10 பைசாவுக்கு சோடா விற்றவர், 12 நொடியில் கோல் அடித்தார்! - ஐ.எம்.விஜயன் பிறந்தநாள் பகிர்வு

பூடானுக்கு எதிரான ஆட்டத்தில், சர்வதேச கால்பந்து உலகின் அதிவேக கோல்களில் ஒன்றை அடித்து அசத்தினார் விஜயன். போட்டி ஆரம்பித்த 12 வது நொடியில், கோல் போஸ்டிற்குள் பறந்துபோய் விழுந்தது பந்து.
திருச்சூர் மக்களின் நாட்காட்டிகள், இரண்டே திருவிழாக்களால் நிறைந்தவை. ஒன்று, நிலவோடு பூரம் நட்சத்திரம் சேர்ந்து உதிக்கும் பூரம் திருவிழா. மற்றொன்று, நட்சத்திரங்கள் பந்தை எட்டி உதைக்கும் கால்பந்து திருவிழா. `பூரங்களுடே பூரம்' என்றழைக்கப்படும் திருச்சூர் நகரத்து பூரம் திருவிழாவின் நாயகனை நமக்கு தெரியும். மலையாளிகளின் நாடி நரம்பெல்லாம் ஊறிப்போய் கிடக்கும் கால்பந்து திருவிழாவின் நாயகனை நமக்கு தெரியுமா? அவர் பெயர் ஐ.எம்.விஜயன். இனிவளப்பிள் மணி விஜயன்.
அன்று திருச்சூர் மாநகராட்சி கால்பந்து மைதானத்துக்கு வெளியே, தன் பதின்பருவத்தில் பாட்டிலுக்கு 10 பைசாவென சோடா விற்றுக்கொண்டிருந்தார் விஜயன். குடும்பத்தின் வறுமை அவரை சோடா விற்கத் தள்ளியது என்றால், கால்பந்து மீதான காதல் அவரை மைதானத்தின் அருகில் சென்று சோடா விற்கச் சொல்லியது. அவர் வெளியே நின்றாலும் அவர் கால்கள் மைதானத்துக்குள்தான் ஓடிக்கொண்டிருந்தன. ஒருமுறை, திருச்சூரில் எழுவர் கால்பந்து போட்டிகள் நடைபெற்றன. அவரும் மைதானத்துக்குச் சென்றார். இம்முறை சோடா விற்க அல்ல, கால்பந்து விளையாட.
கரிய நிறத்திலொரு 17 வயது சிறுவன், துருவ மானைப்போல் பாய்ந்து ஓடி அடித்த கோல்களைக் கண்டு கேலரிகள் தெறித்தன. விசில்களின், கைதட்டல்களின் பேரொலியைத் தாண்டி `விஜயன் விஜயன்' என்கிற கோஷம் எங்கும் இளஞ்சித்திர மேளமாய் எதிரொலித்தது. விஜயனின் திறமையைக் கண்டு, வியந்துபோன அன்றைய கேரள டிஜிபி எம்.கே.ஜோசப், கேரள காவல்துறை அணிக்கு விளையாட விஜயனை அழைத்தார். அன்று அவருக்கு நிச்சயம் தெரிந்திருக்காது, அந்தத் தருணம் இந்திய கால்பந்து விளையாட்டை மாற்றி அமைக்கப்போகிறதென.

விஜயனை, `ப்ளாக் பக்' என அவரது ரசிகர்கள் அழைத்தார்கள். அப்படியென்றால், `கருப்பு துருவமான்' எனப் பொருள். அதன் பிறகு நிறைய புகழ்பெற்ற இந்திய கால்பந்து க்ளப் அணிகளில் விளையாடியவர் 1989-ம் ஆண்டு இந்திய அணியில் விளையாட தேர்வானார். விஜயனும் - பாய்சங் பூடியாவும் இணைந்து எதிரணியினரை பந்தாடத் தொடங்கினர். இன்றுவரையிலும் இந்திய கால்பந்து அணியின் `டெட்லி காம்போ'வாகப் பார்க்கப்படும் இணை இவர்கள். 1999-ம் ஆண்டு, காட்மாண்டுவில் நடைபெற்ற தெற்காசிய போட்டிகளின் கால்பந்து தொடரில், ஐ.எம்.விஜயன் பெரும் சாதனை ஒன்றை நிகழ்த்தினார்.
செப்டம்பர் 28 அன்று பூடானுக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில், சர்வதேச கால்பந்து உலகின் அதிவேக கோல்களில் ஒன்றை அடித்து அசத்தினார். போட்டி ஆரம்பித்த 12வது நொடியில், கோல் போஸ்டிற்குள் பந்து பறந்துபோய் விழுந்தது. 3 - 0 எனப் பூடானை இந்தியா வீழ்த்திய அந்த ஆட்டத்தில், மூன்று கோல்களையும் அடித்தது விஜயன்தான். அதற்கு முந்தைய போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு ஹாட்ரிக் அடித்திருந்தார். இறுதிப்போட்டியில், மாலத்தீவு அணிக்கு எதிராகத் தொடரின் 7வது கோலை அடித்து, இந்திய அணியின் வெற்றிக்கு பெரும் பங்காற்றினார்.

விஜயன் இந்திய அணிக்காக விளையாடிய பெரும்பாலான போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றது எனலாம். பின்னர், 2003-ம் ஆண்டு நடைபெற்ற ஆப்பிரிக்க -ஆசிய போட்டியில் நான்கு கோல்கள் அடித்து அதிக கோல்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இந்திய அணியின் கேப்டனாக 2000 முதல் 2004 வரை சில போட்டிகளில் இந்திய அணியைத் திறம்பட வழிநடத்தினார். நேரு கோப்பைத் தொடர், ஒலிம்பிக்ஸ் தகுதிச்சுற்று, உலகக் கோப்பை தகுதிச்சுற்று, தெற்காசிய கோப்பை தொடர் எனப் பல தொடர்களில் இந்திய அணிக்காகக் களமிறங்கிய பெருமைக்கொண்டவர். இந்தியாவில், கால்பந்து பெரிய பேசுபொருளாக இல்லாத காலகட்டத்திலும், பிற கால்பந்து நாடுகளில் ஐ.எம்.விஜயன் பேசுபொருளாக இருந்தார்.
மொத்தம் 79 போட்டிகளில் விளையாடி 40 கோல்கள் அடித்துள்ளார். கால்பந்து உலகம், இந்திய கால்பந்து அணியை விஜயனின் வருகைக்குப், பிறகு கூர்ந்து கவனிக்கத் தொடங்கியது. இந்திய அணிக்காக 15 வருடங்கள் தொடர்ந்து விளையாடிய விஜயன் மூன்று முறை (1993,1997, 1999) சிறந்த இந்திய வீரருக்கான விருதை வென்றுள்ளார். இவரே இந்த விருதை அதிகம் வென்ற முதல் நபரும்கூட. தனது விளையாட்டின் உச்சத்தில் இருக்கும்போதே 2003-ம் ஆண்டு சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார். கேரள காவல்துறை, ஈஸ்ட் பெங்கால், மோகன் பகான், எஃப் சி கொச்சின், சர்ச்சில் பிரதர்ஸ், ஜெசிடி மில்ஸ் பாக்வாரா என ஆறுக்கும் மேற்பட்ட க்ளப் அணிகளுக்காக விளையாடி 338 போட்டிகளில் 250 கோல்களை அடித்துள்ளார்.

இவரின் திறமையைப் பாராட்டி இந்திய அரசு 2003-ம் ஆண்டு அர்ஜுனா விருது வழங்கி கௌரவித்தது. அப்போது கேரளத்திலிருந்து இந்த விருதைப் பெற்ற ஒரே நபர் என்ற பெருமையையும் பெற்றார். கால்பந்திலிருந்து ஓய்வு பெற்ற பின் திருச்சூரில் தனது சொந்த கால்பந்து பள்ளியைத் தொடங்கினார். 2017-ம் ஆண்டு இந்திய அரசு இவரை கால்பந்தின் தேசிய அமைப்பாளராக (national observer ) நியமித்தது. இவரது சுயசரிதை 1998-ம் ஆண்டு `காலோ ஹிரன்' என்ற தலைப்பில் மலையாளப் படமாக வெளிவந்தது. ஆனால், இவரும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆமாம், இந்த முகத்தை எங்கோ பார்த்தது போலவே உங்களுக்குத் தோன்ற அதுதான் காரணம்...
கால்பந்து விளையாட்டின் மீது கவனம் பெற வேண்டி எடுக்கப்பட்டதாகச் சொல்லபட்ட `பிகில்' படத்தில், இந்தக் கால்பந்து ஜாம்பவான்தான் ரௌடியாக நடித்திருந்தார். `திமிரு', `கொம்பன்' போன்ற படங்களிலும் வில்லன் வேடம். ஒரு உலக விளையாட்டின், தேசிய ஜாம்பவான். அவர் நடித்த திரைப்படங்களால் மட்டுமே நினைவுகூரப்படுவது எவ்வளவு பெரிய வேதனை. இவருடைய ஜெர்ஸி நம்பரும் 10-தான்!

தோனி, சிறுவயதில் பள்ளி கால்பந்து அணியின் கோல்-கீப்பராக விளையாடினார் எனத் தெரிந்து வைத்திருக்கும் நமக்கு, இன்றைய தேதி இந்திய கால்பந்து அணியின் கோல்-கீப்பர் யாரெனத் தெரியுமா? நாம் கிரிக்கெட்டை மட்டுமே கொண்டாடும் வரை, இதுபோன்ற சாதனையாளர்களும் ஜாம்பாவன்களும் வரலாற்றில் இருந்து மறைந்துதான் போவார்கள். கால்பந்து மீது ஆர்வமுள்ள சிறுவனும், சோடா விற்பதே சிறந்ததென ஒதுங்கிவிடுவான். எல்லா வீரர்களையும் போற்றுவோம், அப்போதுதான் புதிய வீரர்கள் உருவாவார்கள்.