளையாடுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் மற்றும் முன்னேற்றங்கள் இருக்கும். அதனால் எல்லா மாநிலங்களும் லீக் போட்டிகளை எக்காரணம் கொண்டும் நிறுத்திவிடக்கூடாது."

நிவேதா ராமதாஸ்
நிவேதா ராமதாஸ்

உங்கள் வருங்கால ஆசை என்ன?

"எனக்கு இருப்பது இரண்டு ஆசைகள்தான். ஒன்று, தேசிய அணிக்குத் தலைமை பயிற்சியாளராக வேண்டும். இன்னொன்று நம் தமிழ்நாட்டில் ஒரு முறையான கால்பந்து கட்டமைப்பை உருவாக்கிப் பல வீரர்கள் அதிலிருந்து பயன் பெறுவதைப் பார்க்க வேண்டும்."

கனவுகள் ஜெயிக்கட்டும் நிவேதா!